2015-02-01
P.272 - புகலூர்
------------------
(வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்.)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")
முற்குறிப்பு: இலக்கணக் குறிப்பு: இப்பதிகத்தில் சந்தம் கருதிச் சில இடங்களில் ஒற்று-விரித்தல் விகாரம்; படிப்போர்க்கு எளிமை கருதிப் பாடல்களில் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது; (உதாரணம் - மழுவன்னிகரில்லான் - மழுவன் நிகரில்லான்);
1)
தொழிலைந் துடையான் சுடுநீற்றான்
நிழலார் மழுவன் நிகரில்லான்
அழலேந் துமரன் அவனூராம்
பொழில்கள் புடைசூழ் புகலூரே.
தொழில் ஐந்து உடையான் - பஞ்சகிருத்தியம் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம் என்ற ஐந்தொழில்கள்) உடையவன்;
சுடுநீற்றான் - திருநீற்றைப் பூசியவன்;
நிழல் ஆர் மழுவன் - ஒளி மிக்க மழுவை ஏந்தியவன்; (நிழல் - ஒளி); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);
நிகர் இல்லான் - ஒப்பற்றவன்;
அழல் ஏந்தும் அரன் அவன் ஊர் ஆம் - தீயை ஏந்தும் ஹரன் உறையும் தலம் ஆவது;
பொழில்கள் புடைசூழ் புகலூரே - சோலைகள் சூழ்ந்த திருப்புகலூர்;
2)
நள்ளார் நகர்மூன் றெரிசெய்தான்
கள்ளார் மலர்கள் கழலிட்டால்
விள்ளா வினைதீர்ப் பவனூராம்
புள்ளார் பொழில்சூழ் புகலூரே.
நள்ளார் நகர் மூன்று எரிசெய்தான் - பகைவர்களது முப்புரங்களை எரித்தவன்; ( நள்ளார் - பகைவர்)
கள் ஆர் மலர்கள் கழல் இட்டால் - தேன் நிறைந்த பூக்களைத் திருவடியில் தூவி வழிபட்டால்;
விள்ளா வினை தீர்ப்பவன் ஊர் ஆராம் - நீங்காத வினைகளைத் தீர்ப்பவன் உறையும் தலம் ஆவது; (விள்தல் - நீங்குதல்);
புள் ஆர் பொழில் சூழ் புகலூரே - பறவைகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த புகலூர்; (புள் - பறவை); (ஆர்த்தல் - ஒலித்தல்);
3)
புலியின் அதளன் புரிநூலன்
ஒலிதண் புனலும் உரகங்கள்
பலவும் புனைவான் பதியென்பர்
பொலியும் பொழில்சூழ் புகலூரே.
புலியின் அதளன் - புலித்தோலை ஆடையாகக் கட்டியவன்; (அதள் - தோல்);
புரிநூலன் - பூணூல் அணிந்தவன்;
ஒலி-தண்-புனலும் உரகங்கள் பலவும் புனைவான் பதி என்பர் - ஒலிக்கின்ற குளிர்ந்த கங்கையையும் பல பாம்புகளையும் அணிந்தவன் உறையும் பதி ஆவது; (உரகம் - பாம்பு); (பதி - இடம்);
பொலியும் பொழில் சூழ் புகலூரே - அழகிய சோலை சூழ்ந்த புகலூர்; (பொலிதல் - செழித்தல்; விளங்குதல்);
4)
நினைவார் துணையாய் வினைதீர்ப்பான்
கனைமா கடல்நஞ் சணிகண்டன்
சினமா விடையன் சிவனூராம்
புனலார் வயல்சூழ் புகலூரே.
நினைவார் துணையாய் வினைதீர்ப்பான் - தன்னை நினையும் பக்தர்களுக்குத் துணை ஆகி அவர்களது வினையைத் தீர்ப்பவன்;
கனை மா கடல் நஞ்சு அணி கண்டன் - ஒலிக்கின்ற பெரிய கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்தவன்; (கனைதல் / கனைத்தல் - ஒலித்தல்);
சின மா விடையன் சிவன் ஊர் ஆம் - சினம் மிக்க பெரிய இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் உறையும் தலம் ஆவது;
புனல் ஆர் வயல் சூழ் புகலூரே - நீர் நிறைந்த வயல் சூழ்ந்த திருப்புகலுர்;
5)
சேவார் கொடியான் சிலையேந்தி
மேவார் எயில்கள் விழவெய்தான்
மூவா முதல்வன் இடமென்பர்
பூவார் பொழில்சூழ் புகலூரே.
சே ஆர் கொடியான் - இடபக்கொடியை உடையவன்; (சே - எருது);
சிலை ஏந்தி மேவார் எயில்கள் விழ எய்தான் - மேருமலையை வில்லாக ஏந்தி அசுரர்களது முப்புரங்களும் அழியும்படி கணை எய்தவன்; (சிலை - வில்; மலை); (மேவார் - பகைவர்); (எயில் - கோட்டை);
மூவா முதல்வன் இடம் என்பர் - என்றும் மூத்தல் இல்லாத (= எப்பொழுதும் இளமையோடு இருக்கும்) முதல்வனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;
பூ ஆர் பொழில் சூழ் புகலூரே - பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த புகலூர்;
6)
நாதா முடிமேல் நதியேற்றாய்
போதா எனநம் புகலாவான்
காதார் குழையன் பதியென்பர்
போதார் பொழில்சூழ் புகலூரே.
"நாதா; முடிமேல் நதி ஏற்றாய்; போதா" என நம் புகல் ஆவான் - "நாதனே; கங்காதரனே; ஞான-வடிவினனே" என்று வாழ்த்தி வணங்கினால் நமக்குப் புகல் ஆகின்றவன்; (போதம் - ஞானம்); (சுந்தரர் தேவாரம் - 7.47.9 - "புலியூர்ச் சிற்றம்பலத்தாய் புகலூர்ப் போதா");
காது ஆர் குழையன் பதி என்பர் - காதில் குழையை அணிந்தவன் உறையும் தலம் ஆவது;
போது ஆர் பொழில் சூழ் புகலூரே - பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருப்புகலூர்; (போது - பூ);
7)
தலைமேற் பிறையாய் தலைவாமூ
இலைவே லினனே எனவாழ்த்தில்
நலமே அருளும் நடனூராம்
புலவோர் புகழும் புகலூரே.
"தலைமேல் பிறையாய்; தலைவா; மூஇலை-வேலினனே" என வாழ்த்தில் - "பிறைசூடியவனே, தலைவனே, திரிசூலத்தை ஏந்தியவனே" என்று துதித்தால்; (மூவிலைவேல் - திரிசூலம்);
நலமே அருளும் நடன் ஊர் ஆம் - நன்மையே புரியும் கூத்தன் உறையும் தலம் ஆவது; (நடன் - கூத்தன்); (சம்பந்தர் தேவாரம் - 2.52.4 - "நம்பனே நடனே நலந்திகழ் நாதனே");
புலவோர் புகழும் புகலூரே - புலவர்கள் போற்றிப் பாடும் திருப்புகலூர்; (சுந்தரர் தேவாரம் 7.34.1 - "புகலூர் பாடுமின் புலவீர்காள் ... இம்மையே தருஞ் சோறுங் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்");
8)
தகவில் முருடன் தலைபத்தும்
உகவூன் றியவன் உமைபங்கன்
மிகவும் பரிவால் விடமுண்ட
புகழன் பதியாம் புகலூரே.
தகவு இல் முருடன் தலை பத்தும் உக ஊன்றியவன் - நற்குணம் இல்லாத முரடனான இராவணனுடைய பத்துத்-தலைகளும் சிதறுமாறு ஒரு விரலை ஊன்றியவன்; (முருடன் - முரடன்); (உகுதல் - சிதறுதல்);
மிகவும் பரிவால் விடம் உண்ட புகழன் பதி ஆம் புகலூரே - பெருங்கருணையோடு ஆலகாலத்தை உண்டருளிய புகழ் உடைய சிவபெருமான் உறையும் ஊர் ஆவது திருப்புகலூர்; (பரிவு - அன்பு; இரக்கம்);
9)
அயனும் அரியும் அறிவொண்ணா
உயர்செந் தழலான் உமைகேள்வன்
தயைமிக் கபிரான் தனியேற்றன்
புயமெட் டினனூர் புகலூரே.
அயனும் அரியும் அறிவொண்ணா உயர்-செந்தழலான் - பிரமன் திருமால் இவர்களால் அறிய ஒண்ணாத எல்லையற்ற சிவந்த ஜோதிப்பிழம்பு ஆயவன்; (தழல் - தீ);
உமைகேள்வன் - உமைக்குக் கணவன்;
தயை மிக்க பிரான் - அருள் மிக்க தலைவன்;
தனி-ஏற்றன் - ஒப்பற்ற இடபத்தை வாகனமாக உடையவன்; (தனி - ஒப்பற்ற);
புயம் எட்டினன் ஊர் புகலூரே - எண்தோள்கள் உடையவன் உறையும் தலம் திருப்புகலூர்; (புயம் - புஜம் - தோள்);
10)
தெய்வம் தெளியார் தெருநின்று
பொய்யும் புகல்வார் மொழிகேளேல்
உய்வைத் தருமெம் உமைகோனூர்
பொய்கைக் கயல்பாய் புகலூரே
தெய்வம் தெளியார் - இறைவன் தன்மையை அறியாதவர்கள்;
தெரு-நின்று பொய்யும் புகல்வார் - தெருவில் நின்று பல பொய்கள் சொல்வார்கள்;
மொழி கேளேல் - அவர்கள் பேசும் பேச்சில் மயங்காதே;
உய்வைத் தரும் எம் உமைகோன் ஊர் - வழிபடும் அன்பர்க்கு உய்தியை அளிக்கும் நம் உமாபதி உறைகின்ற தலம்;
பொய்கைக் கயல் பாய் புகலூரே - பொய்கையில் கயல்மீன்கள் பாயும் புகலூர் ஆகும்;
11)
கடைபாற் கடலின் கடுநஞ்சம்
அடைநன் மிடறன் அருளாளன்
விடைமேல் வருவான் இடமென்பர்
புடைவண் பொழில்சூழ் புகலூரே.
கடை-பாற்கடலின் கடு-நஞ்சம் - கடைந்த பாற்கடலில் எழுந்த கொடிய விடத்தை; (கடுமை - கொடுமை; வெம்மை; வலிமை);
அடை-நன்-மிடறன் அருளாளன் - அடைத்த நல்ல கண்டத்தை உடையவன், பேரருள் உடையவன்; (மிடறு - கண்டம்);
விடைமேல் வருவான் இடம் என்பர் - இடபவாகனத்தை உடைய சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது;
புடை வண்-பொழில் சூழ் புகலூரே - வளப்பமான சோலையால் சூழப்பெற்ற புகலூர்;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment