2014-12-19
P.262 - ஞாயிறு
–--------------
(அறுசீர் விருத்தம் - மா மா மா மா விளம் காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி")
(கண்டராதித்தர் - திருவிசைப்பா - 9.20.7 - "இலையார் கதிர்வேல்")
1)
விரவிப் போற்றும் மெய்யன் பர்க்கு வேண்டு வரங்களெலாம்
கரவில் லாமல் நல்கும் கரனே; கங்கை கரந்தவனே;
உரையைக் கடந்த உண்மைப் பொருளே; உறுவினை தீர்த்தருளாய்;
நரைவெள் ளேற்றாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
விரவிப் போற்றும் மெய்யன்பர்க்கு வேண்டு வரங்களெலாம் கரவு இல்லாமல் நல்கும் கரனே - உன்னை அடைந்து வழிபடும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டும் வரங்களையெல்லாம் ஒளித்தல் இன்றி வழங்கும் வரதஹஸ்தனே; (விரவுதல் - அன்புகொள்ளுதல்; அடைதல்); (கரவு - ஒளித்தல்);
கங்கை கரந்தவனே - கங்கையைச் சடியயில் ஒளித்தவனே; (கரத்தல் - மறைத்தல்);
உரையைக் கடந்த உண்மைப் பொருளே - சொற்பதம் கடந்த மெய்ப்பொருளே;
நரைவெள்ளேற்றாய் - வெள்ளை இடபவாகனம் உடையவனே;
உறுவினை தீர்த்தருளாய் - என் வினைகளைத் தீர்த்தருள்க;
நரைவெள்ளேற்றாய் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனே; (நரை - வெண்மை); (நரை வெள் - ஒருபொருட்பன்மொழி);
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே; (நறவு - தேன்; வாசனை);
2)
நாரி னோடு மாலை தொடுத்த நற்றவள் சங்கிலியைச்
சீரி லங்கு நாவ லூரர் சேர அளித்தவனே
ஏரி லங்கு கண்ட னேஎன் இருவினை தீர்த்தருளாய்
நாரி பங்கா நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
நாரினோடு மாலை தொடுத்த நற்றவள் சங்கிலியைச் சீர் இலங்கு நாவலூரர் சேர அளித்தவனே - அன்பால் நாரால் மாலைகள் தொடுத்துத் தொண்டுசெய்த நல்ல தவம் உடைய சங்கிலிநாச்சியாரைப் புகழ் மிக்க சுந்தரர் திருமணம் செய்யத் தந்தருளியவனே; (நார் - 1. அன்பு; 2. பூத்தொடுக்கும் நார்); (நாவலூரர் - திருநாவலூரில் அவதரித்த சுந்தரர்); (* சுந்தரர் வேண்டுகோளை ஏற்றுச் சங்கிலியாரை அவருக்குத் திருமணம் செய்வித்தது திருவொற்றியூரில்);
ஏர் இலங்கு கண்டனே - அழகிய கண்டம் உடையவனே; (ஏர் - அழகு);
என் இருவினை தீர்த்தருளாய் - என் வினையைத் தீர்த்தருள்க;
நாரிபங்கா - உமைபங்கனே;
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே; (நறவு - தேன்; வாசனை);
3)
வஞ்சி போலும் மருங்குல் உடைய மாதொரு கூறுடையாய்;
வஞ்சம் அற்ற மாணிக் காக மறலியை உதைபாதா;
அஞ்செ ழுத்தை அகத்தில் வைத்தேன் அருவினை தீர்த்தருளாய்;
நஞ்சுண் மிடற்றாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
வஞ்சி போலும் மருங்குல் உடைய மாதொரு கூறு உடையாய் - கொடி போன்ற இடையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனே; (வஞ்சி - கொடி); (மருங்குல் - இடை);
வஞ்சம் அற்ற மாணிக்காக மறலியை உதைபாதா; - கள்ளமற்ற மார்க்கண்டேயரைக் காக்கும்பொருட்டுக் காலனைத்த உதைத்த திருப்பாதனே; (மறலி - இயமன்);
அஞ்செழுத்தை அகத்தில் வைத்தேன் அருவினை தீர்த்தருளாய் - திருவைந்தெழுத்தை மனத்தில் வைத்த என் வினையைத் தீர்த்தருள்க;
நஞ்சு உண் மிடற்றாய் - விஷத்தை உண்ட கண்டனே; (மிடறு - கண்டம்);
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;
4)
நாகத் துரிவை போர்த்து கந்தாய் நரைவிடை ஊர்தியினாய்
ஆகத் தினிலோர் அரிவை பாகம் ஆகிய அற்புதனே
சோகத் தினையே தொடர்ந்து நல்கும் தொல்வினை தீர்த்தருளாய்
நாகத் தாராய் நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
நாகத்து உரிவை போர்த்து உகந்தாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (நாகம் - யானை); (உரிவை - தோல்);
நரைவிடை ஊர்தியினாய் - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனே;
ஆகத்தினில் ஓர் அரிவை பாகம் ஆகிய அற்புதனே - திருமேனியில் உமையை பாகமாகக் கொண்ட அற்புதனே; (ஆகம் - மேனி);
சோகத்தினையே தொடர்ந்து நல்கும் தொல்வினை தீர்த்தருளாய் - வருத்தத்தையே தரும் பழவினையைத் தீர்த்து அருள்வாயாக;
நாகத்-தாராய் - பாம்பை மாலையாக அணிந்தவனே; (தார் - மாலை);
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;
5)
வேல்போற் கண்ணி வெருவ அன்று மிகுசினத் தோடெதிர்ந்த
நால்வாய் உரித்தாய்; நாறு கொன்றை நாகம் அணிந்தவனே;
பால்போல் நீற்றாய்; பாதம் பணிந்தேன் பழவினை தீர்த்தருளாய்;
நால்வே தத்தாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
வேல் போல் கண்ணி வெருவ அன்று மிகு-சினத்தோடு எதிர்ந்த நால்வாய் உரித்தாய் - வேல் போன்ற கண்ணை உடைய உமாதேவி அஞ்சுமாறு முன்பு பெருங்கோபத்தோடு எதிர்த்துப் போர்செய்த யானையின் தோலை உரித்தவனே; (வெருவுதல் - அஞ்சுதல்); (நால்வாய் - யானை);
நாறு கொன்றை நாகம் அணிந்தவனே - ௳ணம் கமழும் கொன்றைமலரையும் பாம்பையும் அணிந்தவனே;
பால் போல் நீற்றாய் - பால் போன்ற வெண்திருநீற்றைப் பூசியவனே;
பாதம் பணிந்தேன் பழவினை தீர்த்தருளாய் - உன் திருவடியைப் பணிந்த என் பழைய வினையைத் தீர்த்தருள்க;
நால்வேதத்தாய் - நால்வேதங்களின் பொருளானவனே;
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;
6)
ஏன மருப்பை ஏந்து மார்ப; இருநதி பாய்சடைமேல்
வான மதியை வாழ வைத்த மாகரு ணைக்கடலே;
பாந லத்தால் பரவும் என்றன் பழவினை தீர்த்தருளாய்;
ஞான மூர்த்தீ; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
ஏன-மருப்பை ஏந்து மார்ப - பன்றிக்கொம்பைத் திருமார்பில் அணிந்தவனே; (ஏனம் - பன்றி); (மருப்பு - தந்தம்; கொம்பு);
இருநதி பாய்சடைமேல் வான-மதியை வாழவைத்த மா-கருணைக்கடலே - கங்கை பாய்ந்த சடைமேல் வானத்தின்கண் உள்ள சந்திரனை அழியாது நிலைக்கும்படி அணிந்த பெரிய கருணைக்கடலே; (இருநதி - பெரிய ஆறு; இருமை - பெருமை);
பா-நலத்தால் பரவும் என்றன் பழவினை தீர்த்தருளாய் - பாமாலைகளால் உன்னைத் துதிக்கும் என் பழைய வினையைத் தீர்த்தருள்க;
ஞானமூர்த்தீ - ஞானவடிவினனே;
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;
7)
மிகவே இடர்செய் காலன் பாசம் வீசிடக் கண்டுனையே
புகலா அடைந்த மாணிக் கருள்செய் புரிசடைப் புண்ணிய;நின்
புகழார் பாதம் போற்று கின்றேன் பொருவினை தீர்த்தருளாய்;
நகர்மூன் றெரித்தாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
மிகவே இடர்செய் காலன் பாசம் வீசிடக் கண்டு உனையே புகலா அடைந்த மாணிக்கு அருள்செய் புரிசடைப் புண்ணிய - மிகவும் துன்பம்செய்த காலன் பாசத்தை வீசக் கண்டு உன்னையே சரணடந்த மார்க்கண்டேயருக்கு அருளிய முறுக்கிய சடையுடைய புண்ணியனே; (புகலா - புகலாக); (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);
நின் புகழ் ஆர் பாதம் போற்றுகின்றேன் பொரு-வினை தீர்த்தருளாய் - உன் புகழ் மிகுந்த திருவடியைப் போற்றும் என்னைத் தாக்கும் வினையைத் தீர்த்தருள்க; (பொருதல் - போர்செய்தல்); (அப்பர் தேவாரம் - 4.88.4 - "சென்றடைந்தேனுடைய பொருவினையெல்லாம் துரந்தனைப்");
நகர் மூன்று எரித்தாய் - முப்புரங்களை எரித்தவனே;
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;
8)
எதிர்வார் இல்லான் இரதம் கீழே இழியவும் மாமலையை
மதியா திடந்த வாள ரக்கன் மணிமுடி பத்தைவிரல்
நுதியால் நெரித்தாய்; நுனையே தொழுதேன் நோய்வினை தீர்த்தருளாய்;
நதியார் சடையாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
எதிர்வார் இல்லான் இரதம் கீழே இழியவும் - எதிர்ப்பவர்கள் இல்லாத இராவணனுடைய தேர் பறக்க இயலாமல் தரையில் இறங்கவும்; (சம்பந்தர் தேவாரம் - 3.56.8 - "இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மையின்றி அமைதரு வல்லரக்கன்"); (இரதம் - தேர்); (அப்பர் தேவாரம் - 4.34.4 - "அந்தரம் தேர் கடாவி யார் இவன் என்று சொல்லி உந்தினான் மாமலையை");
மாமலையை மதியாது இடந்த வாளரக்கன் மணிமுடி பத்தை விரல் நுதியால் நெரித்தாய் - அந்த உயர்ந்த மலையை வணங்க நினையாமல் இகழ்ந்து பேசிப் பெயர்த்த கொடிய அரக்கனான இராவணனது மணிமுடி அணிந்த தலைகள் பத்தையும் ஒரு திருப்பாதவிரலின் நுனியால் நசுக்கியவனே; (இடத்தல் - பெயர்த்தல்); (வாள் - கொடிய); (நுதி - நுனி);
நுனையே தொழுதேன் நோய்வினை தீர்த்தருளாய் - உன்னையே வழிபட்டேன் என் பிறவிநோய்க்கு ஏதுவாகிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (நுனையே - நுன்னையே - உன்னையே); (சுந்தரர் தேவாரம் - 7.21.1 - "நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்");
நதி ஆர் சடையாய் - கங்கையை அணிந்த (/கங்கை ஒலிக்கும்) சடையானே; (ஆர்தல் - அணிதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்)
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;
9)
பங்க யத்தான் பாம்பின் மேலான் பன்றியும் அன்னமுமாய்
எங்கும் நேடி இளைக்க அளவில் எரியென நின்றவனே;
செங்கண் ஏற்றாய்; தினமும் தொழுதேன் தீவினை தீர்த்தருளாய்;
நங்கை பங்கா; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
பங்கயத்தான் பாம்பின்-மேலான் பன்றியும் அன்னமும் ஆய் - தாமரைமேல் இருக்கும் பிரமனும் பாம்பின்மேல் துயிலும் திருமாலும் அன்னமும் பன்றியும் ஆகி; (எதிர்நிரனிறையாக வந்தது);
எங்கும் நேடி இளைக்க அளவு-இல் எரி-என நின்றவனே - எங்கும் தேடித் தளரும்படி எல்லை இல்லாத ஜோதி என்று ஓங்கியவனே; ( நேடுதல் - தேடுதல்); (எரி - தீ);
செங்கண் ஏற்றாய் - சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவனே;
தினமும் தொழுதேன் தீவினை தீர்த்தருளாய் - உன்னைத் தினமும் தொழும் என் தீவினையைத் தீர்த்தருள்க;
நங்கை பங்கா - உமைபங்கனே;
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;
10)
பொல்லார், நீறு பூச அஞ்சும் பொய்யரின் புன்னெறிகள்
எல்லாம் அறியா எம்பி ரானே; இமையவர் போற்றிசெய்யும்
அல்லார் மிடற்றாய்; அடியே தொழுதேன் அருவினை தீர்த்தருளாய்;
நல்லார் மனத்தாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
பொல்லார், நீறு பூச அஞ்சும் பொய்யரின் புன்னெறிகள் எல்லாம் அறியா எம்பிரான் - பொல்லாதவர்களும் திருநீற்றைப் பூச அஞ்சுகின்ற பொய்யர்களும் சொல்லும் புன்மார்க்கங்களால் அறியப்படாத எம்பெருமானே; (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்");
இமையவர் போற்றிசெய்யும் அல் ஆர் மிடற்றாய் - தேவர்கள் வணங்கும் இருள் பொருந்திய கண்டத்தை உடையவனே; (பெரியபுராணம் - 12.21.259 - "அல்லார் கண்டத் தண்டர்பிரான்");
அடியே தொழுதேன் அருவினை தீர்த்தருளாய் - உன் திருவடியையே தொழும் என் தீர்த்தற்கு அரிய வினையைத் தீர்த்தருள்க;
நல்லார் மனத்தாய் - நல்லவர்கள் மனத்தில் இருப்பவனே;
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;
11)
கோட கத்துச் சமணர் குன்றக் குளிர்தமிழ் நீந்தவருள்
ஏட கத்தாய்; ஏகம் பத்தாய்; இன்தமிழ் பாடியுனை
நாட கத்தார் வினைய றுக்கும் நல்லவ னே;அலகில்
நாட கத்தாய்; நறவார் பொழில்சூழ் ஞாயிறு மேயவனே.
கோடு-அகத்துச் சமணர் குன்றக் குளிர்-தமிழ் நீந்த அருள் ஏடகத்தாய் - வஞ்ச-மனத்துச் சமணர்கள் தோல்வியுறச், சம்பந்தர் இட்ட தேவார-ஏடு வைகையில் வெள்ளத்தை எதிர்த்து நீந்த அருள்புரிந்த திருவேடகத்துப் பெருமானே; (கோடுதல் - நெறிதவறுதல்); (குன்றுதல் - அழிதல்; நிலைகெடுதல்);
ஏகம்பத்தாய் - கச்சி-ஏகம்பத்துப் பெருமானே;
இன்-தமிழ் பாடி உனை நாடு அகத்தார் வினை அறுக்கும் நல்லவனே - இனிய தமிழான தேவாரம் திருவாசகம் பாடி உன்னை நாடுகின்ற மனம் உடையவர்களது வினையை நீக்கும் நல்லவனே; (அறுத்தல் - தீர்த்தல்; நீக்குதல்);
அலகு இல் நாடகத்தாய் - அளவில்லாத திருக்கூத்து உடையவனே; (நாடகம் - கூத்து);
நறவு ஆர் பொழில் சூழ் ஞாயிறு மேயவனே - மணம் மிக்க சோலை சூழ்ந்த ஞாயிறு என்ற தலத்தில் எழுந்தருளியவனே;
பிற்குறிப்புகள் :
யாப்புக் குறிப்பு :
அறுசீர் விருத்தம் - மா மா மா மா விளம் காய் - வாய்பாடு.
அடிகள்தோறும் ஈற்றுச்சீர் பெரும்பாலும் கூவிளங்காய்.
5-ஆம் 6-ஆம் சீர்களிடையே வெண்டளை பயிலும். 5-ஆம் சீர் மாச்சீராக வரின், 6-ஆம் சீர் தனா என்ற சந்தத்தில் தொடங்கும்.
சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா";
கண்டராதித்தர் - திருவிசைப்பா - 9.20.5 - "களிவான் உலகிற் கங்கை நங்கை காதல னேஅருளென்(று));
ஞாயிறு - தலக்குறிப்பு : "ஞாயிறு கிராமம் - புஷ்பரதேஸ்வரர் கோயில்". சங்கிலிநாச்சியார் அவதரித்த தலம்.
வி. சுப்பிரமணியன்
-------------------
No comments:
Post a Comment