06.02.154 – நெய்த்தானம் (திருநெய்த்தானம்) - ஆறுனைச் சேரற்கு - (வண்ணம்)
2011-09-01
06.02.154 - ஆறுனைச் சேரற்கு - (நெய்த்தானம் (திருநெய்த்தானம்))
(இக்கால வழக்கில் "தில்லைஸ்தானம்" - திருவையாறு அருகே உள்ள தலம்)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தானனத் தானத் .. தனதான )
ஆறுனைச் சேரற் .. கறியாத
.. ஆதரைக் கூடித் .. திரியாமல்
நூறுபத் தாநற் .. பெயர்கூறி
.. நோயறுப் பாயைப் .. பணிவேனே
நீறுமெய்ப் பூசித் .. திகழ்வோனே
.. நேயரைப் பாலித் .. தருள்வோனே
ஏறுகைத் தூரிற் .. பலிதேர்வாய்
.. ஏர்கொணெய்த் தானப் .. பெருமானே.
பதம் பிரித்து:
ஆறு உனைச் சேரற்கு அறியாத
.. ஆதரைக் கூடித் திரியாமல்,
நூறு பத்து ஆம் நற்பெயர் கூறி,
.. நோய் அறுப்பாயைப் பணிவேனே;
நீறு மெய்ப் பூசித் திகழ்வோனே;
.. நேயரைப் பாலித்து அருள்வோனே;
ஏறு உகைத்து ஊரில் பலி தேர்வாய்;
.. ஏர்கொள் நெய்த்தானப் பெருமானே.
ஆறு உனைச் சேரற்கு அறியாத ஆதரைக் கூடித் திரியாமல் - செல்லவேண்டிய மார்க்கமாகிய உன்னை அடைய அறியாத அறிவற்றவர்களோடு சேர்ந்து உழலாமல்; (ஆறு - வழி); (ஆதன் - குருடன்; அறிவில்லான்);
நூறு பத்து ஆம் நற்பெயர் கூறி, நோய் அறுப்பாயைப் பணிவேனே - ஆயிரம் நல்ல பெயர்களைச் சொல்லி, உடல்நோய்களையும் பிறவிநோயையும் தீர்க்கும் உன்னைத் தொழுவேன்; (நூறு பத்து - ஆயிரம்); (நோய் - உடல்நோய், பிறவிநோய்); (அறுத்தல் - தீர்த்தல்); (ஆம் + நற்பெயர் = ஆநற்பெயர்);
நீறு மெய்ப் பூசித் திகழ்வோனே - திருநீற்றைத் திருமேனியில் பூசி விளங்குபவனே;
நேயரைப் பாலித்து அருள்வோனே - அன்பர்களைக் காத்து அருள்பவனே; (பாலித்தல் -காத்தல்);
ஏறு உகைத்து ஊரில் பலி தேர்வாய் - இடபவாகனத்தில் ஏறிச் சென்று, ஊரார் இடும் பிச்சையை ஏற்பவனே; (உகைத்தல் - ஏறுதல்; ஏறிச் செலுத்துதல்); (ஊரிற்பலி - 1. ஊரில்+பலி; 2. ஊர்+இல்+பலி); (இல் - வீடு); (சம்பந்தர் தேவாரம் - 3.76.1 - "மடவார் இற்பலி கொளப்புகுதும் எந்தை");
ஏர்கொள் நெய்த்தானப் பெருமானே - அழகிய திருநெய்த்தானத்தில் உறையும் சிவபெருமானே. (ஏர் - அழகு); (ஏர்கொள் + நெய்த்தான = ஏர்கொணெய்த்தான);
(இலக்கணக் குறிப்புகள்: ஆறுமுக நாவலர் - இலக்கணச் சுருக்கம்:
ள் + மெல்லினம்:
154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும். 155. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.)
ம் + மெல்லினம்:
146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.)
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment