04.63 - தென்குரங்காடுதுறை (ஆடுதுறை) - பிளிறிமிகு சினத்தோடு
2014-05-22
தென்குரங்காடுதுறை (ஆடுதுறை)
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.12.1 - "சொன்மாலை பயில்கின்ற")
1)
பிளிறிமிகு சினத்தோடு வந்துபொரு பெருமலைபோல்
களிறுதனை உரித்தவனே கரைசேரக் கனிந்தருளாய்
நளிர்மதியம் திகழ்முடியாய் நச்சரவ நாணுடையாய்
குளிர்புனலார் காவிரித்தென் குரங்காடு துறையரனே.
* குறிப்பு: "கரைசேரக் கனிந்து அருளாய்" என்பதைப் பாடலின் ஈற்றில் கொண்டு பொருள்கொள்க.
பிளிறி மிகு-சினத்தோடு வந்து பொரு பெரு-மலை போல் களிறுதனை உரித்தவனே - பிளிறிக்கொண்டு மிகுந்த கோபத்தோடு வந்து போர்செய்த பெரிய மலை போன்ற யானையை வென்று அதன் தோலை உரித்தவனே; (பொருதல் - போர்செய்தல்);
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக; (கரை - பிறவிக்கடலின் கரை; முத்தி);
நளிர்-மதியம் திகழ் முடியாய் - குளிர்ச்சி பொருந்திய சந்திரன் ஒளிவீச அதனைத் திருமுடிமேல் அணிந்தவனே;
நச்சரவ நாண் உடையாய் - விஷப்பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;
குளிர் புனல் ஆர் காவிரித் தென்-குரங்காடுதுறை அரனே - குளிர்ந்த நீர் நிறைந்த காவிரியின் தென்கரையில் உள்ள குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;
2)
இடும்பலியை விரும்பிப்பல் இல்லங்கள் சென்றிரப்பாய்
கடும்பரவை நஞ்சுண்டாய் கரைசேரக் கனிந்தருளாய்
உடம்பிலுமை ஒருபாகம் உடையானே உலகத்தின்
கொடும்பசிதீர் காவிரித்தென் குரங்காடு துறையரனே.
இடும் பலியை விரும்பிப் பல்-இல்லங்கள் சென்று இரப்பாய் - இடுகின்ற பிச்சையை விரும்பிப் பல வீடுகளுக்குச் சென்று யாசிப்பவனே; (பலி - பிச்சை);
கடும் பரவை-நஞ்சு உண்டாய் - கொடிய கடல்விடத்தை உண்டவனே; (பரவை - கடல்);
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
உடம்பில் உமை ஒரு பாகம் உடையானே - உமையைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவனே;
உலகத்தின் கொடும் பசி தீர் காவிரித் தென் குரங்காடுதுறை அரனே - உலகத்தின் கொடிய பசியைத் தீர்க்கின்ற காவிரியின் தென்கரையில் உள்ள குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;
3)
புயலாரும் கண்டத்தாய் பொற்சடைமேல் புற்றரவா
கயிலாய மலையானே கரைசேரக் கனிந்தருளாய்
மயிலாரும் மடவாளை வாமத்தில் மகிழ்ந்தவனே
குயிலாலும் பொழில்சூழ்தென் குரங்காடு துறையரனே.
புயல் ஆரும் கண்டத்தாய் - மேகத்தைப் போன்ற கரிய கண்டத்தை உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);
பொற்சடைமேல் புற்றரவா - பொன் போன்ற சடையின்மேல் புற்றில் வாழும் இயல்பை உடைய பாம்பை அணிந்தவனே;
கயிலாய மலையானே - கயிலைமலையானே;
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
மயில் ஆரும் மடவாளை வாமத்தில் மகிழ்ந்தவனே - மயில் போன்ற சாயலை உடைய உமையை இடப்பக்கத்தில் பாகமாக விரும்பியவனே; (வாமம் - இடப்பக்கம்);
குயில் ஆலும் பொழில்சூழ் தென்-குரங்காடுதுறை அரனே - குயில்கள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த காவிரியின் தென்கரையில் உள்ள அழகிய குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே; (ஆலுதல் - ஒலித்தல்); (தென் - அழகு; தெற்கு);
4)
பெருகுவிடம் கண்டிமையோர் பெருமானோ எனவுண்டு
கருமணியார் கண்டத்தாய் கரைசேரக் கனிந்தருளாய்
உருகடியார் பருகமுதே ஒருபங்கில் உமையுடையாய்
குருகினமார் பொழில்சூழ்தென் குரங்காடு துறையரனே.
பெருகு விடம் கண்டு இமையோர், "பெருமான்! ஓ!" என, - பெருகிய ஆலகால விஷத்தைக் கண்டு தேவெர்களெல்லாம், "பெருமானே! ஓலம்!" என்று இறைஞ்ச; (ஓ - ஓலம்; அபயம் வேண்டும் குறிப்பு);
உண்டு கரு-மணி ஆர் கண்டத்தாய் - அந்த விடத்தை உண்டு கரிய மணி பொருந்தும் கண்டத்தை உடையவனே;
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
உருகு அடியார் பருகு அமுதே - உருகி வழிபடும் பக்தர்கள் உண்ணும் அமுதம் போன்றவனே;
(உருகடியார் - வினைத்தொகை - "உருகு+அடியார்"; இதனை ஒத்த ஒரு பிரயோகம்:
விரும்படியார் = "விரும்பு+அடியார்". திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 9 - "கடலமுதே கரும்பே விரும்படியார் எண்ணகத்தாய்");
ஒரு பங்கில் உமை உடையாய் - உமையை ஒரு பாகமாக உடையவனே;
குருகு இனம் ஆர் பொழில் சூழ் தென்-குரங்காடுதுறை அரனே - பறவைகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த காவிரியின் தென்கரையில் உள்ள அழகிய குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே; (ஆர்த்தல் - ஒலித்தல்); (தென் - அழகு; தெற்கு);
5)
வண்டறையும் கொன்றையினாய் மன்மதனைக் கண்ணுதலால்
கண்டுபொடி செய்தவனே கரைசேரக் கனிந்தருளாய்
வெண்டலையைக் கையேந்தி வெள்விடைமேல் பலிதிரிவாய்
கொண்டலடை பொழில்சூழ்தென் குரங்காடு துறையரனே.
வண்டு அறையும் கொன்றையினாய் - வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றைமலரை அணிந்தவனே; (அறைதல் - ஒலித்தல்);
மன்மதனைக் கண்ணுதலால் கண்டு பொடி செய்தவனே - காமனை நெற்றிக்கண்ணால் பார்த்துச் சாம்பலாக்கியவனே; (கண்ணுதல் - நெற்றிக்கண்); (பொடி - சாம்பல்);
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
வெண்தலையைக் கை ஏந்தி வெள்-விடைமேல் பலி திரிவாய் - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சைக்கு உழல்பவனே;
கொண்டல் அடை பொழில் சூழ் தென்-குரங்காடுதுறை அரனே - மேகம் அடைகின்ற சோலை சூழ்ந்த; (கொண்டல் - மேகம்);
- காவிரியின் தென்கரையில் உள்ள அழகிய குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே; (தென் - அழகு; தெற்கு);
6)
மூவிலைய வேலுடையாய் மூவாத முக்கண்ணா
காவியங்கண் உமைபங்கா கரைசேரக் கனிந்தருளாய்
மாவிடைமேல் வருவோனே வளர்மதியம் வாளரவம்
கூவிளஞ்சேர் சடையானே குரங்காடு துறையரனே.
மூவிலைய வேல் உடையாய் - மூன்று இலை போன்ற நுனியுடைய சூலத்தை ஏந்தியவனே;
மூவாத முக்கண்ணா - மூப்பில்லாத முக்கண்ணனே;
காவியங்கண் உமை பங்கா - குவளை மலர் போன்ற அழகிய கண்களையுடைய உமாதேவியை பங்கில் உடையவனே; (காவி - கருங்குவளை); (அம் - அழகிய);
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
மா-விடைமேல் வருவோனே - பெரிய இடபத்தை வாகனமாக உடையவனே;
வளர்-மதியம் வாள்-அரவம் கூவிளம் சேர் சடையானே- வளரும் திங்கள், கொடிய பாம்பு, வில்வம் இவற்றையெல்லாம் சடைமேல் அணிந்தவனே; (வாள் - கொடிய); (கூவிளம் - வில்வம்);
குரங்காடுதுறை அரனே - குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;
7)
பம்பரம்போல் சுழன்றாடும் பரம்பரனே பால்நீற்றாய்
கம்பமத கரியுரியாய் கரைசேரக் கனிந்தருளாய்
அம்பவளக் கொடிகூறா அடியிணையை அகத்திருத்திக்
கும்பிடுவார் குறைதீர்க்கும் குரங்காடு துறையரனே.
* பவளக்கொடியம்மை - இத்தலத்து இறைவி நாமம்;
பம்பரம்போல் சுழன்று ஆடும் பரம்பரனே - பம்பரத்தைப் போலச் சுழன்று ஆடுபவனே;
பால்-நீற்றாய் - பால் போன்ற திருநீற்றை அணிந்தவனே;
கம்ப-மத-கரி உரியாய் - அசையும் இயல்பினை உடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்தவனே;
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
அம்-பவளக்கொடி ஒரு கூறா - அழகிய பவளக்கொடி போன்ற உமையை ஒரு கூறாக உடையவனே;
அடியிணையை அகத்து இருத்திக் கும்பிடுவார் குறை தீர்க்கும் குரங்காடுதுறை அரனே - உன் இரு-திருவடிகளை உள்ளத்தில் வைத்து வழிபடுபவர்களது குறைகளைத் தீர்க்கின்ற, குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;
8)
வலங்கருதிக் கயிலாய மலையசைத்த அரக்கனுளம்
கலங்கவிரல் வைத்தவனே கரைசேரக் கனிந்தருளாய்
சலங்கரந்த சடையினனே சங்கரனே மலர்பூத்துக்
குலுங்குகின்ற பொழில்சூழ்தென் குரங்காடு துறையரனே.
வலம் கருதிக் கயிலாய மலை அசைத்த அரக்கன் உளம் கலங்க விரல் வைத்தவனே - தன் புஜபலத்தை எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது உள்ளம் கலங்கும்படி திருப்பாத விரலை ஊன்றி அவனை நசுக்கியவனே; (வலம் - வலிமை);
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
சலம் கரந்த சடையினனே - கங்கையைத் தன்னுள் மறைத்த சடையை உடையவனே; (கரத்தல் - ஒளித்தல்);
சங்கரனே - நன்மையைச் செய்பவனே;
மலர் பூத்துக் குலுங்குகின்ற பொழில் சூழ் தென்-குரங்காடுதுறை அரனே - மலர்கள் பூத்துத் திகழும் சோலை சூழ்ந்த, காவிரியின் தென்கரையில் உள்ள அழகிய குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே; (தென் - அழகு; தெற்கு);
9)
அடிமுடியை அன்றிருவர் அடையாத அழல்வண்ணா
கடியவிடை ஊர்தியினாய் கரைசேரக் கனிந்தருளாய்
அடியவர்பால் வருகூற்றை ஆர்கழலால் உதைத்தவனே
கொடியிடையாள் ஒருகூறா குரங்காடு துறையரனே.
அடிமுடியை அன்று இருவர் அடையாத அழல்வண்ணா - அரியும் பிரமனும் அடிமுடியை அடைய ஒண்ணாதபடி ஓங்கிய ஜோதியே;
கடிய விடை ஊர்தியினாய் - விரைந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவனே;
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
அடியவர்பால் வரு கூற்றை ஆர் கழலால் உதைத்தவனே - மார்க்கண்டேயரிடம் வந்த நமனை ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியால் உதைத்தவனே; (ஆர்த்தல் - ஒலித்தல்);
கொடியிடையாள் ஒரு கூறா - கொடி போன்ற இடை உடைய உமையை ஒரு கூறாக உடையவனே;
குரங்காடுதுறை அரனே - குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;
10)
சேராத சிறுநெறியார் தேராத தத்துவனே
காராரும் கண்டத்தாய் கரைசேரக் கனிந்தருளாய்
நீராரும் சடைமீது நிலவணிந்தாய் கையிலொரு
கூராரும் மழுவுடையாய் குரங்காடு துறையரனே.
சேராத சிறுநெறியார் தேராத தத்துவனே - நன்னெறியைச் சேராத புன்னெறியாளர்களால் அறியப்படாத மெய்ப்பொருளே; (தேர்தல் - அறிதல்);
கார் ஆரும் கண்டத்தாய் - கருமை பொருந்திய கண்டத்தை உடையவனே;
கரைசேரக் கனிந்து அருளாய் - பிறவிக்கடலைக் கடந்து கரையேற அடியேனுக்கு இரங்கி அருள்வாயாக;
நீர் ஆரும் சடைமீது நிலவு அணிந்தாய் - கங்கை பொருந்திய சடையின்மேல் சந்திரனை அணிந்தவனே;
கையில் ஒரு கூர் ஆரும் மழு உடையாய் - கையில் கூரிய மழுவாயுதத்தை ஏந்தியவனே;
குரங்காடுதுறை அரனே - குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே;
11)
பூத்தொடுத்தும் பாத்தொடுத்தும் பொன்னடியைப் பணிவாரைக்
காத்துநின்று வினைக்கடலைக் கடப்பிக்கும் கருணையினாய்
மூத்தவனே முடிமீது முளைமதியாய் முடிவில்லாக்
கூத்தினனே காவிரித்தென் குரங்காடு துறையரனே.
பூத் தொடுத்தும் பாத் தொடுத்தும் பொன் அடியைப் பணிவாரைக் - பூமாலைகளையும் பாமாலைகளையும் தொடுத்துப் பொன் போன்ற திருவடியை வழிபடும் பக்தர்களைக்;
காத்துநின்று வினைக்கடலைக் கடப்பிக்கும் கருணையினாய் - காத்து அவர்களை வினைக்கடலைக் கடக்கச்செய்து அருள்பவனே; (கடப்பித்தல் - கடக்கச்செய்தல்; தாண்டச்செய்தல்); (அப்பர் தேவாரம் - 4.27.6 - "அள்ளலைக் கடப்பித்து ஆளும் அதிகை வீரட்டனாரே");
மூத்தவனே - மிகவும் பழமையானவனே;
முடிமீது முளைமதியாய் - திருமுடிமேல் பிறையை அணிந்தவனே;
முடிவு இல்லாக் கூத்தினனே - முடிவின்றித் திருநடம் செய்பவனே;
காவிரித் தென் குரங்காடுதுறை அரனே - காவிரியின் தென்கரையில் உள்ள அழகிய குரங்காடுதுறை என்ற தலத்தில் எழுந்தருளிய ஹரனே; (தென் - அழகு; தெற்கு);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment