2014-06-08
P.238 - திருவெறும்பூர் (எறும்பியூர்)
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(பெரும்பாலும் - மாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் - என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.63.1 - "பைங்கோட்டு மலர்ப்புன்னை")
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
1)
கடியாரும் மலர்தூவிக் கழல்போற்றும் சுரர்தங்கள்
மிடியாவும் துடைபெம்மான் விரிகொன்றை மலர்சூடி
இடியாரும் குரலேற்றன் எழிலாரும் எறும்பூரில்
அடியாருக் கருள்செய்வான் அலையாரும் முடியானே.
கடி ஆரும் மலர் தூவிக் கழல் போற்றும் சுரர்தங்கள் மிடி யாவும் துடை-பெம்மான் - மணம் மிகுந்த பூக்களைத் தூவித் திருவடியை வழிபட்ட தேவர்களது துன்பங்களையெல்லாம் தீர்த்த பெருமான்; (கடி வாசனை); (சுரர் - தேவர்); (மிடி - துன்பம்); (துடைத்தல் - அழித்தல்);
விரி-கொன்றை மலர் சூடி - விரிகின்ற கொன்றைமலரைச் சூடியவன்;
இடி ஆரும் குரல் ஏற்றன் - இடி போன்ற குரல் உடைய இடபத்தை வாகனமாக உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்);
எழில் ஆரும் எறும்பூரில் அடியாருக்கு அருள்செய்வான் - அழகிய திருவெறும்பூரில் பக்தர்களுக்கு அருள்புரிபவன்;
அலை ஆரும் முடியானே - கங்கையைத் திருமுடிமேல் அணிந்தவன் (கங்காதரன்);
2)
கருதார்தம் புரமூன்றைக் கணையொன்றால் எரியீசன்
ஒருதூவெண் மதிசூடி உமைமங்கை இடமாக
எருதேறல் மகிழ்ஏந்தல் எழிலாரும் எறும்பூரில்
இருதாளைப் பணிவார்தம் இடர்தீர்க்கும் பெருமானே.
கருதார்தம் புரம்-மூன்றைக் கணை ஒன்றால் எரி-ஈசன் - பகைவர்களது முப்புரங்களை ஓர் அம்பால் எய்து எரித்த ஈசன்; (கருதார் - பகைவர்);
ஒரு தூ வெண்மதி சூடி - தூய வெண்பிறையைச் சூடியவன்;
உமைமங்கை இடம் ஆக எருது ஏறல் மகிழ்- ஏந்தல் - உமாதேவி இடப்பாகம் ஆக, இடபவாகனத்தில் ஏறுகின்ற தலைவன்; (ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்);
எழில் ஆரும் எறும்பூரில் இருதாளைப் பணிவார்தம் இடர் தீர்க்கும் பெருமானே - அழகிய திருவெறும்பூரில் இரு-திருவடிகளை வழிபடும் அன்பர்களது துன்பத்தைத் தீர்க்கும் பெருமான்;
("எழிலாரும் எறும்பூரில் பெருமான்", "இருதாளைப் பணிவார்தம் இடர்தீர்க்கும் பெருமான்" என்று தனித்தனி இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);
3)
நீலத்தை மிடறேற்றான் நிலவைத்தன் முடிவைத்த
கோலத்தன் அழிவில்லான் கொடியாரூர் அழிவில்லான்
ஏலப்பூங் குழலாள்கோன் எழிலாரும் எறும்பூரில்
சூலத்தன் அடிபோற்றத் துயரில்லை ஞாலத்தே.
நீலத்தை மிடறு ஏற்றான் - ஆலகாலத்தை நீலமணியாகக் கண்டத்தில் ஏற்றவன்;
நிலவைத் தன் முடி வைத்த கோலத்தன் - பிறையைச் சென்னிமேல் சூடியவன்;
அழிவில்லான் - அழிவு அற்றவன்;
கொடியார் ஊர் அழி-வில்லான் - கொடியவர்தம் முப்புரங்களை அழித்த வில்லினன்;
ஏலப் பூங்குழலாள் கோன் - மயிர்ச்சாந்து அணிந்த மென்மையான கூந்தலை உடைய உமைக்குக் கணவன்; (ஏலம் - மயிர்ச்சாந்து);
எழில் ஆரும் எறும்பூரில் சூலத்தன் அடிபோற்றத் துயர் இல்லை ஞாலத்தே - அழகிய திருவெறும்பூரில் சூலபாணியான சிவபெருமானது திருவடியை வழிபடும் அன்பர்களுக்கு இவ்வுலக வாழ்வில் துன்பங்கள் திரும்;
4)
சுமையாக விறகேந்தி விளையாடல் புரிசெல்வன்
அமைதேரின் மிசையேறி அரண்மூன்றுக் கழல்மூட்டி
இமையோர்கட் கிரங்கீசன் எழிலாரும் எறும்பூரில்
உமையோடும் உறைபெம்மான் எமையாளும் கமையானே.
சுமையாக விறகு ஏந்தி விளையாடல் புரி செல்வன் - விறகு விற்றுத் திருவிளையாடல் புரிந்த செல்வன்; (* திருவிளையாடற்புராணம் - விறகு விற்ற படலம் காண்க);
அமை-தேரின்மிசை ஏறி அரண் மூன்றுக்கு அழல் மூட்டி இமையோர்கட்கு இரங்கு ஈசன் - தேவர்கள் செய்த தேரின்மேல் ஏறி முப்புரங்களை எரித்துத் தேவர்களுக்கு அருள்புரிந்த ஈசன்;
எழில் ஆரும் எறும்பூரில் உமையோடும் உறை பெம்மான் - அழகிய திருவெறும்பூரில் உமாதேவியோடு உறைகின்ற பெருமான்;
எமை ஆளும் கமையான் - எம்மை ஆள்கின்ற அருள்வடிவினன்; (விடை - விடையான்; அதுபோல், கமை - கமையான்); (கமை - பொறுமை; அருள்; - க்ஷமா என்ற வடசொல்லின் தமிழ் வடிவம்); (அப்பர் தேவாரம் - 6.55.8 - "கமையாகி நின்ற கனலே போற்றி");
5)
போரேறு தனிலேறி புலித்தோலை அரைவீக்கி
ஓராறு சடையேற்றான் ஒருகோட்டை உடைமைந்தன்
ஈராறு கரன்தாதை எழிலாரும் எறும்பூரில்
சீரேறு பதம்போற்றச் செறுபாவம் சேராவே.
போர் ஏறுதனில் ஏறி - போர் செய்யும் இடபத்தை வாகனமாக உடையவன்; (ஏறி - ஏறியவன்);
புலித்தோலை அரை வீக்கி - அரையில் புலித்தோலைக் கட்டியவன்; (வீக்கி - வீக்கியவன்);
ஓர் ஆறு சடை ஏற்றான் - கங்கையைச் சடையில் ஏற்றவன்;
ஒரு கோட்டையுடை மைந்தன், ஈர் ஆறு கரன் தாதை - ஒரு தந்தத்தை உடைய மகனான கணபதிக்கும் பன்னிருகை முருகனுக்கும் தந்தை; (கோடு - தந்தம்); (தாதை - தந்தை);
எழில் ஆரும் எறும்பூரில் சீர் ஏறு பதம் போற்றச் செறு-பாவம் சேராவே - அழகிய திருவெறும்பூரில் அப்பெருமானது சீர் மிக்க திருவடியை வழிபட்டால் துன்புறுத்தும் தீவினைகள் தீரும்; (செறுதல் - வருத்துதல்);
6)
அலையூர்கள் அவைவேவ அரிகால்தீக் கணையேவச்
சிலையாக மலையேந்தி திருநீற்றன் மழவேற்றன்
இலையாரும் நுனைவேலன் எழிலாரும் எறும்பூரில்
நிலையாக உறைவான்தாள் நினைவார்க்கு வினைவீடே.
அலை-ஊர்கள் அவை வேவ - எங்கும் அலைந்த முப்புரங்கள் வெந்து அழியும்படி;
அரி கால் தீக் கணை ஏவச் - விஷ்ணு வாயு அக்கினி இம்மூவரும் ஒன்றாகச் சேர்ந்த அம்பை ஏவுவதற்கு; (கால் - வாயு);
சிலையாக மலை ஏந்தி - வில்லாக மேருமலையை ஏந்தியவன்; (சிலை - வில்);
திருநீற்றன் மழவேற்றன் - திருநீற்றைப் பூசியவன், இளைய இடபத்தை ஊர்தியாக உடையவன்;
இலை ஆரும் நுனை-வேலன் - இலை போன்ற நுனிகளை உடைய சூலத்தை ஏந்தியவன்;
எழில் ஆரும் எறும்பூரில் நிலையாக உறைவான் தாள் நினைவார்க்கு வினை வீடே - அழகிய திருவெறும்பூரில் நீங்காமல் என்றும் உறைகின்ற பெருமானது பாதத்தை நினையும் பக்தர்களது வினை நீங்கும்; (வினைவீடு - வினைநீக்கம்);
7)
ஒருமான்கை தனிலேந்தி உரகத்தைத் தலையேந்தி
அருநான்மா மறைபாடி அடலானை உரிமூடி
இருநான்கு வரைத்தோளன் எழிலாரும் எறும்பூரில்
பெருமான்தன் அடியார்க்குப் பெருங்காப்பாய் வருவானே.
ஏந்தி, பாடி, மூடி - ஏந்தியவன், பாடியவன், மூடியவன் என்ற பெயர்ச்சொற்கள்;
ஒரு மான் கைதனில் ஏந்தி - கையில் ஒரு மானை ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன்);
உரகத்தைத் தலை ஏந்தி - தலைமேல் பாம்பைத் தரித்தவன்; (உரகம் - பாம்பு);
அரு- நான்-மா-மறை பாடி - அரிய நால்வேதங்களைப் பாடி அருளியவன்; (பாடி - பாடியவன்);
அடல்-ஆனை-உரி மூடி - வலிய கொலை யானையின் தோலைப் போர்த்தவன்; (மூடி - மூடியவன்);
இருநான்கு வரைத்-தோளன் - மலை போன்ற எட்டுப்-புஜங்களை உடையவன்;
எழில் ஆரும் எறும்பூரில் பெருமான் - அழகிய திருவெறும்பூரில் உறைகின்ற பெருமான்;
தன் அடியார்க்குப் பெரும்-காப்பாய் வருவானே - எப்பெருமான் தன் அடியவர்களுக்கு பெரிய காவல் ஆவான்; (காப்பு - பாதுகாவல்);
8)
மடமாட்ட இலங்கைக்கோன் மலையாட்ட விரலூன்றிப்
படமாட்டா வலிதந்து பரவப்பின் பெயர்தந்தான்
இடுகாட்டில் நடமாடி எழிலாரும் எறும்பூரில்
நடுகாட்டி பதம்போற்ற நமையின்னல் நணுகாவே.
மடம் ஆட்ட இலங்கைக்கோன் மலை ஆட்ட விரல் ஊன்றிப் - அறியாமை ஆட்டுவிக்க அதனால் இலங்கை-மன்னன் கயிலைமலையை அசைத்துப் பெயர்க்க முயன்றபொழுது ஈசன் ஒரு திருப்பாத-விரலை ஊன்றி; (மடம் - அறியாமை); (ஆட்டுதல் - ஆடச்செய்தல் (இயக்குதல்); அசைத்தல்);
படமாட்டா வலி தந்து பரவப் பின் பெயர் தந்தான் - அவனுக்குப் பொறுக்கமுடியாத நோவைத் தந்து, பின் அவன் அழுது துதித்துப் பாடக் கேட்டு இரங்கி அவனுக்கு இராவணன் என்ற பெயரைத் தந்தான்; (பரவுதல் - துதித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.17.8 - "கொலைவாளொடு குணநாமமும் கொடுத்த ஏரார்தரும் இறைவர்க்கு");
இடுகாட்டில் நடம் ஆடி - சுடுகாட்டில் கூத்தாடுபவன்;
எழில் ஆரும் எறும்பூரில் நடு காட்டி - அழகிய திருவெறும்பூரில் பாரபட்சம் இன்மையைக் காட்டுபவன்; (நடு - நடுநிலை; நீதி); (நடு - முற்றியலுகரம். நடுக்காட்டி என்று வல்லொற்று மிகும். எதுகைநோக்கி இங்கே க் மிகாது வந்தது); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்" - சலம் - கோட்டம்; பட்சபாதம் - நடுநிலை திறம்புகை);
பதம் போற்ற நமை இன்னல் நணுகாவே - அப்பெருமானது திருவடியைப் போற்றினால் நம்மைத் துன்பங்கள் நெருங்கமாட்டா;
9)
கரியானும் கடிநாறும் கமலத்தில் உறைவானும்
தெரியாது மிகநேடித் திகைத்தேத்த முடிவில்லா
எரியாக எழுபெம்மான் எழிலாரும் எறும்பூரைப்
பிரியாதான் கழல்பேணும் பிரியத்தார் பெறுவாரே.
கரியானும் கடி நாறும் கமலத்தில் உறைவானும் - திருமாலும் வாசனை கமழும் தாமரையில் உறையும் பிரமனும்;
தெரியாது மிக நேடித் திகைத்து ஏத்த - மிகவும் தேடியும் அடிமுடி காணாமல் மனம் மயங்கித் துதிக்கும்படி; (நேடி - தேடி); (திகைத்தல் - மயங்குதல்);
முடிவு இல்லா எரியாக எழு-பெம்மான் - எல்லை இல்லாத ஜோதி வடிவில் உயர்ந்த பெருமான்;
எழில் ஆரும் எறும்பூரைப் பிரியாதான் - அழகிய திருவெறும்பூரை என்றும் நீங்காதவன்;
கழல் பேணும் பிரியத்தார் பெறுவாரே - அப்பெருமானது திருவடியைப் போற்றும் அன்பர்கள் அவன் அருளை (& நற்கதியை & விரும்பிய வரங்களை) அடைவார்கள்; (சம்பந்தர் தேவாரம் - 3.93.9 - "பிரியராம் அடியவர்க் கணியராய்ப்");
10)
அணைவில்லார் தினந்தோறும் அலர்தூற்றித் திரிவாரோர்
துணையில்லார் உரைகொள்ளேல் சுடுநீற்றன் புரிநூலன்
இணையில்லான் பரமேட்டி எழிலாரும் எறும்பூரில்
புணைவல்லான் அடிபோற்ற வினையெல்லாம் பொடியாமே.
அணைவு-இல்லார் தினந்தோறும் அலர்தூற்றித் திரிவார் - ஈசனைச் சாராதவர்கள் நாள்தோறும் இகழ்ந்து பேசித் திரிவார்கள்; (அணைவு - சார்தல்; பொருந்துதல்); (அலர்தூற்றுதல் - இகழ்ந்து பேசுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.36.10 - "அணைவில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே");
ஓர் துணை இல்லார் உரை கொள்ளேல் - அவர்கள் ஒரு துணை இல்லாதவர்கள்; அவர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;
சுடுநீற்றன், புரிநூலன் - சுட்ட திருநீற்றைப் பூசியவன், முப்புரிநூலை அணிந்தவன்;
இணை-இல்லான், பரமேட்டி - ஒப்பற்றவன், பரமன்;
எழில் ஆரும் எறும்பூரில் புணை வல்லான் அடிபோற்ற வினையெல்லாம் பொடி ஆமே - அழகிய திருவெறும்பூரில் பிறவிக்கடலைக் கடப்பிக்கும் தெப்பம் ஆனவன், எல்லாம் வல்லவன், அப்பெருமானது திருவடியை வழிபட்டால் எல்லா வினைகளும் சாம்பலாகும்; (புணை - தெப்பம்); (வல்லான் - வல்லவன்); (திருவாசகம் - திருப்பூவல்லி - 8.13.1 - "அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன்");
11)
காடில்லா உடைநாதன் கமலத்தான் தலையல்லால்
ஓடில்லான் பலிதேர உமைநல்லாள் ஒருகூறன்
ஈடில்லான் வரைவில்லான் எழிலாரும் எறும்பூரிற்
கேடில்லான் மலர்த்தாளை நாடில்வான் தருவானே.
காடு இல்லா-உடை நாதன் - சுடுகாடே இடமாக உடைய தலைவன்; (இல்லா - இல்லாக; கடைக்குறை விகாரம்);
கமலத்தான் தலை அல்லால் ஓடு இல்லான் பலி தேர - தாமரைமேல் இருக்கும் பிரமன் மண்டையோட்டைத் தவிரப் பிச்சையெடுக்க வேறு ஓடு இல்லாதவன்;
உமைநல்லாள் ஒரு கூறன் - உமாதேவியை ஒரு கூறாக உடையவன்;
ஈடு இல்லான் - ஒப்பற்றவன்;
வரைவில்லான் - 1. வரைவு இல்லான் (அளவற்றவன்); 2. வரை வில்லான் (மேருமலையை வில்லாக ஏந்தியவன்);
எழில் ஆரும் எறும்பூரில் கேடு இல்லான் - அழகிய திருவெறும்பூரில் உறைகின்ற அழிவற்றவன்;
மலர்த்தாளை நாடில் வான் தருவானே - அப்பெருமானது மலரடியை விரும்பி வழிபட்டால் வானுலகை அளிப்பான்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment