2014-12-09
P.260 - ஒற்றியூர்
-----------------------
(அறுசீர் விருத்தம் - மா விளம் மா விளம் மா விளம் - வாய்பாடு)
* பாடல்தோறும் ஈற்றடியில் முதல் இருசீர்களிடையே எதுகைத்தொடையும் அமைந்த பாடல்கள்;
1)
கற்றைச் சடையனைக் கரியின் உரியனைக் காமன் படவிழி
நெற்றிக் கண்ணனை நெருப்பு வண்ணனை நேரில் அண்ணலைக்
குற்றம் இல்லியைக் கோட்டை மூன்றெரி குன்ற வில்லியை
ஒற்றைப் பெற்றனை ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே.
கற்றைச் சடையனைக் - கற்றைச்சடையை உடையவனை;
கரியின் உரியனைக் - யானைத்தோலைப் போர்த்தவனை; (கரி - யானை); (உரி - தோல்);
காமன் பட விழி- நெற்றிக் கண்ணனை - மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணால் நோக்கியவனை;
நெருப்பு வண்ணனை - தீப் போன்ற செம்மேனியனை;
நேர் இல் அண்ணலைக் - ஒப்பற்ற தலைவனை; (நேர் - ஒப்பு);
குற்றம் இல்லியைக் - குற்றமற்றவனை;
கோட்டை மூன்று எரி- குன்ற-வில்லியை - முப்புரங்களை எரித்த மேருமலை-வில்லை ஏந்தியவனை;
ஒற்றைப் பெற்றனை - ஒப்பற்ற இடபத்தை ஊர்தியாக உடையவனை; (ஒற்றை - ஒப்பற்ற); (பெற்று - பெற்றம் - இடபம்); (சம்பந்தர் தேவாரம் - 3.30.6 - “கொடியின்மிசைப் பெற்றர் கோயில் அரதைப் பெரும்பாழியே”);
ஒற்றிப் புற்றனை - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்டானை; (* புற்றிடங்கொண்டார் - திருவொற்றியூர் ஈசன் திருநாமங்களுள் ஒன்று); (சம்பந்தர் தேவாரம் - 2.11.4 - "புற்றானைப் புற்றரவம் அரையின்மிசைச் சுற்றானைத்" - புற்றான் - புற்றானவன்; வன்மீகநாதன், புற்றிடங்கொண்டான் என்பன திருவாரூர்ப் பெருமான் திருநாமங்கள்);
பற்றி உய்ம்மினே - அவன் திருவடியைப் பற்றி உய்யுங்கள்; (ஏ - ஈற்றசை);
2)
பண்டை வல்வினை பற்ற றுத்திட வல்ல நல்லனை
முண்ட நீற்றனை முடியில் ஆற்றனை மதியின் கீற்றனை
அண்டர் அண்டனை அன்பர்க் கன்பனை அஞ்சு நஞ்சினை
உண்ட கண்டனை ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே.
பண்டை வல்வினை பற்று அறுத்திட வல்ல நல்லனை - நம் பழவினையை அடியோடு அழித்தருளும் நல்லவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.120.1 - "பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத் துணிந்தவன்");
முண்ட நீற்றனை - நெற்றியில் திருநீற்றைப் பூசியவனை; (முண்டம் - நெற்றி);
முடியில் ஆற்றனை - கங்காதரனை;
மதியின் கீற்றனை - பிறையைச் சூடியவனை;
அண்டர் அண்டனை - தேவதேவனை;
அன்பர்க்கு அன்பனை - அடியார்க்கு அன்பு உடையவனை;
அஞ்சு நஞ்சினை உண்ட கண்டனை - தேவர்கள் அஞ்சிய ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை;
ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்டானைச் பற்றி உய்யுங்கள்;
3)
புரையில் புகழனைப் பூதப் படையனைப் புரிசெஞ் சடையனை
வரையில் ஒருவனை வாடல் வெண்டலை ஏந்து கையனை
அரையில் அரவனை ஆல நீழலில் அரிய நான்மறை
உரைசெய் குரவனை ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே.
புரை இல் புகழனை - குற்றமற்ற புகழை உடையவனை; (புரை - குற்றம்);
புரி-செஞ்சடையனை - சுருண்ட சிவந்த சடையை உடையவனை; (புரிதல் - சுருள்தல்);
வரை இல் ஒருவனை - அளவில்லாதவனை; (வரை - அளவு);
வாடல் வெண்தலை ஏந்து கையனை - தசை வற்றிய வெள்ளை மண்டையோட்டைக் கையில் ஏந்தியவனை;
அரையில் அரவனை - அரையில் பாம்பைக் கட்டியவனை;
ஆலநீழலில் அரிய நான்மறை உரைசெய் குரவனை - கல்லாலமரத்தின்கீழ் அரிய நால்வேதங்களை உபதேசித்த குருவை; (குரவன் - குரு);
ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்டானைச் பற்றி உய்யுங்கள்;
4)
படையை விரும்பிய பார்த்தற் கருளிய பரம வேடனை
விடையைக் காட்டிய வெற்றிக் கொடியனை வேத கீதனை
உடைவெண் தலையினில் ஊண்வி ரும்பியை ஒலிசெய் புனலினை
உடைய சடையனை ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே.
படையை விரும்பிய பார்த்தற்கு அருளிய பரம-வேடனை - பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகத் தவம் செய்த அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை வேடனாக வந்து அருளியவனை; (பரமம் - மேன்மை; சிறப்பு);
விடையைக் காட்டிய வெற்றிக் கொடியனை - வெற்றியுடைய இடபக்கொடி உடையவனை;
உடை-வெண்தலையினில் ஊண் விரும்பியை - உடைந்த வெண்மையான மண்டையோட்டில் பிச்சையை விரும்பியவனை; (ஊண் - உணவு); (விரும்பி - விரும்பியவன்);
ஒலிசெய் புனலினை உடைய சடையனை - ஒலிக்கின்ற கங்கையைச் சடையில் அணிந்தவனை;
ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்டானைச் பற்றி உய்யுங்கள்;
5)
பிச்சை ஏற்றுழல் பெருமை யாயெனப் பேசும் அன்பரின்
அச்சம் நீக்கியை ஆதி மூர்த்தியை அந்தம் இல்லியை
நச்ச ராநதி நாறு கூவிளம் நளிரும் மாமதி
உச்சி நச்சிய ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே.
பிச்சை ஏற்று உழல் பெருமையாய் எனப் பேசும் அன்பரின் அச்சம் நீக்கியை - "பிச்சை ஏற்றுத் திரிகின்ற பெருமையை உடையவனே" என்று புகழும் பக்தர்களின் பயத்தைத் தீர்ப்பவனை; (அப்பர் தேவாரம் - 6.41.7 - "புகழும் பெருமையாய் நீயே யென்றும் பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும் இகழுந் தலையேந்தி நீயே யென்றும்");
ஆதி மூர்த்தியை, அந்தம் இல்லியை - எல்லாவற்றிற்கும் முற்பட்டவனை, முடிவில்லாதவனை;
நச்சு-அரா, நதி, நாறு கூவிளம், நளிரும் மா-மதி உச்சி நச்சிய - விஷப்பாம்பு, கங்கை, மணம் வீசும் வில்வம், குளிர்ந்த அழகிய திங்கள் இவற்றை முடிமேல் விரும்பி அணிந்த; (நளிர்தல் - குளிர்தல்); (நச்சுதல் - விரும்புதல்); (அப்பர் தேவாரம் - 6.54.9 - "நளிர்வெண் திங்கட் கண்ணியனை");
ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்டானைச் பற்றி உய்யுங்கள்;
6)
துள்ளு மான்மறி சூலம் ஒண்மழு ஏந்து தோன்றலைத்
தெள்ளு கங்கையைச் செக்கர் வேணியிற் கரந்த சீருடைக்
கள்ளம் இல்லியைக் கருதிக் கைதொழும் அன்பர்க் கென்றுமே
உள்ள வள்ளலை ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே.
துள்ளு மான்மறி, சூலம், ஒண்மழு ஏந்து தோன்றலைத் - தாவும் மான்கன்று, சூலம், ஒளியுடைய மழுவாயுதம் இவற்றையெல்லாம் கையில் ஏந்திய தலைவனை; (தோன்றல் - தலைவன்);
தெள்ளு கங்கையைச் செக்கர் வேணியில் கரந்த சீருடைக் கள்ளம் இல்லியைக் - தெளிந்த கங்கையைச் சிவந்த சடையில் ஒளித்த பெருமையை உடைய, வஞ்சம் இல்லாதவனை; (செக்கர் - சிவப்பு); (வேணி - சடை); (கரத்தல் - மறைத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.18.4 - "ஒலிநீர் சடையிற் கரந்தாய்");
கருதிக் கைதொழும் அன்பர்க்கு என்றுமே உள்ள வள்ளலை - விரும்பி வணங்கும் அடியவர்களுக்கு (இல்லை என்னாது) என்றுமே அருள்புரியும் வள்ளலான சிவபெருமானை;
ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்டானைச் பற்றி உய்யுங்கள்;
7)
போதி னாலடி போற்று வார்வினை போக்கி நன்மைசெய்
ஆதி மூர்த்தியை ஆனை ஈருரி போர்த்த அண்ணலைப்
பூதி பூசிய பூத நாதனைப் பொறிகொள் வண்டமர்
ஓதி பாதியை ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே.
போதினால் அடி போற்றுவார் வினை போக்கி நன்மைசெய் ஆதி மூர்த்தியை - பூக்களைத் தூவித் திருவடியை வழிபடும் பக்தர்களது வினையைத் தீர்த்து அருளும் ஆதிமூர்த்தியை; (போது - மலர்);
ஆனை ஈருரி போர்த்த அண்ணலைப் - யானையின் உரித்த தோலைப் போர்த்த தலைவனை; (ஈருரி - 1. உரித்த தோல்; 2. ஈரத்தோல்);
பூதி பூசிய பூதநாதனைப் - திருநீற்றைப் பூசிய, பூதகணத் தலைவனை; (பூதி - திருநீறு);
பொறிகொள் வண்டு அமர் ஓதி பாதியை - வரியுடைய வண்டுகள் விரும்பும் கூந்தலை உடைய உமையை ஒரு பாதியாக உடையவனை; (பொறி - வரி; புள்ளி); (அமர்தல் - விரும்புதல்); (ஓதி - கூந்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.100.10 - "பொறிகொள்வண்டு பண்செயும்"); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின");
ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்டானைச் பற்றி உய்யுங்கள்;
8)
மறைசொல் நாவனின் மலையெ டுத்தவன் வாட ஊன்றியை
அறவ னேஅருள் ஐய னேஎன அவற்கி ரங்கிய
கறைமி டற்றனைக் கருதும் அன்பரின் நெஞ்சக் கோயிலில்
உறையும் இறைவனை ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே.
மறைசொல் நாவனின் மலை எடுத்தவன் வாட ஊன்றியை - வேதங்களை ஓதும் ஈசனது கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் வாடுமாறு திருப்பாத விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவனை;
"அறவனே; அருள் ஐயனே" என, அவற்கு இரங்கிய கறைமிடற்றனைக் - பிறகு இராவணன் "நீதிவடிவினனே! தலைவனே! அருளாய்!" என்று அழுது தொழக் கண்டு, அவனுக்கு இரங்கியருளிய நீலகண்டனை; (அவற்கு - அவன்+கு - அவனுக்கு); (மிடறு - கண்டம்);
கருதும் அன்பரின் நெஞ்சக்-கோயிலில் உறையும் இறைவனை - விரும்பித் தியானிக்கும் பக்தர்களது நெஞ்சம் என்ற கோயில் உறைகின்ற கடவுளை;
ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்டானைச் பற்றி உய்யுங்கள்;
9)
மழையின் வண்ணனும் மலரின் மேலனும் வாடி வாழ்த்திய
அழலின் வண்ணனை அரையில் அரவனை அரிவை பங்கனைச்
சுழலும் நதியொடு துண்டப் பிறையணி தூய னைப்பலிக்(கு)
உழலும் அழகனை ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே.
மழையின் வண்ணனும் மலரின் மேலனும் வாடி வாழ்த்திய அழலின் வண்ணனை - மேகம் போன்ற கரிய நிறமுடைய திருமாலும் தாமரையில் உறையும் பிரமனும் (அடிமுடி தேடிக் காணாராய்) வாடி வணங்கிய ஜோதிவடிவினனை; (மழை - மேகம்);
அரையில் அரவனை - அரையில் பாம்பைக் கட்டியவனை;
அரிவை பங்கனைச் - உமைபங்கனை;
சுழலும் நதியொடு துண்டப்-பிறை அணி தூயனைப் - சுழல்கின்ற கங்கையையும் பிறைத்துண்டத்தையும் அணிந்த தூயனை; (திருவாசகம் - திருவம்மானை - 8.8.9 - "துண்டப் பிறையான்");
பலிக்கு உழலும் அழகனை - பிச்சை ஏற்கத் திரியும் சுந்தரனை;
ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்டானைச் பற்றி உய்யுங்கள்;
10)
செப்பு வார்த்தையிற் சிறிதும் மெய்யிலர் சிதடர் சொல்நெறி
எய்ப்பை யேதரும் இம்மை அம்மையில் எட்டி வம்மினீர்
உப்பில் அப்புடன் உரகம் குரவிவை உற்ற சடையனை
ஒப்பில் அப்பனை ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே.
செப்பு வார்த்தையில் சிறிதும் மெய் இலர் - சொல்கின்ற வார்த்தைகளில் சற்றும் உண்மை இல்லாதவர்கள்;
சிதடர் - அறிவிலிகள்;
சொல்-நெறி எய்ப்பையே தரும் இம்மை அம்மையில் - அவர்கள் சொல்லும் மார்க்கம் இம்மை மறுமை இரண்டிலும் துன்பம் தரும்; (எய்ப்பு - இளைப்பு; துன்பம்); (அம்மை - இப்பிறப்பை அடுத்து வருவது); (சம்பந்தர் தேவாரம் - 3.22.6 - "இம்மை வினை அடர்த்தெய்தும் போழ்தினும் அம்மையினும் துணை அஞ்செழுத்துமே");
எட்டி வம்மினீர் - எட்டி வம்மின் நீர் - நீங்கள் நீங்கி வாருங்கள்; (எட்டுதல் - விலகுதல்);
உப்பு இல் அப்புடன் உரகம் குரவு இவை உற்ற சடையனை - இனிய நீருடைய கங்கைநதி, பாம்பு, குராமலர் இவையெல்லாம் திகழும் சடையை உடைய பெருமானை; (அப்பு - நீர்); (உரகம் - பாம்பு); (குரவு - குராமலர்);
ஒப்பு இல் அப்பனை - ஒப்பற்ற தந்தையை;
ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே - திருவொற்றியூரில் உறைகின்ற புற்றிடங்கொண்டானைச் பற்றி உய்யுங்கள்;
11)
வம்ப றாத்தமிழ் வாயில் ஏந்திய வார நெஞ்சினர்
தம்ப வத்தொடர் தனைய றுத்தருள் சங்க ரன்றனை
அம்ப லந்தனில் ஆடும் கூத்தனை அங்கை அனலனை
உம்பர் உம்பனை ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே.
வம்பு அறாத் தமிழ் வாயில் ஏந்திய வார-நெஞ்சினர்தம் பவத்தொடர்தனை அறுத்தருள் சங்கரன்-தனை - வாசனை குன்றாத தமிழ்ப்பாமாலைகளைத் தங்கள் வாயில் தாங்கிய, நெஞ்சில் அன்புடையவர்களது பிறவித்தொடரை அறுத்து அருளும் சங்கரனை; (வம்பு - வாசனை); (வாரம் - அன்பு); (பவம் - பிறவி);
அம்பலந்தனில் ஆடும் கூத்தனை - மன்றில் ஆடும் நடராஜனை;
அங்கை அனலனை - கையில் தீயை ஏந்தியவனை; (அனல் - நெருப்பு);
உம்பர் உம்பனை - மேலோர்க்கும் மேலானவனை; (உம்பர் - மேலிடம்; தேவர்);
ஒற்றிப் புற்றனைப் பற்றி உய்ம்மினே - திருவொற்றியூரில் உறையும் புற்றிடங்கொண்டநாதனை அடைந்து உய்யுங்கள்;
வி. சுப்பிரமணியன்
------- ---------
No comments:
Post a Comment