Thursday, November 25, 2021

P.273 - வாய்மூர் - (கந்த பத்யம்) - கானம் இசைத்து

2015-02-24

P.273 - வாய்மூர் - ("கந்த பத்யம்")

-------------------------------------------

("கந்த பத்யம்" அமைப்பில் - in "kanda padyam" meter)

(இப்பாடல்களின் இலக்கணத்தைப் பிற்சேர்க்கையில் காண்க)


1)

கானமி சைத்தடி தொழுதால்

ஊனம றுக்கும் பசுபதி உமையாள் கணவன்

தேனல ரணிதிரு முடிமேல்

வானதி ஏற்றான் வயலணி வாய்மூர் அரனே.


கானம் இசைத்து அடி தொழுதால் ஊனம் அறுக்கும் பசுபதி - பாமாலை பாடித் திருவடியை வழிபட்டால் நம் குற்றங்களையும் குறைகளையும் தீர்க்கும் பசுபதி; (கானம் - பாட்டு); (ஊனம் - குறைகள்; குற்றங்கள்);

தேன்அலர் அணி திருமுடிமேல் வானதி ஏற்றான் - வாசமலர்களை அணிந்த சென்னிமேல் கங்கையை ஏற்றவன்; (அலர் - பூ); (வானதி - வான் நதி - கங்கை);

வயல் அணி வாய்மூர் அரனே - வயல் சூழ்ந்த திருவாய்மூரில் எழுந்தருளிய ஹரன்;


2)

மெல்லிடை மாதொரு பங்கன்

பல்லிற் பலிகொள் கபாலி பாய்புலி அதளன்

வெல்விடை யான்பணி வார்தம்

வல்வினை தீர்க்கும் வயலணி வாய்மூர் அரனே.


மெல்லிடை மாது ஒரு பங்கன் - சிற்றிடை உமையொருபங்கன்;

பல்லிற்பலிகொள் கபாலி - பல்-இல்-பலி கொள் கபாலி - பல இல்லங்களில் பிச்சை ஏற்கும் கபாலி; (சம்பந்தர் தேவாரம் - 3.76.1 -"இற்பலி கொளப்புகுதும் எந்தைபெருமான்"); (இல் - வீடு); (பலி - பிச்சை);

பாய்-புலி அதளன் - பாயும் புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்; (அதள் - தோல்);

வெல்-விடையான் - வெற்றியுடைய இடபவாகனம் உடையவன்;

பணிவார்தம் வல்வினை தீர்க்கும் - வணங்கும் பக்தர்களது வினையைத் தீர்க்கும்;

வயல் அணி வாய்மூர் அரனே - வயல் சூழ்ந்த திருவாய்மூரில் எழுந்தருளிய ஹரன்;


3)

பிணிவினை தீர்க்கும் பெருமான்

பணியணி மார்பன் பசுபதி பார்வதி பங்கன்

பணிசுர ருய்ந்திட நஞ்சுண்

மணிமிட றுடையான் வயலணி வாய்மூர் அரனே.


பிணிவினை தீர்க்கும் பெருமான் - பந்தித்துள்ள வினையைத் தீர்க்கும் பெருமான்; (பிணிவினை - பிணிக்கின்ற வினை; பிணியையும் (நோயையும்) வினையையும் என்று உம்மைத்தொகையாகவும் கொள்ளலாம்);

பணி அணி மார்பன் - பாம்பை மார்பில் அணிந்தவன்;

பசுபதி - எல்லா உயிர்களுக்கும் தலைவன்;

பார்வதி பங்கன் - உமைபங்கன்;

பணி-சுரர் உய்ந்திட நஞ்சு உண் மணிமிடறு உடையான் - வணங்கிய தேவர்கள் உய்யும்படி ஆலகாலத்தை உண்ட நீலமணிகண்டம் உடையவன்; (சுரர் - தேவர்); (மிடறு - கண்டம்);

வயல் அணி வாய்மூர் அரனே - வயல் சூழ்ந்த திருவாய்மூரில் எழுந்தருளிய ஹரன்;


4)

காதார் குழையன் கொன்றைப்

போதார் முடியன் கழலணி பொற்றாள் போற்றித்

தாதாய் அருளெனி லீவான்

மாதோர் கூறன் வயலணி வாய்மூர் அரனே.


காது ஆர் குழையன் - காதில் குழையை அணிந்தவன்;

கொன்றைப்-போது ஆர் முடியன் - கொன்றைமலரைத் திருமுடிமேல் அணிந்தவன்;

கழல் அணி பொற்றாள் போற்றித் - கழல் அணிந்த, பொன் போன்ற திருவடியை வணங்கி;

"தாதாய் அருள்" எனில் ஈவான் - "தந்தையே! அருள்" என்று வேண்டினால் வரம் தருவான் (/தருபவன்); (தாதை - தந்தை);

மாது ஓர் கூறன் - பெண் ஓர் பாகம் உடையவன்;

வயல் அணி வாய்மூர் அரனே - வயல் சூழ்ந்த திருவாய்மூரில் எழுந்தருளிய ஹரன்;


5)

பேர்பல சொல்லடி யார்வான்

சேர்வர மீவான் அணங்கு திகழுரு ஏற்றான்

கார்மிட றுடையான் நிலவார்

வார்சடை அண்ணல் வயலணி வாய்மூர் அரனே.


பேர் பல சொல் அடியார் வான் சேர் வரம் ஈவான் - திருநாமங்கள் பலவும் சொல்லும் பக்தர்கள் வானுலகம் அடைய வரம் தருவான்;

அணங்கு திகழ் உரு ஏற்றான் - பார்வதி பாகமாகத் திகழும் திருவுருவை ஏற்றவன்;

கார்-மிடறு உடையான் - நீலகண்டன்;

நிலவு ஆர் வார்-சடை அண்ணல் - சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய அண்ணல்;

வயல் அணி வாய்மூர் அரனே - வயல்கள் சூழ்ந்த திருவாய்மூரில் உறையும் சிவபெருமான்;


6)

பிரமன தொருசிர மேந்தும்

கரமுடை அடிகள் கருகிய கண்டத் தீசன்

அரகர என்பார் வினைகெட

வரமரு ளண்ணல் வயலணி வாய்மூர் அரனே.


பிரமனது ஒரு சிரம் ஏந்தும் கரமுடை அடிகள் - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திய கடவுள்; (அடிகள் - சுவாமி; கடவுள்);

கருகிய கண்டத்து ஈசன் - நீலகண்டம் உடைய கடவுள்; (அப்பர் தேவாரம் - 4.60.10 - "கருகிய கண்டத்தானை");

அரகர என்பார் வினை கெட வரம் அருள் அண்ணல் - "ஹரஹர" என்று சொல்லும் அன்பர்களது வினை அழிய வரம் தரும் பெருமான்; (திருமந்திரம் - "அரகர என்ன அறும்பிறப் பன்றே");

வயல் அணி வாய்மூர் அரனே - வயல்கள் சூழ்ந்த திருவாய்மூரில் உறையும் சிவபெருமான்;


7)

உளமார் அன்பால் தொழுதால்

வளமே மல்கிட வழங்கு வள்ளல் செம்மான்

இளமான் அன்னாள் பங்கன்

வளரும் பிறையான் வயலணி வாய்மூர் அரனே.


உளம் ஆர் அன்பால் தொழுதால் வளமே மல்கிட வழங்கு வள்ளல் - உள்ளத்தில் பெருகும் அன்போடு வழிபாடு செய்தால் வளங்களே மிகும்படி அருள்தரும் வள்ளல்; (மல்குதல் - மிகுதல்);

செம்மான் - செம்மேனி உடைய பெரியோன்; (மான் - பெரியவன்);

இளமான் அன்னாள் பங்கன் - இளைய மான் போன்றவளான உமையை ஒரு பங்கில் உடையவன்;

வளரும் பிறையான் - என்றும் வளரும் திங்களைச் சூடியவன்;

வயல் அணி வாய்மூர் அரனே - வயல்கள் சூழ்ந்த திருவாய்மூரில் உறையும் சிவபெருமான்;


8)

முடிபத் துடையான் அழவே

அடியோர் விரலால் அடர்த்த அல்லார் கண்டன்

பிடிபோல் நடையாள் பங்கன்

வடியார் சூலன் வயலணி வாய்மூர் அரனே.


முடி பத்து உடையான் அழவே அடி ஓர் விரலால் அடர்த்த - பத்துத்தலைகளை உடைய இராவணன் அழும்படி அவனைத் திருப்பாதத்து ஒரு விரலால் நசுக்கி அருள்செய்த; (அடர்த்தல் - நசுக்குதல்);

அல் ஆர் கண்டன் - கரிய கண்டன்; (அல் - இருள்);

பிடி போல் நடையாள் பங்கன் - பெண்யானை போன்ற நடையை உடைய பார்வதியை ஒரு பங்கில் உடையவன்;

வடி ஆர் சூலன் - கூரிய சூலத்தை உடையவன்; (வடி - கூர்மை);

வயல் அணி வாய்மூர் அரனே - வயல் சூழ்ந்த திருவாய்மூரில் எழுந்தருளியிருக்கும் ஹரன்;


9)

கண்ணன் பிரமன் காணா(து)

அண்ணா எனவோங் கியவெரி அன்பால் பணியும்

மண்ணோர் இன்பம் கொள்ளும்

வண்ணம் தருமிறை வயலணி வாய்மூர் அரனே.


கண்ணன் பிரமன் காணா(து) "ண்ணா" எனங்கியரி - திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிக் காணாராய், "அண்ணா" என்று துதிக்கும்படி ஓங்கிய ஜோதி; (அண்ணா - அண்ணால் என்பது அண்ணா என மருவிற்று; தேவாரப் பிரயோகங்களைக் காண்க); (எரி - தீ);

அன்பால் பணியும் மண்ணோர் இன்பம் கொள்ளும் வண்ணம் தரும் இறை - அன்போடு வணங்கும் உலகோர் இன்புறும்படி அவர்களுக்கும் வரம் அருளும் இறைவன்;

வயல் அணி வாய்மூர் அரனே - வயல் சூழ்ந்த திருவாய்மூரில் எழுந்தருளியிருக்கும் ஹரன்;


10)

அறமா அவமே புரிவார்

பறைசொல் விடுமின் பசுபதி பால்வெண் நீற்றன்

பிறவான் இறவான் நற்பேர்

மறவார்க் கருளும் வயலணி வாய்மூர் அரனே.


அறமா அவமே புரிவார் பறை சொல் விடுமின் - அறமாக அவமே என்றும் செய்வார்கள் கூறும் சொல்லை நீங்குங்கள்; மதியாதீர்கள்; (பறைதல் - சொல்தல்);

பசுபதி - எல்லா உயிர்களுக்கும் தலைவன்;

பால்-வெண்-நீற்றன் - பால் போன்ற வெண்திருநீற்றைப் பூசியவன்;

பிறவான் இறவான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்;

நற்பேர் மறவார்க்கு அருளும் - தன் நல்ல நாமத்தை மறத்தல் இன்றி எப்பொழுதும் எண்ணுபவர்களுக்கு அருள்கின்ற; (நற்பேர் - நல்ல பெயர்);

வயல் அணி வாய்மூர் அரனே - வயல் சூழ்ந்த திருவாய்மூரில் எழுந்தருளியிருக்கும் ஹரன்;


11)

தாளைத் தொழமற வார்வான்

ஆளவ ருள்வான் மணமலி ஐங்கணை ஏவும்

வேளைக் காய்முக் கண்ணன்

வாளைக ளுகளும் வயலணி வாய்மூர் அரனே.


தாளைத் தொழ மறவார் வான் ஆள அருள்வான் - திருவடியை மறத்தல் இன்றித் தினமும் தொழுவார்கள் வானுலகம் ஆள அருள்வான்;

மணம் மலி ஐங்கணை ஏவும் வேளைக் காய் முக்கண்ணன் - வாசம் மிகுந்த ஐந்து மலர்க்கணைகளை எய்யும் மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (வேள் - காமன்); (காய்தல் - கோபித்தல்; எரித்தல்);

வாளைகள் உகளும் வயல் அணி வாய்மூர் அரனே - வாளைமீன்கள் பாயும் (நீர்வளம் மிக்க) வயல் சூழ்ந்த திருவாய்மூரில் எழுந்தருளியிருக்கும் ஹரன்; (சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய");


வி. சுப்பிரமணியன்


பிற்சேர்க்கை:


கந்த பத்யம் - ( "kanda padyam" metre )

---------------------------------

"கந்த பத்யம்" என்ற இவ்வமைப்புத் தெலுங்கு, கன்னட மொழிகளில் மிகவும் பரவலாகக் கையாளப்பட்ட (/கையாளப்படுகின்ற) பாடல்வகை. (தமிழில் எப்படிப் பல நூல்கள் வெண்பா-யாப்பில் பாடப்பெற்றனவோ அதேபோல் தெலுங்கிலும் கன்னடத்திலும் பல நூல்கள் "கந்த பத்யம்" யாப்பில் பாடப்பெற்றன).


இப்பாடல் அமைப்பின் இலக்கணம்:

1) 3-5-3-5 என்ற சீர்-அமைப்புக் கொண்ட 4 அடிகள்.

2) எல்லாச் சீர்களும் 4-மாத்திரை கொண்ட ஈரசைச் சீர்கள்.

லகு = குறில் = 1 மாத்திரை = "I"

குரு = குறில்+ஒற்றுகள் / நெடில் / நெடில்+ஒற்றுகள் = 2 மாத்திரை = "U"


3) பாடலின் அடிகளில் சீர்களின் அமைப்புக் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்:

W X W

X W Y W Z

W X W

X W Y W Z


இதில் உள்ள W, X, Y, Z என்ற குறியீடுகள் சுட்டும் சீர்-அமைப்புகள்:


X = 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -

IIII IIU IUI UII UU

W = "IUI" (லகு-குரு-லகு) தவிர மற்ற 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -

IIII IIU UII UU

Y = லகுவில் தொடங்கி லகுவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -

IIII IUI

Z = குருவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -

IIU UU


4) எதுகை: எல்லா அடிகளிலும் முதற்சீரில் எதுகை அமையவேண்டும்.

5) மோனை: 2-ஆம் அடியிலும், 4-ஆம் அடியிலும்: 1-4 சீர்களிடையே மோனை அமைய வேண்டும்.


மேலதிகக் குறிப்பு : தமிழ்-யாப்பை ஒட்டி ஐகாரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன். (தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் ""-ஒலி எல்லா இடங்களிலும் நெடிலாகக் – "குரு" - என்று கருதப்படும்).

-------------------


No comments:

Post a Comment