2005-02-20
N.040 - கண்ணப்பர் - (செஸ்டீனா)
-----------
முற்குறிப்பு : செஸ்டீனா (Sestina) என்பது (பிரெஞ்சு, இத்தாலியன், முதலிய) சில மேனாட்டு மொழிகளில் காணப்பெறும் 7 பாடல்கள் அமைந்த ஒரு தொகுப்பின் அமைப்பு. முதல் ஆறு பாடல்கள் ஆறடிப் பாடல்களாகவும் ஏழாம் பாடல் மூவடிப் பாடலாகவும் அமையும். முதற்பாடலில் அடிகள்தோறும் ஈற்றில் வரும் சொற்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் மற்ற 6 பாடல்களிலும் வரவேண்டும்.
தமிழில்: மேற்சொன்ன வரிசையில், ஆனால் அடியீற்றுச் சொற்களின் வரிசையாக அல்லாமல் அடிகளின் முதற்சொற்களின் வரிசையாக அமைந்து வருமாறு இயற்றப்பட்ட பாடல்கள்.
1) 123456 2) 615243 3) 364125 4) 532614 5) 451362 6) 246531 7) 14, 25, 36
இப்பாடலில்:
1 = விண்ணில், 2 = கண்ணில், 3 = திண்ணன், 4 = அண்ணல், 5 = புண்ணில், 6 = எண்ணில்
1) -- 123456
விண்ணில் விளங்கும் வெண்மதி அணிந்தவன்
கண்ணில் குருதி கசிவதைக் கண்ட
திண்ணன் மிகவும் திகைத்துப் பின்னர்
அண்ணல் பிணியை அகற்றத் துணிந்தப்
புண்ணில் தன்கண் இடந்து பொருத்தி
எண்ணில் புகழை எய்தி இணைந்தார்.
(இடத்தல் - அகழ்தல்); (திண்ணன் .. இணைந்தார் - ஒருமைபன்மை மயக்கம். திண்ணன் கண்ணை அப்பிக் கண்ணப்பர் ஆகி ஈசனைச் சேர்ந்தார்);
2) -- 615243
எண்ணில் எழுத்தில் இசையில் மண்ணில்
விண்ணில் இருக்கும் இறைவன் கண்ணில்
புண்ணில் குருதி பொங்கத் தன்னிரு
கண்ணில் ஒன்றைக் களிப்புடன் நெம்பி
அண்ணல் கண்ணில் அப்பிய அன்றே
திண்ணன் கலந்தார் சிவனுடன் ஒன்றாய்.
3) -- 364125
திண்ணன் பிரிந்து திகைத்து நின்றான்;
எண்ணில் அதுவும் இறைவன் அருளே;
அண்ணல் ஆலயம் அங்கவன் கண்டான்;
விண்ணில் திரிபுரம் வெந்திடச் செய்தவன்
கண்ணில் உதிரம் கண்டுதன் கண்ணையப்
புண்ணில் அப்பிப் புனிதனைக் கண்டான்.
4) -- 532614
புண்ணில் குருதிப் புனலைக் கண்ட
திண்ணன் உடனே செருப்புக் காலையக்
கண்ணில் வைத்து மறுகண் இடந்தான்;
எண்ணில் அரிய இச்செயல் கண்ட
விண்ணில் உள்ளார் வியந்தார்; முக்கண்
அண்ணல் நில்லுகண் ணப்ப என்றார்.
5) -- 451362
அண்ணல் அருவன் ஆயினும் திருவுருப்
புண்ணில் உதிரம் பொங்கக் காட்டி
விண்ணில் ஓரிடம் வேட்டுவ பத்தனாம்
திண்ணன் பெற்றிடத் திருவருள் புரிந்தான்;
எண்ணில் மாதவம் இயற்றியும் இருடிகள்
கண்ணில் புலப்படாக் கழலிணை காட்டினான்.
(பத்தன் - பக்தன்); (எண்ணில் - எண் இல் - அளவற்ற); (இருடி - ரிஷி);
6) -- 246531
கண்ணில் ஒன்றைக் கடிமலர் என்றே
அண்ணல் அடிகளில் அரியும் இட்டான்;
எண்ணில் அதுவும் ஆழியை அடையவே;
புண்ணில் மருந்தெனப் போடத் துணிந்து
திண்ணன் தன்கண் இடந்த திறத்தால்
விண்ணில் நிலைத்தான் கண்ணப்பன் என்று.
(எண்ணில் - எண்ணினால்; சிந்தித்தால்); (ஆழி - சக்கராயுதம்)
7) -- 14, 25, 36
விண்ணில் புரமெரித்த அண்ணல் தம்முடைய
கண்ணில் காட்டியஅப் புண்ணில் கண்ணப்பித்
திண்ணன் உய்ந்ததைநாம் எண்ணில் வினைகெடுமே.
வி. சுப்பிரமணியன்
--------- ---------
No comments:
Post a Comment