Thursday, November 12, 2020

03.04.093 - சிவன் - கடல் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-05-19

3.4.93 - சிவன் - கடல் - சிலேடை

-------------------------------------------------------

அலைவீசும் மேலே அடியார் அறிவார்

உலகுசுற்றும் உண்ணீலம் தோன்றும் - நிலைபெறும்

ஆறெல்லாம் சென்றடையும் நன்மை அளிக்குமெரு(து)

ஏறெம்மான் ஆழ்கடல் இங்கு.


சொற்பொருள்:

அடியார் - 1. அடி யார்; / 2. அடியார் (பக்தர்);

அடி - 1. கீழ்; / 2. பாதம்;

உலகு - 1. பூமி; / 2. மக்கள்;

சுற்றுதல் - 1. சூழ்ந்திருத்தல்; / 2. சுற்றிவருதல் (வலம் செய்தல்);

உண்ணீலம் - 1. உள் நீலம்; / 2. உண் நீலம்;

நீலம் - 1. நீலநிறம்; / 2. கரிய விஷம்;

நிலைபெறுதல் - 1. தன்மையைப் பெறுதல்; / 2. துன்பமற்ற நிலையை அடைதல்;

ஆறு - 1. நதி; / 2. மார்க்கம்; வழி; சமயம் (Religion);

எருது - இடபம்;

எம்மான் - எம் இறைவன்;

இங்கு - இவ்விடம்; அசை என்றும் கொள்ளல் ஆம்;


கடல்:

அலை வீசும் மேலே - அதன் மேல் அலை மோதும்;

அடி யார் அறிவார் - (மிக ஆழமாக இருப்பதால்) அதன் அடியை (கீழ்ப்பாகத்தை) யாரும் அறியமாட்டார்கள்;

உலகு சுற்றும் - உலகைச் சுற்றி இருக்கும்;

உள் நீலம் தோன்றும் நிலை பெறும் - உள்ளே நீலமாகத் தென்படும் தன்மையைக் கொண்டிருக்கும்;

ஆறு எல்லாம் சென்று அடையும் - நதிகள் எல்லாம் சென்று சேரும்;

நன்மை அளிக்கும் - உயிர்கள் வாழ இன்றியமையாதது;

ஆழ்கடல் - ஆழம் மிக்க கடல்;


சிவன்:

அலை வீசும் மேலே - திருமுடிமேல் (கங்கை நதி) அலை வீசும்;

அடியார் அறிவார் - அடியார்கள் அறிவார்கள்; (அடியார்களால் எளிதில் அடையப்படுபவன்); / அடியார்களை அவர் அறிவார்;

(அலை வீசும் மேலே அடி யார் அறிவார் - "மேலே" என்பதில் "" என்பதை அசையாகக் கொண்டு, "(கங்கை நதி) அலை வீசும் உச்சியையும் திருவடியையும் யார் அறிவார்" என்றும் பொருள்கொள்ளலாம்.

உலகு சுற்றும் - மக்கள் வலம்வருவார்கள்; (பிரதட்சிணம் செய்வார்கள்);

உண் நீலம் தோன்றும் - உண்ட விஷம் (திருக்கழுத்தில்) காணப்படும்;

நிலைபெறும் - என்றும் நிலைத்து இருக்கும்;

ஆறு எல்லாம் சென்று அடையும் - சமயங்கள் எல்லாம் சென்று சேரும்;

நன்மை அளிக்கும் - நலம் செய்யும்;

(ஆறு எல்லாம் சென்று அடையும் நன்மை அளிக்கும் - இதனை, "(அன்பர்கள் தம்) ஆறு உட்பகைகளும் நீங்கிப் பெறும் நன்மையைக் கொடுக்கும்" என்றும் பொருள்கொள்ளலாம். ஆறு சிறுமைக் குணங்கள் - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம்; (= ஆசை, கோபம், miserliness, infatuation, செருக்கு (arrogance), பொறாமை (Envy) );

எருது ஏறு எம்மான் - இடபத்தின்மேல் ஏறி வரும் எம் பெருமான் - சிவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Wednesday, November 11, 2020

03.04.092 - சிவன் - கரும்பு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-05-19

3.4.92 - சிவன் - கரும்பு - சிலேடை

-------------------------------------------------------

பல்லோர்கை யேந்திப் பரவசம் கொள்ளஅங்கே

மெல்ல விளையும் மிகஇனிமை - நல்லஒரு

தோகையுண் டுச்சியில் பாகங் களிக்கின்ற

ஏகன் கரும்பென் றியம்பு.


சொற்பொருள்:

பல்லோர் - 1. பல் உடையவர்கள்; 2. பலர்;

கையேந்தி - 1. கையில் ஏந்தி; / 2. இரந்து; யாசித்து;

பரவசம் - மிகு களிப்பு;

மெல்ல - 1. கடித்து மெல்லும்பொழுது; / 2. மெதுவாக;

இனிமை - 1. தித்திப்பு; / 2. இன்பம்;

தோகை - 1. நெல் கரும்பு வாழை முதலியவற்றின் தாள் (Sheath, as of sugarcane); / 2. பெண்;

உச்சி - 1. மேல் பகுதி; / 2. தலை;

பாகங்களிக்கின்ற - 1. பாகு அங்கு அளிக்கின்ற; 2. பாகம் களிக்கின்ற;

பாகு - இளகக் காய்ச்சிய வெல்லம் (molasses, sugar syrup);

பாகம் - கூறு; பாதி;

ஏகன் - ஒருவன் - ஒப்பற்றவன்;


கரும்பு:

பல்லோர் கை ஏந்திப் பரவசம் கொள்ள அங்கே மெல்ல விளையும் மிக இனிமை - பல் உள்ளவர்கள் கையில் பிடித்துக் கடித்து மெல்லும்பொழுது அவர்கள் மகிழும்படி மிகவும் தித்திப்புத் தோன்றும்.

நல்ல ஒரு தோகை உண்டு உச்சியில் - கரும்பின் உச்சியில் தோகை என்று சொல்லப்படும் இலை இருக்கும்;

பாகு அங்கு அளிக்கின்ற - (காய்ச்சுவதால்) வெல்லப் பாகைத் தருகின்ற;

கரும்பு என்று இயம்பு - கரும்பு என்று சொல்;


சிவன்:

பல்லோர் கையேந்திப் பரவசம் கொள்ள அங்கே மெல்ல விளையும் மிக இனிமை - (பக்தர்கள்) பலரும் தம் கைகளை ஏந்தி (அவன் அருளை இரந்து) மகிழ்ந்து தொழும்பொழுது மெதுவாக அவர்களுக்கு மிகவும் இன்பம் தோன்றும்;

நல்ல ஒரு தோகை உண்டு உச்சியில் - திருமுடிமேல் கங்கை என்ற நங்கை உண்டு;

பாகம் களிக்கின்ற - திருமேனியில் ஒரு கூறு (பார்வதிக்கு அளித்து) மகிழ்கின்ற;

ஏகன் என்று இயம்பு - ஒருவன், ஒப்பற்ற சிவபெருமான் என்று சொல்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.06.042 - அரிக்கும் - நிலவும் - மடக்கு

03.06 – மடக்கு

2009-05-02

3.6.42 - அரிக்கும் - நிலவும் - மடக்கு

-------------------------

அரிக்கும் அயற்கும் அரியவனை நம்மை

அரிக்கும் வினையை அறவே - அரிக்கும்

நிலவும் அரவும் நிமிர்சடைமேல் சேர்ந்து

நிலவும் அரனை நினை.


அரிக்கும் - 1. அரி - ஹரி; 2. அரித்தல் - வருத்துதல்; இமிசித்தல்; 3. அரித்தல் - அழித்தல்; நீக்குதல்;

அற - முழுதும்;

நிமிர்தல் - நீளுதல்; உயர்ந்ததாதல்; (நிமிர்சடை - நீண்ட சடை); (7.72.8 - "நீறணி நிமிர்சடை முடியினன்");

சேர்தல் - ஒன்றுகூடுதல்; நட்பாதல்

நிலவும் - 1. நிலவு - சந்திரன்; 2. நிலவுதல் - தங்குதல்; இருத்தல்;


அரிக்கும் அயற்கும் அரியவனை - விஷ்ணு பிரமன் இவர்களால் காண இயலாதவனை;

நம்மை அரிக்கும் வினையை அறவே அரிக்கும் (அரனை) - நம்மை வருத்துகின்ற வினைகளை முழுதும் அழிக்கும் ஹரனை; (பாடலில் ஈற்றடியில் வரும் "அரனை" என்ற சொல்லை இச்சொற்றொடரோடும் இயைத்துப் பொருள்கொள்க);

நிலவும் அரவும் நிமிர்-சடைமேல் சேர்ந்து நிலவும் அரனை நினை - சடையின்மீது சந்திரனும் பாம்பும் பகையின்றிச் சேர்ந்து ஒன்றாக இருக்கின்ற சிவபெருமானை நினைவாயாக.

("மனமே" என்ற விளி தொக்கு நின்றது).


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.091 - சிவன் - முன்றில் (வாசல்) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-04-22

3.4.91 - சிவன் - முன்றில் (வாசல்) - சிலேடை

-------------------------------------------------------

வெண்பொடி ஆரும் மிளிர்கோலம் காட்டுமே

மண்மிசை வீட்டு வழியாம்வெங் - கண்ணேறு

மேற்செல்லும் சித்திரம் உண்டுநால் வேதஞ்சொல்

ஆற்கீழ் அரன்முன்றில் ஆங்கு.


சொற்பொருள்:

வெண்பொடி - 1. வெண்மையான அரிசிமா, கோலப்பொடி; / 2. திருநீறு;

ஆர்தல் - பொருந்துதல்;

கோலம் - 1. தரையில் இடும் கோலம்; / 2. அழகிய வடிவம்;

மண்மிசை - 1. தரையின்மேல்; / 2. நிலவுலகில்;

வீட்டு வழி - 1. இல்லத்திற்கு வழி; / 2. வீடுபேறு அடைய நெறி;

வெம்மை - 1. கொடுமை; 2. கோபம்;

கண்ணேறு - கண்ணூறு - திருஷ்டி;

வெங்கண் - Fiery eye; அழலெழ விழிக்குங் கண்;

ஏறு - எருது; இடபம்;

மேற்செல்தல் - படையெடுத்தல்;

சித்திரம் - 1. ஓவியம் / படம்; / 2. அழகு;

ஆற்கீழ் - ஆல் + கீழ் - கல்லால மரத்தின் கீழே;

முன்றில் - வீட்டின் முன்னிடம்;

ஆங்கு - அப்படி; அசைச்சொல்;


முன்றில் (வாசல்):

வெண் பொடி ஆரும் மிளிர் கோலம் காட்டுமே மண்மிசை - வெண்மையான அரிசிமா / கோலப்பொடியால் இடப்பட்ட கோலம் தரைமீது இருக்கும்;

வீட்டு வழி ஆம் - வீட்டினுள் செல்லும் வழி;

வெம் கண்ணேறு மேற்செல்லும் சித்திரம் உண்டு - கொடிய திருஷ்டியை எதிர்க்கும் ஒரு படம் இருக்கும்;

முன்றில் - வீட்டின் முன்னிடம் - வாசல்;


சிவன்:

வெண்பொடி ஆரும் மிளிர் கோலம் காட்டுமே மண்மிசை - திருநீறு பூசி விளங்கும் அழகிய உருவோடு இந்நிலவுலகில் எழுந்தருள்வான்;

வீட்டு வழி ஆம் - வீடு பேறு அடைவதற்கு நெறி ஆவான்;

வெங்கண் ஏறுமேற் செல்லும் சித்திரம் உண்டு - தீயுமிழும் கண்களையுடைய (சினம் மிக்க) எருதின்மேல் ஏறிசெல்லும் அழகு உடையவன்;

நால்வேதம் சொல் ஆல் கீழ் அரன் - கல்லால மரத்தின்கீழ் நான்மறையின் பொருளை விளக்கிய தட்சிணாமூர்த்தியான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.07.006 – திருநாவுக்கரசர் துதி - உமையவளை ஓர் கூறு

03.07.006 – திருநாவுக்கரசர் துதி - உமையவளை ஓர் கூறு

2009-04-20

3.7.6 - திருநாவுக்கரசர் துதி

----------------------------------

(3 பாடல்கள்)


1) --- (அறுசீர் விருத்தம் - காய் காய் தேமா - அரையடி வாய்பாடு) ---

உமையவளை ஓர்கூறு வைத்த

.. உத்தமனே நாவரையர் என்ற,

நமதுதமிழ் நலிவின்றி வாழ,

.. நானிலத்தில் சைவநெறி ஓங்கக்,

குமரிமுதல் கயிலைவரை எங்கும்

.. குறைவின்றித் திருத்தொண்டு செய்த,

தமக்குநிகர் இல்லாத அன்பர்

.. தாளிணையை நாம்வாழ்த்து வோமே.


நம் தமிழ்மொழி என்றும் வாழவும், உலகில் சிவநெறி தழைக்கவும், பாரத-தேசமெங்கும் தலயாத்திரை செய்து திருத்தொண்டு செய்தவரும், ஒப்பற்றவரும், உமைபங்கனால் நாவினுக்கு அரையன் என்று அழைக்கப்பெற்றவருமான திருநாவுக்கரசரது இருதிருவடிகளை நாம் வாழ்த்துகின்றோம்;


2) --- (அறுசீர் விருத்தம் - காய் மா தேமா - அரையடி வாய்பாடு) ---

திலகவதி யாரின் தம்பி

.. திருவதிகை தன்னில் அன்று

மலைமகள்கோன் தாள்வ ணங்கி

.. வலிநீங்கி, நாடும் உய்யத்

தலம்பலவும் சென்று போற்றித்

.. தமிழ்பாடித் தொண்டு செய்த

நலமிகுநா வரசர் தம்மை

.. நாம்பணிந்து போற்று வோமே.


திலகவதியார்க்குத் தம்பியார் திருவதிகையில் அன்று உமாபதி பாதத்தை வணங்கிச், சூலை நீங்கப்பெற்று, நாட்டுமக்களும் உய்யும்பொருட்டுப் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டுத், தேவாரம் பாடித், தொண்டு செய்த நன்மை மிக்க திருநாவுக்கரசரை நாம் வணங்கிப் போற்றுவோம்.


3) --- (நாலடித் தரவுகொச்சகக் கலிப்பா ) ---

திண்ணார்நெஞ் சமணரொளி பழையாறைத் திருக்கோயில்

கண்ணாரக் கண்டென்றன் கையாரத் தொழும்வரைநான்

உண்ணேன்என் றுள்ளத்தில் உறுதிகொண்டு நோன்பிருந்த

பண்ணார்செந் தமிழ்பன்னும் நாவரசர் பதம்போற்றி.


பதம் பிரித்து:

திண் ஆர் நெஞ்ச அமணர் ஒளி பழையாறைத் திருக்கோயில்

கண்ணாரக் கண்டு என்றன் கையாரத் தொழும்வரை நான்

உண்ணேன் என்று உள்ளத்தில் உறுதிகொண்டு நோன்பிருந்த,

பண் ஆர் செந்தமிழ் பன்னும் நாவரசர் பதம் போற்றி.


திண் ஆர் நெஞ்ச அமணர் - கல்மனத்தர்களான சமணர்; (நெஞ்சமணர் - நெஞ்ச அமணர் - "நெஞ்ச" என்பதில் ஈற்று அகரம் தொக்குப் புணர்ந்தது);

அமணர் ஒளி பழையாறைத் திருக்கோயில் - சமணர்கள் ஒளித்துவைத்திருந்த பழையாறை வடதளி என்ற திருக்கோயிலை;

கண்ணாரக் கண்டு என்றன் கையாரத் தொழும்வரை நான் உண்ணேன் என்று - என் கண் குளிரத் தரிசித்து, கைகூப்பித் தொழும்வரை நான் உணவு உண்ணமாட்டேன் என்று;

உள்ளத்தில் உறுதிகொண்டு நோன்பிருந்த - உள்ளத்தில் நிச்சயித்து உண்ணாநோன்பு இருந்த;

பண் ஆர் செந்தமிழ் நாவரசர் பதம் போற்றி - இசையோடு பொருந்திய திருப்பதிகங்களைப் பாடியருளிய திருநாவுக்கரசரது திருவடிகளுக்கு வணக்கம்; (பன்னுதல் - பாடுதல்);

(பழையாறை வடதளி என்ற கோயிலைச் சமணர்கள் மறைத்தது அறிந்து திருநாவுக்கரசர் உண்ணாநோன்பு மேற்கொண்ட செய்தியைப் பெரியபுராணத்திற் காண்க);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Sunday, November 8, 2020

03.04.090 - சிவன் - காப்பி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-04-10

3.4.90 - சிவன் - காப்பி (coffee) - சிலேடை

-------------------------------------------------------

பொடியாக மேல்நீர் பொழியும் கசிந்தே

அடிசேர்ந் தகமணக்கும் அன்பர் - குடிக்கும்

பொருளாகும் வாய்மணக்கப் போற்றிப் புகழ்வார்

கருமிடற் றன்காப்பி காண்.


சொற்பொருள்:

பொடியாகமேல் - 1. பொடி ஆக மேல்; / 2. பொடி ஆக(ம்) மேல்;

பொடி - 1. தூள்; / 2. திருநீறு;

ஆகம் - உடல்;

மேல் - 1. ஏழாம்வேற்றுமை உருபு; 2. தலை;

கசிதல் - 1. ஈரமூறுதல் (To ooze out); / 2. நெகிழ்தல்;

அகம் - 1. வீடு / 2. உள்ளம்;

மணத்தல் - வாசனை கமழ்தல்;

குடி - 1. அருந்து (குடித்தல்) / 2. குடும்பம்;

பொருள் - 1. வஸ்து; / 2. மெய்ப்பொருள்; மோட்சம்; பொன்;

காண் - முன்னிலை அசை;

இலக்கணக் குறிப்பு - தனிக்குறிலைச் சாராத மகர ஒற்றை அடுத்து மெல்லினத்தில் தொடங்கும் சொல் வரின், முதற்சொல்லின் ஈற்று மகர மெய் கெடும்;


காப்பி (coffee):

பொடி ஆக, மேல் நீர் பொழியும், கசிந்தே

அடி சேர்ந்து அகம் மணக்கும்; அன்பர் குடிக்கும்

பொருள் ஆகும்; வாய் மணக்கப், போற்றிப் புகழ்வார்;

கருமிடற்றன் காப்பி காண்.


பொடி ஆக, மேல் நீர் பொழியும் கசிந்தே அடி சேர்ந்து அகம் மணக்கும் - ("பொடி ஆக அகம் மணக்கும், மேல் பொழியும் நீர் கசிந்தே அடி சேர்ந்து அகம் மணக்கும்" என்று இயைத்துப் பொருள்கொள்க) - காப்பிக்கொட்டையைப் பொடி செய்யும்பொழுதும், காப்பிப்பொடி மேல் ஊற்றும் வெந்நீர் வடிந்து கீழே பாத்திரத்தில் சேரும்பொழுதும், வீடு முழுதும் காப்பி வாசனை கமகமக்கும்;

அன்பர் குடிக்கும் பொருள் ஆகும் - காப்பிப் பிரியர்கள் குடிக்கின்ற பொருளாகும்;

வாய் மணக்கப், போற்றிப் புகழ்வார் - (அவர்கள் அதனைக் குடித்துத் தங்கள்) வாய் மணம் பெற, அதனைச் சிலாகித்துப் பேசுவார்கள்;

காப்பி;


சிவன்:

பொடி ஆகம் மேல் நீர் பொழியும்; கசிந்தே

அடி சேர்ந்து அகம் மணக்கும் அன்பர் குடிக்கும்

பொருள் ஆகும்; வாய் மணக்கப் போற்றிப் புகழ்வார்;

கருமிடற்றன் காப்பி காண்.


பொடி ஆகம் மேல் - திருமேனியில் திருநீறு;

மேல் நீர் பொழியும் - முடிமேல் கங்கை பாயும்;

("பொடி ஆகம் மேல்; மேல் நீர் பொழியும்" என்று "மேல்" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்க);

கசிந்தே அடி சேர்ந்து அகம் மணக்கும் அன்பர் குடிக்கும் பொருள் ஆகும் - நெகிழ்ந்து திருவடியை அடைந்து, (தாமரைத் திருவடிகளைத் தாங்குவதால்) மணக்கின்ற உள்ளத்தை உடைய பக்தர்களது குடும்பத்திற்கும் நன்மை உண்டாகும்; (அன்பர் குடிக்கும் பொருள் ஆகும் = "அன்பர்கள் அருந்தும் இன்பத்தேன் ஆவான்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (சம்பந்தர் தேவாரம் - 1.62.1 - "நம் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக் கோளாய நீக்குமவன் கோளிலிஎம் பெருமானே");

வாய் மணக்கப் போற்றிப் புகழ்வார் - (பக்தர்கள் தங்கள்) வாய் மணக்க ஈசன் புகழைப் பாடுவார்கள் / பேசுவார்கள்;

கருமிடற்றன் - நீலகண்டன் - சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Wednesday, November 4, 2020

03.04.089 - சிவன் - இராமன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-04-03 (இராமநவமியை ஒட்டி)

3.4.89 - சிவன் - இராமன் - சிலேடை

-------------------------------------------------------

கோதண்ட பாணிதந்தை சொல்கடந்தா னல்லனே

மாதரையாள் வான்புகழ் மன்னியவன் - வேதனை

தீர இராவணனை அன்றடர்த்தான் சீதைகோன்

ஆரமெனப் பாம்பார் அரன்.


சொற்பொருள்:

கோதண்டம் - வில்;

பாணி - கை; கையில் ஏந்தியவன்;

சொல்கடந்தானல்லனே - 1. சொல் கடந்தான்; நல்லனே; / 2. சொல் கடந்தான் அல்லனே;

கடத்தல் - 1. மேற்படுதல்; / 2. மீறுதல்;

மாதரையாள்வான்புகழ்மன்னியவன் - 1. மாதரை ஆள், வான் புகழ் மன்னியவன்; / 2. மா தரை ஆள்வான்; புகழ் மன்னியவன்;

வேதனை - 1. வேதன்; ; / 2. வேதனை;

- தலைவன்;

தீர - 1. வலிமையுள்ள; வீரமுள்ள; (தீரம் - தைரியம்; வலிமை); / 2. தீரும்படி;

அடர்த்தல் - 1. அமுக்குதல்; நசுக்குதல் / 2. தாக்குதல்; கொல்லுதல்;

ஆரம் - மாலை; ஆபரணம்;

ஆர்தல் - அணிதல்;


இராமன்:

கோதண்டபாணி - வில்லை ஏந்தியவன்;

தந்தை சொல் கடந்தான் அல்லனே - தன் தந்தையின் சொல்லை என்றும் மீறாதவன்;

மா தரை ஆள், வான் புகழ் மன்னியவன் - பெரிய மண்ணுலகை ஆண்ட, பெரும்புகழ் நிலைபெற்றவன்; (ஆள் வான்புகழ் - வினைத்தொகை);

வேதனை தீர இராவணனை அன்று அடர்த்தான் - (உலகின், தேவர்களின், சீதையின்) இடர்கள் தீருமாறு, இராவணனைப் போரிட்டு அழித்தவன்;

சீதைகோன் - சீதைக்குக் கணவனான இராமன்;


சிவன்:

கோ - அரசன்;

தண்டபாணி தந்தை - முருகனுக்குத் தந்தை;

சொல் கடந்தான் - சொல்லைக் கடந்தவன் - மொழியால் முற்றும் விளக்க ஒண்ணாதவன்;

நல்லனே - நன்மை அளிப்பவன் (சங்கரன்);

மாதரை ஆள், வான் புகழ் மன்னியவன் - பார்வதி, கங்கை என இருவரின் நாயகன்; அழியாத பெரும்புகழ் உடையவன்;

வேதன் - வேதத்தின் பொருளாக இருப்பவன்;

- தலைவன்;

தீர இராவணனை அன்று அடர்த்தான் - வலிமையுள்ள இராவணனை முன்பு (அவன் கயிலையைப் பெயர்க்க முயன்றபொழுது அம்மலையின் கீழ்) நசுக்கியவன்;

ஆரம் எனப் பாம்பு ஆர் அரன் - மார்பில் மாலைபோல் பாம்பை அணிந்த சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------