Tuesday, August 16, 2022

06.02.163 – பொது - தொந்தம் என்ற பந்தம் - (வண்ணம்)

06.02.163 – பொது - தொந்தம் என்ற பந்தம் - (வண்ணம்)

2012-03-30

06.02.163 - தொந்தம் என்ற பந்தம் - (பொது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தந்த தந்த தந்த தந்த

தந்த தந்த தந்த தந்த

தந்த தந்த தந்த தந்த .. தனதான )

(சந்த னந்தி மிர்ந்த ணைந்து - திருப்புகழ் - எண்கண்)


தொந்த மென்ற பந்த மின்று .. வந்த டைந்து துன்றி நின்று

.. .. துன்பு தந்து முன்ப தங்க .. ளிறையேனும்

.. சிந்தை யின்றி ஐம்பு லன்கள் .. உந்த இங்க வம்பு ரிந்து

.. .. தெம்பி ழந்து ழன்று ழன்று .. மருளாமல்

மந்தி ரம்ப தங்க ளஞ்சு .. மென்று ணர்ந்து கண்க சிந்து

.. .. மங்க லந்த ருஞ்சி வந்த .. இருதாளை

.. வஞ்ச மின்றி அன்பு பொங்கு .. நெஞ்சு கொண்டு கொன்றை தும்பை

.. .. வம்ப ணிந்த இண்டை கொண்டு .. பணிவேனோ

தந்த மொன்றி லங்கு மைந்த .. னெந்தை என்றி டும்பு யங்க

.. .. சந்தி ரன்ற யங்கு கின்ற .. முடியானே

.. தன்க ரங்கள் கொண்டு குன்றி .. டந்த மிண்டன் நைந்த லந்து

.. .. சம்பு வென்றி றைஞ்ச அன்று .. நெரிபாதா

அந்த மின்றி அங்கி யென்று .. நின்ற பண்ப நஞ்சை அஞ்சி

.. .. அண்டர் வந்து நின்ப தங்கள் .. தொழுநாளில்

.. அந்த நஞ்சை உண்ட கண்ட .. அஞ்ச னம்பு னைந்த மங்கை

.. .. அங்கு டம்பி டந்தி கழ்ந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

தொந்தம் என்ற பந்தம் இன்று வந்து அடைந்து, துன்றி நின்று,

.. .. துன்பு தந்தும், உன் பதங்கள் இறையேனும்

.. சிந்தை இன்றி, ஐம்புலன்கள் உந்த, இங்கு அவம் புரிந்து,

.. .. தெம்பு இழந்து, உழன்று உழன்று மருளாமல்,

மந்திரம் பதங்கள் அஞ்சும் என்று உணர்ந்து, கண் கசிந்து,

.. .. மங்கலம் தரும் சிவந்த இருதாளை,

.. வஞ்சம் இன்றி, அன்பு பொங்கும் நெஞ்சு கொண்டு, கொன்றை தும்பை

.. .. வம்பு அணிந்த இண்டை கொண்டு பணிவேனோ;

தந்தம் ஒன்று இலங்கு மைந்தன் "எந்தை" என்றிடும் புயங்க;

.. .. சந்திரன் தயங்குகின்ற முடியானே;

.. தன் கரங்கள் கொண்டு குன்று இடந்த மிண்டன் நைந்து அலந்து,

.. .. "சம்பு" என்று இறைஞ்ச அன்று நெரி-பாதா;

அந்தம் இன்றி அங்கி என்று நின்ற பண்ப; நஞ்சை அஞ்சி

.. .. அண்டர் வந்து நின் பதங்கள் தொழு நாளில்,

.. அந்த நஞ்சை உண்ட கண்ட; அஞ்சனம் புனைந்த மங்கை

.. .. அங்கு உடம்பு இடம் திகழ்ந்த பெருமானே.


தொந்தம் என்ற பந்தம் இன்று வந்து அடைந்து, துன்றி நின்று, துன்பு தந்தும் - (பாவ புண்ணியம் முதலிய) இரட்டையாகிய பந்தங்கள் இப்பிறவியில் என்னை அடைந்து சூழ்ந்துகொண்டு துன்பத்தைத் தந்தபொழுதும்; (தொந்தம் - துவந்துவம் - இரட்டை. நல்வினை தீவினை, அறம் மறம், இன்பம் துன்பம் என்னும் இரட்டைகளையும் அவைபோல்வனவற்றையும் வடமொழியில் துவந்துவம் என்பர். அது தமிழில் தொந்தம் என்று வழங்குகின்றது); (துன்றுதல் - நெருங்குதல்); (துன்பு - துன்பம்);


ன் பதங்கள் றையேனும் சிந்தை ன்றி - உன் திருவடிகளைச் சிறிதளவும் எண்ணாமல்; (இறையேனும் - சிறிதளவும்);

ஐம்புலன்கள் உந்த, இங்கு அவம் புரிந்து, தெம்பு இழந்து, ழன்று ழன்று மருளாமல் - ஐம்புலன்கள் ஏவ, அவ்வண்ணம் இவ்வுலகில் அவச்செயல்களே செய்து, உடல் வலிமை குன்றி, நிலைகெட்டு அஞ்சி மயங்காமல்; (உழல்தல் - அலைதல்; சுழலுதல்; நிலைகெடுதல்); (மருள்தல் - மயங்குதல்; அஞ்சுதல்);

மந்திரம் பதங்கள் அஞ்சும் என்று ணர்ந்து, கண் கசிந்து, மங்கலம் தரும் சிவந்த இருதாளை - மந்திரமாவது திருவைந்தெழுத்து என்று உணர்ந்து, கண்கள் கசியத், திரு அளிக்கும் சேவடி இரண்டை; (சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி");

வஞ்சம் இன்றி, அன்பு பொங்கும் நெஞ்சு கொண்டு, கொன்றை தும்பை வம்பு அணிந்த இண்டை கொண்டு பணிவேனோ - வஞ்சமின்றிப் பக்தி பொங்குகின்ற மனத்தோடு, கொன்றை தும்பை முதலிய மலர்கள் வாசம் மிகுந்த இண்டைமாலைகள் இவற்றைக்கொண்டு வணங்க அருள்வாயாக; (வம்பு - வாசனை); (இண்டை - மாலைவகை);


தந்தம் ஒன்று இலங்கு மைந்தன் "ந்தை" என்றிடும் புயங்க - ஒரு தந்தத்தை உடைய மகனான விநாயகன் "எம் தந்தையே" என்று சொல்லும் புயங்கனே - விநாயகனைப் பெற்ற நாகாபரணனே; (புயங்கன் - புஜங்கன் - பாம்புகளை அணிந்தவன் - சிவன்);

சந்திரன்யங்குகின்ற முடியானே - சந்திரன் ஒளிவீசுகின்ற திருமுடியை உடையவனே; (தயங்குதல் - ஒளிவீசுதல்);

தன் கரங்கள் கொண்டு குன்று இடந்த மிண்டன் நைந்து அலந்து, "சம்பு" ன்று இறைஞ்ச அன்று நெரி-பாதா - தனது கைகளால் கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணன் துன்புற்று வருந்தி. "சம்புவே" என்று போற்றி வணங்கும்படி அவனை அன்று நசுக்கிய திருப்பாதனே; (இடத்தல் - பெயர்த்தல்); (மிண்டன் - கல்நெஞ்சன்; அறிவிலி); (நைதல் - நசுங்குதல்; மனம் வருந்துதல்); (அலத்தல் - துன்புறுதல்); (நெரித்தல் - நசுக்குதல்);


அந்தம் இன்றி அங்கி ன்று நின்ற பண்ப - (பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிய நாளில்) எல்லையின்றிச் சோதி வடிவில் ஓங்கியவனே; (அங்கி - நெருப்பு);

நஞ்சை அஞ்சி அண்டர் வந்து நின் பதங்கள் தொழு நாளில் - ஆலகால விடத்திற்கு அஞ்சித் தேவர்கள் வந்து உன் திருவடியைத் தொழுதபொழுது; (அண்டர் - தேவர்);

அந்த நஞ்சை உண்ட கண்ட - அந்த விடத்தை உண்ட கண்டத்தை உடையவனே;

அஞ்சனம் புனைந்த மங்கை அங்கு உடம்பு இடம் திகழ்ந்த பெருமானே - கண்ணுக்கு மை அணிந்த உமை திருமேனியில் இடப்பக்கம் ஒரு பங்காக விளங்குகின்ற பெருமானே; (அஞ்சனம் - கண்ணில் இடும் மை); (அங்கு - அசை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment