Saturday, June 8, 2019

04.62 - தோணிபுரம் (சீகாழி) - தெண்டிரை வாரியில்

04.62 - தோணிபுரம் (சீகாழி) - தெண்டிரை வாரியில்

2014-05-19

தோணிபுரம் (சீகாழி)

-----------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் விளம் விளம் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமார் அகிலொடு")

(சுந்தரர் தேவாரம் - 7.37.2 - "பறக்குமெங் கிள்ளைகாள்")


1)

தெண்டிரை வாரியில் பண்டெழு நஞ்சினை

உண்டமி டற்றினன் உமையொரு பங்கினன்

தண்டமிழ் மாலைகள் சாத்திவ ணங்கிடும்

தொண்டரைப் புரப்பவன் தோணிபு ரத்தனே.


தெண்-திரை வாரியில் பண்டு எழு நஞ்சினை உண்ட மிடற்றினன் - தெளிந்த அலைகளை உடைய கடலில் முற்காலத்தில் எழுந்த ஆலகால விடத்தை உண்ட நீலகண்டன்;

உமை ஒரு பங்கினன் - அர்த்தநாரீஸ்வரன்;

தண்-தமிழ் மாலைகள் சாத்தி வணங்கிடும் - குளிர்ந்த தமிழ்ப்-பாமாலைகளைச் சூட்டி வணங்குகின்ற; (சாத்துதல் - அணிதல்);

தொண்டரைப் புரப்பவன் தோணிபுரத்தனே - அடியவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (புரத்தல் - காத்தல்); (தோணிபுரம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);


2)

அழும்புக லியர்க்குயர் அடிசில ளித்தவன்

செழும்புது மலர்பல செஞ்சடை அணிந்தவன்

எழும்பொழு தஞ்செழுத் தியம்பிவ ணங்கிடும்

தொழும்பரைப் புரப்பவன் தோணிபு ரத்தனே.


அழும் புகலியர்க்கு உயர் அடிசில் அளித்தவன் - அழுத திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளித்தவன்; (புகலி - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று); (அடிசில் - உணவு); (சம்பந்தர் தேவாரம் - 3.24.2 -"போதையார் பொற்கிண்ணத்து அடிசில்");

செழும்-புதுமலர் பல செஞ்சடை அணிந்தவன் - அன்று பூத்த செழுமையான மலர்களைச் சிவந்த சடையில் சூடியவன்;

எழும்பொழுது அஞ்செழுத்து இயம்பி வணங்கிடும் - துயிலெழும்பொழுதே திருவைந்தெழுத்தைச் சொல்லி வழிபடுகின்ற;

தொழும்பரைப் புரப்பவன் தோணிபுரத்தனே - அடியவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (தொழும்பர் - அடியவர்);


3)

கொல்புலித் தோலினன் கோவிலன் சேமிசைச்

செல்பவன் தேன்மொழிச் சேயிழை பங்கினன்

தொல்பவ நோயறத் துணையெழுத் தஞ்சினைச்

சொல்பவர்ப் புரப்பவன் தோணிபு ரத்தனே.


கொல்புலித் தோலினன் - கொல்லும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;

கோவிலன் - தனக்குத் தலைவன் இல்லாதவன்; கோவிலில் இருப்பவன் என்றும் பொருள்கொள்ளலாம்; (கோவிலன் - 1. கோ இலன்; கோ - தலைவன்; 2. கோவில் - கோயில்);

சேமிசைச் செல்பவன் - எருதின்மேல் செல்பவன் (இடபவாகனன்); (சே - எருது); (சுந்தரர் தேவாரம் - 7.68.3 - "சேவின்மேல் வருஞ் செல்வனை");

தேன்மொழிச் சேயிழை பங்கினன் - இனிய மொழி பேசும் உமையை ஒரு பங்கில் உடையவன்; (சேயிழை - பெண்);

தொல்-பவநோய் அறத் துணை எழுத்து அஞ்சினைச் சொல்பவர்ப் புரப்பவன் தோணிபுரத்தனே - தொன்மையான பிறவிப்பிணி தீரும்படி துணையான திருவைந்தெழுத்தைச் சொல்பவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (சொல்பவர்ப் புரப்பவன் - "சொல்பவரைக் காப்பவன்" என்று பொருள்படும்; பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம்-வேற்றுமைத்-தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு);


4)

ஆழ்கடல் நஞ்சினை அருமணி ஆக்கினான்

தாழ்சடை யிற்புனல் தரித்ததன் அயலொரு

போழ்மதி யும்புனை புண்ணியன் கோயிலைச்

சூழ்பவர்ப் புரப்பவன் தோணிபு ரத்தனே.


ஆழ்கடல் நஞ்சினை அருமணி ஆக்கினான் - ஆழம் மிக்க கடலில் எழுந்த ஆலகால விடத்தைக் கண்டத்தில் அரிய நீலமணி ஆக்கியவன்;

தாழ்சடையில் புனல் தரித்து அதன் அயல் ஒரு போழ்-மதியும் புனை புண்ணியன் - தாழும் சடையில் கங்கையைத் தாங்கி அதன் அருகே பிறையையும் அணியும் புண்ணியமூர்த்தி; (போழ் - துண்டம்);

கோயிலைச் சூழ்பவர்ப் புரப்பவன் தோணிபுரத்தனே - திருக்கோயிலை வலம்செய்யும் அன்பர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (சூழ்பவர்ப் புரப்பவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலி மிகுந்தது);


5)

நதித்தலை அண்ணலை நண்ணிய நம்பிபால்

கொதித்தடை கூற்றினைக் குமைத்தவன் முன்னமே

உதித்தவன் நித்தலும் உள்குளிர்ந் தடியிணை

துதித்தவர்ப் புரப்பவன் தோணிபு ரத்தனே.


நதித்-தலை அண்ணலை நண்ணிய நம்பிபால் - கங்கையைத் தலையில் தாங்கிய பெருமானைச் சரணடைந்த மார்க்கண்டேயரிடம்; (நதித்தலை அண்ணல் - கங்காதரன்); (நம்பி - ஆணிற் சிறந்தவன்);

கொதித்து அடை கூற்றினைக் குமைத்தவன் - கோபித்து வந்தடைந்த காலனை உதைத்து அழித்தவன்; (குமைத்தல் - அழித்தல்);

முன்னமே உதித்தவன் - என்றும் இருப்பவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.55.9 - "முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி");

நித்தலும் உள் குளிர்ந்து அடியிணை துதித்தவர்ப் புரப்பவன் தோணிபுரத்தனே - தினமும் மனம் குளிர்ந்து இரு-திருவடிகளை வணங்குபவர்களைக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (துதித்தவர்ப் புரப்பவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலி மிகுந்தது);


6)

வெல்விடை ஊர்தியன் வேலைநஞ் சுண்டவன்

கல்வியும் காவலும் அஞ்செழுத் தாமெனப்

பல்விதத் தொண்டுசெய் பத்தர்கள் இன்புறத்

தொல்வினை துடைப்பவன் தோணிபு ரத்தனே.


வெல்-விடை ஊர்தியன் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவன்;

வேலை-நஞ்சு உண்டவன் - கடலில் எழுந்த விடத்தை உண்டவன்; (வேலை - கடல்);

கல்வியும் காவலும் அஞ்செழுத்து ஆம் எனப் - கல்வி, காவல் எல்லாம் திருவைந்தெழுத்தே என்று; (அப்பர் தேவாரம் - 5.90.2 - "நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்");

பல்விதத் தொண்டுசெய் பத்தர்கள் இன்புறத் - பலவாறு தொண்டுசெய்யும் பக்தர்கள் இன்புறும்படி;

தொல்வினை துடைப்பவன் தோணிபுரத்தனே - அவர்களது பழவினையை அழித்துக் காத்து அருள்பவன் தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்; (துடைத்தல் - அழித்தல்);


7)

காமனைப் பொடிபடக் காய்ந்தமுக் கண்ணினன்

பூமலி தொடைகொடு போற்றிடும் அடியவர்

சேமம டைந்திடத் திருவருள் செய்பவன்

தூமதிச் சடையினன் தோணிபு ரத்தனே.


காமனைப் பொடிபடக் காய்ந்த முக்கண்ணினன் - மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் எரித்தவன்;

பூ மலி தொடைகொடு போற்றிடும் அடியவர் - பூக்கள் நிறைந்த மாலைகளால் வழிபடும் பக்தர்கள்;

சேமம் அடைந்திடத் திருவருள் செய்பவன் - நன்மை அடையும்படி அருள்பவன்; (சேமம் - க்ஷேமம்);

தூ-மதிச் சடையினன் - தூய திங்களைச் சடையில் அணிந்தவன்;

தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;


8)

அடல்மட அரக்கனின் ஐயிரு வாயழத்

தடவரை மேல்மலர்த் தாள்விரல் ஊன்றினான்

படர்சடை மேலிளம் பாம்பைய ணிந்தவன்

சுடர்மழுக் கரத்தினன் தோணிபு ரத்தனே.


அடல்-மட-அரக்கனின் ஐயிரு-வாய் அழத் - வலிமையும் அறியாமையும் உடைய இராவணனது பத்து வாய்களும் அழும்படி;

தட-வரைமேல் மலர்த்தாள்-விரல் ஊன்றினான் - பெரிய கயிலைமலைமேல் மலர் போன்ற திருப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றியவன்;

படர்-சடைமேல் இளம் பாம்பை அணிந்தவன் - படரும் சடையின்மேல் இளம்-பாம்பை அணிந்தவன்;

சுடர்-மழுக் கரத்தினன் - சுடர்கின்ற (ஒளிவீசுகின்ற) மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவன்;

தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;


9)

வேலையின் மேலவன் விரைமல ரானிவர்

மேலடி நேடிட வீங்கெரி ஆனவன்

காலனைக் காய்ந்தவன் கருமலை போற்கரித்

தோலையு ரித்தவன் தோணிபு ரத்தனே.


வேலையின்-மேலவன் விரை-மலரான் இவர் - பாற்கடல்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும் மணம் கமழும் தாமரைமேல் இருக்கும் பிரமனும்; (வேலை - கடல்); (விரை - வாசனை);

மேல் அடி நேடிட வீங்கு எரி ஆனவன் - முடியையும் அடியையும் தேடுமாறு ஓங்கிய ஜோதி ஆனவன்; (நேடுதல் - தேடுதல்); (வீங்குதல் - வளர்தல்); (எரி - ஜோதி);

காலனைக் காய்ந்தவன் - இயமனை உதைத்து அழித்தவன்;

கரு-மலை போல் கரித்-தோலை உரித்தவன் - கரிய மலை போன்ற யானையின் தோலை உரித்தவன்;

தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;


10)

நெற்றியில் நீறணி யாக்கலர் நெஞ்சினில்

குற்ற(ம்)ம லிந்தவர் கூறிடு சொல்விடும்

அற்றவர்க் கற்றவன் அழற்கணை ஒன்றினால்

சுற்றெயில் எரித்தவன் தோணிபு ரத்தனே.


நெற்றியில் நீறு அணியாக் கலர் - நெற்றியில் திருநீற்றைப் பூசாத கீழோர்; (கலர் - கீழோர்);

நெஞ்சினில் குற்றம் மலிந்தவர் - நெஞ்சில் குற்றங்கள் மிகுந்தவர்கள்;

கூறிடு சொல் விடும் - அவர்கள் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் மதிக்கவேண்டா; (கூறு இடு சொல் - மக்களைப் பிரிப்பதற்காகச் சொல்லும் வஞ்சக வார்த்தைகள்); (கூறிடுதல் - 1. சொல்லுதல்; 2. துண்டாக்குதல்);

அற்றவர்க்கு அற்றவன் - அன்பர்களுக்கு அன்பு உடையவன்; (அறுதல் - நட்புக்கொள்ளுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.120.2 - "அற்றவர்க்கு அற்ற சிவன்");

அழற்கணை ஒன்றினால் சுற்று-எயில் எரித்தவன் - எங்கும் சுற்றித் திரிந்த முப்புரங்களைத் தீயம்பு ஒன்றால் எரித்தவன்;

தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;


11)

சொன்மலி தொடைகொடு துணையடி போற்றிட

முன்வினை மாய்ப்பவன் முளைமதிச் சடையினன்

நன்மைகள் செய்பவன் நால்வருக் காலடித்

தொன்மறை விரித்தவன் தோணிபு ரத்தனே.


சொல் மலி தொடைகொடு - சொற்கள் நிறைந்த பாமாலைகளால்; (சொன்மலி - சொல் மலி);

துணையடி போற்றிட முன்வினை மாய்ப்பவன் - துணையாக உள்ள இரு-திருவடிகளைப் போற்றினால் பழவினையை அழிப்பவன்; (துணை - உதவி; காப்பு; இரண்டு);

முளை-மதிச் சடையினன் - பிறையைச் சடையில் அணிந்தவன்;

நன்மைகள் செய்பவன் - சங்கரன்;

நால்வருக்கு ஆல்-அடித் தொன்மறை விரித்தவன் - சனகாதியர்களுக்கு ஆலமரத்தின்கீழே பழமைமிக்க வேதங்களை உபதேசித்தவன்; (தொன்மறை - தொல் மறை);

தோணிபுரத்தனே - தோணிபுரம் என்ற பெயரையும் உடைய சீகாழியில் உறைகின்ற சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment