Wednesday, August 10, 2022

06.02.160 – இடைமருதூர் (திருவிடைமருதூர்) - தினம் பராவும் - (வண்ணம்)

06.02.160 – இடைமருதூர் (திருவிடைமருதூர்) - தினம் பராவும் - (வண்ணம்)


2011-11-27

6.2.160) தினம் பராவும் - இடைமருதூர் (திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனந்த தானந் தந்தன தனதன .. தனதான)

(இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு - திருப்புகழ் - பொது)


தினம்ப ராவும் பண்புடை மறைமுனி .. உயிர்வாழச்

.. சினந்த காலன் றுஞ்சிட உதைதரு .. பெருமானூர்

அனந்த னேகஞ் சன்கரி யவனிவர் .. மிகநேடி

.. அலந்து போயன் றங்கழல் வழிபட .. உயர்சோதீ

புனைந்த ஆறுந் திங்களு முடிமிசை .. உடையானே

.. புரந்தி டாயென் றன்பொடு தமிழுரை .. அடியாரும்

தெனந்தெ னாவென் றஞ்சிறை அறுபத .. மிசைபாடும்

.. செறிந்த காவுந் துன்றிய திருவிடை .. மருதூரே.


பதம் பிரித்து:

தினம் பராவும் பண்பு-உடை மறை-முனி உயிர் வாழச்,

.. சினந்த காலன் துஞ்சிட உதைதரு பெருமான் ஊர்;

"அனந்தனே; கஞ்சன் கரியவன் இவர் மிக நேடி,

.. அலந்துபோய், அன்று அங்கழல் வழிபட உயர்-சோதீ;

புனைந்த ஆறும் திங்களும் முடிமிசை உடையானே;

.. புரந்திடாய்" என்று அன்பொடு தமிழ் உரை அடியாரும்,

தெனந்தெனா என்று அஞ்சிறை அறுபதம் இசை-பாடும்

.. செறிந்த காவும் துன்றிய திருவிடைமருதூரே.


தினம் பராவும் பண்பு-உடை மறை-முனி உயிர் வாழச், சினந்த காலன் துஞ்சிட உதைதரு பெருமான் ஊர் - தினமும் போற்றும் ஆழ்ந்த பக்தியுடைய மறையவரான மார்க்கண்டேயர் உயிர்வாழும் பொருட்டு, அவரைக் கொல்லக் கோபத்தோடு வந்த காலனே இறக்கும்படி உதைத்த சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் ஊர்; (பராவுதல் - பரவுதல் - துதித்தல்); (மறை முனி - மறையவராகிய முனிவர் - மார்க்கண்டேயர்); (துஞ்சுதல் - இறத்தல்); (தருதல் - ஒரு துணைவினை);

"அனந்தனே - "முடிவில்லாதவனே; (அனந்தன் - முடிவற்றவன் - சிவன்);

கஞ்சன் கரியவன் இவர் மிக நேடி, அலந்துபோய், ன்று அங்கழல் வழிபட உயர்-சோதீ - பிரமன் திருமால் இவர் இருவரும் மிகவும் தேடி வாடி, அன்று அழகிய திருவடியை வழிபடுமாறு ஓங்கிய சோதியே; (கஞ்சன் - பிரமன்; கஞ்சம் - தாமரை); (கரியவன் - திருமால்); (நேடுதல் - தேடுதல்);

புனைந்த ஆறும் திங்களும் முடிமிசை உடையானே - திருமுடிமேல் கங்கையையும் சந்திரனையும் அணிந்தவனே;

புரந்திடாய்" என்று அன்பொடு தமிழ் உரை அடியாரும் - காத்தருளாய்" என்று அன்போடு தமிழ்ப் பாமாலைகளைப் பாடும் அடியவர்களும்; (புரத்தல் - காத்தல்);

தெனந்தெனா என்று அஞ்சிறை அறுபதம் இசை-பாடும் - அழகிய சிறகுகளையுடைய வண்டுகள் தெனந்தெனா என்று இசைபாடுகின்ற; (அம் - அழகு); (சிறை - சிறகு); (அறுபதம் - ஆறுகால்களை உடைய வண்டு);

செறிந்த காவும் துன்றிய திருவிடைமருதூரே - அடர்ந்த சோலையும் சூழும் திருவிடைமருதூர் ஆகும்; (செறிதல் - அடர்தல்); (கா - சோலை) (துன்றுதல் - நெருங்குதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment