Monday, August 22, 2022

06.02.166 – நெய்த்தானம் (திருநெய்த்தானம்) - கலரைக் கூடி - (வண்ணம்)

06.02.166 – நெய்த்தானம் (திருநெய்த்தானம்) - கலரைக் கூடி - (வண்ணம்)

2012-04-22

06.02.166 - கலரைக் கூடி - (நெய்த்தானம் (திருநெய்த்தானம்))

(இக்கால வழக்கில் "தில்லைஸ்தானம்" - திருவையாறு அருகே உள்ள தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனனத் தான தனனத் தான

தனனத் தான .. தனதான )


கலரைக் கூடி மதிகெட் டாறு

.. .. கசடுற் றீனம் .. மிகவாகிக்

.. கலியுற் றாயுள் முடிவுற் றாவி

.. .. கழலத் தீயுள் .. விழுவேனோ

மலமற் றாயுன் இருபொற் றாளில்

.. .. மலரிட் டோதி .. அடியேனும்

.. வரையற் றேறு வினையைத் தூள்செய்

.. .. வழியைச் சேர.. அருளாயே

நிலவைப் பாயும் நதியைப் பூவின்

.. .. நிரையைச் சூடும் .. முடியானே

.. நெடுவெற் பாட எறியத் தோள்கள்

.. .. நெரியத் தாளை .. இடுவோனே

அலைதெற் றாறு பணியச் சேரும்

.. .. அணிநெய்த் தானம் .. உறைவோனே

.. அலறிப் பாலன் அடையக் காலன்

.. .. அவனைக் காது .. பெருமானே.


பதம் பிரித்து:

கலரைக் கூடி, மதி கெட்டு, ஆறு

.. .. கசடு உற்று, ஈனம் மிக ஆகிக்,

.. கலி உற்று, ஆயுள் முடிவுற்று, ஆவி

.. .. கழலத், தீயுள் விழுவேனோ;

மலமற்றாய், உன் இரு பொற்றாளில்

.. .. மலர் இட்டு, ஓதி அடியேனும்,

.. வரை அற்று ஏறு வினையைத் தூள் செய்

.. .. வழியைச் சேர அருளாயே;

நிலவைப், பாயும் நதியைப், பூவின்

.. .. நிரையைச், சூடும் முடியானே;

.. நெடு-வெற்பு ஆட, எறி அத் தோள்கள்

.. .. நெரியத் தாளை இடுவோனே;

அலை தெற்று ஆறு பணியச் சேரும்

.. .. அணி நெய்த்தானம் உறைவோனே;

.. அலறிப் பாலன் அடையக், காலன்

.. .. அவனைக் காது பெருமானே.


கலரைக் கூடி மதி கெட்டு ஆறு கசடு உற்று ஈனம் மிக ஆகிக், கலி உற்று, ஆயுள் முடிவு உற்று, ஆவி கழலத் தீயுள் விழுவேன்; - தீயவரைச் சேர்ந்து, அறிவிழந்து, காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் என்ற ஆறு குற்றங்களும் மனத்தில் சேர்ந்துகொள்ள, அதனால் இழிவடைந்து, துன்புற்று, வாழ்நாள் ஆகி, உயிர் பிரிந்து தீயில் விழுந்துவிடுவேன். ஓலம்! (கலர் - கீழோர்; தீயவர்); (ஆறு கசடு - ஆறு குற்றங்கள் - அறுபகை - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்); (ஈனம் - இழிவு); (கலி - துன்பம்); (கழலுதல் - நீங்குதல்); (- ஓலம் - அபயக் குறிப்பு);


மலமற்றாய்; உன் இரு பொற்றாளில் மலர் இட்டு ஓதி அடியேனும், வரை அற்று ஏறு வினையைத் தூள்செய் வழியைச் சேர அருளாயே - நின்மலனே! உன் இரு பொன்னடிகளில் பூக்கள் தூவிப் பாடி வழிபட்டு அடியேனும், அளவின்றி மிகுந்த வினைகளைத் தூளாக்கும் வழியைச் சேர்வதற்கு அருள்புரிவாயாக! (மலம் அற்றாய் - நின்மலனே); (பொற்றாள் - பொன்னடி); (ஓதுதல் - பாடுதல்); (வரை - அளவு); (ஏறுதல் - மிகுதல்);


நிலவைப், பாயும் நதியைப், பூவின் நிரையைச் சூடும் முடியானே - சந்திரனையும், பாயும் கங்கையையும், பூங்கொத்துகளையும் திருமுடியில் சூடுபவனே! (நிரை - வரிசை; அடுக்கு);


நெடு-வெற்பு ஆட எறி அத் தோள்கள் நெரியத் தாளை இடுவோனே - உயர்ந்த பெரிய மலையான கயிலை அசையும்படி அதனைப் பெயர்த்து எறிய முயன்ற அந்த இருபது புஜங்களும் நசுங்குமாறு திருவடியை ஊன்றியவனே; (வெற்பு - மலை); (நெரிதல் - நசுங்குதல்);

அலை தெற்று ஆறு பணியச் சேரும் அணி நெய்த்தானம் உறைவோனே - அலைமோதும் காவிரி திருவடியை வணங்க அடைகின்ற அழகிய திருநெய்த்தானத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே; (தெற்றுதல் - மோதுதல்); (அணி - அழகு);

அலறிப் பாலன் அடையக் காலன் வனைக் காது பெருமானே - மார்க்கண்டேயர் அலறிச் சரணடைந்தபொழுது, காலனை உதைத்துக் கொன்ற பெருமானே; (பாலன் - இங்கே, மார்க்கண்டேயன்); (காதுதல் - கொல்லுதல்); (காலனவன் - அவன் - பகுதிப்பொருள்விகுதி);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment