Sunday, June 26, 2022

V.018 - ஆறு சடையுள் - மடக்கு

2010-11-07

V.018 - ஆறு சடையுள் - மடக்கு

----------------

(அறுசீர் விருத்தம் - 6 மா - வாய்பாடு;

ஒவ்வோர் அடியிலும் சொற்கள் மடக்குப் பெற்று வருமாறு அமைந்தது)


ஆறு சடையுள் நிலவும்

.. அருகே ஏறும் நிலவும்

ஏறு திகழும் கொடியான்

.. இடப்பால் ஓர்பூங் கொடியான்

நாறு கொன்றைத் தாரான்

.. நமக்கோர் பிறவி தாரான்

பேறு வேண்டி வேண்டில்

.. பெறலாம் ஐயம் இலையே.


சொற்பொருள்:

நிலவும் - 1. இருக்கும்; 2. சந்திரனும்;

ஏறு - 1. மேலே ஏறுதல்; 2. இடபம்;

கொடி - 1. துவஜம்; 2. கொடி போன்ற பெண்;

தாரான் - 1. மாலை (தார்) அணிபவன்; 2. அளிக்கமாட்டான்;

வேண்டுதல் - 1. விரும்புதல் 2. பிரார்த்தித்தல்;


ஆறு சடையுள் நிலவும் - சடையில் கங்கை இருக்கும்;

அருகே ஏறும் நிலவும் - அந்த நதியின் அருகே சடையில் சந்திரனும் ஏறும்;

ஏறு திகழும் கொடியான் - இடப்பக்கொடி உடையவன்;

இடப்பால் ஓர் பூங்கொடியான் - திருமேனியில் பூங்கொடி போன்ற உமாதேவியை இடப்பாகமாக உடையவன்;

நாறு கொன்றைத்-தாரான் - மணம் கமழும் கொன்றைமலை அணிந்தவன்;

நமக்கு ஓர் பிறவி தாரான் - நமக்கு (= அடியார்களுக்கு) இனிப் பிறவிகள் தரமாட்டான்;

பேறு வேண்டி வேண்டில், பெறலாம் ஐயம் இலையே - பேறுகள் விரும்பிப் பிரார்த்தனை செய்தால், அவற்றை அவன் நிச்சயம் அருள்வான், சந்தேகம் இல்லை;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment