2008-08-30
V.032 - காவலனே நாவலனே (மும்மண்டில வெண்பா)
-----------
முற்குறிப்பு:
மும்மண்டில வெண்பா என்பது ஒரு வெண்பாவின் இரண்டாம் சீரையோ மூன்றாம் சீரையோ முதற்சீராகக் கொண்டு அங்கிருந்து தொடங்கி, அதே வரிசையில் தொடர்ந்து, முதற்சீரையோ முதல் இருசீர்களையோ இறுதியில் வைத்து நோக்கினாலும், வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்.
முதல் வெண்பாவின் இரண்டாம் சீரை இரண்டாம் வெண்பாவின் முதற்சீராக வைத்து எழுதும்போது முதல் வெண்பாவின் முதற்சீர் இரண்டாம் வெண்பாவின் இறுதியில் வரும். தளைக்கேற்றவாறு சீர்களைப் பிரிக்க நேரிடும். இது போலவே மூன்றாம் வெண்பாவிற்கும்.
1)
காவலனே நாவலனே மேவலரூர் மூன்றெரித்த
ஏவலனே பூவமர்வோன் மாவலிபால் மூவடியோன்
மேவகிலாத் தீவணனே தேவவென ஆவலொடு
சேவடிக்கே பாவமைத் தேன்.
2)
நாவலனே மேவலரூர் மூன்றெரித்த ஏவலனே
பூவமர்வோன் மாவலிபால் மூவடியோன் மேவகிலாத்
தீவணனே தேவவென ஆவலொடு சேவடிக்கே
பாவமைத்தேன் காவல னே.
3)
மேவலரூர் மூன்றெரித்த ஏவலனே பூவமர்வோன்
மாவலிபால் மூவடியோன் மேவகிலாத் தீவணனே
தேவவென ஆவலொடு சேவடிக்கே பாவமைத்தேன்
காவலனே நாவல னே.
காவலனே - காப்பவனே; அரசனே;
நாவலனே - நாவன்மை உடையவனே; (நா வலன் - மறையோதுவதால் நாவலன்);
மேவலர் ஊர் மூன்று எரித்த ஏ-வலனே - பகைவரது முப்புரங்களை அம்பு எய்து அழித்தவனே; (மேவலர் - பகைவர்); (ஏ - அம்பு); (வலன் - வல்லவன்);
பூ அமர்வோன் மாவலிபால் மூவடியோன் மேவகிலாத் தீவணனே - தாமரைமேல் இருக்கும் பிரமன், மகாபலியிடம் மூவடி மண் யாசித்த திருமால் இவர்களால் அடைய ஒண்ணாத ஜோதிவடிவினனே; (மாவலி - மஹாபலி); (மேவுதல் - அடைதல்); (தீவணன் - தீவண்ணன்);
தேவ என ஆவலொடு சேவடிக்கே பா அமைத்தேன் - தேவனே என்று விரும்பித் திருவடிக்கே ஒரு பாடல் அமைத்தேன்;
அருள்க என்பது குறிப்பு;
* சுந்தரர் தேவரம் - 7.17.1 -
கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு வித்தவர் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
வி. சுப்பிரமணியன்
--------- ---------
No comments:
Post a Comment