Saturday, June 8, 2019

04.62 - தோணிபுரம் (சீகாழி) - தெண்டிரை வாரியில்

04.62 - தோணிபுரம் (சீகாழி) - தெண்டிரை வாரியில்

2014-05-19

தோணிபுரம் (சீகாழி)

-----------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் விளம் விளம் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமார் அகிலொடு")

(சுந்தரர் தேவாரம் - 7.37.2 - "பறக்குமெங் கிள்ளைகாள்")


1)

தெண்டிரை வாரியில் பண்டெழு நஞ்சினை

உண்டமி டற்றினன் உமையொரு பங்கினன்

தண்டமிழ் மாலைகள் சாத்திவ ணங்கிடும்

தொண்டரைப் புரப்பவன் தோணிபு ரத்தனே.


தெண்-திரை வாரியில் பண்டு எழு நஞ்சினை உண்ட மிடற்றினன் - தெளிந்த அலைகளை உடைய கடலில் முற்காலத்தில் எழுந்த ஆலகால விடத்தை உண்ட நீலகண்டன்;

உமை ஒரு பங்கினன் - அர்த்தநாரீஸ்வரன்;

தண்-தமிழ் மாலைகள் சாத்தி வணங்கிடும் - குளிர்ந்த தமிழ்ப்-பாமாலைகளைச் சூட்டி வணங்குகின்ற; (சாத்துதல் - அணிதல்);

தொண்டரைப் புரப்பவன் தோணிபுரத்தனே - அடியவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (புரத்தல் - காத்தல்); (தோணிபுரம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);


2)

அழும்புக லியர்க்குயர் அடிசில ளித்தவன்

செழும்புது மலர்பல செஞ்சடை அணிந்தவன்

எழும்பொழு தஞ்செழுத் தியம்பிவ ணங்கிடும்

தொழும்பரைப் புரப்பவன் தோணிபு ரத்தனே.


அழும் புகலியர்க்கு உயர் அடிசில் அளித்தவன் - அழுத திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளித்தவன்; (புகலி - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று); (அடிசில் - உணவு); (சம்பந்தர் தேவாரம் - 3.24.2 -"போதையார் பொற்கிண்ணத்து அடிசில்");

செழும்-புதுமலர் பல செஞ்சடை அணிந்தவன் - அன்று பூத்த செழுமையான மலர்களைச் சிவந்த சடையில் சூடியவன்;

எழும்பொழுது அஞ்செழுத்து இயம்பி வணங்கிடும் - துயிலெழும்பொழுதே திருவைந்தெழுத்தைச் சொல்லி வழிபடுகின்ற;

தொழும்பரைப் புரப்பவன் தோணிபுரத்தனே - அடியவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (தொழும்பர் - அடியவர்);


3)

கொல்புலித் தோலினன் கோவிலன் சேமிசைச்

செல்பவன் தேன்மொழிச் சேயிழை பங்கினன்

தொல்பவ நோயறத் துணையெழுத் தஞ்சினைச்

சொல்பவர்ப் புரப்பவன் தோணிபு ரத்தனே.


கொல்புலித் தோலினன் - கொல்லும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;

கோவிலன் - தனக்குத் தலைவன் இல்லாதவன்; கோவிலில் இருப்பவன் என்றும் பொருள்கொள்ளலாம்; (கோவிலன் - 1. கோ இலன்; கோ - தலைவன்; 2. கோவில் - கோயில்);

சேமிசைச் செல்பவன் - எருதின்மேல் செல்பவன் (இடபவாகனன்); (சே - எருது); (சுந்தரர் தேவாரம் - 7.68.3 - "சேவின்மேல் வருஞ் செல்வனை");

தேன்மொழிச் சேயிழை பங்கினன் - இனிய மொழி பேசும் உமையை ஒரு பங்கில் உடையவன்; (சேயிழை - பெண்);

தொல்-பவநோய் அறத் துணை எழுத்து அஞ்சினைச் சொல்பவர்ப் புரப்பவன் தோணிபுரத்தனே - தொன்மையான பிறவிப்பிணி தீரும்படி துணையான திருவைந்தெழுத்தைச் சொல்பவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (சொல்பவர்ப் புரப்பவன் - "சொல்பவரைக் காப்பவன்" என்று பொருள்படும்; பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம்-வேற்றுமைத்-தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு);


4)

ஆழ்கடல் நஞ்சினை அருமணி ஆக்கினான்

தாழ்சடை யிற்புனல் தரித்ததன் அயலொரு

போழ்மதி யும்புனை புண்ணியன் கோயிலைச்

சூழ்பவர்ப் புரப்பவன் தோணிபு ரத்தனே.


ஆழ்கடல் நஞ்சினை அருமணி ஆக்கினான் - ஆழம் மிக்க கடலில் எழுந்த ஆலகால விடத்தைக் கண்டத்தில் அரிய நீலமணி ஆக்கியவன்;

தாழ்சடையில் புனல் தரித்து அதன் அயல் ஒரு போழ்-மதியும் புனை புண்ணியன் - தாழும் சடையில் கங்கையைத் தாங்கி அதன் அருகே பிறையையும் அணியும் புண்ணியமூர்த்தி; (போழ் - துண்டம்);

கோயிலைச் சூழ்பவர்ப் புரப்பவன் தோணிபுரத்தனே - திருக்கோயிலை வலம்செய்யும் அன்பர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (சூழ்பவர்ப் புரப்பவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலி மிகுந்தது);


5)

நதித்தலை அண்ணலை நண்ணிய நம்பிபால்

கொதித்தடை கூற்றினைக் குமைத்தவன் முன்னமே

உதித்தவன் நித்தலும் உள்குளிர்ந் தடியிணை

துதித்தவர்ப் புரப்பவன் தோணிபு ரத்தனே.


நதித்-தலை அண்ணலை நண்ணிய நம்பிபால் - கங்கையைத் தலையில் தாங்கிய பெருமானைச் சரணடைந்த மார்க்கண்டேயரிடம்; (நதித்தலை அண்ணல் - கங்காதரன்); (நம்பி - ஆணிற் சிறந்தவன்);

கொதித்து அடை கூற்றினைக் குமைத்தவன் - கோபித்து வந்தடைந்த காலனை உதைத்து அழித்தவன்; (குமைத்தல் - அழித்தல்);

முன்னமே உதித்தவன் - என்றும் இருப்பவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.55.9 - "முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி");

நித்தலும் உள் குளிர்ந்து அடியிணை துதித்தவர்ப் புரப்பவன் தோணிபுரத்தனே - தினமும் மனம் குளிர்ந்து இரு-திருவடிகளை வணங்குபவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (துதித்தவர்ப் புரப்பவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலி மிகுந்தது);


6)

வெல்விடை ஊர்தியன் வேலைநஞ் சுண்டவன்

கல்வியும் காவலும் அஞ்செழுத் தாமெனப்

பல்விதத் தொண்டுசெய் பத்தர்கள் இன்புறத்

தொல்வினை துடைப்பவன் தோணிபு ரத்தனே.


வெல்-விடை ஊர்தியன் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவன்;

வேலை-நஞ்சு உண்டவன் - கடலில் எழுந்த விடத்தை உண்டவன்; (வேலை - கடல்);

கல்வியும் காவலும் அஞ்செழுத்து ஆம் எனப் - கல்வி, காவல் எல்லாம் திருவைந்தெழுத்தே என்று; (அப்பர் தேவாரம் - 5.90.2 - "நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்");

பல்விதத் தொண்டுசெய் பத்தர்கள் இன்புறத் - பலவாறு தொண்டுசெய்யும் பக்தர்கள் இன்புறும்படி;

தொல்வினை துடைப்பவன் தோணிபுரத்தனே - அவர்களது பழவினையை அழித்துக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (துடைத்தல் - அழித்தல்);


7)

காமனைப் பொடிபடக் காய்ந்தமுக் கண்ணினன்

பூமலி தொடைகொடு போற்றிடும் அடியவர்

சேமம டைந்திடத் திருவருள் செய்பவன்

தூமதிச் சடையினன் தோணிபு ரத்தனே.


காமனைப் பொடிபடக் காய்ந்த முக்கண்ணினன் - மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் எரித்தவன்;

பூ மலி தொடைகொடு போற்றிடும் அடியவர் - பூக்கள் நிறைந்த மாலைகளால் வழிபடும் பக்தர்கள்;

சேமம் அடைந்திடத் திருவருள் செய்பவன் - நன்மை அடையும்படி அருள்பவன்; (சேமம் - க்ஷேமம்);

தூ-மதிச் சடையினன் - தூய திங்களைச் சடையில் அணிந்தவன்;

தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;


8)

அடல்மட அரக்கனின் ஐயிரு வாயழத்

தடவரை மேல்மலர்த் தாள்விரல் ஊன்றினான்

படர்சடை மேலிளம் பாம்பைய ணிந்தவன்

சுடர்மழுக் கரத்தினன் தோணிபு ரத்தனே.


அடல்-மட-அரக்கனின் ஐயிரு-வாய் அழத் - வலிமையும் அறியாமையும் உடைய இராவணனது பத்து வாய்களும் அழும்படி;

தட-வரைமேல் மலர்த்தாள்-விரல் ஊன்றினான் - பெரிய கயிலைமலைமேல் மலர் போன்ற திருப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றியவன்;

படர்-சடைமேல் இளம் பாம்பை அணிந்தவன் - படரும் சடையின்மேல் இளம்-பாம்பை அணிந்தவன்;

சுடர்-மழுக் கரத்தினன் - சுடர்கின்ற (ஒளிவீசுகின்ற) மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவன்;

தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;


9)

வேலையின் மேலவன் விரைமல ரானிவர்

மேலடி நேடிட வீங்கெரி ஆனவன்

காலனைக் காய்ந்தவன் கருமலை போற்கரித்

தோலையு ரித்தவன் தோணிபு ரத்தனே.


வேலையின்-மேலவன் விரை-மலரான் இவர் - பாற்கடல்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும் மணம் கமழும் தாமரைமேல் இருக்கும் பிரமனும்; (வேலை - கடல்); (விரை - வாசனை);

மேல் அடி நேடிட வீங்கு எரி ஆனவன் - முடியையும் அடியையும் தேடுமாறு ஓங்கிய ஜோதி ஆனவன்; (நேடுதல் - தேடுதல்); (வீங்குதல் - வளர்தல்); (எரி - ஜோதி);

காலனைக் காய்ந்தவன் - இயமனை உதைத்து அழித்தவன்;

கரு-மலை போல் கரித்-தோலை உரித்தவன் - கரிய மலை போன்ற யானையின் தோலை உரித்தவன்;

தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;


10)

நெற்றியில் நீறணி யாக்கலர் நெஞ்சினில்

குற்ற(ம்)ம லிந்தவர் கூறிடு சொல்விடும்

அற்றவர்க் கற்றவன் அழற்கணை ஒன்றினால்

சுற்றெயில் எரித்தவன் தோணிபு ரத்தனே.


நெற்றியில் நீறு அணியாக் கலர் - நெற்றியில் திருநீற்றைப் பூசாத கீழோர்; (கலர் - கீழோர்);

நெஞ்சினில் குற்றம் மலிந்தவர் - நெஞ்சில் குற்றங்கள் மிகுந்தவர்கள்;

கூறிடு சொல் விடும் - அவர்கள் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் மதிக்கவேண்டா; (கூறு இடு சொல் - மக்களைப் பிரிப்பதற்காகச் சொல்லும் வஞ்சக வார்த்தைகள்); (கூறிடுதல் - 1. சொல்லுதல்; 2. துண்டாக்குதல்);

அற்றவர்க்கு அற்றவன் - அன்பர்களுக்கு அன்பு உடையவன்; (அறுதல் - நட்புக்கொள்ளுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.120.2 - "அற்றவர்க்கு அற்ற சிவன்");

அழற்கணை ஒன்றினால் சுற்று-எயில் எரித்தவன் - எங்கும் சுற்றித் திரிந்த முப்புரங்களைத் தீயம்பு ஒன்றால் எரித்தவன்;

தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;


11)

சொன்மலி தொடைகொடு துணையடி போற்றிட

முன்வினை மாய்ப்பவன் முளைமதிச் சடையினன்

நன்மைகள் செய்பவன் நால்வருக் காலடித்

தொன்மறை விரித்தவன் தோணிபு ரத்தனே.


சொல் மலி தொடைகொடு - சொற்கள் நிறைந்த பாமாலைகளால்; (சொன்மலி - சொல் மலி);

துணையடி போற்றிட முன்வினை மாய்ப்பவன் - துணையாக உள்ள இரு-திருவடிகளைப் போற்றினால் பழவினையை அழிப்பவன்; (துணை - உதவி; காப்பு; இரண்டு);

முளை-மதிச் சடையினன் - பிறையைச் சடையில் அணிந்தவன்;

நன்மைகள் செய்பவன் - சங்கரன்;

நால்வருக்கு ஆல்-அடித் தொன்மறை விரித்தவன் - சனகாதியர்களுக்கு ஆலமரத்தின்கீழே பழமைமிக்க வேதங்களை உபதேசித்தவன்; (தொன்மறை - தொல் மறை);

தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.61 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - பத்தியால் ஒரு பித்தன்

04.61 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - பத்தியால் ஒரு பித்தன்

2014-05-03

கற்குடி

(திருச்சிராப்பள்ளி அருகுள்ள உய்யக்கொண்டான்மலை)

----------------------------------

(எழுசீர்ச் சந்தவிருத்தம் - தான தானன தான தானன தான தானன தானனா.

ஒரோவழி "தான" என்பது "தனன" என்று வரும்)

(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய்")

(சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "மற்றுப் பற்றெனக் கின்றி")


1)

பத்தி யாலொரு பித்தன் என்கினும் அத்தன் என்கினும் அன்பனாய்

முத்தி நல்கிடும் முக்கண் நாயகன் ஒப்பி லானொரு மூப்பிலான்

மத்த மாமலர் வன்னி வாண்மதி சூடி வானவர் வாழவே

கைத்த நஞ்சினை உண்ட அற்புதன் நல்ல கற்குடி வெற்பனே.


பத்தியால் ஒரு பித்தன் என்கினும் அத்தன் என்கினும் அன்பனாய் முத்தி நல்கிடும் முக்கண் நாயகன் - அடியவர்கள் அன்போடு பித்தன் என்றாலும் தந்தை என்றாலும் அன்புடையவன் ஆகி அவர்களுக்கு முக்தியைக் கொடுக்கும் முக்கட்பெருமான்; (பத்தி - பக்தி); (அத்தன் - தந்தை);

ஒப்பு இலான், ஒரு மூப்பு இலான் - ஈடில்லாதவன், என்றும் இளமையோடு இருப்பவன்;

மத்த மாமலர் வன்னி வாண்மதி சூடி - ஊமத்தம்பூவையும் வன்னி இலையையும் ஒளியுடைய திங்களையும் சூடியவன்; (வாண்மதி - வாள் மதி; வாள் - ஒளி);

வானவர் வாழவே கைத்த நஞ்சினை உண்ட அற்புதன் - தேவர்கள் உய்யும்-பொருட்டுக் கசப்பான ஆலகால விடத்தை உண்ட அற்புதன்; (கைத்தல் - கசத்தல்);

நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.70.3 - "நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே"); (அப்பர் தேவாரம் - 5.43.10 - "நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால் சொல்ல வல்லவர்");


2)

ஆல நஞ்சது கோல மஞ்சன நீலம் ஆக்கிய கண்டனே

பால நேத்திர சூல மேந்திய பண்ப னேபிறை சூடினாய்

ஓலம் என்றவர் அச்சம் அற்றுயிர் வாழ ஓச்சிய காலினால்

காலன் நெஞ்சிலு தைத்த அற்புதன் நல்ல கற்குடி வெற்பனே.


"ஆல நஞ்து கோல மஞ்சு அன நீலம் ஆக்கிய கண்டனே - "ஆலகால விடத்தை அழகிய மேகம் போலக் கண்டத்தில் கரிய மணி ஆக்கியவனே;

பால நேத்திர - நெற்றிக்கண்ணனே; (பாலம் - நெற்றி; भालम् - The forehead):

சூலம் ஏந்திய பண்பனே - சூலபாணியே;

பிறை சூடினாய் - சந்திரசேகரனே;

ஓலம்" என்றவர் அச்சம் அற்று உயிர் வாழ - ஓலம்" என்று உன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயர் பயம் நீங்கி என்றும் உயிரோடு வாழும்படி; (ஓலம் - அபயம் வேண்டும் குறிப்புமொழி);

ஓச்சிய காலினால் காலன் நெஞ்சில் உதைத்த அற்புதன் - உயர்த்திய திருவடியால் கூற்றுவனின் மார்பில் உதைத்த அற்புதன்; (ஓச்சுதல் - உயர்த்துதல்);

நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;


3)

வேளை வந்தது கொல்ல என்றொரு மேதி மேல்வரு காலனே

மாள மார்பினில் அன்று தைத்தவன் அங்கை மான்மழு வாளினான்

கோள ராவொடு கொன்றை சூடிய கூத்தன் ஆழ்கடல் நஞ்சினால்

காள கண்டமி லங்கும் அற்புதன் நல்ல கற்குடி வெற்பனே.


வேளை வந்தது கொல்ல என்று ஒரு மேதிமேல் வரு-காலனே மாள மார்பினில் அன்று உதைத்தவன் - உயிரைப் பறிக்கும் தருணம் வந்தது என்று ஓர் எருமையின்மேல் வந்த காலனே இறக்கும்படி அவன் மார்பில் முன்பு உதைத்த பெருமான்;

அங்கை மான் மழுவாளினான் - கையில் மான்கன்றையும் மழுவையும் ஏந்தியவன்;

கோள்-அராவொடு கொன்றை சூடிய கூத்தன் - கொடிய பாம்பையும் கொன்றைமலரையும் சூடிய நடராஜன்; (கோள் - கொடிய);

ஆழ்கடல் நஞ்சினால் காளகண்டம் இலங்கும் அற்புதன் - ஆழம் மிக்க கடலில் விளைந்த விடத்தால் கரிய கண்டம் விளங்குகின்ற அற்புதன்; (காளகண்டம் - நீலகண்டம்);

நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;


4)

நடலை ஒன்றில ராகி நாள்தொறும் நாவி னால்தமிழ் ஓதினால்

உடலை நல்கிடும் முன்னை வல்வினை ஓட்டி உம்பரும் நல்குவான்

சுடலை நீறணி சூலன் அஞ்சடை மீது தூமதி சூடினான்

கடலின் நஞ்சினை உண்ட அற்புதன் நல்ல கற்குடி வெற்பனே.


நடலை ஒன்று-இலர் ஆகி நாள்தொறும் நாவினால் தமிழ் ஓதினால் - சிறிதும் வஞ்சம் இல்லாமல் தினமும் தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபட்டால்; (நடலை - பொய்; வஞ்சம்); (தமிழ் - தேவாரம், திருவாசகம்);

உடலை நல்கிடும் முன்னை வல்வினை ஓட்டி உம்பரும் நல்குவான் - பிறவிகளைத் தருகின்ற பழவினையைத் தீர்த்து அவ்வடியார்களுக்கு (இப்பிறவி இன்பங்களும் பிறகு) சிவலோகமும் அருள்பவன்;

சுடலை நீறு அணி சூலன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய சூலபாணி; (சுடலை - சுடுகாடு);

அஞ்சடைமீது தூமதி சூடினான் - அழகிய சடையின்மேல் தூய திங்களை அணிந்தவன்; (அம் - அழகிய);

கடலின் நஞ்சினை உண்ட அற்புதன் - ஆலகால விடத்தை உண்ட அற்புதன்;

நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;


5)

பெரிய முப்புரம் எய்த வன்பிறை கொன்றை சூடிய பிஞ்ஞகன்

நரியை யும்பரி ஆக்கு வான்அரு நட்டம் நள்ளிருள் ஆடுவான்

அரியன் அன்பரின் நெஞ்சில் நின்றவன் அண்டு வானவர் உய்யவே

கரிய நஞ்சினை உண்ட செய்யவன் நல்ல கற்குடி வெற்பனே.


பெரிய முப்புரம் எய்தவன் - வலிய முப்புரங்களை ஓர் அம்பால் எய்து அழித்தவன்;

பிறை கொன்றை சூடிய பிஞ்ஞகன் - பிறையையும் கொன்றைமலரையும் சூடிய தலைக்கோலம் உடையவன்; (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);

நரியையும் பரி ஆக்குவான் - நரிகளைக் குதிரைகள் ஆக்குபவன்; (திருவிளையாடற் புராணத்திற் காண்க);

அரு-நட்டம் நள்ளிருள் ஆடுவான் - நள்ளிருளில் அரிய கூத்தினை ஆடுபவன்;

அரியன் - அரியவன்;

அன்பரின் நெஞ்சில் நின்றவன் - பக்தர்களது நெஞ்சில் நீங்காமல் உறைபவன்;

அண்டு வானவர் உய்யவே கரிய நஞ்சினை உண்ட செய்யவன் - சரணடைந்த தேவர்கள் உய்யும்படி கரிய ஆலகால விடத்தை உண்ட செம்மேனியன்; (அண்டுதல் - ஆசிரயித்தல்; சரணடைதல்); (செய்யவன் - செம்மேனி உடையவன்);

நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;


6)

நாம ணத்திட நால்வர் இன்தமிழ் ஓதி நாள்தொறும் அன்பினால்

தாம ரைப்பதம் ஏத்து வார்வினை சாய்த்து வான்தரு சங்கரன்

மாம றைப்பொருள் ஆயி னான்மலை மங்கை பங்குடை எம்பிரான்

காம னைப்பொடி செய்த கண்ணுதல் நல்ல கற்குடி வெற்பனே.


நா மணத்திட நால்வர் இன்-தமிழ் ஓதி நாள்தொறும் அன்பினால் - நால்வர் அருளிய தேவாரம் திருவாசகம் இவற்றைத் தினமும் நாவாரப் பாடிப் பக்தியோடு;

தாமரைப்பதம் ஏத்துவார் வினை சாய்த்து வான் தரு சங்கரன் - தாமரைமலர் போன்ற திருவடியை வழிபடும் பக்தர்களது வினையையெல்லாம் அழித்து அவர்களுக்கு வானுலக வாழ்வைத் தரும் சங்கரன்; (சாய்த்தல் - அழித்தல்);

மாமறைப்பொருள் ஆயினான் - நால்வேதங்கள் போற்றும் மெய்ப்பொருள்;

மலைமங்கை பங்குடை எம்பிரான் - உமையை ஒரு பங்கில் உடையவன் எம்பெருமான்;

காமனைப் பொடி செய்த கண்ணுதல் - மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்துச் சாம்பலாக்கியவன்;

நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;


7)

கூனி லாவொடு கோள ராவினை வேணி மேற்குடி ஏற்றினான்

வானி லோடிய வல்ல ரண்களை மாய்த்த மாமலை வில்லினான்

தேனி லாவிய செந்த மிழ்த்தொடை செப்பு வார்வினை தீர்ப்பவன்

கானி லாடலு கந்த கண்ணுதல் நல்ல கற்குடி வெற்பனே.


