Sunday, August 14, 2022

06.01.132 - சிவன் - மலை - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2012-02-06

06.01.132 - சிவன் - மலை - சிலேடை

-------------------------------------------------------

நீருறையும் நீள்முடிமேல் காரணியாம் கோலமுண்டு

பேரும் பலவிருக்கும் பேராநோய் - தீரும்

எனவுலகு வந்தடையும் ஏற்றம் இருக்கும்

வனமுலையாள் பங்கன் மலை.



பதம் பிரித்து:

நீர் உறையும் நீள் முடிமேல்; கார் அணி ஆம் கோலம் உண்டு;

பேரும் பல இருக்கும்; பேரா நோய் - தீரும்

என உலகு வந்தடையும்; ஏற்றம் இருக்கும்;

வனமுலையாள் பங்கன்; மலை.



சொற்பொருள்:

உறைதல் - 1. கட்டியாக இறுகுதல் (freezing); / 2. தங்குதல்;

நீள்தல் - 1. பெருமையாதல் (To be great); / 2. நீடுதல் - மேம்படுதல் (To rise high); நீளுதல் (To grow long);

முடி - 1. உச்சி (top, as of a mountain); / 2. தலை;

கார் - 1. மேகம்; / 2. கருமை;

அணி - 1. சமீபத்தில்; அருகு; / 2. ஆபரணம்;

கோலம் - 1. அழகு; / 2. வடிவம்;

தீரும் - 1. தீர்ந்துவிடும்; / 2. தீருங்கள்;

அடைதல் - 1. சேர்தல் (To reach, arrive at); / 2. சரண்புகுதல் (To take refuge in);

ஏற்றம் - 1. மேடு (Ascent); / 2. மேன்மை;

வனம் - அழகு;



மலை:

நீர் உறையும் நீள் முடிமேல் - மிக உயர்ந்த உச்சியில் நீரும் பனியாக உறையும்;

கார் அணி ஆம் கோலம் உண்டு - மேகம் அருகே இருக்கின்ற அழகு உண்டு;

பேரும் பல இருக்கும் - பல பெயர்களால் அழைக்கப்பெறும்; (ஒவ்வொரு மலைக்கும், ஒவ்வொரு சிகரத்திற்கும் வெவ்வேறு பெயர்);

பேரா நோய் தீரும் என உலகு வந்தடையும் - தீராத வியாதிகள் எல்லாம் குணமாகும் என்று (மலைவாசஸ்தலங்களுக்கு) மக்கள் வருவார்கள்; (மூலிகைகள் இருக்கும்; நல்ல காற்று, சீதோஷ்ணம் இருக்கும்);

ஏற்றம் இருக்கும் - மேடு இருக்கும்;



சிவன்:

நீர் உறையும் நீள் முடிமேல் - தலைமேல் கங்கை தங்கும்;

கார் அணி ஆம் கோலம் உண்டு - கருமை (கண்டத்தில்) ஆபரணம் ஆகின்ற வடிவம் உண்டு;

பேரும் பல இருக்கும் - பல திருப்பெயர்கள் இருக்கும்;

"பேரா நோய் தீரும்" என உலகு வந்தடையும் ஏற்றம் இருக்கும் - "தீராத வியாதிகளைப், பிறவிப்பிணியைத் தீர்த்தருளுங்கள்" என்று மக்கள் வந்து சரண்புகும் மேன்மை இருக்கும்;

வனமுலையாள் பங்கன் - அழகிய முலையை உடைய உமையை ஒரு பங்கில் உடைய சிவபெருமான்.



வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment