2010-10-24
N.015 - நின்றசீர் நெடுமாற நாயனார்
----------------
(கலித்துறை - விளம் விளம் விளம் விளம் விளம்)
ஆனிலோர் ஐந்தினை ஆடினான் ஆறணி வேணிமேல்
கூனிலாச் சூடுவான் சீரையே கூறுவார் காழியார்
தேனிலா வுந்தமிழ்ப் பாடலில் சீருறச் செப்பினார்
கூனிலாக் கோலமே ஆயினான் கூடலாள் கோனுமே.
ஆனில் ஓர் ஐந்தினை ஆடினான் - பஞ்சகவ்விய அபிஷேகம் உடையவன்;
ஆறு அணி வேணிமேல் கூன்-நிலாச் சூடுவான் சீரையே கூறுவார் காழியார் - கங்கையை அணிந்த சடைமேல் வளைந்த சந்திரன் சூடிய சிவபெருமான் புகழையே கூறுவாரான சீகாழிப் பிள்ளையார் (திருஞான சம்பந்தர்); (வேணி - சடை); (கூன் - வளைவு);
தேன் நிலாவும் தமிழ்ப்-பாடலில் சீருறச் செப்பினார் - தேன் போன்ற இனிய தமிழ்ப்பாமாலையில் நலம்பெறும்படி பாடினார்; (சீர் உறுதல் - நலம் பெறுதல்; நன்னிலை அடைதல்);
கூன் இலாக் கோலமே ஆயினான் கூடல் ஆள் கோனுமே - (அப்படிப் பாடிய உடனே) மதுரையை ஆண்ட மன்னன் (கூன்பாண்டியன்) கூன் இல்லாத உடலை அடைந்தான்; (கூன் - உடற்கூனல் - hump on the back of the body); (கூடல் - மதுரை);
பிற்குறிப்பு: பாண்டியன் கூன் நிமிர்ந்தது -
பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 12.28.847
எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட,
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது-அன்றே.
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment