06.04.019 – திருநாவுக்கரசர் துதி - திருநீற்றைப் புனையடியார்
2012-04-15
6.4.19 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2012 (Apr 16/17)
----------------------------------
1) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
திருநீற்றைப் புனையடியார் தூரத்தே தென்படினும்
ஒருதீட்டென் றலப்பமணர் உளம்கலங்க அவரடைத்த
பெருநீற் றறையினுள்ளும் பிறைசூடி கழல்பாடி
உருமாற்றம் இன்றியுய்ந்தார் உரைதமிழ்கள் உறுதுணையே.
திருநீற்றைப் புனை அடியார் தூரத்தே தென்படினும் ஒரு தீட்டு என்று அலப்பு அமணர் உளம் கலங்க - திருநீறு பூசிய அடியார்களைத்ட் ஹூரத்தே கண்டாலும் தீட்டு என்று பிதற்றிய சமணர்கள் மனம் கலங்கும்படி; (புனைதல் - அணிதல்); (அலப்புதல் - பிதற்றுதல்);
அவர் அடைத்த பெரு-நீற்றறையினுள்ளும் பிறைசூடி கழல்பாடி - அந்தச் சமணர்கள் அடைத்த பெரிய சுண்ணாம்புக் காளவாயிலும் தியானிக்கும் சந்திரனைச் சூடிய சிவனது திருவடியைப் பாடி; (நீற்றறை - சுண்ணாம்புக் காளவாய்); (நீற்றறையினுள்ளும் - 1. நீற்றறையிலும்; 2. நீற்றறையில் தியானிக்கும்); (உள் - உள்ளே; ஏழாம் வேற்றுமை உருபு); (உள்ளுதல் - நினைதல்);
உரு மாற்றம் இன்றி உய்ந்தார் உரை-தமிழ்கள் உறு-துணையே - (ஏழு நாள்களுக்குமுன் நீற்றறையில் இட்டவாறே) உடலில் எவ்வித மாறுபாடும் (ஊனமும்) இன்றி உய்ந்தவரான திருநாவுக்கரசர் பாடியருளிய தேவாரமே நமக்குச் சிறந்த துணை;
(பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 692
வெண்பொடி பூசுந் தொண்டர் விரவினார் அவரை யெல்லாம்
கண்டுமுட் டடிகள் மார்கள் கேட்டுமுட் டியானுங் காதல்
வண்டுணத் துதைந்த கோதை மானியே இங்கு வந்த
பண்புமற் றிதுவே யாகும் பரிசுவே றில்லை என்றான்.
-- "வெண்மையான திருநீற்றைப் பூசும் சிவன் அடியார்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களையெல்லாம் கண்டதால் அடிகள்மார் 'கண்டு முட்டு'. அச்செய்தியைக் கேட்டதால் நானும் 'கேட்டு முட்டு'......" -- முட்டு = தீட்டு)
2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
பதிதோறும் தொழுதங்குப் பைஞ்ஞீலி செல்லுங்கால்
மதியாறு புனைகின்ற மணிகண்டன் வழிநின்று
பொதிசோறு தந்தருளப் பெற்றவர்சொல் புகழ்மாலை
நிதிநாடி நிதம்பாடில் வினையோடி நிறைவாமே.
தலங்கள் தோறும் ஈசனைப் போற்றி, (வெயிலில் பசியோடு) திருநாவுக்கரசர் அங்குத் திருப்பைஞ்ஞீலிக்குத் போகும்பொழுது, நிலவையும் கங்கையையும் சூடும் நீலகண்டன் அவ்வழியில் (சோலையும் குளமும் அமைத்துக்கொண்டு) காத்திருந்து அவர்க்குப் பொதிசோறு தந்து பசித்தீர்த்தருளினான். அந்நாயனார் அருளிய தேவாரம் என்ற நிதியை நாடித் தினமும் பாடினால், நம் வினைகளெல்லாம் நீங்கி, நாம் நிறைவை அடையலாம்.
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 305
காவுங் குளமும் முன்சமைத்துக் காட்டி வழிபோங் கருத்தினால்
மேவுந் திருநீற் றந்தணராய் விரும்பும் பொதிசோ றுங்கொண்டு
நாவின் தனிமன் னவர்க்கெதிரே நண்ணி இருந்தார் விண்ணின்மேல்
தாவும் புள்ளும் மண்கிழிக்குந் தனிஏ னமுங்காண் பரியவர்தாம்.)
3) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---
தங்கள் சமயம் தனைநீங்கிச்
.. சைவம் தழைக்கச் சார்ந்தவர்க்குப்
பொங்கு வஞ்ச நெஞ்சமணர்
.. புகட்டு நச்சுச் சோறதனைப்
பங்கம் இல்லா அமுதாக்கிப்
.. பாலித் தானைப் பதியெங்கும்
துங்கத் தமிழால் துதியப்பர்
.. துணைம லர்த்தாள் துணைநமக்கே.
அமணர் - சமணர்;
பொங்கு வஞ்ச நெஞ்சமணர் - வஞ்சம் பொங்கும் மனத்தை உடைய சமணர்கள்;
பங்கம் - குற்றம்;
பாலித்தல் - காத்தல்;
பதி - தலம்;
துங்கம் - உயர்ச்சி; பெருமை; வெற்றி; மேன்மை;
துணை - இரண்டு; காப்பு;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.70.5
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.)
4) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
பாவியராய் உழல்வஞ்சப் பரசமய மிண்டரவர்
ஏவியவெங் கரியதனுக் கெள்ளளவும் அஞ்சாமல்
சேவினையே றெம்பெருமான் சேவடியே சிந்தித்த
நாவினுக்கு மன்னவர்சொல் நற்றமிழ்கள் நம்துணையே.
மிண்டர் - கல் நெஞ்சர்;
வெங்கரி - கொடிய வலிய யானை;
சே - காளை;
நற்றமிழ்கள் - தேவாரப் பதிகங்கள்;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1
சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முரண் ஏறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்
.. அஞ்சுவதி யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை.)
5) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
பொல்லாத அமணர்கள் போதனையால் அன்றுபெரும்
கல்லோடு கட்டிநடுக் கடலாழ்த்தும் போதும்தம்
சொல்லாலெம் பெருமான்பேர் துணையென்று கரையேற
வல்லார்நம் வாகீசர் வாழியவர் மலர்த்தாளே.
போதனை - instruction, advice;
வாழி - வாழ்க;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.72.7
கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேனன்றே.)
6) --- (கலிவிருத்தம் - கூவிளம் தேமா கூவிளம் தேமா - என்ற வாய்பாடு) ---
தாண்டவம் ஆடும் ஆண்டவன் தீயாய்
மூண்டள வின்றி நீண்டவன் தன்னைத்
தாண்டகம் பாடி வேண்டிய அன்பர்
மாண்டுணைத் தாளைப் பூண்டதென் நெஞ்சே.
தாண்டவம் ஆடும் ஆண்டவன் - நடராஜன்;
தீயாய் மூண்டு அளவு இன்றி நீண்டவன் - திருமாலும் பிரமனும் தேடுமாறு அளவில்லாச் சோதியாக உயர்ந்தவன்;
தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரத்தில் பயிலும் ஒரு யாப்பு வகை; (தாண்டகச்சதுரர் - திருநாவுக்கரசு நாயனார்);
மாண்டுணைத்தாள் - மாண் துணைத்தாள் - மாட்சிமை உடைய இரு திருவடிகள்; (மாண்தல் - மாட்சிமைப்படுதல்);
பூண்தல் - தரித்தல்; அணிதல்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment