06.01 – சிவன் சிலேடைகள்
2011-11-22
06.01.131 - சிவன் - செய்யுள் - சிலேடை
-------------------------------------------------------
சீர்மலியு மாலடியிற் சேர்ந்திருக்கு மெப்போது
மார்க்குந் தளைவிள்ளும் பேராமே - ஏர்திகழப்
பூணுந் தொடையு மரவம் புகலவருந்
தாணு தமிழ்ச்செய்யுள் தான்.
செய்யுள்:
சீர் மலியுமால் அடியில் சேர்ந்திருக்கும்; எப்போதும்
ஆர்க்கும் தளை விள்ளும் பேராமே; ஏர் திகழப்
பூணும் தொடையும்; அரவம் புகல வரும்;
தாணு தமிழ்ச்செய்யுள் தான்.
சிவன்:
சீர் மலியும்; ஆல் அடியில் சேர்ந்திருக்கும்; எப்போதும்
ஆர்க்கும் தளை விள்ளும் பேராமே; ஏர் திகழப்
பூணும் தொடையும் அரவம்; புகல அரும்
தாணு தமிழ்ச்செய்யுள் தான்.
சொற்பொருள்:
சீர் - 1) செய்யுளின் உறுப்புகளுள் ஒன்று; / 2) பெருமை; புகழ்;
ஆல் - 1) ஓர் அசைச் சொல்; / 2) ஆலமரம்;
அடி - 1) செய்யுளின் உறுப்புகளுள் ஒன்று; / 2) கீழே;
ஆர்க்கும் - 1) பிணிக்கும்; 2) யார்க்கும்
தளை - 1) செய்யுளின் உறுப்புகளுள் ஒன்று; / 2) பந்தம்; வினைக்கட்டு;
விள்ளுதல் - 1) சொல்லுதல்; / 2) நீங்குதல்;
ஏர் - அழகு;
தொடை - 1) செய்யுளின் உறுப்புகளுள் ஒன்று; / 2) மாலை;
புகல்தல் - சொல்லுதல்;
அரவம் - 1) ஓசை; / 2) பாம்பு;
தாணு - சிவன்; மலை; தூண்;
செய்யுள்:
சீர் மலியுமால் அடியில் சேர்ந்திருக்கும் - அடிகளில் சேர்ந்திருக்கும் சீர்கள் நிறைந்திருக்கும்;
எப்போதும் ஆர்க்கும் தளை விள்ளும் பேராமே - சீர்களைப் பிணைக்கும் தளைகள் (வெண்டளை, கலித்தளை, ஆசிரியத்தளை, முதலியன) பாடலின் பெயரைச் சொல்லும் (வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா, முதலியன).
ஏர் திகழப் பூணும் தொடையும் - அழகுறப் பலவித தொடைகளும் (எதுகைத்தொடை, மோனைத்தொடை, முதலியன) இருக்கும்.
அரவம் புகல வரும் - சொன்னால் ஓசை வரும்;
தமிழ்ச்செய்யுள் - தமிழில் உள்ள செய்யுள்;
சிவன்:
சீர் மலியும் - பெருமை/புகழ் மிகுந்திருக்கும்;
ஆல் அடியில் சேர்ந்திருக்கும் - கல்லால மரத்தின்கீழ் வீற்றிருப்பார்;
எப்போதும் ஆர்க்கும் தளை விள்ளும் பேராமே - எந்நாளும் எத்தகையவருக்கும் அவர்களைப் பிணித்துள்ள அவர்களது பந்தங்களை அவர் பெயர் நீக்கும்; (நாமஜபத்தின் பலன்);
ஏர் திகழப் பூணும் தொடையும் அரவம் - அவர் அழகுற அணியும் மாலையும் பாம்பு;
புகல அரும் தாணு - சொல்லற்கு அரியவர் (சொல்லொணாப் புகழ் உடையவர்), தாணு எனப்படும் சிவபெருமானார்;
பிற்குறிப்பு:
சம்பந்தர் தேவாரம் - 3.49.6
மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
அருமை அருமை அருமை. பாடல் அற்புதம். விளக்கம் அதை விட அற்புதம். சிவன் அருள் நிச்சயம் கிடைக்கப்பெறும். அரகர சிவசிவ சிவசிவ அரகர
ReplyDeleteஅருமை அருமை உங்கள் பாடலும் அதன் விளக்கமும் மிக அற்புதம் சிவனுடைய அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் ஹர ஹர சிவ சிவ சிவ சிவ அரகர
ReplyDeleteவணக்கம். உங்கள் வாழ்த்துக் கண்டு மகிழ்ந்தேன். நமச்சிவாய.
Delete