06.02.164 – வேதிகுடி (திருவேதிகுடி) - மேதினியில் வாழ்விதனில் - (வண்ணம்)
2012-04-06
06.02.164 - மேதினியில் வாழ்விதனில் - வேதிகுடி (திருவேதிகுடி)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன .. தனதான )
(சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென - திருப்புகழ் - பொது)
மேதினியில் வாழ்விதனில் நாளுமிக ஆசைகொடு
.. .. வேதனைக ளேஅடையும் .. அடியேனும்
.. மேலைவினை தீரவுன தார்கழலை ஓதுதலை
.. .. மேவுமன மேயடைய .. அருளாயே
போதியலும் ஆரமொடு பாவிரவு மாலையொடு
.. .. பூவனைய தாள்தொழுத .. முனிகாதப்
.. போனநமன் மாளவுதை பாதகரி ஈருரிவை
.. .. போர்வையென மார்பிலணி .. ஒருவீரா
பாதியுடல் நாரிதிகழ் நாதவலை மோதுநதி
.. .. பாய்சடையில் நாகமதி .. புனைவோனே
.. பாரிடமு லாவுசுடு கானினடம் ஆடிமகிழ்
.. .. பாசுபத நீலமணி .. மிடறானே
வேதியனும் நாரணனும் ஏனமன மாயடியு
.. .. மேலுமறி யாதவளர் .. எரியானே
.. மேதிவிளை யாடிமகிழ் நீர்நிலையில் மீனுகளும்
.. .. வேதிகுடி மேயசிவ .. பெருமானே.
பதம் பிரித்து:
மேதினியில் வாழ்வு-இதனில் நாளும் மிக ஆசைகொடு
வேதனைகளே அடையும் அடியேனும்
மேலைவினை தீர, உனது ஆர்-கழலை ஓதுதலை
மேவு மனமே அடைய அருளாயே;
போது இயலும் ஆரமொடு, பா விரவு மாலையொடு,
பூ அனைய தாள் தொழுத முனி காதப்
போன நமன் மாள உதை பாத; கரி ஈர்-உரிவை
போர்வை என மார்பில் அணி ஒரு வீரா;
பாதி உடல் நாரி திகழ் நாத; அலைமோது நதி
பாய் சடையில் நாகம் மதி புனைவோனே;
பாரிடம் உலாவு சுடுகானில் நடம் ஆடி மகிழ்
பாசுபத; நீலமணி மிடறானே;
வேதியனும் நாரணனும் ஏனம் அனமாய் அடியும்
மேலும் அறியாத வளர் எரியானே;
மேதி விளையாடி மகிழ் நீர்நிலையில் மீன் உகளும்
வேதிகுடி மேய சிவபெருமானே.
மேதினியில் வாழ்வு-இதனில் நாளும் மிக ஆசைகொடு வேதனைகளே அடையும் அடியேனும் - உலகவாழ்வில் என்றும் மிகுந்த ஆசைகொண்டு துன்பமே அடைகின்ற நானும்; (மேதினி - பூமி); (கொடு - கொண்டு);
மேலைவினை தீர, உனது ஆர்-கழலை ஓதுதலை மேவு மனமே அடைய அருளாயே - என் பழவினை தீருமாறு, உன் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியை ஓதுவதை விரும்பும் மனமே பெற அருள்வாயாக; (மேலைவினை - பழவினை); (ஆர்த்தல் - ஒலித்தல்); (மேவுதல் - விரும்புதல்);
போது இயலும் ஆரமொடு, பா விரவு மாலையொடு, பூ அனைய தாள் தொழுத முனி காதப் போன நமன் மாள உதை பாத - பூக்கள் பொருந்திய மாலையோடு பாமாலையும் கொண்டு உன் மலரடியைத் தொழுத முனிவரான மார்க்கண்டேயரைக் கொல்லச் சென்ற காலனே மாளுமாறு உதைத்த பாதனே; (போது - பூ); (ஆரம் - மாலை); (விரவுதல் - பொருந்துதல்); (அனைய - ஒத்த); (காதுதல் - கொல்தல்);
கரி ஈர்-உரிவை போர்வை என மார்பில் அணி ஒரு வீரா - யானையின் உரித்த தோலைப் போர்வை போல மார்பில் அணிந்த ஒப்பற்ற வீரனே; (கரி - யானை); (ஈர் உரிவை - உரித்த தோல்);
பாதி உடல் நாரி திகழ் நாத - பாதி மேனியில் உமை விளங்கும் நாதனே;
அலைமோது நதி பாய் சடையில் நாகம் மதி புனைவோனே - அலைமோதும் கங்கை பாயும் சடையில் பாம்பையும் சந்திரனையும் அணிந்தவனே;
பாரிடம் உலாவு சுடுகானில் நடம் ஆடி மகிழ் பாசுபத - பூதகணங்கள் இருக்கும் சுடுகாட்டில் கூத்து ஆடி மகிழும் பாசுபதனே; (பாரிடம் - பூதம்); (பாசுபதன் - சிவன்; பாசுபத வேடம் - மயானத்துச் சாம்பல் என்பு, தலையோடு, மயிர்க்கயிறு முதலியன பூணுதல்);
நீலமணி மிடறானே - நீலமணி கண்டனே;
வேதியனும் நாரணனும் ஏனம் அனமாய் அடியும் மேலும் அறியாத வளர் எரியானே - பிரமனும் திருமாலும் அன்னமும் பன்றியும் ஆகி அடிமுடி தேடி அறிய ஒண்ணாத எல்லையற்ற சோதி வடிவினனே; (வேதியன் - பிரமன்); (ஏனம் - பன்றி); (அனமாய் - அன்னமாய்); (எரி - நெருப்பு); ("வேதியனும் நாரணனும் ஏனம் அனமாய்" - எதிர்நிரல்நிறையாகி வந்தன);
மேதி விளையாடி மகிழ் நீர்நிலையில் மீன் உகளும் வேதிகுடி மேய சிவபெருமானே - எருமை விளையாடி மகிழும் குளத்தில் மீன்கள் தாவுகின்ற திருவேதிகுடியில் எழுந்தருளிய சிவபெருமானே; (மேதி - எருமை); (உகள்தல் - தாவுதல்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment