06.02.165 – வேதிகுடி (திருவேதிகுடி) - அறியாமை மிகவாகி - (வண்ணம்)
2012-04-12
06.02.165 - அறியாமை மிகவாகி - வேதிகுடி (திருவேதிகுடி)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனதான தனதான தனதான தனதான
தனதான தனதான .. தனதான )
(ஓரளவு இதனை ஒத்த சந்தம் - "தனதானத் தனதான" - இறவாமற் பிறவாமல் - திருப்புகழ் - அவிநாசி)
அறியாமை மிகவாகி இருதாளை நினையாமல்
.. .. அலைபோல வருமாசை .. அதனாலே
.. அழியாத மலைபோல வளர்தீய வினைகூடி
.. .. அடுகாலன் எறிபாசம் .. விழுவேனோ
வெறியாரும் மலரோடு புனலோடு புகையோடு
.. .. விரைநாறு தமிழ்மாலை .. அவையோடு
.. விலகாத வினைதீர எளிதான வழியான
.. .. விடையேறும் உனையோத .. அருளாயே
மறிமானும் இலையாரும் நுனைவேலும் ஒளியோடு
.. .. வடியாரும் மழுவாளும் .. உடையானே
.. வளையாரும் இறையாளை ஒருபாகம் அமரீச
.. .. வளராத பிறைசூடு .. சடையானே
செறிசோலை தனில்நாளும் மலர்பூவி னிடையூறு
.. .. தெளிதேறல் அளிநாடி .. இசைபாடச்
.. சினைமீது துணையோடு கரிதான குயில்கூவு
.. .. திருவேதி குடிமேவு .. பெருமானே.
அறியாமை மிக ஆகி, இரு தாளை நினையாமல், அலைபோல வரும் ஆசை அதனாலே அழியாத மலைபோல வளர் தீய வினை கூடி, அடு காலன் எறி பாசம் விழுவேனோ - அறியாமையே மிகுந்து, உன் இரு திருவடிகளை எண்ணாமல், அலைபோல வந்துகொண்டேயிருக்கும் ஆசைகளால், அழியாத மலையைப்போல் வளர்கிற தீவினைகள் பெருகிக், கொல்லும் எமன் வீசும் பாசத்தில் விழுவேனோ? (அடுதல் - கொல்லுதல்); (எறிதல் - வீசியெறிதல்);
வெறி ஆரும் மலரோடு, புனலோடு, புகையோடு, விரை நாறு தமிழ் மாலை அவையோடு, விலகாத வினை தீர எளிதான வழியான, விடை ஏறும் உனை ஓத அருளாயே - விட்டு நீங்காத பாவங்கள் எல்லாம் தீர்வதற்கு எளிய வழியாக உள்ளவனும் இடபவாகனத்தை உடையவனும் ஆன உன்னை, வாசம் மிகுந்த பூக்களாலும், நீராலும், தூபத்தாலும், வாசம் கமழும் தமிழ்ப்பாமாலைகளாலும் அடியேன் போற்ற அருள்புரிவாயாக! (வெறி - வாசனை); (விரை - வாசனை); (நாறுதல் - மணத்தல்); (புனல் - ஜலம்); (புகை - தூபம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.1.6 - "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்");
மறி மானும், இலை ஆரும் நுனை வேலும், ஒளியோடு வடி ஆரும் மழுவாளும் உடையானே - மான்கன்றும், இலைபோன்ற நுனியை உடைய சூலமும், பிரகாசமான கூர்மையான மழுவும் உடையவனே; (மறிமான் - மான்கன்று); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்; ஒத்தல்); (நுனை - முனை); (வடி - கூர்மை);
வளை ஆரும் இறையாளை ஒரு பாகம் அமர் ஈச - வளையல் பொருந்திய முன்கையை உடைய உமையம்மையை ஒரு பங்காக விரும்பும் ஈசனே; (இறை - முன்கை); (அமர்தல் - விரும்புதல்);
வளராத பிறைசூடு சடையானே - இளம்பிறைச்சந்திரனைச் சூடும் சடையை உடையவனே; (வளராத - இளைய என்னும் பொருளில்); (சுந்தரர் தேவாரம் - 7.38.3 - "வளராத பிறையும் வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை");
செறி சோலைதனில் நாளும் மலர் பூவினிடை ஊறு தெளி தேறல் அளி நாடி இசை பாடச், சினைமீது துணையோடு கரிதான குயில் கூவு திருவேதிகுடி மேவு பெருமானே - அடர்ந்த சோலைகளில் தினமும் மலர்கின்ற பூக்களில் ஊறுகின்ற தெளிந்த தேனை நாடி வண்டுகள் ரீங்காரம் செய்ய, மரக்கிளைகளில் தன் துணையோடு கருங்குயில் கூவுகின்ற திருவேதிகுடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே. (தேறல் - தேன்); (அளி - வண்டு); (சினை - மரக்கிளை);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment