Monday, July 12, 2021

P.264 - சிக்கல் - ஆரா அமுதே

2014-12-27

P.264 - சிக்கல்

–--------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)

(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி")

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப்")


1)

ஆரா அமுதே அருந்துணையே .. அமரர் வேண்டப் புரமெய்த

வீரா பன்றிப் பின்சென்று .. விசய னுக்குப் படையீந்தாய்

நீரார் சடையாய் அருளென்று .. நெகிழ்ந்து போற்றும் அடியார்தம்

தீரா நோயைத் தீர்த்தருளும் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


"ஆரா அமுதே, அருந்துணையே - தெவிட்டாத அமுதமே, அரிய துணையே;

அமரர் வேண்டப் புரம் எய்த வீரா - தேவர்கள் இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி முப்புரங்களை ஓரம்பால் எய்த வீரனே;

பன்றிப்பின் சென்று விசயனுக்குப் படை ஈந்தாய் - ஒரு பன்றியின்பின் வேடனாகிச் சென்று அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவனே; (விசயன் - விஜயன் - அர்ஜுனன்); (படை - ஆயுதம்);

நீர் ஆர் சடையாய் அருள்" என்று நெகிழ்ந்து போற்றும் அடியார்தம் - கங்கையைச் சடையில் தரித்தவனே அருள்வாயாக" என்று மனம் உருகித் துதிக்கும் பக்தர்களது;

தீரா நோயைத் தீர்த்தருளும், சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - தீராத நோயைத் தீர்த்து அருள்வான், சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்-பெருமான். (அருளும் - அருள்பவன்; செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);


2)

வானும் நிலனும் பணிந்தேத்தும் .. மங்கை பங்கன் தாவுகின்ற

மானும் மழுவும் கையேந்தி .. மாண்டார் உடல்கள் எரிகின்ற

கானும் நடம்செய் மன்றாகக் .. கருது கின்ற கறைக்கண்டன்

தேனும் பாலும் மகிழ்ந்தாடும் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


வானும் நிலனும் பணிந்து ஏத்தும் மங்கைபங்கன் - மண்ணுலகும் விண்ணுலகும் வழிபாடு செய்கின்ற உமைபங்கன்;

தாவுகின்ற மானும் மழுவும் கையேந்தி - தாவும் மானையும் மழுவையும் கையில் ஏந்தியவன்;

மாண்டார் உடல்கள் எரிகின்ற கானும் நடம்செய் மன்றாகக் கருதுகின்ற கறைக்கண்டன் - இறந்தவர்களது உடல்கள் எரியும் சுடுகாட்டையும் கூத்தாடும் அரங்காகக் கருதும் நீலகண்டன்; (கான் - சுடுகாடு);

தேனும் பாலும் மகிழ்ந்து ஆடும் சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - பால் தேன் இவற்றால் அபிஷேகம் விரும்பிய, சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்-பெருமான்;


3)

என்ன சொல்லி அடியார்கள் .. ஏத்தி னாலும் இனிதேற்று

முன்னை வினையை வேரறுக்கும் .. முக்கட் பெருமான் சுந்தரர்க்குத்

தன்னைத் தோழன் எனத்தந்த .. தலைவன் கொன்றை மலரோடு

சென்னி மீது பிறைசூடும் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


என்ன சொல்லி அடியார்கள் ஏத்தினாலும் இனிதேற்று முன்னை-வினையை வேரறுக்கும் முக்கட்-பெருமான் - பக்தர்கள் எப்படித் துதித்தாலும் இனிதே ஏற்றருளி அவர்களது பழவினையை அடியோடு தீர்க்கும் முக்கண்ணுடைய பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 3.71.1 - "கோழை மிடறாக ... ஏழை-அடியாரவர்கள் யாவைசொன சொல்மகிழும் ஈசன்");

சுந்தரர்க்குத் தன்னைத் தோழன் எனத் தந்த தலைவன் - சுந்தரருக்குத் தன்னைத் தோழனாகத் தந்த தலைவன்;

கொன்றைமலரோடு சென்னிமீது பிறை சூடும் சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - திருமுடிமேல் கொன்றைமலரையும் பிறையையும் சூடிய, சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்-பெருமான்;


4)

விரையார் மலர்கொண் டடிபோற்றி .. விழுந்து வணங்கும் அடியார்க்குத்

தரைமேல் மீளா நிலையருளும் .. தலைவன் தேவர் தமைக்காக்க

வரையோர் வில்லாக் கையேந்தி .. மதில்மூன் றெரித்தான் கூவிளமும்

திரையார் நதியும் திகழ்சடையான் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


விரை ஆர் மலர்கொண்டு அடிபோற்றி விழுந்து வணங்கும் அடியார்க்குத் - மணம் கமழும் பூக்களைத் தூவித் திருவடியை வழிபட்டு நிலமுற விழுந்து வணங்கும் பக்தர்களுக்கு; (விரை - வாசனை); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

தரைமேல் மீளா நிலை அருளும் தலைவன் - இனி மண்ணுலகில் பிறவாமையை அருள்கின்ற பெருமான்;

தேவர்தமைக் காக்க வரை ஓர் வில்லாக் கை ஏந்தி மதில் மூன்று எரித்தான் - தேவர்களைக் காப்பதற்காக மேருமலையை ஒரு வில்லாகக் கையில் தாங்கி முப்புரங்களை எரித்தவன்; (வரை - மலை);

கூவிளமும் திரை ஆர் நதியும் திகழ் சடையான் - வில்வத்தையும் அலை மிக்க கங்கையையும் சடையில் அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்); (திரை - அலை);

சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்-பெருமான்;


5)

மத்தா மலையைக் கடலிலிட்டு .. வானோர் கடைய நஞ்செழக்கண்(டு)

அத்தா அபயம் அருளாயென்(று) .. அரற்ற அதனை அமுதுண்டான்

முத்தார் நகையாள் ஒருகூறன் .. முளைவெண் மதியம் புனைசடையன்

செத்தார் எலும்பை அணிகின்ற .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


மத்தா மலையைக் கடலில் இட்டு வானோர் கடைய நஞ்சு எழக் கண்டு - மலையையே மத்தாகப் பாற்கடலில் ஊன்றித் தேவர்கள் கடைந்தபொழுது ஆலகாலம் பொங்கியெழக் கண்டு;

"அத்தா! அபயம் அருளாய்" என்று அரற்ற அதனை அமுதுண்டான் - "தந்தையே! அஞ்சல் அளித்து அருள்வாயாக" என்று அவர்கள் அழுது தொழ, அவர்களுக்கு இரங்கி அந்தக் கொடிய நஞ்சை அமுதாக உண்டவன்; (அத்தன் - தந்தை);

முத்து ஆர் நகையாள் ஒரு கூறன் - முத்துப் போன்ற பல் உடைய உமையை ஒரு பாகமாக உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்);

முளை-வெண்-மதியம் புனை சடையன் - இளவெண்பிறையைச் சடையில் அணிந்தவன்;

செத்தார் எலும்பை அணிகின்ற சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - இறந்த பிரமவிஷ்ணுக்களின் எலும்பை மாலையாக அணிகின்ற, சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்-பெருமான்;


6)

மறைகள் ஓதி வழிபட்ட .. வசிட்டர்க் கருள்செய் மாதேவன்

பறைகள் முழக்கிப் பாரிடங்கள் .. பாட இரவில் நடமாடும்

இறைவன் கையில் ஓடேந்தி .. இடுமின் பலியென் றுழலீசன்

சிறைவண் டார்க்கும் பொழில்சூழ்ந்த .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


மறைகள் ஓதி வழிபட்ட வசிட்டர்க்கு அருள்செய் மாதேவன் - வேதமந்திரங்களால் வழிபாடு செய்த வசிஷ்டருக்கு அருள்செய்த மகாதேவன்; (* வசிஷ்டர் காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம் இது. சிக்கல் தலபுராணச் செய்தி);

பாரிடங்கள் பாட இரவில் நடம் ஆடும் இறைவன் - பூதங்கள் பாட நள்ளிருளில் கூத்து ஆடும் இறைவன்; (பாரிடங்கள் - பூதகணங்கள்); (சம்பந்தர் தேவாரம் - 3.126.7 - "பாதத்தொலி பாரிடம் பாட நடஞ்செய் நாதத்தொலியர்");

கையில் ஓடு ஏந்தி, "இடுமின் பலி" என்று உழல் ஈசன் - கையில் மண்டையோட்டை ஏந்திப், "பிச்சை இடுங்கள்" என்று திரியும் ஈசன்; (ஓடு - கபாலம்); (பலி - பிச்சை);

சிறை-வண்டு ஆர்க்கும் பொழில் சூழ்ந்த - இறகுகளை உடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலை சூழ்ந்த; (சிறை - சிறகு); (ஆர்த்தல் - ஒலித்தல்);

சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - திருச்சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்-பெருமான்;


7)

வம்பு மலியும் மலர்தூவி .. வாசம் குன்றாத் தமிழ்பாடி

நம்பி நாளும் பணிவார்க்கு .. நலங்கள் எல்லாம் நல்குமரன்

கம்பக் கரியின் உரிமூடி .. கங்கை ஆறு பாய்கின்ற

செம்பொற் சடைமேற் பிறைசூடும் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


வம்பு மலியும் மலர் தூவி, வாசம் குன்றாத் தமிழ் பாடி - மணம் மிகுந்த பூக்களைத் தூவி, வாசனை என்றும் குன்றாத பாமாலைகளைப் பாடி; (வம்பு - வாசனை); (வாசம் - மணம்);

நம்பி நாளும் பணிவார்க்கு நலங்கள் எல்லாம் நல்கும் அரன் - விரும்பித் தினமும் வழிபாடு செய்பவர்களுக்கு எல்லா-நலங்களையும் அளிக்கும் ஹரன்; (நம்புதல் - விரும்புதல்);

கம்பக்-கரியின் உரி-மூடி - ஆசையும் இயல்புடைய யானையின் தோலைப் போர்த்தவன்; (கம்பம் - அசைவு); (கரி - யானை); (உரி - தோல்);

கங்கைஆறு பாய்கின்ற செம்பொற் சடைமேல் பிறை சூடும் சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - கங்கைநதி பாயும் செம்பொன் போன்ற சடைமேல் பிறையைச் சூடுகின்ற, சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்-பெருமான்;


8)

நேயம் இன்றி மலைபேர்த்தான் .. நெடுநாள் அரற்ற விரலூன்று

நாயன் பின்னர் இசைகேட்டு .. நாளும் வாளும் அருள்செய்தான்

சேயைத் தந்த கண்ணுதலான் .. தேவ தேவன் ஒருகையில்

தீயை ஏந்தி நடம்செய்யும் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


நேயம் இன்றி மலை-பேர்த்தான் நெடுநாள் அரற்ற விரல் ஊன்று நாயன் - அன்பு இல்லாமல் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் பன்னாள் அழுது புலம்பும்படி ஒரு திருவடிவிரலை ஊன்றி அவனை நசுக்கிய கடவுள்; (நேயம் - அன்பு); (நாயன் - தலைவன்; கடவுள்);

பின்னர் இசை-கேட்டு நாளும் வாளும் அருள்செய்தான் - பின் அவன் பாடிய துதிகளைக் கேட்டு இரங்கி அவனுக்கு நீண்ட ஆயுளையும் சந்திரஹாஸம் என்ற வாளையும் வரமருளியவன்;

சேயைத் தந்த கண்ணுதலான் - முருகனை அருளிய நெற்றிக்கண்ணன்; (சேய் - முருகன்);

தேவதேவன் - பரம்பொருள்;

ஒரு கையில் தீயை ஏந்தி நடம்செய்யும் சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - ஒரு கையில் நெருப்பை ஏந்திக் கூத்தாடுகின்ற, சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்-பெருமான்;


9)

சங்கை ஏந்து திருமாலும் .. தாம ரைப்பூ மேலானும்

தங்கை கூப்பித் தொழுமாறு .. தழலாய் நின்ற தனிநாதன்

செங்கண் விடையன் வேல்நெடுங்கண் .. தேவி பங்கன் இண்டையெனத்

திங்கள் திகழும் செஞ்சடையான் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


சங்கை ஏந்து திருமாலும் தாமரைப்பூ மேலானும் - சங்கை ஏந்திய விஷ்ணுவும் தாமரைப்பூவில் இருக்கும் பிரமனும்;

தம் கை கூப்பித் தொழுமாறு தழலாய் நின்ற தனி நாதன் - தங்கள் கைகளைக் கூப்பி வணங்கும்படி ஜோதியாகி ஓங்கிய ஒப்பற்ற தலைவன்; (தனி - ஒப்பற்ற);

வேல்நெடுங்கண்-தேவி பங்கன் - வேல் போன்ற நீண்ட கண்ணுடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்; (வேல்நெடுங்கட்டேவி - வேல்நெடுங்கண் + தேவி); (* வேல்நெடுங்கண்ணி - திருச்சிக்கல் இறைவி திருநாமம்);

இண்டைனத் திங்கள் திகழும் செஞ்சடையான் - இண்டைமாலை போலச் சந்திரனைச் சிவந்த சடையில் அணிந்தவன்; (இண்டை - தலையில் அணியும் ஒருவகை மாலை);

சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்-பெருமான்;


10)

நீறு பூசா நெற்றியராய் .. நித்தம் பொய்கள் பலசொல்லி

மாறும் என்று மயக்குகின்ற .. வஞ்சர் வார்த்தை மதியேன்மின்

நாறு மலரிட் டடிபோற்றில் .. நலங்கள் நல்கும் நம்பெருமான்

சீறு நாகம் திகழ்சடையான் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


நீறு பூசா நெற்றியராய், நித்தம் பொய்கள் பல சொல்லி, "மாறும்" என்று மயக்குகின்ற வஞ்சர் வார்த்தை மதியேன்மின் - நெற்றியில் திருநீற்றைப் பூசாதவர்களாகித், எப்பொழுதும் பல பொய்கள் சொல்லி, "மாறுங்கள்" என்று மதியை மயக்க முயலும் வஞ்சகர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (நித்தம் - எப்பொழுதும்);

நாறு-மலர் இட்டு அடிபோற்றில் நலங்கள் நல்கும் நம்பெருமான் - வாசமலர்களைத் தூவித் திருவடியை வணங்கினால் நன்மைகள் அருளும் நம் பெருமான்; (நாறுதல் - மணம் கமழ்தல்);

சீறு நாகம் திகழ்-சடையான் - சீறுகின்ற பாம்பைச் சடையில் அணிந்தவன்;

சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்-பெருமான்;


11)

வந்தார் மண்மேல் சிலகாலம் .. வாளா வாழ்ந்தார் பின்னெரியில்

வெந்தார் வேறு பிறப்பொன்றில் .. வீழ்ந்தார் என்ற நிலைநீக்கி

நொந்தா இன்பம் தருவான்சீர் .. நுவலும் அன்பர் தமக்கெல்லாம்

செந்தீ வண்ண மேனியினான் .. சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே.


வந்தார் மண்மேல், சிலகாலம் வாளா வாழ்ந்தார், பின் எரியில் வெந்தார், வேறு பிறப்பு ஒன்றில் வீழ்ந்தார் என்ற நிலை நீக்கி - "பூமியில் பிறந்தார்; சிறிது காலம் பயனின்றி வாழ்ந்தார்; பின் இறந்து சாம்பலானார்; பின்னர் இன்னொரு பிறவி எடுத்தார்" என்று சுழல்கின்ற நிலையை நீக்கி; (வாளா - பயனின்றி; வீணே); (எரி - தீ); (அப்பர் தேவாரம் - 6.95.6 - "திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் .. .. அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே");

நொந்தா இன்பம் தருவான் சீர் நுவலும் அன்பர்-தமக்கெல்லாம் - திருப்புகழைச் சொல்லும் பக்தர்களுக்கெல்லாம் அழியாத இன்பத்தை அருள்வான்; (நொந்துதல் - அழிதல்); (நுவல்தல் - சொல்தல்);

செந்தீ-வண்ண மேனியினான் - நெருப்புப் போன்ற செம்மேனியை உடையவன்;

சிக்கல் வெண்ணெய்ப் பெருமானே - சிக்கலில் உறைகின்ற வெண்ணெய்ப்-பெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment