Wednesday, November 22, 2017

03.05.018 – ஆரூர் (திருவாரூர்) - சரமழை போலே சதா நசை - (வண்ணம்)

03.05.018 – ஆரூர் (திருவாரூர்) - சரமழை போலே சதா நசை - (வண்ணம்)

2007-03-10

3.5.18 - சரமழை போலே சதா நசை - (ஆரூர் - திருவாரூர்)

----------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தானா தனாதன

தனதன தானா தனாதன

தனதன தானா தனாதன .. தனதான )

(இதனைத் "தனதன தானான தானன x 3 + தனதான" என்றும் நோக்கலாம்போல். திருப்புகழ்ப் பாடலில் சில அடிகளில் அதற்கேற்றவாறு சொற்கள் காண்கின்றேன்);

(சரவண ஜாதா நமோநம - திருப்புகழ் - விநாயகர்மலை (பிள்ளையார்பட்டி))

(இருகுழை மீதோடி மீளவும் - திருப்புகழ் - பொது)


சரமழை போலே சதாநசை .. வரமய லாலே பொலாவினை

.. .. தடமலை போலாய் அறாவிடர் .. எனைமூடித்

.. தளர்வுறு நாளாய் எழாநிலை .. தருபிணி சூழா முனேபுகழ்

.. .. தமிழ்கொடு தாளே பராவிட .. நினையேனோ


அரவணி சூலா யுதாபிறை .. படர்சடை மேலே நிலாவிட

.. .. அதனயல் ஏரார் குராமலர் .. புனைவோனே

.. அதளரை மீதே சுலாவிடும் .. அழகுடை நாதா பராபரை

.. .. அவளொரு பாகா அடாதது .. செயநாணா


இருபது தோளான் இராவணன் .. அழமலை மீதே ஒரேவிரல்

.. .. இறைஇடு வோனே பினேபெயர் .. தருவோனே

.. இடுபறை யோடே முழாவொலி .. செயநடம் ஆடீ நிசாசரர்

.. .. எயிலெரி ஏவால் இராவண(ம்) .. முனைநாளில்


பொரவல வீரா சுறாவணி .. கொடியுடை வீவாளி வேள்முனி

.. .. புகழுடை ஈசா கணார்நுதல் .. உடையானே

.. பொறிமயில் மேலான் விநாயகன் .. இவர்தொழு தாதாய் புராதன

.. .. புனல்மலி ஆரூரில் மேவிய .. பெருமானே.


பதம் பிரித்து:

சரமழை போலே சதா நசை .. வர, மயலாலே பொலா-வினை

.. .. தடமலை போலாய், அறா-இடர் .. எனை மூடித்

.. தளர்வுறு நாளாய், எழா-நிலை .. தரு பிணி சூழா முனே, புகழ்

.. .. தமிழ்கொடு தாளே பராவிட .. நினையேனோ;


அரவு-அணி சூலாயுதா; பிறை .. படர்-சடை மேலே நிலாவிட,

.. .. அதன் அயல் ஏர்-ஆர் குராமலர் .. புனைவோனே;

.. அதள் அரை மீதே சுலாவிடும் .. அழகுடை நாதா; பராபரை

.. .. அவள் ஒரு பாகா; அடாதது .. செய நாணா


இருபது தோளான் இராவணன் .. அழ மலை மீதே ஒரேவிரல்

.. .. இறை இடுவோனே; பினே பெயர் .. தருவோனே;

.. இடுபறையோடே முழா ஒலி .. செய நடம் ஆடீ; நிசாசரர்

.. .. எயில் எரி-ஏவால் இரா-வணம் .. முனைநாளில்


பொரவல வீரா; சுறா-அணி .. கொடியுடை வீ-வாளி வேள் முனி

.. .. புகழுடை ஈசா; கணார்-நுதல் .. உடையானே;

.. பொறி-மயில் மேலான், விநாயகன் .. இவர் தொழு தாதாய்; புராதன

.. .. புனல்மலி ஆரூரில் மேவிய .. பெருமானே.


சரமழை போலே சதா நசை வர, மயலாலே பொலா-வினை தடமலை போலாய், அறா-இடர் எனை மூடித் - அம்புமழை போல் எப்பொழுதும் ஆசைகள் வந்து தாக்க, அறியாமயால் பொல்லாத வினை (தீவினை) பெரிய மலை போல் ஆகித், தீராத துன்பம் என்னை மூடி; (சரம் - அம்பு); (பொலா - பொல்லா - கடுமையான; தீய); (தடம் - பெருமை); ( அறுதல் - தீர்தல்);

தளர்வுறு நாளாய், எழா-நிலை தரு பிணி சூழா முனே - நான் தளர்ச்சியடையும் காலம் ஆகி, எழுந்திருக்கவும் இயலாத நிலையைத் தரும் நோய்கள் என்னைச் சூழ்ந்துகொள்வதன் முன்பே; (முனே - முன்னே);

புகழ்-தமிழ்கொடு தாளே பராவிட நினையேனோ - புகழும் தமிழ்ப்பாமாலைகளால் உன் திருவடியையே போற்றும் எண்ணத்தை அருள்வாயாக; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு); (பராவுதல் - புகழ்தல்; வணங்குதல்)


அரவு-அணி சூலாயுதா - பாம்பை அணிந்த, சூலபாணியே;

பிறை படர்-சடை மேலே நிலாவிட, அதன் அயல் ஏர்-ஆர் குராமலர் புனைவோனே - படரும் சடைமேல் பிறைச்சந்திரன் திகழ, அதன் அருகே அழகிய குராமலரை அணிந்தவனே; (நிலாவுதல் - நிலவுதல் - தங்குதல்; ஒளிவிடுதல்); (ஏர் - அழகு);

அதள் அரை மீதே சுலாவிடும் அழகுடை நாதா - அரையின்மேள் தோலே ஆடையாகச் சுற்றியிருக்கும் அழகுடைய தலைவனே; (அதள் - தோல்); (சுலாவுதல் - சுலவுதல் - சுற்றுதல்);

பராபரை அவள் ஒரு பாகா - சக்தியை ஒரு பாகமாக உடையவனே; (பராபரை - சக்தி);


அடாதது செய நாணா இருபது தோளான் இராவணன் அழ மலை மீதே ஒரேவிரல் இறை இடுவோனே - தகாத செயல்கள் செய்ய நாணாதவனும் இருபது புஜங்கள் உடையவனுமான இராவணன் அழுமாறு கயிலைமலைமேல் திருப்பாத விரல் ஒன்றைச் சிறிதளவே ஊன்றியவனே; (செய நாணா - செய்ய நாணாத); (இறை - சிறிது அளவு);

பினே பெயர் தருவோனே - பின்னர் (அவன் அழுது தொழ, இரங்கி), அவனுக்கு இராவணன் என்ற பெயரைத் தந்தவனே; (பினே - பின்னே);

இடுபறையோடே முழா ஒலி செய நடம் ஆடீ - பறைகளும் முழாக்களும் ஒலிக்கக் கூத்து ஆடுபவனே; (ஆடீ - ஆடுபவனே); (சம்பந்தர் தேவாரம் - 2.84.11 - "இடுபறை யொன்ற");

நிசாசரர் எயில் எரி-ஏவால் இரா-வணம் முனைநாளில் பொரவல வீரா - அசுரர்களது முப்புரங்களும் இல்லாது ஒழியுமாறு முன்பு எரிக்கின்ற கணையால் போர்செய்ய வல்ல வீரனே; (நிசாசரர் - அசுரர்); (எயில் - மதில்); (ஏ – அம்பு); (இராவணம் - இராதவண்ணம் - இல்லாதவாறு); (பொருதல் - போர்செய்தல்);

சுறா-அணி கொடியுடை வீ-வாளி வேள் முனி புகழுடை ஈசா - சுறவக்கொடி உடையவனும் மலரம்புகளை உடையவனுமான காமனைக் கோபித்து எரித்த புகழ் உடைய ஈசனே; (வீ - பூ); (வாளி - அம்பு); (வேள் - மன்மதன்); (முனிதல் - கோபித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.4 – "சுறவக்கொடி கொண்டவன் நீறதுவாய் உற நெற்றி விழித்த");

கணார்-நுதல் உடையானே - நெற்றிக்கண்ணனே; (கணார் - கண்ணார் - கண் ஆர்);


பொறி-மயில் மேலான், விநாயகன் இவர் தொழு தாதாய் - புள்ளிமயில் ஏறும் முருகனும் கணபதியும் வணங்கும் தந்தையே; (பொறி - புள்ளி); (தாதை - தந்தை; தாதாய் - தந்தையே);

புராதன - பழையவனே;

புனல் மலி ஆரூரில் மேவிய பெருமானே - நீர் மிகுந்த திருவாரூரில் எழுந்தருளிய பெருமானே; (அப்பர் தேவாரம் - 6.73.2 - "வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்");


பிற்குறிப்புகள்:

1. இப்பாடலில் படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் (புணர்ச்சியால் ஓசை சிதையாத இடங்களில்) புணர்ச்சி இன்றிச் சொற்கள் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக:

புகடமிழ் = புகழ் தமிழ்

வேண்முனி = வேள்முனி

பொறிமயின் மேலான் = பொறிமயில் மேலான்

புனன்மலி யாரூரின் மேவிய = புனல்மலி ஆரூரில் மேவிய


2. திருப்புகழில் இப்படி ன்+ம வரும் இடங்களில் சந்தம் கெடாது என்பதைக் காணலாம். உதாரணமாக:

திருப்புகழ் - பூமாது உரமேயணி (சீகாழி)

For "தானாதன தானன தானன .. தந்ததான"

the last phrase in this song is

காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே

திருப்புகழ் - கருகி அறிவு அகல (அத்திப்பட்டு)

For "தனதனன தனதனன தத்தத் தத்ததன .. தனதான"

a line in the song has

மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் ...... மலராலே


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.017 – பொது - துயர்தரு பழவினை அதனாலே - (வண்ணம்)

03.05.017 – பொது - துயர்தரு பழவினை அதனாலே - (வண்ணம்)

2007-04-14

3.5.17) துயர்தரு பழவினை (பொது)

--------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன .. தனதான)

(நிறைமதி முகமெனு மொளியாலே - திருப்புகழ் - சுவாமிமலை)


துயர்தரு பழவினை .. அதனாலே

.. தொடரிடர் தனிலுழல் .. அடியேனும்

மயலறு விதமுன .. தடிபேணி

.. வழிபட இனிதருள் .. புரியாயே

கயிலையில் உறைகிற .. பிறைசூடீ

.. கனவிடை மிசைவரும் .. உமைகோனே

எயில்களை ஒருசிறு .. நகையாலே

.. எரிசெய வலசிவ .. பெருமானே.


துயர் தரு பழவினை அதனாலே தொடர் இடர்தனில் உழல் அடியேனும் - துயரைத் தரும் பழைய வினைகளால் இடைவிடாது தொடரும் துன்பத்தில் உழல்கின்ற நானும்;

மயல் அறு விதம் உனது அடி பேணி வழிபட இனிது அருள்புரியாயே - என் அறியாமை நீங்கும்படி உன் திருவடியைப் போற்றி வணங்குவதற்கு இன்னருள் செய்வாயாக; (மயல் - மயக்கம்; அறியாமை);

கயிலையில் உறைகிற பிறைசூடீ - கயிலைமலைமேல் உறைகின்ற சந்திரசேகரனே;

கன விடைமிசை வரும் உமைகோனே - பெரிய இடபத்தை வாகனமாக உடையவனே, உமாபதியே;

எயில்களை ஒரு சிறு நகையாலே எரிசெயவல சிவபெருமானே - முப்புரங்களைச் சிரித்து எரிக்கவல்ல சிவபெருமானே; (எயில் - கோட்டை); (எரிசெயவல - எரிசெய்ய வல்ல);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.016 – இடைமருதூர் - தொடர்வினைகள் அழிவாகி - (வண்ணம்)

03.05.016 – இடைமருதூர் - தொடர்வினைகள் அழிவாகி - (வண்ணம்)


2007-03-09

3.5.16) தமிழ்மாலை இடு நேயம் அருளாய் (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------

(வண்ணவிருத்தம்;

"தனதனன தனதான தனதனன தனதான

தனதனன தனதான .. தனதான" என்ற சந்தக்குழிப்பு );

(சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான - திருப்புகழ் - சிதம்பரம்)


தொடர்வினைகள் அழிவாகி .. எமபடர்கள் அணுகாத

.. .. சுகநிலையை அடியேனும் .. உறுமாறே

.. தொழுதுநிதம் மணநாறு .. மொழிவிரவு தமிழ்மாலை

.. .. துணையடியில் இடுநேயம் .. அருளாயே


சுடலைதனில் நடமாடும் .. உனதடியை நினைமாணி

.. .. துயரமுற வருகாலன் .. அவன்மார்பில்

.. சுமமனைய அடிவீசி .. அவனுயிரை அழிகால

.. .. சுடுபொடியை விரைபோல .. அணிவோனே


விடவரவு கயிறாக .. இருபுறமும் இழுநாளில்

.. .. மிகவுமெரி செயுமாலம் .. வரவாடும்

.. விணவரமு தினையார .. அருளிவிடம் மணியாகி

.. .. மிடறுதனில் ஒளிவீச .. இடுவோனே


படமுடைய இளநாகம் .. மதிகுரவ மலராறு

.. .. படர்சடையில் உடனாக .. உடையானே

.. பருமதில்கள் அவைசூழும் .. இடைமருதில் ஒருகூறு

.. .. பவளவிதழ் உமையான .. பெருமானே.


தொடர்வினைகள் அழிவாகி எமபடர்கள் அணுகாத சுகநிலையை அடியேனும் உறுமாறே - என்னைத் தொடரும் வினைகள் எல்லாம் அழிந்து, எமதூதர்கள் என்னை நெருங்காத இன்பநிலையை நானும் அடையும்படி;

தொழுது நிதம் மணம் நாறு மொழி விரவு தமிழ்மாலை துணையடியில் இடு நேயம் அருளாயே - உன்னை வணங்கித் தினமும் மணம் கமழும் சொற்கள் பொருந்திய தமிழ்ப்பாமாலைகளை உன் இரு திருவடிகளில் இடுகின்ற அன்பை அருள்வாயாக; (மொழி - சொல்); (விரவுதல் - கலத்தல்; பொருந்துதல்);


சுடலைதனில் நடமாடும் உனது அடியை நினை மாணி துயரம் உற வரு காலன்அவன் மார்பில் சுமம் அனைய அடி வீசி அவன் உயிரை அழி கால - சுடுகாட்டில் கூத்தாடும் உன் திருவடியைத் தியானித்த மார்க்கண்டேயர் மனம் கலங்கும்படி வந்த காலனது மார்பில் பூப் போன்ற உன் பாதத்தை வீசிக் காலனைக் கொன்ற காலனே; (மாணி - மார்க்கண்டேயர்); (சுமம் - பூ);

சுடுபொடியை விரைபோல அணிவோனே - சுட்ட சாம்பலை வாசனைப்பொடி போலப் பூசியவனே; (விரை - வாசனைப்பண்டம்; கலவைச்சாந்து); (சம்பந்தர் தேவாரம் - 3.54.3 - "வெந்த சாம்பல் விரையெனப் பூசியே");


விட அரவு கயிறாக இருபுறமும் இழு நாளில் மிகவும் எரி செயும் ஆலம் வர வாடும் விணவர் அமுதினை ஆர அருளி - (பாற்கடலைக் கடைய) வாசுகி என்ற விஷநாகத்தை ஒரு கயிறாகக் கொண்டு இருபக்கமும் இழுத்த பொழுது, மிகவும் சுட்டெரிக்கும் ஆலகால விஷம் எழுந்ததால் வாடிய தேவர்கள் அமுதத்தை உண்ண அருள்செய்து; (விணவர் - விண்ணவர் - இடைக்குறை); (ஆர்தல் - உண்ணுதல்);

விடம் மணி ஆகி மிடறுதனில் ஒளி வீச இடுவோனே - ஆலகால விடம் ஒரு மணி போலக் கண்டத்தில் ஒளி வீசுமாறு வைத்தவனே;


படம் உடைய இளநாகம் மதி குரவ மலர் ஆறு படர்சடையில் உடனாக உடையானே - படம் உடைய இளம் பாம்பையும், சந்திரனையும், குராமலரையும், கங்கையையும் படர்ந்த சடையின்மேல் சேர்ந்திருக்குமாறு சூடியவனே;

பருமதில்கள் அவை சூழும் இடைமருதில் ஒரு கூறு பவளவிதழ் உமை ஆன பெருமானே - பெரிய மதில்களால் சூழப்பெற்ற திருவிடைமருதூரில் பவளம்போல் சிவந்த வாயை உடைய உமை ஒரு பாகமான பெருமானே. (பருமை - பருத்திருக்கை. பெருமை); (பவள இதழ் - பவளம்போல் சிவந்த உதடு);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, November 11, 2017

03.04.065 - சிவன் - ஐஐடி (IIT-Madras) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-01-10

3.4.65 - சிவன் - ஐஐடி (IIT-Madras) - சிலேடை

-------------------------------------------------------------

மதியொளி வீசுவதால் மான்கூ டுவதால்

விதிகளை யாய்என்பார் வேண்டும் பதியாய்

இருத்தலால் இந்தியத்தொ ழில்நுட்பச் சாலை

நிருத்தம்செய் ஈசன் நினை.


சொற்பொருள்:

மதி - 1. அறிவு; / 2. சந்திரன்;

கூடுதல் - 1. திரளுதல்; / 2. சேர்தல்;

விதிகளையாய் - 1. விதிகளை ஆய்; / 2. விதி களையாய்;

விதி - 1. விஞ்ஞான விதிகள் (scientific laws); / 2. ஊழ் (fate/destiny);

ஆய் - ஆராய்தல்;

களையாய் - நீக்குவாயாக;

வேண்டுதல் - 1. விரும்புதல்; / 2. இறைஞ்சுதல்;

பதி - 1. ஊர்; இடம்; / 2. தலைவன்; கடவுள்;

தொழின்னுட்பம் - "தொழில் + நுட்பம் = தொழினுட்பம்" என்று புணரும்; இங்கே தளைநோக்கி னகர ஒற்று விரித்தல் விகாரம்;

நிருத்தம் - நடனம்;


ஐஐடி (IIT-Madras):

மதி ஒளி வீசுவதால் - அங்கு அறிவின் ஒளி வீசும். (Intellectual place).

மான் கூடுவதால் - மான்கள் திரளும்.

விதிகளை ஆய் என்பார் வேண்டும் பதியாய் இருத்தலால் - "விஞ்ஞான விதிகளை ஆராய்" என்பவர்கள் விரும்பும் இடமாக இருக்கும்.

இந்தியத் தொழில்நுட்பச் சாலை - இந்தியத் தொழில்நுட்பச் சாலை (IIT).

நினை - என்று எண்ணு;


சிவன்:

மதி ஒளி வீசுவதால் - (முடிமேல்) பிறைச்சந்திரன் ஒளி வீசும்.

மான் கூடுவதால் - (கையில்) மான் சேரும்.

விதி களையாய் என்பார் வேண்டும் பதியாய் இருத்தலால் - "ஊழ்வினையை நீக்குவாயாக" என்பவர்கள் (பக்தர்கள்) இறைஞ்சும் கடவுளாக இருப்பவன்.

நிருத்தம் செய் ஈசன் - கூத்து ஆடும் சிவன்;

நினை - என்று எண்ணு;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.064 - சிவன் - சாம்பல் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-11-26

3.4.64 - சிவன் - சாம்பல் - சிலேடை

-------------------------------------------------------------

நெருப்புக்கண் உள்ளது நெற்றியிற் காண்போம் **

கருப்பை வெளிப்படுத்தும் கட்டை உருமாற

ஓம்புவார் சோதி ஒருபொருளாய் எஞ்சிடுமே

சாம்பல் மதிபுனை சம்பு .


சொற்பொருள்:

கண் - 1. ஏழாம் வேற்றுமை உருபு - இடம்; / 2. விழி;

கருப்பை - 1. கரிய நிறத்தை (இலக்கணக்குறிப்பு : எதுகைக்காகவும் சிலேடைக்காகவும் "கறுப்பு" என்ற சொல் "கருப்பு " என்று திரிந்தது); / 2. கருப்பப் பை (யோனி);

வெளிப்படுத்துதல் - 1. காட்டுதல்; / 1. வெளியே வரச்செய்தல்;

கட்டை - 1) மரக்கட்டை; / 2.. உடல்;

கட்டு - பந்தம்.

உருமாற - 1. உரு மாற; / 2. உரும் ஆற;

உரு - வடிவம்; / அச்சம்;

மாறுதல் - வேறுபடுதல்; இல்லாது போதல்;

உரும் - அச்சம்;

ஆறுதல் - தணிதல்; அடங்குதல்;

ஓம்புதல் - பேணுதல்;

சோதி - 1. நெருப்பு; / 2. ஒளி; சிவன்;

ஒருபொருள் - 1. ஒரு வஸ்து; / 2. ஒப்பற்ற பொருள்; கடவுள்;

எஞ்சுதல் - இறுதியில் மிஞ்சுவது;

சம்பு - சிவன் திருநாமங்களில் ஒன்று; சுகத்தைத் தருபவன் என்ற பொருள்;


சாம்பல்:

நெருப்புக்கண் உள்ளது - நெருப்பிடம் உள்ளது.

நெற்றியிற் காண்போம் - (மக்களது) நெற்றியிலும் காணலாம்.

கருப்பை வெளிப்படுத்தும் கட்டை உரு மாற ஓம்புவார் சோதி - கரிய கட்டையின் வடிவம் மாறிச் சாம்பல் ஆகிட நெருப்பைப் பேணுவார்கள். (-அல்லது- கரிய கட்டையானது வடிவம் இல்லாமல் போகும்படி நெருப்பைப் பேணுவார்கள்).

ஒரு பொருளாய் எஞ்சிடுமே - (அவ்வாறு எந்தக் கட்டையும் எரிந்த பின்) மிஞ்சுவது சாம்பல் என்ற ஒரு பொருளே.

சாம்பல் - சாம்பல்;


சிவன்:

நெருப்புக்கண் உள்ளது நெற்றியிற் காண்போம் - அவனது நெற்றியில் தீயை உமிழும் கண்ணைக் காணலாம். (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.36.4 - “நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே”);

கருப்பை வெளிப்படுத்தும் கட்டை உரும் மாற ஓம்புவார் - (தாயின்) கருப்பப் பையிலிருந்து வெளியே வருகிற இந்த உடல் அச்சம் (- தொடர்ந்து பிறவிகள் வரும் பயம்) - ஒழியப் (பக்தர்கள்) பேணுவார்கள்; (-- அல்லது -- "கருப்பை வெளிப்படுத்தும் கட்டை உருமாற" - இதனைக், "கருப்பப் பையிலிருந்து பிறக்க வைக்கும் வினைக்கட்டை இல்லாமல் செய்ய" என்றும் பொருள்கொள்ளல் ஆம்).

சோதி - ஒளிவடிவானவன்.

ஒரு பொருளாய் எஞ்சிடுமே - (எல்லாம் ஒடுங்கிய பின்னும்) எஞ்சுகிற ஒரு பொருள் அவன்.

சாம்பல் மதி புனை சம்பு - சாம்பலையும் (திருநீற்றையும்) சந்திரனையும் அணிபவனும் சம்பு என்ற திருநாமம் உடையவனுமான சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------