Sunday, June 26, 2022

S.127 - சிவன் - முருகன் வேல் - சிலேடை

2010-11-08

S.127 - சிவன் - முருகன் வேல் - சிலேடை

------------------

கந்தன் கரம்சேரக் காணும் அபயத்தைத்

தந்து புரக்கும் தரிப்பாரை - வந்தசுரர்

வீழ விடமடுக்கும் மின்னெறிக்கும் வேணியினான்

வேழ முகற்கிளையோன் வேல்.


சொற்பொருள்:

வந்தசுரர் - 1. வந்து அசுரர்; / 2. வந்த சுரர்;

வீழ்தல் - விழுதல் - 1. தோற்றுப்போதல்; சாதல்; / 2. விழுந்து வணங்குதல்;


முருகன் வேல்:

கந்தன் கரம் சேரக் காணும் - முருகனின் கையில் இருக்கும்;

அபயத்தைத் தந்து புரக்கும் தரிப்பாரை - (முருகனது வேலை மனத்தில்) தியானிப்பவரை அவர்களது அச்சத்தைத் தீர்த்துக் காக்கும்; (புரத்தல் - காத்தல்); (தரித்தல் - தாங்குதல்; மறவாது உள்ளத்துக்கொள்ளுதல்);

வந்து அசுரர் வீழ இடம் அடுக்கும் - அசுரர் வீழ இடம் வந்து அடுக்கும் - அசுரர்கள் அழியும்படி அவர்கள் இடத்தை வந்து அடையும்; (அடுத்தல் - நெருங்குதல்);

மின் எறிக்கும் - ஒளி வீசும்; (மின் - ஒளி); (எறித்தல் - ஒளிவீசுதல்);

வேழமுகற்கு இளையோன் வேல் - யானைமுகனுக்குத் தம்பியான முருகனது வேல்;


சிவன்:

கந்தன் கரம் சேரக் காணும் - 1. சோமாஸ்கந்தராகக் கையில் முருகனோடு காட்சி தருவான்; 2. "முருகன் கரங்குவித்துப் போற்றும்" என்றும் பொருள்கொள்ளலாம்; 3. "கம் தன் கரம்" - என்று பிரித்துக், "கபாலத்தைத் தன் கையில் ஏந்தியவன்" என்றும் பொருள்கொள்ளலாம்; (கம் - கபாலம்);

அபயத்தைத் தந்து புரக்கும் தரிப்பாரை - தன்னை மனத்தில் தரிப்பார்க்கு அபயம் தந்து காப்பான்; (புரத்தல் - காத்தல்); (தரித்தல் - தாங்குதல்; மறவாது உள்ளத்துக்கொள்ளுதல்);

வந்த சுரர் வீழ, விடம் மடுக்கும் - (அஞ்சி) வந்த தேவர்கள் விழுந்து வணங்க, (அவர்களுக்கு இரங்கி) ஆலகாலத்தை உண்டவன்; (மடுத்தல் - உண்ணுதல்);

மின் எறிக்கும் வேணியினான் - ஒளி வீசும் சடையை உடைய சிவபெருமான்; (மின் - ஒளி); (எறித்தல் - ஒளிவீசுதல்); (வேணி - சடை);


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment