2015-02-26
P.274 - வேட்களம் - ("கந்த பத்யம்")
-------------------
(அந்தாதி - "பொன்னடி" என்று முதற்பாடல் தொடங்கிப் "பொன்னடியே" என்று ஈற்றுப் பாடல் முடிந்து மண்டலித்து வருகின்றது)
("கந்த பத்யம்" அமைப்பில் - in "kanda padyam" meter)
(இப்பாடல்களின் இலக்கணத்தைப் பிற்சேர்க்கையில் காண்க)
1)
பொன்னடி போற்றிய திங்கள்
மின்னிடு சடையன் பொலிவுறு வேட்கள நகரில்
மன்னிய பெருமான் கழலே
உன்னிய அடியார் உறுபிணி ஒழிவது திடனே.
பொன்னடி போற்றிய திங்கள் மின்னிடு சடையன் - பொற்பாதத்தை வங்கிய சந்திரன் ஒளிவீசும் சடையினன்;
பொலிவுறு வேட்கள நகரில் மன்னிய பெருமான் - அழகிய திருவேட்களத்தில் நீங்காது உறையும் பெருமான்; (பொலிவு - அழகு; செழிப்பு); (மன்னுதல் - நிலைத்தல்);
கழலே உன்னிய அடியார் உறுபிணி ஒழிவது திடனே - அவந்து திருவடியையே எண்ணும் அடியார்களது பெரும்பிணி தீர்வதி நிச்சயம்; (உன்னுதல் - சிந்தித்தல்; எண்ணுதல்); (திடன் - உறுதி; நிச்சயம்);
2)
திடமலி எண்டோள் அண்ணல்
விடமலி கண்டன் பொலிவுறு வேட்கள நகரான்
இடமுமை பங்கென உடையான்
நடமகி ழிறையைத் தொழுதிட நலியும் வினையே.
திடம் மலி எண்தோள் அண்ணல் - வலிய எட்டுப் புஜங்களை உடைய பெருமான்;
விடம் மலி கண்டன் - (பாற்கடலில் எழுந்த) ஆலகாலம் தங்கி நிறத்தினை மிகக் காட்டிய திருக்கழுத்துடையவன்;
பொலிவுறு வேட்கள நகரான் - அழகிய திருவேட்களத்தில் உறையும் பெருமான்;
இடம் உமை பங்கு என உடையான் - அர்த்தநாரீஸ்வரன்;
நடம் மகிழ் இறையைத் தொழுதிட நலியும் வினையே - விரும்பிக் கூத்து ஆடும் இறைவனை வணங்கினால் வினை அழியும்; (நடம் - கூத்து); (மகிழ்தல் - விரும்புதல்); (நலிதல் - அழிதல்);
3)
வினையற ஒருவழி உளதே
மினலன சடையன் பொலிவுறு வேட்கள நகரில்
வனமுலை மாதொடு மேயான்
சினவிடை உடையான் திருவடி தினமும் தொழலே.
வினை அற ஒரு-வழி உளதே - வினைகள் தீர ஒரு வழி உள்ளது; (ஏ - அசை);
மினல் அன சடையன் - மின்னல் போல் ஒளிரும் சடையை உடையவன்;
பொலிவுறு வேட்கள நகரில் வனமுலை மாதொடு மேயான் - அழகிய திருவேட்களத்தில் அழகிய தனங்களை உடைய பார்வதியோடு உறைபவன்; (வனம் - அழகு);
சினவிடை உடையான் - கோபம் உடைய எருதை வாகனமாக உடையவன்;
திருவடி தினமும் தொழலே - அவனது திருவடியைத் தினமும் தொழுவதே; (ஏ - தேற்ற-ஏகாரம்);
4)
தொழுதரி வேண்டிய ஆழியை
மிழலையி லீந்தான் பொலிவுறு வேட்கள நகரில்
மழுவல னேந்தியை வாழ்த்திச்
செழுமல ரிட்டார் இருவினை தேய்ந்தறு மன்றே.
தொழுது அரி வேண்டிய ஆழியை மிழலையில் ஈந்தான் - திருமால் தொழுது வேண்டிய சக்கராயுதத்தைத் திருவீழிமிழலையில் அருளியவன்; (ஆழி - சக்கராயுதம்);
பொலிவுறு வேட்கள நகரில் - அழகிய திருவேட்களத்தில்;
மழு வலன் ஏந்தியை வாழ்த்திச் - மழுவை வலக்கையில் ஏந்திய பெருமானை வாழ்த்தி;
செழுமலர் இட்டார் இருவினை தேய்ந்து-அறுமன்றே - செழுமையான பூக்களைத் தூவும் பக்தர்களது இருவினை அழியும்;
5)
அன்றின ரெயிலெரி வில்லான்
வென்றிவெ ளேற்றன் பொலிவுறு வேட்கள நகரில்
துன்றிய அடியார் பரவிட
நின்றபி ரான்றன தடிதொழ நினைமட நெஞ்சே.
அன்றினர் எயில் எரி- வில்லான் - பகைவர்களது முப்புரங்களை எரித்த வில்லை ஏந்தியவன்; (அன்றினர் - பகைவர்);
வென்றி-வெள் ஏற்றன் - வெற்றியுடைய வெண்ணிற இடபத்தை ஊர்தியாக உடையவன்; (வென்றி - வெற்றி); (வெள்ளேற்றன் என்பது சந்தம் கருதி வெளேற்றன் என்று வந்தது);
பொலிவுறு வேட்கள நகரில் - அழகிய திருவேட்களத்தில்;
துன்றிய அடியார் பரவிட நின்ற பிரான்-தனது அடிதொழ நினை மடநெஞ்சே - நெருங்கித் திரண்ட அடியார்கள் துதித்த உறையும் சிவபெருமானுடைய திருவடியைத் தொழப் பேதைமனமே நீ எண்ணு; (துன்றுதல் - நெருங்குதல்);
6)
நெஞ்சிற் பத்திமி குந்தே
வெஞ்சொல் விட்டார்க் கருளிறை வேட்கள நகரில்
மஞ்சன் மலையன மதகரி
அஞ்சவு ரித்தான் அடியிணை அடைவார்க் கரணே.
நெஞ்சில் பத்தி மிகுந்தே வெஞ்சொல் விட்டார்க்கு அருள் இறை - நெஞ்சில் மிகுந்த பக்தி உடையவர்களாகிக், கடுஞ்சொற்களை நீங்கிய அன்பர்களுக்கு அருளும் இறைவன்;
வேட்கள நகரில் மஞ்சன் - திருவேட்களத்தில் உறையும் வீரன்; (மஞ்சன் - வீரன்; இளைஞன்; மைந்தன் என்பதன் மரூஉ. போலி எனலும் ஆம்);
மலை அன மதகரி அஞ்ச உரித்தான் - மலை போன்ற மதயானை அஞ்சும்படி அதனை வென்று அதன் தோலை உரித்தவன்; (அப்பர் தேவாரம் - 6.76.8 - "மிக்கெதிர்ந்த கரி வெருவ உரித்த கோன்காண்");
அடியிணை அடைவார்க்கு அரணே - அப்பெருமானது இருதிருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு அவன் பாதுகாவல் ஆவான்; (அரண் - கவசம்; அரணம் - காவல்);
7)
அரணெரி வில்லிய ராமதி
விரவிய சடையான் பொலிவுறு வேட்கள நகரில்
திரமென நின்றான் அடியிணை
பரவிடு மனமே பறைவது பழவினை மலையே.
அரண் எரி வில்லி - முப்பரங்களை எரித்த வில்லை ஏந்தியவன்; (அரண் - கோட்டை);
அரா மதி விரவிய சடையான் - பாம்பும் சந்திரனும் சேர்ந்திருக்கும் சடையை உடையவன்;
வேட்கள நகரில் திரம் என நின்றான் அடியிணை பரவிடு மனமே - திருவேட்களத்தில் நிலைத்து நிற்கும் ஈசனது இருதிருவடிகளைப் போற்று மனமே; (திரம் - ஸ்திரம் - நிலை); (பரவுதல் - புகழ்தல்);
பறைவது பழவினை மலையே - (அப்படிப் போற்றினால்) மலை போல உள்ள பழைய வினைகள் அழியும்; (பறைதல் - அழிதல்);
8)
மலையெறி தசமுக னழவே
மெலவொரு விரலூன் றியவிறை வேட்கள நகரில்
சிலைவல பார்த்தற் கோர்படை
நலமரு ணம்பான் அடிதொழ நலிவது மாலே.
மலை எறி தசமுகன் அழவே மெல ஒரு விரல் ஊன்றிய இறை - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணன் அழுமாறு மெல்ல ஒரு திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கிய இறைவன்; (மெல - மெல்ல);
வேட்கள நகரில் சிலை வல பார்த்தற்கு ஓர் படை நலம் அருள் நம்பான் - விற்போரில் வல்ல அர்ஜுனனுக்குத் திருவேட்களத்தில் ஒப்பற்ற பாசுபதாஸ்திரம் அருளிய சிவன்; (சிலை - வில்); (பார்த்தற்கு - பார்த்தனுக்கு); (நம்பான் = நம்பன்); (நலமருணம்பான் - நலம் அருள் நம்பான்);
அடி தொழ நலிவது மாலே - அப்பெருமானது திருவடியை வழிபட்டால் நம் அறியாமை (மயக்கம்) தீரும்; (சுந்தரர் தேவாரம் - 7.29.8 - "மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்");
9)
மாலய னார்மய லாற்கீழ்
மேலறி யாதான் பொலிவுறு வேட்கள நகரில்
நீலமி டற்றன் மூவிலை
வேலன வன்றாள் தொழுதெழ வினைவிடு(ம்) மெய்யே.
மால்-அயனார் மயலால் கீழ் மேல் அறியாதான் - அரியும் பிரமனும் ஆணவத்தோ தேடி அடிமுடி அறிய ஒண்ணாதவன்; (மயல் - மயக்கம்);
பொலிவுறு வேட்கள நகரில் - அழகிய திருவேட்களத்தில்;
நீலமிடற்றன் - நீலகண்டன்;
மூவிலை-வேலன் அவன்-தாள் தொழுதெழ வினை விடு(ம்) மெய்யே - திரிசூலம் ஏந்திய அவனது திருவடியை வணங்கினால் வினைகள் நீங்கும்; இது நிச்சயம்; (அவன் - பகுதிப்பொருள்விகுதி);
10)
மெய்யொன் றுரையார்க் கில்லான்
வெய்யன் தணியன் பொலிவுறு வேட்கள நகரில்
செய்யன் சிரமொன் றேந்தும்
கையன் தாள்தொழ அடைவது கவலா வாழ்வே.
மெய்யொன்று உரையார்க்கு இல்லான் - சிறிதும் உண்மையைப் பேசாத ஈனர்களுக்கு அருள் இல்லாதவன்; (மெய்யொன்று - மெய்யொன்றும் - உம் தொக்கது);
வெய்யன் தணியன் - வெம்மையானவன் குளிர்ச்சியானவன்; (தணியன் - தண்ணியன்)
(திருவாசகம் - 8.1 - சிவபுராணம் - "வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா"); (அப்பர் தேவாரம் - 6.57.3 - "வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி");
பொலிவுறு வேட்கள நகரில் செய்யன் - அழகிய திருவேட்களத்தில் உறைகின்ற செம்மேனியன்; (செய்யன் - சிவந்த நிறம் உடையவன்);
சிரம் ஒன்று ஏந்தும் கையன் - கையில் ஒரு மண்டையோட்டை ஏந்தியவன்;
தாள் தொழ அடைவது கவலா வாழ்வே - அப்பெருமானது திருவடியைத் தொழுதால், நாம் கவலையற்ற வாழ்வைப் பெறுவோம்; (கவல்தல் - கவலைப்படுதல்);
11)
வாழவி ரும்பிற் பணிவாய்
வேழமு ரித்தான் பொலிவுறு வேட்கள நகரில்
போழம் புலியான் வானோர்
தாழும் தலைவன் வரைவிலி தன்பொன் னடியே.
பொருள்கோள்: வாழ விரும்பில், "வேழம் உரித்தான், பொலிவுறு வேட்கள நகரில், போழ் அம்புலியான், வானோர் தாழும் தலைவன், வரைவிலி" தன் பொன்னடியே பணிவாய்; (மனமே என்ற விளி தொக்கு நின்றது).
வாழ விரும்பில் பணிவாய் - உய்ய வேண்டில் வணங்குவாயாக;
வேழம் உரித்தான் - யானையைத் தோலுரித்தவன்;
பொலிவுறு வேட்கள நகரில் - அழகிய திருவேட்களத்தில் உறைகின்ற;
போழ்-அம்புலியான் - போழ் மதியன் - பிறைச்சந்திரனை அணிந்தவன்; (போழ் - துண்டம்); (அம்புலி - சந்திரன்); (பெரியபுராணம் - சண்டேசுர நாயனார் புராணம் - 12.20.56 - "துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்");
வானோர் தாழும் தலைவன் - தேவர்களெல்லாம் வணங்கும் தலைவன்;
வரைவிலி = வரை+வில்லி / வரைவு+இலி = மேருமலையை வில்லாக ஏந்தியவன் / அளவற்றவன்; (வரை - மலை); (வரைவு - எல்லை; அளவு);
தன் பொன்னடியே - அவனது பொன் போன்ற திருவடியை;
வி. சுப்பிரமணியன்
பிற்சேர்க்கை:
கந்த பத்யம் - ( "kanda padyam" metre )
---------------------------------
"கந்த பத்யம்" என்ற இவ்வமைப்புத் தெலுங்கு, கன்னட மொழிகளில் மிகவும் பரவலாகக் கையாளப்பட்ட (/கையாளப்படுகின்ற) பாடல்வகை. (தமிழில் எப்படிப் பல நூல்கள் வெண்பா-யாப்பில் பாடப்பெற்றனவோ அதேபோல் தெலுங்கிலும் கன்னடத்திலும் பல நூல்கள் "கந்த பத்யம்" யாப்பில் பாடப்பெற்றன).
இப்பாடல் அமைப்பின் இலக்கணம்:
1) 3-5-3-5 என்ற சீர்-அமைப்புக் கொண்ட 4 அடிகள்.
2) எல்லாச் சீர்களும் 4-மாத்திரை கொண்ட ஈரசைச் சீர்கள்.
லகு = குறில் = 1 மாத்திரை = "I"
குரு = குறில்+ஒற்றுகள் / நெடில் / நெடில்+ஒற்றுகள் = 2 மாத்திரை = "U"
3) பாடலின் அடிகளில் சீர்களின் அமைப்புக் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்:
W X W
X W Y W Z
W X W
X W Y W Z
இதில் உள்ள W, X, Y, Z என்ற குறியீடுகள் சுட்டும் சீர்-அமைப்புகள்:
X = 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -
IIII IIU IUI UII UU
W = "IUI" (லகு-குரு-லகு) தவிர மற்ற 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -
IIII IIU UII UU
Y = லகுவில் தொடங்கி லகுவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -
IIII IUI
Z = குருவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -
IIU UU
4) எதுகை: எல்லா அடிகளிலும் முதற்சீரில் எதுகை அமையவேண்டும்.
5) மோனை: 2-ஆம் அடியிலும், 4-ஆம் அடியிலும்: 1-4 சீர்களிடையே மோனை அமைய வேண்டும்.
மேலதிகக் குறிப்பு : தமிழ்-யாப்பை ஒட்டி ஐகாரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன். (தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் "ஐ"-ஒலி எல்லா இடங்களிலும் நெடிலாகக் – "குரு" - என்று கருதப்படும்).
-------------------
No comments:
Post a Comment