Saturday, November 27, 2021

05.25 – சாட்டியக்குடி

05.25சாட்டியக்குடி

2015-03-07

சாட்டியக்குடி (திருவாரூர்க்குத் தென்கிழக்கே 20 கிமீ தூரத்தில் உள்ள தலம்)

----------------------------------

(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் விளம் மா தேமா' என்ற வாய்பாடு; சம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இவ்வமைப்பில் கடைசி இரு மாச்சீர்களும் சேர்ந்து ஒரு விளங்காய்ச்சீராகவும் அமையக் காணலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 3.91.1 - "கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை");

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு");


1)

பண்பயில் தமிழ்கொடு பரவிடும் அடியவர் பற்ற றுப்பான்

பெண்மயில் போன்றவள் தனையொரு பங்கெனப் பேணும் அன்பன்

கண்பயில் நெற்றியன் கடல்விடம் உண்டருள் கறைமி டற்றன்

தண்வயல் புடையணி சாட்டியக் குடியுறை தந்தை தானே.


பயில்தல் - பொருந்துதல்; தங்குதல்;


2)

புதுமலர் கொண்டடி போற்றினார் வல்வினை போக்கும் அண்ணல்

மதுமலர்க் கொன்றையும் மத்தமும் புனைந்தவன் வாள ராவைக்

கதிர்மதி அதனயல் களித்திட வைத்தவன் காக்கும் ஈசன்

சதுர்மறை ஓதிய சாட்டியக் குடியுறை தந்தை தானே.


வாள் அரா - கொடிய பாம்பு;

சதுர்மறை ஓதிய - நால்வேதங்களைப் பாடிய; நால்வேதங்களால் பாடப்பெற்ற;


3)

நந்திவட் டம்மலர் கொண்டடி தொழவினை நாசம் ஆக்கும்

அந்திவண் ணத்தரன் அரையினில் அரவினை ஆர்த்த ஐயன்

சுந்தர நீற்றினன் தொன்மறை பாடிய தூய நாவன்

சந்திர சேகரன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


நந்திவட்டம்மலர் - மகர ஒற்று விரித்தல் விகாரம்;

நந்திவட்டம் - நந்தியாவட்டம் (நந்தியாவட்டை);

ஆர்த்தல் - கட்டுதல்;


4)

அலைகிற ஐம்புலன் அடக்கிய யோகியர் அன்பர் நெஞ்சில்

நிலையென நின்றவன் நெற்றியிற் கண்ணினன் நீல கண்டன்

சிலையினிற் கணையினைச் சேர்த்தெயில் செற்றவன் சென்னி மீது

தலைமலி மாலையன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


சிலை - வில்;

எயில் - கோட்டை;

செற்றவன் - அழித்தவன்;


5)

அடைவது சிவனடி எனவறிந் திறைஞ்சிடும் அன்பர் கட்குத்

தடைகளைத் தகர்த்தருள் சங்கரன் எம்மிறை தாயின் நல்லன்

கடைதொறும் பலிக்குழல் காரணன் ஆரணன் கங்கை யாளைச்

சடையிடைக் கரந்தவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


அன்பர்கட்குத் தடைகளைத் தகர்த்தருள் சங்கரன் - தடைகளை நீக்கி அன்பர்களுக்கு அருள்புரியும் சங்கரன்; (அப்பர் தேவாரம் - 5.31.6 - "தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம் அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே");

தாயின் நல்லன் - தாயினும் நல்லவன்;

கடை - வாயில்;

பலி - பிச்சை;

காரணன் - உலகிற்கு நிமித்த காரணன் ஆகிய சிவபிரான்;

ஆரணன் - வேதப் பொருளாக உள்ளவன்; (ஆரணம் - வேதம்)

கரந்தவன் - ஒளித்தவன்;


6)

பாங்கொடு பதமலர் பரவிடும் அடியவர் பாசம் நீக்கித்

தாங்கிடும் அங்கணன் திருப்பனந் தாளினில் தாட கைக்கா

ஆங்குவ ளைந்தவன் அருவரை வளைத்தெயில் அட்ட வன்மான்

தாங்கிய கையினன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


பாங்கு - அழகு; தகுதி; (சம்பந்தர் தேவாரம் - 3.120.9 - "பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ");

பாசம் - தளை; மும்மலக்கட்டு;

தாங்குதல் - புரத்தல்;

அங்கணன் - அருள்நோக்கம் உடையன்;

ஆங்கு - அப்படி; அசைச்சொல்; அவ்விடம்; அக்காலத்தில்;

திருப்பனந்தாளினில் தாடகைக்கா ஆங்கு வளைந்தவன் - திருப்பனந்தாளில் தாடகையெனும் பத்திமையுடைய பெண் ஒருத்தி, நாளும் பெருமானை வழிபட்டுவந்தாள்; ஒருநாள் அப்பெருமானுக்கு மாலை அணிந்து வழிபாடு செய்யும்பொழுது, அவள் ஆடை நெகிழ்ந்தது; கையில் மாலையை ஏந்தியிருந்ததால், தன் கைகளால் ஆடையை உடலோடு இடுக்கிக்கொண்டாள்; அதுகண்ட இறைவன் அவள் பெண்மைக்கு இழுக்கு நேராதபடி, தன் தலையைச் சாய்த்து, அம்மாலையை ஏற்றான்; (இவ்வரலாற்றைப் பெரியபுராணத்தில் குங்கிலியக் கலயநாயனார் புராணத்திற் காண்க);

அருவரை - மேருமலை;


7)

மழவிடை ஊர்தியன் குழையொரு காதினன் வாழ்த்து வார்தம்

பழவினை தீர்ப்பவன் பாய்புலித் தோலினன் பாம்பை ஆர்த்தான்

மழையன மிடற்றினன் மான்மறிக் கையினன் மார்பில் நூலன்

தழலன மேனியன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மழவிடை - இளமையான் ஏறு;

பாம்பை ஆர்த்தான் - அரையில் பாம்பைக் கட்டியவன்;

மழை அன மிடற்றினன் - மேகம் போன்ற கண்டத்தை உடையவன்;

தழல் அன மேனியன் - தீப்போல் செம்மேனி உடையவன்;


8)

மையலால் மலையசை வாளரக் கன்தனை வாட ஊன்றும்

ஐயனே அருள்கவென் றனுதினம் அடிதொழும் அன்பர்க் கன்பன்

பையரா பனிமதி படர்சடை வைத்தவன் பால்வெண் ணீற்றன்

தையலோர் பங்கினன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மையலால் மலை அசை வாளரக்கன்தனை வாட ஊன்றும் - ஆணவத்தால் கயிலையைப் பெயர்த்த கொடிய இராவணன் வாடுமாறு விரல் ஊன்றி அவனை நசுக்கிய;

பையரா - படத்தை உடைய பாம்பு; (பை - பாம்பின் படம்);


9)

மாலயன் நேடிட மாலெரி ஆயினான் வான வர்க்கா

ஆலமுண் டருளினன் அருமறை விரித்திட ஆல மர்ந்தான்

காலையும் மாலையும் கடிமலர் தூவிடும் காத லர்க்குச்

சாலவும் இனியவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மால் அயன் நேடிட மால் எரி ஆயினான் - திருமால் பிரமன் இருவரும் தேடுமாறு பெரிய சோதி ஆனவன்;

வானவர்க்கா ஆலம் உண்டருளினன் - தேவர்களுக்காக ஆலகால விடத்தை உண்டு அருளியவன்;

அருமறை விரித்திட ஆல் அமர்ந்தான் - அரிய வேதங்களின் பொருளை விளக்கக் கல்லால மரத்தின்கீழ் இருந்தவன்;

காலையும் மாலையும் கடிமலர் தூவிடும் காதலர்க்குச் சாலவும் இனியவன் - இருபொழுதும் வாசமலர்களைத் தூவும் பக்தர்களுக்கு மிகுந்த இனிமை பயப்பவன்;


10)

வஞ்சம னத்தினர் மறைநெறி பழிப்பவர் மாச ழக்கர்

கொஞ்சமும் அவருரை கூற்றினை நம்பிடேல் கொல்ல வந்த

வெஞ்சினக் கூற்றினை விலக்கிய சேவடி வேண்டு வார்தம்

சஞ்சலம் தீர்ப்பவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மறைநெறி - வேதநெறி; (சம்பந்தர் தேவாரம் - 3.53.10 - "மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார்");

சழக்கர் - தீயவர்;

கூற்று - 1) பேச்சு; 2) யமன்;

அவர் உரை கூற்றினை நம்பிடேல் - அவர்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பவேண்டா / மதிக்கவேண்டா;

கொல்ல வந்த வெஞ்சினக் கூற்றினை விலக்கிய சேவடி - மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த கொடிய கோபம் மிக்க காலனை உதைத்து அழித்த சேவடி;

சேவடி வேண்டுவார்தம் சஞ்சலம் தீர்ப்பவன் - சிவந்த திருவடியை வணங்குபவர்களுடைய துன்பத்தைத் தீர்ப்பவன்;


11)

ஆழ்கடல் கக்கிய அருவிடம் எரித்திட அஞ்சி வானோர்

போழ்மதி சூடியே புண்ணியா என்றடி போற்ற உண்டு

வாழ்வளித் தருளிய மணிமிட றுடையவன் வஞ்சம் இன்றித்

தாழ்பவர்க் கீபவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


போழ்மதி - பிளவுபட்ட சந்திரன் / நிலாத்துண்டம் = பிறைச்சந்திரன்;

வஞ்சம் இன்றித் தாழ்பவர்க்கு ஈபவன் - நெஞ்சில் வஞ்சம் இல்லாத அன்பர்களுக்கு அளிப்பவன்; அன்பர்களுக்குச் சிறிதும் வஞ்சமின்றி வாரி வழங்குபவன்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள் :

சாட்டியக்குடி - வேதநாதர் கோயில் : https://www.kamakoti.org/tamil/tiruvasagam17.htm

திருவிசைப்பாவில் இத்தலத்திற்கு ஒரு பதிகம் உள்ளது - 9.15 - "பெரியவா கருணை".


No comments:

Post a Comment