Friday, April 28, 2023

V.030 - வேளை - ஒருவேலை - மடக்கு

கந்த ஷஷ்டியை ஒட்டி

2007-11-17

V.030 - வேளை - ஒருவேலை - மடக்கு

-----------

வேளை எரிக்க விழித்தான் மகன்முருக

வேளை வணங்கிட வேண்டுமோ - வேளை

ஒருவேலை ஏந்தி வருவோன்தாள் போற்றும்

ஒருவேலை செய்வார்க்குண் டுய்வு.


சொற்பொருள்:

வேளை - 1. மன்மதனை; 2. முருகனை; 3. காலம்; சமயம்; பொழுது;

ஒரு - 1. ஒப்பற்ற; 2. ஒன்று

வேலை - 1. வேல் என்ற ஆயுதத்தை; 2. தொழில்; செயல்;


வேளை எரிக்க விழித்தான் மகன் - மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த சிவனாரின் மகனான;

முருகவேளை வணங்கிட வேண்டுமோ வேளை - முருகனைத் தொழுவதற்குத் தனியாக ஒரு நேரம் வேண்டுமோ?

ஒரு வேலை ஏந்தி வருவோன் தாள் போற்றும் ஒரு வேலை செய்வார்க்கு உண்டு உய்வு - ஒப்பற்ற வேலாயுதத்தைக் கையில் தாங்கி வருகின்ற முருகனுடைய திருவடியைத் தொழுகின்ற அந்த ஒரு செயலைச் செய்பவர்களுக்கு நற்கதி உண்டு.


வி. சுப்பிரமணியன்

--------- ---------


No comments:

Post a Comment