2010-11-14
S.128 - சிவன் - கடல் - சிலேடை-3
------------------
நங்கையுஞ் சேரும் நதிசேரும் ஆவிவரும்
மங்கல மாமழை கண்டமுறும் - பொங்கும்
அரவமும் பூண்டிருக்கும் அங்கரைக்கண் ஆழி
சிரமலி மாலைச் சிவன்.
சொற்பொருள்:
நங்கை - 1. நம் கை; / 2. நங்கை - பெண்;
ஆவிவரும் - 1. ஆவி வரும்; / 2. ஆ இவரும்; (இவர்தல் - ஏறுதல்);
மங்கலமாமழை - 1. மங்கலம் ஆம் மழை; / 2. மங்கல மா மழை;
மழை - 1. மேகத்திலிருந்து பொழியும் நீர்; / 2. கரிய மேகம்;
கண்டம் - 1. நிலப்பரப்பு; / 2. மிடறு; கழுத்து;
உறுதல் - 1. இருத்தல்; நிகழ்தல்; / 2. ஒத்தல்;
பொங்குதல் - 1. கொந்தளித்தல்; மிகுதல்; / 2. கோபித்தல்;
அரவம் - 1. சத்தம்; / 2. பாம்பு;
அங்கரைக்கண் - 1. அம் கரைக்கண்; / 2. அங்கு அரைக்கண்;
அம் - அழகு;
கண் - ஏழாம்வேற்றுமை உருபு;
கடல்:
நம் கையும் சேரும் நதி சேரும் - நாம் வணங்கும் புண்ணிய நதிகளெல்லாம் சென்று சேரும்; ("நம் கையும் சேரும் = கடல் நம்மால் தொடக்கூடியபடி உள்ளது" என்றும் பொருள்கொள்ளலாம்);
ஆவி வரும் - (கடலிலிருந்து) நீராவி வரும்;
மங்கலம் ஆம் மழை கண்டம் உறும் - (அந்த நீராவியால் - மேகத்தால்) வளத்தைத் தரும் மழையை நிலப்பரப்புகள் அடையும்;
பொங்கும் அரவமும் பூண்டிருக்கும் அம் கரைக்கண் - அழகிய கரையில் மிகுந்த ஒலியும் கொண்டிருக்கும்; ("பொங்கும் = கொந்தளிக்கும்" என்றும் பொருள்கொள்ளலாம்);
ஆழி - கடல்;
சிவன்:
நங்கையும் சேரும் நதி சேரும் - உமாதேவி (மேனியிலும்) கங்கை (சடையிலும்) சேர்ந்திருப்பர்;
ஆ இவரும் - இடபத்தின்மேல் ஏறுவான்;
மங்கல மாமழை கண்டம் உறும் - நன்மை தரும் அழகிய மேகத்தைக் கண்டம் ஒக்கும்; (நீலகண்டம்);
பொங்கும் அரவமும் பூண்டிருக்கும் அங்கு அரைக்கண் - சீறும் பாம்பையும் அரையில் நாணாகக் கட்டியிருப்பான்;
சிர(ம்)மலி மாலைச் சிவன் - மண்டையோட்டு-மாலை அணிந்த சிவபெருமான்;
பிற்குறிப்பு:
முன்னர் எழுதிய "கடல் - சிவன்" சிலேடைகள் - 3.4.25 & 3.4.93 - காண்க.
வி. சுப்பிரமணியன்
------------- -------------
ஆகா...
ReplyDeleteThank you!
Delete