Monday, August 15, 2022

06.01.133 - சிவன் - கைகாட்டி விளக்கு (signal) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2012-03-18

06.01.133 - சிவன் - கைகாட்டி விளக்கு (signal) - சிலேடை

-------------------------------------------------------

முக்கண் திகழ்வதால் மோதலைநி றுத்துவதால்

எக்கண்ணும் காண்பதால் செக்கர்வான் - ஒக்கவொளி

வீசி யொருகால் விளங்குவதால் வெண்ணீறு

பூசிநெறி காட்டுசுடர் போல்.


சொற்பொருள்:

முக்கண் - மூன்று கண்கள்;

மோதலை - 1. மோதல்+/ 2. மோது அலை;

எக்கண்ணும் - எவ்விடத்தும்;

செக்கர்வான் - செவ்வானம்;

ஒளி வீசி - 1. ஒளியை வீசி; / 2. ஒளி வீசுபவன்;

ஒருகால் - 1. ஒரு சமயம்; ஒரு கம்பம்; / 2. ஒரு திருவடி;

வெண்ணீறு பூசி - திருநீறு பூசும் ஈசன்;

நெறி காட்டு சுடர் - வழிகாட்டும் விளக்கு - கைகாட்டி (signal);


கைகாட்டி விளக்கு (signal):

முக்கண் திகழ்வதால் - சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று விளக்குகள் இருப்பதால்;

மோதலை நிறுத்துவதால் - வாகனங்கள் மோதுவதைத் தடுப்பதால்;

எக்கண்ணும் காண்பதால் - (ஊர் வீதிகளில், இருப்புப்பாதைகளில்) பல இடங்களிலும் இருப்பதால்;

செக்கர்வான் ஒக்க ஒளி வீசி ஒருகால் விளங்குவதால் - செவ்வானம் போல் செந்நிற ஒளிவீசிச் சிலசமயம் திகழ்வதால்; (ஒருகால் விளங்குவதால் - "ஒரு கம்பத்தில் இருப்பதால்" என்றும் பொருள்கொள்ள அமைந்தது);

நெறி காட்டுசுடர் - வழிகாட்டும் விளக்கு - கைகாட்டி (signal);


சிவன்:

முக்கண் திகழ்வதால் - நெற்றிக்கண் இருப்பதால்;

மோது அலை நிறுத்துவதால் - விரைந்துவந்த அலைமோதும் கங்கையைச் சடையுள் தடுத்ததால்; (அலை - ஆகுபெயராக, அலையுடைய ஆற்றைக் குறித்தது);

எக்கண்ணும் காண்பதால் - எவ்விடமும் காண்பதால்; (எல்லாம் அறிந்தவன்);

செக்கர்வான் ஒக்க ஒளி வீசி, ஒரு கால் விளங்குவதால் - செம்மேனியனாக ஏகபாத மூர்த்தியாகத் திகழ்வதால்; அர்த்தநாரீஸ்வரன் கோலத்தில் வலக்கால் செவ்வான நிறத்திலும் இடக்கால் கருமுகில் நிறத்திலும் திகழ்வதால்;

வெண்ணீறு பூசி - வெண்திருநீற்றைப் பூசும் சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment