06.02.156 – புன்கூர் (திருப்புன்கூர்) - வினைக்குன்றால் - (வண்ணம்)
2011-09-17
06.02.156 - வினைக்குன்றால் - (புன்கூர் (திருப்புன்கூர்))
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனத்தந்தா தந்த தந்தா .. தனதான )
வினைக்குன்றால் இங்க டைந்தா .. ரிடர்நாளும்
.. வெருட்டும்போ தஞ்சல் என்பார் .. எவரோராய்
தெனத்தெந்தே என்று வண்டார் .. பொழில்சூழும்
.. திருப்புன்கூர் சிந்தி நெஞ்சே .. அருள்வானே
சினக்குஞ்சே ஒன்ற மர்ந்தான் .. நதிசூடிச்
.. சிவைக்கும்பா கந்த ருங்கோன் .. மறைநாவன்
இனத்தண்போ திண்டை பண்சேர் .. உரைமாலை
.. எடுத்தன்பால் உம்ப ருஞ்சூழ் .. பெருமானே.
பதம் பிரித்து:
வினைக்குன்றால் இங்கு அடைந்து, ஆர் இடர் நாளும்
.. வெருட்டும்போது, அஞ்சல் என்பார் எவர்? ஓராய்;
தெனத்தெந்தே என்று வண்டு ஆர் பொழில் சூழும்
.. திருப்புன்கூர் சிந்தி நெஞ்சே; அருள்வானே;
சினக்கும் சே ஒன்று அமர்ந்தான்; நதிசூடிச்,
.. சிவைக்கும் பாகம் தரும் கோன்; மறைநாவன்;
இனத்-தண்-போது இண்டை பண் சேர் உரைமாலை
.. எடுத்து அன்பால் உம்பரும் சூழ் பெருமானே;
வினைக்குன்றால் இங்கு அடைந்து, ஆர் இடர் நாளும் வெருட்டும்போது, அஞ்சல் என்பார் எவர்? ஓராய் - மலை போன்ற வினைகளால் புவியில் பிறவி எய்தி, பெரும் துன்பங்கள் தினந்தோறும் உன்னைப் பயமுறுத்தும்போது, "அஞ்சாதே" என்று யார் உன்னைக் காப்பார்? எண்ணுவாயாக; (ஆரிடர் - அருமை + இடர் - பொறுத்தற்கு அரிய துன்பம்); (வெருட்டுதல் - அச்சுறுத்துதல்); (ஓர்தல் - எண்ணுதல்);
தெனத்தெந்தே என்று வண்டு ஆர் பொழில் சூழும் திருப்புன்கூர் சிந்தி நெஞ்சே; அருள்வானே - (தேனை நாடித்) "தெனத்தெந்தே" என்று வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலைகள் சூழ்ந்த, (அப்பெருமான் உறையும்) திருப்புன்கூரை, மனமே, தியானம் செய்; அவன் அருள்வான்; (சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைகள் அவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்");
சினக்கும் சே ஒன்று அமர்ந்தான் - கோபிக்கும் இடபத்தை வாகனமாக விரும்பியவன்; (சே - எருது); (அமர்தல் - விரும்புதல்);
நதிசூடிச், சிவைக்கும் பாகம் தரும் கோன் - கங்கையை (முடியில்) அணிந்து, உமைக்கும் திருமேனியில் ஒரு பாகம் தந்த தலைவன்; (சிவை - பார்வதி);
மறைநாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;
இனத்-தண்-போது இண்டை பண் சேர் உரைமாலை எடுத்து அன்பால் உம்பரும் சூழ் பெருமானே - சிறந்த குளிர்ந்த மலர்கள், இண்டைமாலை இவற்றைச் சுமந்தும், பண் பொருந்திய பாமாலைகளைப் பாடியும், அன்போடு தேவர்களும் சூழும் (வலம் செய்யும்) பெருமான்; (இனம் - வருக்கம்; கூட்டம்); (தண்மை - குளிர்ச்சி); (போது - பூ); (இண்டை - மலர்மாலை வகைகளில் ஒன்று); (எடுத்தல் - சுமத்தல்; குரலெடுத்துப் பாடுதல்); ("எடுத்து" - தீவகமாக இருமுறை இயைக்க - "இனத்-தண்-போது இண்டை எடுத்து" & "பண் சேர் உரைமாலை எடுத்து");
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
Some video clips of bees buzzing:
Bumble bees buzzing about on a spring day: http://www.youtube.com/watch?v=ekXWl9KTqdc
Loud buzzing bumblebee works a champlain rose: http://www.youtube.com/watch?v=fBRrsEKB_GQ
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment