2014-12-09
P.261 - வான்மியூர்
–--------------
(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி")
(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்")
1)
சாகர விடத்துக் கஞ்சிய தேவர் .. தாள்தொழ அதுதனை உண்டு
மேகநி றத்தை மிடற்றினிற் காட்டும் .. வீரனை வெண்ணகை யாளைப்
பாக(ம்)ம கிழ்ந்த பண்புடை யானைப் .. பாலன நீறணிந் தானை
மாகடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.
சாகர-விடத்துக்கு அஞ்சிய தேவர் தாள்தொழ அதுதனை உண்டு - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் வந்து திருவடியை வணங்கவும், அவர்களுக்கு இரங்கி அந்த நஞ்சை உண்டு; (சாகரம் - கடல்); (அதுதனை - அதனை);
மேகநிறத்தை மிடற்றினில் காட்டும் வீரனை - கரிய மேகத்தின் நிறத்தைக் கண்டத்தில் காட்டும் வீரனை;
வெண்ணகையாளைப் பாகம் மகிழ்ந்த பண்பு உடையானைப் - வெண்பற்கள் திகழும் உமையை ஒரு பாகமாக விரும்பியவனை; (நகை - பல்);
பால் அன நீறு அணிந்தானை - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவனை; (அன - அன்ன - போன்ற);
மா-கடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - பெரிய கடலால் சூழப்பெற்ற திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறத்தலும் இயலுமோ? (மருந்து - அமுதம்); (* மருந்தீசன் - திருவான்மியூர் ஈசன் திருநாமங்களுள் ஒன்று); (ஆமே என்றதில் "ஏ" - வினாவேகாரம். எதிர்மறைக்கண் வந்தது. ஆகாது என்று பொருள்பட நின்றது); (சுந்தரர் தேவாரம் - 7.59.1 - "ஆரூரானை மறக்கலும் ஆமே");
2)
தெண்திரைக் கங்கை திகழ்முடி யானைச் .. செய்தசூள் மீறிய தோழர்
கண்தனை மறைத்துப் பின்தமிழ் கேட்டுக் .. கருணைசெய் கண்ணுத லானை
வெண்திரு நீற்றை விரையெனப் பூசி .. விடையுகந் தேறிய கோனை
வண்திரை எற்று வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.
தெண்திரைக் கங்கை திகழ் முடியானை - தெளிந்த அலைகள் திகழும் கங்கையைத் திருமுடியில் அணிந்தவனை; (திரை - அலை);
செய்த சூள் மீறிய தோழர் கண்தனை மறைத்துப் பின் தமிழ் கேட்டுக் கருணைசெய் கண்ணுதலானை - தாம் செய்த சபதத்தை மீறிய சுந்தரமூர்த்தி நாயனாரைக் குருடாக்கிப் பின்னர் அவர் உருகிப் பாடிய பதிகங்களைக் கேட்டு இரங்கியருளிய நெற்றிக்கண்ணனை; (தோழர் - சுந்தரர்); (கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்);
வெண்திருநீற்றை விரை எனப் பூசி விடை உகந்து ஏறிய கோனை - வெண்மையான திருநீற்றை வாசனைப்பொடி போலப் பூசி, இடபவாகனத்தின்மேல் ஏறுகின்ற தலைவனை; (விரை - வாசனைப்பொடி); (சம்பந்தர் தேவாரம் - 3.54.3 - "வெந்த சாம்பல் விரையெனப் பூசியே");
வண்திரை எற்று வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - வளம் மிக்க அலைகள் மோதுகின்ற திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (எற்றுதல் - மோதுதல்);
இலக்கணக் குறிப்பு: தெண்திரை, கண்தனை, வெண்திரு, வண்திரை - இவையெல்லாம் புணர்ச்சி பிரியாத வடிவத்தில் தெண்டிரை, கண்டனை, வெண்டிரு, வண்டிரை என்று வருவன.
3)
மதியில னாகி மலர்க்கணை எய்த .. மன்மதன் தனைப்பொடி செய்த
பதியினைப் பரனைப் பாய்விடை யானைப் .. பாவையோர் பங்கனை முடிமேல்
மதியிள நாகம் மத்தம ணிந்த .. மைந்தனைக் கலிமலி வீதி
மதில்புடை சூழ்ந்த வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.
மதியிலனாகி மலர்க்கணை எய்த மன்மதன்தனைப் பொடி செய்த பதியினைப் - அறிவற்றவன் ஆகி மலரம்பை எய்த காமனைச் சாம்பலாக்கிய தலைவனை;
பரனைப் - மேலானவனை;
பாய்-விடையானைப் - பாய்ந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவனை;
பாவை ஓர் பங்கனை - உமைபங்கனை;
முடிமேல் மதி இளநாகம் மத்தம் அணிந்த மைந்தனைக் - திருமுடிமேல் சந்திரன், இளம்பாம்பு, ஊமத்தமலர் இவற்றையெல்லாம் அணிந்த வீரனை/அழகனை; (மத்தம் - ஊமத்தமலர்); (மைந்தன் - இளைஞன்; வீரன்);
கலி மலி வீதி மதில் புடை சூழ்ந்த வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - ஆரவாரம் மிக்க வீதிகளும் மதிலும் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (கலி - ஒலி);
4)
அணிமலர் தூவி அருந்தமிழ் பாடி .. அனுதினம் அடியிணை போற்றிப்
பணியடி யார்தம் பழவினை தீர்த்துப் .. பரகதி தந்தருள் வானை
அணியிரண் டாகி அலைகடல் கடைந்தார் .. அஞ்சிய அருவிடம் தனையுண்
மணிமிடற் றானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.
அணிமலர் தூவி அருந்-தமிழ் பாடி அனுதினம் அடியிணை போற்றிப் பணி- அடியார்தம் பழவினை தீர்த்துப் பரகதி தந்தருள்வானை - அழகிய பூக்களைத் தூவித், தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடித் தினமும் இருதிருவடிகளை வணங்கும் பக்தர்களது பழைய வினையைத் தீர்த்துப் பரகதியைத் தருபவனை; (அணி - அழகு);
அணி இரண்டு ஆகி அலைகடல் கடைந்தார் அஞ்சிய அருவிடம்-தனை உண் மணிமிடற்றானை - இரண்டு அணிகள் ஆகிப் பாற்கடலைக் கடைந்தவர்களான தேவர்களும் அசுரர்களும் அஞ்சிய ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை; (அணி - கூட்டம்);
வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?
5)
தலைமலி மாலை தலைக்கணி கின்ற .. தலைவனை அன்பொடு தூவும்
இலைமலர் எதுவும் ஏற்றருள் வானை .. இமையவர் தம்பெரு மானைச்
சிலையென மேருச் சிலையினை வளைத்துத் .. திரிபுரம் மூன்றெரித் தானை
மலைமகள் கோனை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.
தலை மலி மாலை தலைக்கு அணிகின்ற தலைவனை - தலைக்கு மண்டையோட்டுமாலையை அணிந்தவனை;
அன்பொடு தூவும் இலை மலர் எதுவும் ஏற்றருள்வானை - பக்தர்கள் அன்போடு தூவும் எந்த மலரையும் இலையையும் ஏற்று அருள்பவனை; (சுந்தரர் தேவாரம் - 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்"); (அப்பர் தேவாரம் - 4.92.10 - "பாங்கறியா என்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையுமெல்லாம் அம்போது எனக் கொள்ளும் ஐயன்");
இமையவர்தம் பெருமானைச் - தேவர்கள் தலைவனை;
சிலையென மேருச்-சிலையினை வளைத்துத் திரிபுரம் மூன்று எரித்தானை - மேருமலையை வில்லாக வளைத்துத், திரிந்த முப்புரங்களை எய்து எரித்தவனை; (சிலை - 1. வில்; 2. மலை); (திரிபுரம் மூன்று - திரிந்த முப்புரங்கள் - வினைத்தொகை); (சம்பந்தர் தேவாரம் - 2.40.7 - "சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த");
மலைமகள் கோனை - உமாபதியை;
வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க ஒண்ணுமா?
6)
நறைமலர் தூவி நற்றமிழ் பாடி .. நாள்தொறும் போற்றிடு வார்க்குக்
குறைவற இன்பம் கொடுத்தருள் வானைக் .. கூவிளம் கொன்றையி னோடு
பிறையணிந் தானைப் பெருவிடம் உண்ட .. பித்தனை ஆலதன் கீழே
மறைவிரித் தானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.
நறைமலர் தூவி நற்றமிழ் பாடி நாள்தொறும் போற்றிடுவார்க்குக் குறைவு அற இன்பம் கொடுத்து அருள்வானைக் - வாசமலர்களைத் தூவித் தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடித் தினமும் வழிபடும் பக்தர்களுக்கு மிகுந்த இன்பத்தை அருள்பவனை; (நறை - தேன்; வாசனை);
கூவிளம் கொன்றையினோடு பிறை அணிந்தானைப் - வில்வம், கொன்றைமலர், பிறை இவற்றை அணிந்தவனை; (கூவிளம் - வில்வம்);
பெருவிடம் உண்ட பித்தனை - ஆலகாலத்தை உண்ட பேரருளாளனை; (பித்தன் - பேரருள் உடையவன்);
ஆலதன் கீழே மறை விரித்தானை - கல்லாலமரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்தவனை; (விரித்தல் - உபதேசித்தல்);
வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?
7)
பேர்பல உடைய பெருமையி னானைப் .. பிறப்பிறப் பில்லியைப் பெற்றம்
ஊர்பவன் தன்னை ஓதநஞ் சுண்ட .. ஒருவனை ஊர்தொறும் ஐயம்
தேர்பவன் தன்னைச் செந்தழல் மேனிச் .. செல்வனை ஆமையின் ஓட்டை
மார்பணிந் தானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.
பேர் பல உடைய பெருமையினானைப் - பல திருநாமங்கள் உடைய பெருமை மிக்கவனை;
பிறப்பு இறப்பு இல்லியைப் - பிறத்தலும் சாதலும் இல்லாதவனை;
பெற்றம் ஊர்பவன் தன்னை - இடபவாகனனை; (பெற்றம் - இடபம்);
ஓதநஞ்சு உண்ட ஒருவனை - கடல்விடத்தை உண்ட ஒப்பற்றவனை; (ஓதம் - கடல்); (ஒரு - ஒப்பற்ற);
ஊர்தொறும் ஐயம் தேர்பவன் தன்னைச் - பல ஊர்களில் பிச்சை ஏற்பவனை; (ஐயம் - பிச்சை);
செந்தழல் மேனிச் செல்வனை - செந்தீப் போல் செம்மேனி உடைய செல்வனை;
ஆமையின் ஓட்டை மார்பு அணிந்தானை - மார்பில் ஆமையோட்டை அணிந்தவனை;
வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?
8)
தேரினைச் செலுத்தச் சினந்துவெற் பிடந்த .. தெளிவிலா அரக்கனை நசுக்கி
ஆரிடர் உற்ற அவனழு திசையால் .. அடிதொழக் கேட்டும கிழ்ந்து
பேரினைத் தந்த பிஞ்ஞகன் தன்னைப் .. பேய்க்கணப் படையுடை யானை
வாரியொ லிக்கும் வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.
தேரினைச் செலுத்தச் சினந்து வெற்பு இடந்த தெளிவு இலா அரக்கனை நசுக்கி - தரையில் இறங்கிய தனது தேரைச் செலுத்த எண்ணிக் கோபத்தோடு கயிலைமலையைப் பெயர்த்த மதிமயக்கமுடைய இராவணனை (ஒரு பாதவிரலை ஊன்றி) நசுக்கி; (வெற்பு - மலை); (இடத்தல் - பெயர்த்தல்);
ஆரிடர் உற்ற அவன் அழுது இசையால் அடிதொழக் கேட்டு மகிழ்ந்து - பெருந்துன்பம் அடைந்த அவன் அழுது இசைபாடித் திருவடியை வழிபாடு செய்வதைக் கேட்டு அவனுக்கு இரங்கி;
பேரினைத் தந்த பிஞ்ஞகன்-தன்னைப் - இராவணன் (அழுதவன்) என்ற பெயரைத் தந்தருளிய, தலைக்கோலம் உடையவனை; (பிஞ்ஞகன் - சிவன் திருநாமம் - தலைக்கோலம் உடையவன்);
பேய்க்கணப்படை உடையானை - பூதகணப்படை உடையவனை; (அப்பர் தேவாரம் - 6.63.8 - " பூதகணப் படையானை"); (சம்பந்தர் தேவாரம் - 2.6.2 - "பேய்க்கணஞ் சூழத் திரிதர்வர்");
வாரி ஒலிக்கும் வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - கடல் ஒலிக்கின்ற திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (வாரி - கடல்);
9)
ஆர்பரம் என்று முரணிய அயன்மால் .. அடிமுடி தேடியி ளைக்க
ஓர்வரை யற்ற ஒள்ளெரி ஆன .. ஒருவனை அடியவர்க் கரணாம்
போர்விடை யானைப் போழ்மதி யோடு .. புற்றர வம்புனை கின்ற
வார்சடை யானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.
ஆர் பரம் என்று முரணிய அயன் மால் அடிமுடி தேடி இளைக்க ஓர் வரை அற்ற ஒள்-எரி ஆன ஒருவனை - தம்மில் யார் உயர்ந்தவர் என்று மாறுபட்டு வாதிட்ட பிரமன் திருமால் இவர் இருவரும் அடிமுடியைத் தேடி வருந்துமாறு ஓர் எல்லையில்லாத ஒளி மிக்க ஜோதி ஆன ஒப்பற்றவனை; (முரணுதல் - மாறுபடுதல்); (வரை - எல்லை); (ஒருவன் - ஒப்பற்றவன்);
அடியவர்க்கு அரண் ஆம் போர்விடையானைப் - பக்தர்களுக்குக் காவல் ஆன, போர் செய்யவல்ல விடையை வாகனமாக உடையவனை;
போழ்மதியோடு புற்றரவம் புனைகின்ற வார்சடையானை - திங்களின் துண்டத்தையும் (= பிறையையும்) புற்றில் வாழும் இயல்புடைய பாம்பையும் அணிந்த நீள்சடையனை; (போழ் - துண்டம்); (வார்தல் - நீள்தல்);
வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?
10)
குறியறி யாது கிறிமொழி பேசிக் .. கும்பலைச் சேர்த்திட எண்ணும்
அறிவிலி வீணர் அவருரை நெறிகள் .. அல்லலிற் சேர்ப்பன விடுமின்
மறியமர் கையன் மலரடி வாழ்த்தில் .. வானிடை வாழ்வருள் வானை
மறிகடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.
குறி அறியாது கிறிமொழி பேசிக் கும்பலைச் சேர்த்திட எண்ணும் - குறியை அறியாமல் வஞ்சம் பேசிக் கூட்டம் சேர்க்க எண்ணுகின்ற; (குறி - இலக்கு; அடையாளம் (symbol)); (கிறி - பொய்; வஞ்சம்); (திருப்புகழ் - திருத்தணி - "கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்");
அறிவிலி வீணர் அவர் உரை நெறிகள் அல்லலில் சேர்ப்பன விடுமின் - அறிவிலிகளான அந்தப் பயனற்றவர்கள் சொல்லும் மார்க்கங்கள் துன்பத்தில் ஆழ்த்தும்; அவற்றை மதியாமல் நீங்குங்கள்;
மறி அமர் கையன் மலரடி வாழ்த்தில் வானிடை வாழ்வு அருள்வானை - கையில் மான்கன்றை ஏந்தியவனது மலர்த்திருவடியை வாழ்த்தினால் சிவலோக வாழ்வை அருள்பவனை; (மறி - மான்கன்று); (சம்பந்தர் தேவாரம் - 3.118.11 - "வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார்");
மறிகடல் சூழ்ந்த வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - அலைகள் மறிகின்ற கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா? (மறிதல் - கிளர்தல்);
11)
சூழ்வினை தீர்க்கும் திருப்பெயர் ஓது .. தூமனத் தொண்டருக் காக
ஆழ்கடல் மேற்கல் அரும்புணை ஆக்கி .. அருளிய அண்ணலை நம்பித்
தாழ்சிரத் தோடு தாள்தொழு வார்க்குத் .. தாயினும் நல்லனை இந்து
வாழ்சடை யானை வான்மியூர் உறையும் .. மருந்தினை மறக்கலும் ஆமே.
சூழ்வினை தீர்க்கும் திருப்பெயர் ஓது தூ-மனத் தொண்டருக்காக ஆழ்கடல்மேற் கல் அரும்-புணை ஆக்கி அருளிய அண்ணலை - சூழும் வினையைத் தீர்க்கின்ற திருநாமத்தை (நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தை) ஓதும் தூய மனத்தை உடைய தொண்டரான திருநாவுக்கரசருக்காக, அவர் உய்யும்படி ஆழம் மிக்க கடலில் (அவரை ஆழ்த்திக் கொல்லும் பொருட்டுச் சமணர்கள் கட்டிய) அந்தக் கல்லையே ஓர் அரிய தெப்பம் ஆக்கி அருளிய பெருமானை; (புணை - தெப்பம்);
நம்பித் தாழ்-சிரத்தோடு தாள் தொழுவார்க்குத் தாயினும் நல்லனை - விரும்பித், தலையைத் தாழ்த்தித், திருவடியை வணங்கும் பக்தர்களுக்குத் தாயைவிட நன்மை செய்பவனை; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);
இந்து வாழ் சடையானை - சந்திரன் அழியாமல் வாழ்கின்ற சடையை உடையவனை; (இந்து - சந்திரன்);
வான்மியூர் உறையும் மருந்தினை மறக்கலும் ஆமே - திருவான்மியூரில் உறைகின்ற அமுதம் போன்ற மருந்தீசனை மறக்க இயலுமா?
வி. சுப்பிரமணியன்
-------------------
No comments:
Post a Comment