கூன்-நிலாவொடு கோள்-அராவினை வேணிமேல் குடி ஏற்றினான் - வளைந்த சந்திரனோடு கொடிய பாம்பையும் சடைமேல் வாழவைத்தவன்; (கூன் - வளைவு); (கோள் - கொடிய); (வேணி - சடை);

வானில் ஓடிய வல்லரண்களை மாய்த்த மாமலை வில்லினான் - எங்கும் பறந்து திரிந்து இடர்செய்த வலிய முப்புரங்களை மேருமலையை வில்லாக ஏந்தி ஓர் அம்பால் அழித்தவன்;

தேன் நிலாவிய செந்தமிழ்த்தொடை செப்புவார் வினை தீர்ப்பவன் - இனிமை மிக்க செந்தமிழ்ப் பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களது வினைகளைத் தீர்ப்பவன்;

கானில் ஆடல் உகந்த கண்ணுதல் - சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய நெற்றிக்கண்ணன்;

நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;


8)

இறையும் எண்ணுதல் இன்றி ஏசிவி லங்கல் வீசமு னைந்தவன்

இறைகள் பத்தொடு பத்தை ஓர்விரல் இட்ட டர்த்திசை கேட்டுநாள்

நிறைய ஈந்தவன் நீறு பூசிய நெற்றி மேலொரு நேத்திரன்

கறையும் ஓர்மணி ஆன அற்புதன் நல்ல கற்குடி வெற்பனே.


இறையும் எண்ணுதல் இன்றி ஏசி விலங்கல் வீச முனைந்தவன் - கொஞ்சங்கூட எண்ணிப் பாராமல் இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனது; (இறையும் - சிறிது; சற்றும்); (விலங்கல் - மலை);

இறைகள் பத்தொடு பத்தை ஓர் விரல் இட்டு அடர்த்து - இருபது கைகளையும் திருப்பாத விரல் ஒன்றை ஊன்றி நசுக்கி; (இறை - முன்கை; கை); (அடர்த்தல் - நசுக்குதல்);

இசை கேட்டு நாள் நிறைய ஈந்தவன் - அவன் பாடிய இசையைக் கேட்டு அவனுக்கு நீண்ட ஆயுளைத் தந்தவன்;

நீறு பூசிய நெற்றிமேல் ஒரு நேத்திரன் - திருநிற்றைப் பூசிய நெற்றிமேல் ஒரு கண்ணை உடையவன்;

கறையும் ஓர் மணி ஆன அற்புதன் - ஆலகால விடத்தின் கறையை ஒரு நீலமணிபோல் அணிந்த அற்புதன்; (மணி - நீலமணி; ஆபரணம்);

நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;


9)

ஓத வண்ணனும் வேத னுங்கழல் உச்சி நேடிட ஓங்கினான்

நாத னேயருள் நம்ப னேயென நாவி னால்துதி பாடினால்

வாதை யேதரு பண்டை வல்வினை யாவும் மாய்த்தருள் நோக்குவான்

காத லிக்கொரு பங்க ளித்தவன் நல்ல கற்குடி வெற்பனே.


ஓத-வண்ணனும் வேதனும் கழல் உச்சி நேடிட ஓங்கினான் - கடல் போல் கரிய நிறம் உடைய திருமாலும் பிரமனும் அடிமுடி தேடும்படி எல்லையின்றி ஓங்கியவன்; (நேடுதல் - தேடுதல்);

"நாதனே அருள் நம்பனே" என நாவினால் துதி பாடினால் - "தலைவனே; நம்பனே; அருளாய்" என்று வாயார வாழ்த்தி வணங்கினால்; (நம்பன் - விரும்பத்தக்கவன்; சிவன் திருநாமம்)

வாதையே தரு பண்டை வல்வினை யாவும் மாய்த்து அருள்-நோக்குவான் - துன்பமே செய்யும் பழைய வலிய வினைகள் அனைத்தையும் அழித்து அருட்கண்ணால் நோக்குபவன்; (வாதை - துன்பம்); (அப்பர் தேவாரம் - 5.47.7 - "ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள் நோக்குவான்");

காதலிக்கு ஒரு பங்கு அளித்தவன் - உமைக்குத் தன் திருமேனியில் ஒரு பாகத்தைக் கொடுத்தவன்; (காதலி - மனைவி);

நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;


10)

பொய்யை யேஉரை புல்லர் ஒண்திரு நீறு பூசிட அஞ்சுவார்

உய்ய வேண்டிலொ துக்கு வீர்அவர் ஓட்டை வார்த்தையை நாவினால்

ஐய னேஅதள் ஆடை யாயெனும் அன்பர் ஆரிடர் நீக்குவான்

கையி லோர்மழு வாள்த ரித்தவன் நல்ல கற்குடி வெற்பனே.


பொய்யையே உரை புல்லர் - எப்போதும் பொய்களையே பேசும் கீழோர்;

ஒண்-திருநீறு பூசிட அஞ்சுவார் - ஒளியுடைய திருநீற்றைப் பூச அஞ்சுபவர்கள்;

உய்ய வேண்டில் ஒதுக்குவீர் அவர் ஓட்டை-வார்த்தையை - அவர்களது பொருளற்ற வார்த்தைகளை, உய்யும் விருப்பம் உடையவர்களே, நீங்கள் நிராகரியுங்கள்;

நாவினால், "ஐயனே; அதள் ஆடையாய்;" எனும் அன்பர் ஆரிடர் நீக்குவான் - "நாதனே; தோலை ஆடையாக உடுத்தவனே" என்று வாயாரப் போற்றி வழிபடும் பக்தர்களது பெரும்-துன்பத்தைத் தீர்ப்பவன்; (அதள் - தோல்);

கையில் ஓர் மழுவாள் தரித்தவன் - கையில் மழுவாயுதத்தை ஏந்தியவன்;

நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;


11)

அங்கை யைக்குவி அன்பர் வாழ்வினில் இன்ப மேதரும் அங்கணன்

செங்கை யிற்றலை ஏந்தி உண்பலி தேர முன்றிலை நாடுவான்

மங்கை யைப்புடை வைத்து வான்மதி வன்னி கூவிளம் மாசுணம்

கங்கை யைச்சடை வைத்த சங்கரன் நல்ல கற்குடி வெற்பனே.


அங்கையைக் குவி அன்பர் வாழ்வினில் இன்பமே தரும் அங்கணன் - கைகூப்பி வணங்கும் பக்தர்களது வாழ்வில் இன்பமே பொங்க அருள்கின்றவன்; (அங்கணன் - அருள்நோக்கம் உடையவன் - சிவன்);

செங்கையில் தலை ஏந்தி உண்-பலி தேர முன்றிலை நாடுவான் - சிவந்த கையில் பிரமன் மண்டையோட்டை ஏந்திப் பிச்சை ஏற்க வீட்டு-வாயிலை அடைபவன்; (முன்றில் - வீட்டின் முன்னிடம்);

மங்கையைப் புடை வைத்து - உமையை ஒரு பக்கத்தில் கூறாகக் கொண்டு;

வான்மதி வன்னி கூவிளம் மாசுணம் கங்கையைச் சடை வைத்த சங்கரன் - அழகிய வெண்திங்கள், வன்னியிலை, வில்வம், பாம்பு, கங்கை இவற்றையெல்லாம் சடையில் அணிந்தவன், நன்மை செய்பவன்; (வான்மதி - 1.வான் மதி; 2. வால் மதி); (வான் - வானம்; அழகு); (வால் - வெண்மை); (மாசுணம் - பாம்பு);

நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Sunday, February 3, 2019

04.60 - முதுகுன்றம் (விருத்தாசலம்) - மத்தமும் திங்களும்

04.60 - முதுகுன்றம் (விருத்தாசலம்) - மத்தமும் திங்களும்

2014-04-28

முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)

----------------------------------

(அறுசீர் விருத்தம் - தானன தானன தானா - அரையடி அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - மண்ணுமோர் பாகம் உடையார்);

(அப்பர் தேவாரம் - 4.4.1 - பாடிளம் பூதத்தி னானும்)

* யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க.


1)

மத்தமும் திங்களும் சூடி .. மழவெள் விடைமிசை ஏறி

கத்தும் கடலுமிழ் நஞ்சைக் .. கரந்தருள் செய்த மிடற்றன்

புத்தம் புதிய மலரால் .. பொன்னடி போற்றிசெய் கின்ற

பத்தர் பவமறுத் தாளும் .. பழமலை நின்ற பரனே.


மத்தமும் திங்களும் சூடி - ஊமத்தமலரையும் திங்களையும் சூடியவன்;

மழவெள் விடைமிசை ஏறி - இளைய வெள்ளேற்றை வாகனமாக உடையவன்;

கத்தும் கடல் உமிழ் நஞ்சைக் கரந்தருள் செய்த மிடற்றன் - ஒலிக்கும் பாற்கடல் கக்கிய ஆலகாலத்தை மறைத்தருளிய கண்டம் உடையவன்; (கரத்தல் - ஒளித்தல்); (மிடறு - கண்டம்);

புத்தம் புதிய மலரால் பொன்னடி போற்றிசெய்கின்ற பத்தர் பவம் அறுத்து ஆளும் - புதுமலர்கள் தூவிப் பொற்பாதத்தை வழிபடும் பக்தர்களது பிறவிப்பிணியைத் தீர்த்து ஆள்கின்ற (/ஆள்வான்); (பவம் - பிறவி; துன்பம்); (ஆளும் = ஆள்கின்ற; ஆள்வான் - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);

பழமலை நின்ற பரனே - திருமுதுகுன்றத்தில் எழுந்தருளிய பரமன்; (பழமலை - முதுகுன்றம்);


2)

மேவலர் முப்புரம் வேவ .. மேருவில் ஏந்திய வீரன்

நாவல ஊரர் தமிழை .. நச்சியம் பொன்தரு நம்பன்

காவல னேயருள் என்று .. கடிமலர் தூவும் அடியார்

பாவம் அறுத்தும்பர் நல்கும் .. பழமலை நின்ற பரனே.


* 2-ஆம் அடி சிவபெருமான் திருமுதுகுன்றத்தில் சுந்தரருக்குப் பன்னீராயிரம் பொன் தந்ததைச் சுட்டியது. (சுந்தரர் தேவாரம் - 7.25.1 - "பொன்செய்த மேனியினீர் " என்று தொடங்கும் பதிகத்தின் வரலாற்றினைக் காண்க).

மேவலர் - பகைவர்;

நாவல ஊரர் - ("நாவல" என்றதில் வந்த அகரம் சாரியை) - நாவலூராளி - சுந்தரர்;

நச்சி - விரும்பி; (நச்சுதல் - விரும்புதல்);

அம்-பொன் தரு - சிறந்த பொன்னைத் தரும்;

நம்பன் - சிவன்;

கடிமலர் தூவும் அடியார் பாவம் அறுத்து உம்பர் நல்கும் - வாசமலர்களைத் தூவி வழிபடும் பக்தர்களது பாவங்களைத் தீர்த்து வானுலகம் அளிப்பான்; (உம்பர் - வானுலகம்);


3)

சடையினில் தண்புனல் தாங்கி .. சாம்பலை மெய்யினில் பூசி

நடையில் பிடியை நிகர்த்த .. நாரியைப் பாகம் நயந்தான்

விடையின் மிசைவரும் ஐயன் .. வேட்டுவக் கோலத்தில் சென்று

படையினைப் பார்த்தற் கருளும் .. பழமலை நின்ற பரனே.


தாங்கி, பூசி - தாங்கியவன், பூசியவன்;

பிடி - பெண்யானை;

வேட்டுவக் கோலத்திற் சென்று - வேடன் வடிவத்தில் போய்;

படை - ஆயுதம் - இங்கே பாசுபதாஸ்திரம்;

பார்த்தற்கு - பார்த்தன்+கு = அருச்சுனனுக்கு;


4)

கானையம் பெய்ம்மதன் ஆகம் .. கண்ணுத லாற்பொடி செய்தான்

மானை ஒருகரம் ஏந்தி .. மழுவொடு சூலமும் தாங்கி

ஆனை உரிவையைப் போர்த்த .. அழகன் அரிவையொர் பங்கன்

பானெய் தயிருகந் தாடி .. பழமலை நின்ற பரனே.


பதம் பிரித்து:

கான்--அம்பு எய்ம்-மதன் ஆகம் கண்ணுதலால் பொடி-செய்தான்;

மானை ஒரு கரம் ஏந்தி; மழுவொடு சூலமும் தாங்கி;

ஆனை-உரிவையைப் போர்த்த அழகன்; அரிவை ஒர் பங்கன்;

பால் நெய் தயிர் உகந்து ஆடி; பழமலை நின்ற பரனே.


கான்--அம்பு எய்ம்-மதன் ஆகம் கண்ணுதலால் பொடி செய்தான் - வாசனையுடைய ஐந்து கணைகளை ஏவும் காமன் உடலை நெற்றிக்கண்ணால் நோக்கிச் சாம்பலாக்கியவன்; (கான் - வாசனை); (எய்தல் - செலுத்துதல்; எய்+மதன் - "எய்ம்மதன்" என்று "ம்" மிக்குப் புணரும்);

மானை ஒரு கரம் ஏந்தி - மானை ஒரு கையில் ஏந்தியவன்;

மழுவொடு சூலமும் தாங்கி - மழுவையும் சூலத்தையும் ஏந்தியவன்;

ஆனை-உரிவையைப் போர்த்த அழகன் - யானைத்தோலைப் போர்த்தவன்; (உரிவை - தோல்);

அரிவை ஒர் பங்கன் - உமைபங்கன்; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

பால் நெய் தயிர் உகந்து ஆடி - பால் நெய் தயிர் அபிஷேகப் பிரியன்;


5)

எண்டிசை எங்கும் பரவி .. எரித்த கடல்விடம் தன்னை

உண்டிருள் கண்டத் தொருவன் .. ஒண்மழு வாளினன் தாளை

மண்டிய அன்பொடு வாழ்த்து .. மார்க்கண்டர் இன்னுயிர் காத்துப்

பண்டடற் கூற்றை உதைத்தான் .. பழமலை நின்ற பரனே.


எண்டிசை - எண் திசை;

இருள் கண்டத்து ஒருவன் - கறுத்த கண்டத்தை உடைய ஒப்பற்றவன்;

ஒண்மழு வாளினன் தாளை - ஒளியுடைய மழுவை ஏந்தியவனது பாதத்தை;

மண்டிய அன்பொடு வாழ்த்து மார்க்கண்டர் இன்-உயிர் காத்து - பெருகிய அன்பினால் வாழ்த்திய மார்க்கண்டேயரது இனிய உயிரைக் காத்து அருளி;

பண்டு அடற்கூற்றை உதைத்தான் - முன்பு வலிமை பொருந்திய கூற்றுவனை உதைத்தவன்;


6)

செந்தழல் போல்திரு மேனிச் .. செல்வனைச் சிந்தையில் வைத்து

வெந்தவெண் ணீற்றினைப் பூசி .. வெறிகமழ் மாலைகள் பாடி

கந்த மலர்களைத் தூவிக் .. கழலிணை கைதொழு வார்தம்

பந்தம் அறுத்தருள் செய்யும் .. பழமலை நின்ற பரனே.


வெந்த வெண்ணீற்றினைப் பூசி - நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து; (சம்பந்தர் தேவாரம் - 1.107.1 - "வெந்தவெண் ணீறணிந்து");

வெறி கமழ் மாலைகள் பாடி - மணம் கமழும் (சொல்மலர்களால் ஆன) பாமாலைகளைப் பாடி; (வெறி - வாசனை);

கந்த மலர் - வாசமலர்;


7)

ஆரிடர் தீர்ந்திட வேண்டி .. அனுதினம் தாள்தொழு வார்கள்

கோரிடும் யாவையும் நல்கும் .. கொள்கையன் வெண்டலை ஏந்தி

ஊரிடும் உண்பலிக் காக .. உழலும் ஒருவன் இருளில்

பாரிடம் சூழ நடிக்கும் .. பழமலை நின்ற பரனே.


ஆர் இடர் - அரும் துன்பம்;

யாவையும் - யாவும் - எல்லாம்;

கொள்கை - இயல்பு; (சம்பந்தர் தேவாரம் - 3.81.6 - "அடிபணிந்தவர்கள் மேலைக் குற்றமது ஒழித்தருளு கொள்கையினன்");

வெண்டலை - வெண்-தலை - பிரமன் மண்டையோடு;

ஏந்தி - கையில் ஏந்தியவன்; கையில் ஏந்தியபடி;

ஊர் இடும் உண்பலிக்காக உழலும் ஒருவன் - ஊரார் இடுகின்ற பிச்சைக்காகத் திரிகின்ற ஒப்பற்றவன்; (உண்பலி - பிச்சை); (ஒருவன் - ஒப்பற்றவன்);

ருளில் பாரிடம் சூழ நடிக்கும் - நள்ளிருளில் பூதங்கள் சூழ ஆடுபவன்; (பாரிடம் - பூதம்);


8)

மாலத னால்மலை பேர்த்த .. வல்லரக் கன்தனை அன்று

காலதன் ஓர்விரல் இட்டுக் .. கன்றிட வைத்திசை கேட்டான்

சேலன கண்ணி மணாளன் .. செய்யவன் ஒண்மழு வாளன்

பாலன நீறணி மார்பன் .. பழமலை நின்ற பரனே.


மால் - அறியாமை; மயக்கம்;

கன்றுதல் - வருந்துதல்; நோதல்; வாடுதல்;

சேல் அன கண்ணி மணாளன் - சேல்மீன் போன்ற கண்ணுடைய உமைக்குக் கணவன்;

செய்யவன் - செம்மேனியன்; (செய் - சிவப்பு);

ஒண் மழுவாளன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்;

பால் அன நீறு அணி மார்பன் - பால் போன்ற திருநீற்றை அணியும் மார்பை உடையவன்;


9)

முன்னயன் மாலிவர் நேட .. முடிவில் சுடருருக் கொண்டான்

வன்னியும் மத்தமும் கீற்று .. மதியும் அரவும் திகழும்

சென்னியன் தோடொர் செவியன் .. திருப்புகழ் தன்னைத் தினமும்

பன்னிடும் அன்பர் அகத்தன் .. பழமலை நின்ற பரனே.


அயன் மால் இவர் நேட முடிவு இல் சுடர் உருக் கொண்டான் - பிரமனும் திருமாலும் தேடும்படி எல்லையில்லாத ஜோதிவடிவானவன்; ( நேடுதல் - தேடுதல்);

வன்னி - வன்னி இலை;

மத்தம் - ஊமத்த மலர்;

தோடு ஒர் செவியன் - ஒரு காதில் தோடு அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;

திருப்புகழ் தன்னை - ஈசனது புகழை;

பன்னுதல் - பாடுதல்;


10)

வேம்பை இனிய கரும்பு .. விரைந்துவந் துண்ணுமின் என்னும்

தீம்பர்தம் சொல்மதி யேன்மின் .. தினந்தொறும் அஞ்செழுத் தோதி

ஓம்பும் அடியவர்க் கன்பன் .. உறுதுயர் தீர்க்கும் துணைவன்

பாம்பும் மதியும் புனைந்து .. பழமலை நின்ற பரனே.


வேம்பை "இனிய கரும்பு விரைந்துவந்து உண்ணுமின்" என்னும் - வேப்பங்காயை "இனிக்கும் கரும்பு இது; சீக்கிரம் வந்து உண்ணுங்கள்" என்று சொல்கின்ற; (வேம்பு - வேப்பங்காய்); (உண்ணுமின் - உண்ணுங்கள்);

தீம்பர்தம் சொல் மதியேன்மின் - துஷ்டர்களது பேச்சை மதிக்கவேண்டா; (தீம்பர் - துஷ்டர்கள்; கீழோர்); (மதியேன்மின் - நீங்கள் மதிக்க வேண்டா);

தினந்தொறும் அஞ்செழுத்து ஓதி ஓம்பும் அடியவர்க்கு அன்பன் - தினமும் நமச்சிவாய மந்திரத்தை ஓதி வணங்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்;

உறுதுயர் தீர்க்கும் துணைவன் - அவர்களது துன்பங்களையெல்லாம் தீர்த்து அருளும் துணைவன்;

பாம்பும் மதியும் புனைந்து பழமலை நின்ற பரனே - பாம்பையும் சந்திரனையும் முடிமேல் அணிந்து திருமுதுகுன்றத்தில் நீங்காமல் உறைகின்ற பரமன்;


11)

அணியென வெண்திரு நீறும் .. அக்கும் புனைந்தர னுக்கே

பணிசெயும் பண்புடை யார்தம் .. பண்டை வினைகளைத் தீர்ப்பான்

மணியணி கண்டன் மதியம் .. மணங்கமழ் கூவிளம் கொன்றை

பணிமணி நீரணி சென்னிப் .. பழமலை நின்ற பரனே.


அணி என வெண்-திருநீறும் அக்கும் புனைந்து - வெண்மையான திருநீற்றையும் ருத்திராக்ஷத்தையுமே (ஆபரணம் போல) அணிந்து; (அக்கு - உருத்திராக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 3.49.3 - "அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்");

அரனுக்கே பணிசெயும் பண்பு உடையார்தம் பண்டை வினைகளைத் தீர்ப்பான் - சிவனுக்குத் தொண்டு செய்யும் பக்தர்களது பழவினையைத் தீர்ப்பவன்;

மணி அணி கண்டன் - நீலகண்டன்;

மதியம், மணம் கமழ் கூவிளம், கொன்றை, பணி, மணி-நீர், அணி சென்னிப் - ஊமத்தமலர், மணம் வீசும் வில்வம், கொன்றைமலர், நாகம், கங்கை இவற்றையெல்லாம் திருமுடியில் அணிந்த; (கூவிளம் - வில்வம்); (பணி - நாகப்பாம்பு); (மணி நீர் - தெளிந்த நீர் - கங்கை);

பழமலை நின்ற பரனே - திருமுதுகுன்றத்தில் நீங்காமல் உறைகின்ற பரமன்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

அறுசீர் விருத்தம் - தானன தானன தானா (= "x x மா") என்ற அரையடி அமைப்பு.

அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.

அரையடியில் சீர்களிடையே வெண்டளை பயிலும்.

அடிகளில் 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளைக் கட்டுப்பாடு இல்லை.

அரையடிகள்தோறும் ஈற்றுச்சீர் மாச்சீர். (அதாவது, 3-ஆம், 6-ஆம் சீர்கள் மாச்சீர் - தேமா / புளிமா அமைப்பு).

x = மா / விளம் / மாங்காய். (அதாவது: தானன (x) என்ற சீர்கள் தனதன, தான, தனன, என்றெல்லாம் வரலாம். ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரலாம்).

தான என்ற சீர் தனன என்றும் வரலாம்.


உதாரணங்கள்:

சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாகம் உடையார் மாலுமோர் பாகம் உடையார்".

அப்பர் தேவாரம் - 4.4.1 - "பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்".

சுந்தரர் தேவாரம் - 7.73.1 - "கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம்". இந்தப் பதிகத்தில் முதல் பத்துப் பாடல்களில் 4-ஆம் அடிகளில் மட்டும் அரையடிகளிடையே "அவர்" என்ற தனிச்சொல்லும் வந்துள்ளது.


வி. சுப்பிரமணியன்

----------- --------------