Monday, August 22, 2022

06.02.168 – பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி) - சேலை நிகர்விழி - (வண்ணம்)

06.02.168 – பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி) - சேலை நிகர்விழி - (வண்ணம்)

2012-05-04

06.02.168 - சேலை நிகர்விழி - (பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி))

(திருச்சிராப்பள்ளி அருகே வடமேற்கே 20 கிமீ தூரத்தில் உள்ள தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான )

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


சேலை நிகர்விழி மாது மனையொடு

..... தேடு பொருளெனும் .. நினைவாலே

.. சேரும் அருவினை யாவும் அடியொடு

..... தீர வழியென .. உளன்நீயே

பாலை நிகர்திரு நீறு புனைபவர்

..... பாடி அடிதொழும் .. அருளாளா

.. பாவ மலைகெட நானும் உனதிரு

..... பாத மலர்களில் .. இடுவேனே

கோல மணியென வேலை விடமது

..... கூடும் அணிமிட .. றுடையானே

.. கோயில் எனவுளம் ஆக உனபெயர்

..... கூறி வழிபட .. மறவாத

பாலன் உயிரொடு வாழ நமனுயிர்

..... கால உதைதரு .. கழலானே

.. நீல முகிலடை சோலை மருவிய

..... ஞீலி வனமுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

சேலை நிகர் விழி மாது, மனையொடு,

..... தேடு பொருள் எனும் நினைவாலே

.. சேரும் அருவினை யாவும் அடியொடு

..... தீர வழி என உளன் நீயே;

பாலை நிகர் திருநீறு புனைபவர்

..... பாடி அடிதொழும் அருளாளா;

.. பாவ-மலை கெட நானும் உனது இரு

..... பாதமலர்களில் இடுவேனே;

கோல மணி என வேலை விடமது

..... கூடும் அணி மிடறு உடையானே;

.. கோயில் என உளம் ஆக உன பெயர்

..... கூறி வழிபட மறவாத

பாலன் உயிரொடு வாழ, நமன் உயிர்

..... கால உதைதரு கழலானே;

.. நீல-முகில் அடை சோலை மருவிய

..... ஞீலிவனம் உறை பெருமானே.


சேலை நிகர்விழி மாது மனையொடு தேடு பொருள் எனும் நினைவாலே சேரும் அருவினை யாவும் அடியொடு தீர வழி என உளன் நீயே - சேல்மீன் போன்ற கண்ணுடைய மனைவி, வீடு, குடும்பம், ஈட்டும் செல்வம் என்ற எண்ணங்களால் வந்தடையும் அரிய தீவினைகள் எல்லாம் அடியோடு தீர்ந்துவிட வழியாக இருப்பவன் நீ; (சேல் - ஒருவகை மீன்); (நிகர்த்தல் - ஒத்தல்); (மனை - வீடு; குடும்பம்); (தேடுதல் - சம்பாதித்தல்); (அடியொடு - அடியோடு - முழுவதும்); (வழி - மார்க்கம்; உபாயம்);


பாலை நிகர் திருநீறு புனைபவர் பாடி அடிதொழும் அருளாளா - பால் போன்ற வெண்ணீற்றை அணிகின்ற பக்தர்களெல்லாம் திருப்புகழைப் பாடி திருவடியை வணங்கும் அருளாளனே;

பாவமலை கெட நானும் உனது இரு பாத மலர்களில் இடுவேனே - (அவர்களைப்போல) என் மலை போன்ற பாவங்கள் எல்லாம் தீர்ந்துபோகுமாறு நானும் உன் இருதிருவடிகளில் பாமாலை இடுவேன்;


கோல மணி என வேலை விடமது கூடும் அணி மிடறு உடையானே - அழகிய கருமணியைப் போல கடல் விடம் சேர்கின்ற அழகிய கண்டத்தை உடையவனே; (கோலம் - அழகு); (வேலை - கடல்); (அணி - அழகு); (மிடறு - கண்டம்);


கோயில் எனளம் ஆக உன பெயர் கூறி வழிபட மறவாத பாலன் உயிரொடு வாழ, நமன் உயிர் கால உதைதரு கழலானே - தன் மனமே உன் கோயில் ஆகுமாறு எப்போதும் உனது திருநாமத்தைச் சொல்லித் தொழுதுவந்த மார்க்கண்டேயர் உயிரோடு நிலைத்து வாழ அருள்செய்து, வீரக்கழல் அணிந்த திருவடியால் எமனை உதைத்து அவன் உயிரைக் கக்கவைத்தவனே; (உன பெயர் - '' ஆறாம் வேற்றுமை உருபு - உனது திருநாமம்); (கால்தல் - கக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.38.2 - "காலனைக் கால வைத்தார்"); (உதைதரு கழல் - உதைத்த கழல்; தரு - துணைவினை);


நீலமுகில் அடை சோலை மருவிய ஞீலிவனம் உறை பெருமானே - கார்மேகம் அடைகின்ற (வானோங்கு) சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! (நீலமுகில் - நீலமேகம் - கார்மேகம்); (ஞீலிவனம் - திருப்பைஞ்ஞீலி);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment