Tuesday, August 2, 2022

06.03.056 - பாடு - தருகாலன் - மடக்கு

06.03 – மடக்கு


2011-08-13

06.03.056 - பாடு - தருகாலன் - மடக்கு

-------------------------

பாடு மிகுந்து பரிதவிக்கும் நெஞ்சமே

பாடு மறையவன் பாலடைந்த - பாடு

தருகாலன் தானங்குச் சாவவுதைத் தாயுள்

தருகாலன் சம்புவைநீ சார்.


பதம் பிரித்து:

பாடு மிகுந்து பரிதவிக்கும் நெஞ்சமே;

பாடு மறையவன்பால் அடைந்த - பாடு

தரு காலன்தான் அங்குச் சாவ உதைத்து, ஆயுள்

தரு காலன்; சம்புவை நீ சார்.


பாடு - 1) துன்பம்; 2) பாடுதல்; 3) சாவு; (படுதல் - துன்பமடைதல்; சாதல்);

காலன் - 1) எமன்; 2) காலை உடையவன்;

பாடு தரு காலன் - உயிர்களுக்குச் சாவினைத் தரும் எமன் - கொல்லும் எமன்;

மறையவன் - மார்க்கண்டேயர்;

பால் - பக்கம்; அருகு;

சாவ - சாமாறு; இறக்க;

சம்பு - சுகத்தைத் தருபவன்;

சார் - சரண்புகு; சென்றடை;


துன்பம் மிகுந்து, வருந்தும் மனமே; துதிகள் பாடிய மார்க்கண்டேயர் பக்கத்தில் வந்த, சாவைத் தரும் கூற்றுவனே அங்கு இறக்கும்படி அவனை உதைத்து, மார்க்கண்டேயருக்கு இறவாமையைத் தந்த திருவடியினன்; அந்தச் சம்புவை நீ சரணடைந்து உய்வாயாக;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment