Saturday, September 15, 2018

04.41 - நெடுங்களம் - பூமிடை மாலையோடு

04.41 - நெடுங்களம் - பூமிடை மாலையோடு

2014-01-07

திருநெடுங்களம்

----------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு). (திருநேரிசை அமைப்பு)

(அப்பர் தேவாரம் - திருநேரிசை - 4.66.1 - "கச்சைசேர் அரவர் போலும்")


1)

பூமிடை மாலை யோடு பொன்னடி போற்று வார்கள்

பூமிமீ ளாத வாறு புரிந்தருள் செய்பு ராணர்

தே(ம்)மிகு மலர்போல் கண்ணைத் திருவடி இட்ட மாற்கு

நேமிவான் படைய ளித்தார் நெடுங்கள நாத னாரே.


பூ மிடை மாலையோடு பொன்னடி போற்றுவார்கள் பூமி மீளாதவாறு புரிந்து அருள்செய் புராணர் - ; பூக்கள் செறிந்த மாலைகளால் பொற்பாதத்தை வழிபடும் பக்தர்கள் மீண்டும் மண்ணுலகில் பிறவி அடையாதபடி விரும்பி அருளும் தொன்மையானவர்; (மிடைதல் - செறிதல்; நிறைதல்); (புராணன் - பழையோன்); (அப்பர் தேவாரம் - 6.57.2 - "என்றும் மீளா அருள் செய்வாய் போற்றி");

தே(ம்)மிகு மலர்போல் கண்ணைத் திருவடி இட்ட மாற்கு நேமி வான்-படை அளித்தார் நெடுங்கள நாதனாரே - தேன் நிறைந்த தாமரைமலர் போலக் கண்ணைத் தோண்டித் திருவடியில் தூவி வணங்கிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்தவர் திருநெடுங்களத்தில் உறையும் நாதர்; (தேம் - தேன்); (மாற்கு - திருமாலுக்கு); (நேமி - சக்கரம்); (* திருமாலுக்குச் சக்கரம் அருளியது - திருவீழிமிழலைத் தலவரலாறு);


2)

கனைகடல் வாயெ ழுந்த கடுவிடம் உண்ட கண்டர்

சுனையெனக் கங்கை தன்னைச் சுடர்ச்சடை வைத்தார் கூரார்

நுனையிலை வேலர் மார்பில் நூலினர் நாளும் போற்றி

நினைபவர் இடர்கள் நீக்கும் நெடுங்கள நாத னாரே.


கனைகடல்வாய் எழுந்த கடுவிடம் உண்ட கண்டர் - ஒலிக்கின்ற கடலில் தோன்றிய கொடிய நஞ்சை உண்ட நீலகண்டர்;

சுனையெனக் கங்கைதன்னைச் சுடர்ச்சடை வைத்தார் - சுனையைப் போலக் கங்கையை ஒளி பொருந்திய சடையில் தேக்கிவைத்தவர்; (சுனை - நீர்நிலை);

கூர் ஆர் நுனை இலை வேலர் - கூர்மையுடைய, இலை போன்ற நுனியை உடைய சூலத்தை ஏந்தியவர்;

மார்பில் நூலினர் - மார்பில் பூணூல் அணிந்தவர்;


3)

எருதமர் இறைவர் தாளை ஏத்திடும் அன்பர்க் கெல்லாம்

தருபவர் தலையொன் றேந்தித் தையலார் இடுப லிக்கு

வருபவர் மங்கை பங்கர் வார்த்தையிற் சொல்ல ஒண்ணா

நிருபமர் நீல கண்டர் நெடுங்கள நாத னாரே.


தாளை ஏத்திடும் அன்பர்க்கு எல்லாம் தருபவர் - பக்தர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் அளிப்பவர்;

தலை ஒன்று ஏந்தித் தையலார் இடு பலிக்கு வருபவர் - பிரமன் மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பெண்கள் இடும் பிச்சை ஏற்பதற்கு வருபவர்;

நிருபமர் - உவமை அற்றவர்; ஒப்பில்லாதவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.124.2 - "நிருபமன் மிழலையை நினைய வலவரே");


4)

சீரணி தமிழைப் பாடிச் சேவடி போற்றில் காப்பார்

வாரணி முலையாள் பங்கர் வானவர் வாழ்வ தற்காக்

காரணி கண்டர் நாகக் கச்சினர் கொன்றை யோடு

நீரணி சடையர் எங்கள் நெடுங்கள நாத னாரே.


சீர் - புகழ்; அணிதல் - பூணுதல்; சூடுதல்; பொருந்துதல்; போற்றில் - போற்றினால்; வாழ்வதற்கா - வாழ்வதற்காக; கார் அணி கண்டர் - கருமையை அணியும் கண்டத்தை உடையவர்; நாகக் கச்சினர் - பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர்; நீர் - கங்கை;


5)

பாரிடஞ் சூழ ஆடும் பதவிணை போற்று வாரைப்

பேரிடர் சூழா வண்ணம் பெருந்துணை யாகிக் காப்பார்

காரிழை காட்டு கண்டர் காலனைக் காய்ந்த காலர்

நேரிழை பங்கர் எங்கள் நெடுங்கள நாத னாரே.


பாரிடம் - பூதகணங்கள்; பத இணை - இரு திருவடிகள்; கார் இழை காட்டு கண்டர் - கரிய மணியைக் காட்டும் கண்டத்தை உடையவர் - நீலகண்டர்; (இழை - ஆபரணம்); காலனைக் காய்ந்த காலர் - இயமனைக் காலால் உதைத்தவர்; காலனுக்குக் காலன் ஆனவர்; (காய்தல் - அழித்தல்; கோபித்தல்); (அப்பர் தேவாரம் - 4.71.6 - "காலற் காய்ந்த காலனை"); நேரிழை பங்கர் - உமையை ஒரு பங்கில் உடையவர்; (நேரிழை - பெண்);


6)

சுற்றிவந் தேத்தும் அன்பர் துயரினைத் துடைக்கும் பண்பர்

வற்றிய தலையொன் றேந்தி வாயிலில் பலிக்கு நிற்கும்

பெற்றியர் பெண்ணர் ஆணர் பெருவிடம் உண்ட பித்தர்

நெற்றியில் கண்ணர் எங்கள் நெடுங்கள நாத னாரே.


வற்றிய தலை - உலர்ந்த தலை; (அப்பர் தேவாரம் - 6.77.1 "வாடல் தலையொன்று கையிற் கண்டேன்"); பெற்றி - இயல்பு; பெருமை; பெண்ணர் - பெண்ணாய் இருப்பவர்; ஆணர் - ஆணாய் இருப்பவர்; (அப்பர் தேவாரம் - 6.17.3 - "ஆணர் பெண்ணர்");


7)

நிலமிசை வீழ்ந்தும் நின்றும் நீள்கழல் போற்று வார்க்கு

மலைவினை நீக்கி நன்மை மல்கிட அருள்வார் மேருச்

சிலையினை வில்லா ஏந்தித் திரிபுரம் செற்று கந்தார்

நிலவணி சடையர் எங்கள் நெடுங்கள நாத னாரே.


மலைவினை நீக்கி - மலையளவு உள்ள பழவினைகளைத் தீர்த்து; "மயக்கத்தைப் போக்கி" என்றும் பொருள்கொள்ளல் ஆம்; (மலைவு - மயக்கம்); மல்குதல் - பெருகுதல்; செழித்தல்; மேருச் சிலையினை வில்லா ஏந்தித் திரிபுரம் செற்று கந்தார் - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவர்; (சிலை - மலை); (செறுதல் - அழித்தல்);


8)

தரித்தவர் நெற்றிக் கண்ணைத்; தகர்த்தவர் தக்கன் வேள்வி;

உரித்தவர் மதவே ழத்தை; ஒன்னலர் முப்பு ரத்தை

எரித்தருள் வில்லர்; வெற்பை இடந்தவி லங்கைக் கோனை

நெரித்தருள் விரலர்; எங்கள் நெடுங்கள நாத னாரே.


தரித்தவர் நெற்றிக் கண்ணைத் - நெற்றிக்கண் உடையவர்;

தகர்த்தவர் தக்கன் வேள்வி - தக்கன் செய்த வேள்வியை அழித்தவர்;

உரித்தவர் மதவேழத்தை - மதயானையின் தோலை உரித்தவர்;

ஒன்னலர் முப்புரத்தை எரித்தருள் வில்லர் - பகைவர்களது முப்புரங்களை வில்லை ஏந்தி எரித்தவர்; (ஒன்னலர் - பகைவர்);

வெற்பை இடந்த இலங்கைக்கோனை நெரித்து-அருள் விரலர் - கயிலைமலையைப் பேர்த்த இராவணனை நசுக்கிய விரலை உடையவர்; (சம்பந்தர் தேவாரம் - 2.20.9 - "மலையை அரக்கன் தணியா தெடுத்தான் உடலம் நெரித்த அணியார் விரலாய்");


9)

கூடிய வாறு போற்றில் குறைகளைத் தீர்ப்பார் திங்கள்

சூடிய முடியர் பூதம் சூழ்ந்திசை பாடக் கானில்

ஆடிய கழலர் பூமேல் அண்ணலும் அரியும் எங்கும்

நேடிய சோதி எங்கள் நெடுங்கள நாத னாரே.


கூடியவாறு - இயன்ற வகையில்; (கூடுதல் - இயலுதல்); கானில் ஆடிய கழலர் - சுடுகாட்டில் திருநடம் செய்யும் திருப்பாதர்; பூமேல் அண்ணலும் அரியும் எங்கும் நேடிய சோதி - பிரமனும் திருமாலும் மேலும் கீழும் தேடிய சோதி ஆனவர்; (நேடுதல் - தேடுதல்);


10)

நாத்திகர் பேச்சும், பண்டை நான்மறை நெறியைத் தூற்றிப்

பேத்திடும் பிட்டர் சொல்லும் பேணிடேல்; அன்பர் தம்மைக்

காத்திடர் களைவார், அம்பெய் காமனை நீறு செய்த

நேத்திரம் காட்டு நெற்றி நெடுங்கள நாத னாரே.


பேத்திடும் - பிதற்றிடும் என்பது பேத்திடும் என்று மருவி வந்தது; (பேத்துதல் - பிதற்றுதல்); பிட்டர் - பிரட்டர்கள் - மதத்துக்குப் புறம்பானவர்; நெறியினின்று வழுவினவர்கள்; அம்பு எய் காமனை நீறு செய்த - மலர்க்கணை எய்த மன்மதனைச் சாம்பலாக்கிய; நேத்திரம் காட்டு நெற்றி நெடுங்கள நாதனார் - நெற்றிக்கண்ணரான நெடுங்களப் பெருமானார்;


11)

ஆயிரந் திருநா மத்தார் ஆதிரை நாளர் ஊர்கள்

போயிரந் துண்பார் சாம்பற் பூச்சினர் புலியின் தோலர்

வாயருந் தமிழ்கள் பாட மனத்தினால் மறவா தேத்தும்

நேயருக் கன்பர் எங்கள் நெடுங்கள நாத னாரே.


ஆயிரம் திருநாமத்தார் - ஆயிரம் திருப்பெயர்கள் உடையவர்;

ஆதிரை நாளர் - திருவாதிரை என்னும் நட்சத்திரத்திற்கு உரியவர்; (அப்பர் தேவாரம் - 4.32.5 - "ஆதிரை நாளர் போலும்");

ஊர்கள் போய் இரந்து உண்பார் - பல ஊர்களில் பிச்சையெடுப்பவர்;

சாம்பற்-பூச்சினர் - திருநீற்றைப் பூசியவர்;

புலியின் தோலர் - புலித்தோலை ஆடையாக அணிந்தவர்;

வாய் அருந்-தமிழ்கள் பாட, மனத்தினால் மறவாது ஏத்தும் நேயருக்கு அன்பர் - அரிய தமிழான தேவாரம் திருவாசகம் இவற்றை வாயால் பாடி மனத்தினால் மறவாமல் போற்றும் பக்தர்களுக்கு அன்பு உடையவர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.40 - ஆலங்குடி (இரும்பூளை) - காலின்மிகு வானோர்விழ

04.40 - ஆலங்குடி (இரும்பூளை) - காலின்மிகு வானோர்விழ

2014-01-04

ஆலங்குடி (இரும்பூளை)

(தேவாரத்தில் இத்தலத்தின் பெயர் - இரும்பூளை)

---------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானே");


1)

காலின்மிகு வானோர்விழக் கடல்நஞ்சினை உண்டான்

பாலின்மிக ஆடும்பரன் பணிமாலையன் மறைகள்

நாலின்பொருள் சனகாதியர் நால்வர்க்குரை செய்ய

ஆலின்புடை அமர்ந்தானிடம் ஆலங்குடி அதுவே.


மிகுந்த தேவர்கள் வந்து திருவடியில் விழுந்து வணங்கியபொழுது, அவர்களைக் காப்பதற்காக ஆலகால விடத்தை உண்டவன்; பால்-அபிஷேகம் உடையவன்; பாம்பை மாலையாக அணிந்தவன்; நால்வேதத்தின் பொருளைs சனகாதி முனிவர்களுக்கு விளக்குவதற்காகக் கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருந்த தட்சிணாமூர்த்தி; அப்பெருமான் உறையும் இடம் ஆலங்குடி ஆகும்.

காலில் விழுதல் - பாதத்தில் விழுந்து வணங்குதல்; புகலடைதல்; ஆடுதல் - அபிஷேகம் செய்யப்பெறுதல்; பணி - நாகம்; ஆல் - கல்லால மரம்;

இலக்கணக் குறிப்புகள்:

1) இல், இன் - ஏழாம் வேற்றுமை உருபு; இக்காலத்தில் "இல்" என்ற உருபே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது;

2) புணர்ச்சிவிதி : லகர ஒற்றை அடுத்து மெல்லினம் வரின், லகரம் னகரமாகத் திரியும். (காலில் + மிகு = காலின்மிகு; பாலில் மிக = பாலின்மிக);


2)

குழலார்மொழி உமையாளொரு கூறாமகிழ் குழகன்

நிழலார்மழுப் படையோர்கரம் நிகழும்சிவ பெருமான்

அழலார்சடை அதன்மேல்பிறை அணியும்பரன் இடமாம்

அழகார்வயல் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.


குழல் ஆர் மொழி உமையாள் ஒரு கூறா மகிழ் குழகன் - குழல் போன்ற இனிய மொழி பேசும் உமையை ஒரு பாகமாக விரும்பும் இளைஞன்/அழகன்; (குழல் - புல்லாங்குழலின் இசை; ஆர்தல் - ஒத்தல்; பொருந்துதல்; குழகன் - இளைஞன்; அழகன்); நிழல் ஆர் மழுப்படை - ஒளி திகழும் மழுவாயுதம்; (நிழல் - ஒளி; நிகழ்தல் - விளங்குதல்; தங்குதல்); அழல் ஆர் சடை - தீப்போன்ற செஞ்சடை; பரன் - மேலானவன்; தருதல் - ஒரு துணைவினை; அழகு ஆர் வயல் புடை சூழ்தரும் ஆலங்குடி - அழகிய வயல்கள் நாற்புறமும் சூழ்ந்த ஆலங்குடி;


3)

பிணிதீவினை தீராயெனப் பெருமான்கழல் பேணிப்

பணிவார்களுக் கருளுஞ்சிவன் படருஞ்சடை மீது

துணிமாமதி மணமார்மலர் சூடும்பரன் இடமாம்

அணியார்வயல் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.


பிணிதீவினை - பிணியையும் தீவினையையும்; பிணிக்கின்ற தீவினையை; பேணுதல் - போற்றுதல்; துணி மா மதி - அழகிய நிலாத்துண்டம்; (துணி - துண்டம்); மணம் ஆர் மலர் - வாசனை பொருந்திய பூக்கள்; அணி ஆர் வயல் - அழகிய வயல்கள்;


4)

கொடியாரிடை மடவாளொரு கூறாவிடம் உடையான்

துடியார்த்திடச் சுடுகாட்டிடைச் சுழலும்திரு நட்டன்

இடியார்குரல் ஏறேறிடும் இறைவன்மகிழ் இடமாம்

அடியார்பலர் வழிபாடுசெய் ஆலங்குடி அதுவே.


கொடி ஆர் இடை மடவாள் ஒரு கூறா இடம் உடையான் - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;

துடி ஆர்த்திடச் சுடலைக்கு இடைச் சுழலும் திரு நட்டன் - உடுக்கைகள் ஒலித்திடச் சுடுகாட்டின் நடுவே சுழன்று திருநடம் செய்பவன்;

இடி ஆர் குரல் ஏறு ஏறிடும் இறைவன் மகிழ் இடம் ஆம் - இடி போன்ற குரலை உடைய இடபத்தின்மேல் ஏறுகின்ற கடவுள் விரும்பி உறையும் இடம் ஆகும்;

அடியார் பலர் வழிபாடு செய் ஆலங்குடி அதுவே - பல அடியவர்கள் வந்து வழிபடுகின்ற ஆலங்குடி.


5)

கலையார்மதி காலில்விழக் கண்டின்னருள் செய்தான்

மலையான்மகள் ஒருபங்கினன் வானோர்தொழ வரையைச்

சிலையாவளை வித்துப்புரம் செற்றான்மகிழ் இடமாம்

அலையாய்நிதம் அடியார்திரள் ஆலங்குடி அதுவே.


கலை ஆர் மதி - ஒற்றைக் கலை பொருந்திய சந்திரன்; வரையைச் சிலையா வளைவித்துப் புரம் செற்றான் - மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை அழித்தவன்; (வளைவித்தல் - வளைத்தல்; சம்பந்தர் தேவாரம் - 1.13.2 - "மாறார்புரம் எரியச் சிலை வளைவித்தவன்"); அலையாய் நிதம் அடியார் திரள் ஆலங்குடி - அலைபோல நாள்தோறும் பல அடியவர்கள் திரள்கின்ற ஆலங்குடி;


6)

இன்பால்தயிர் புனலால்கழல் இணையேதொழு தார்மேல்

வன்பாசம தெறிகாலனை மார்பில்லுதை வல்லான்

முன்பாலடி முனிவர்க்கறம் மொழிசெய்தவன் இடமாம்

அன்பாலடி தொழுவார்திரள் ஆலங்குடி அதுவே.


இன் பால், தயிர், புனலால் கழல் இணையே தொழுதார்மேல் - இனிய பால், தயிர், நீர் இவற்றால் ஈசன் திருவடி இணையைப் பூசித்தவரான மார்க்கண்டேயர்மேல்;

வன்-பாசமது எறி காலனை மார்பில் உதை வல்லான் - வலிய பாசத்தை வீசிய காலனை மார்பில் உதைத்த வல்லவன்; (மார்பில்லுதை - மார்பில் உதை - சந்தம் கருதி லகர ஒற்று விரித்தல் விகாரம்);

முன்பு ஆல்-அடி முனிவர்க்கு அறம் மொழிசெய்தவன் இடம் ஆம் - முன்னம் கல்லால-மரத்தின்கீழ் நான்கு முனிவர்களுக்கு அறங்கள் உரைத்த சிவபெருமான் உறையும் இடம் ஆகும்;

அன்பால் அடி தொழுவார் திரள் ஆலங்குடி அதுவே - பக்தியோடு திருவடியைத் தொழும் அன்பர்கள் திரள்கின்ற ஆலங்குடி;


7)

கடையுங்கடல் உமிழ்நஞ்சினைக் கண்டஞ்சிய தேவர்

விடையின்மிசை வருவாயருள் விமலாவெனக் காத்தான்

சடையின்மதி தங்கற்கிடம் தந்தானிடம் மேகம்

அடையும்பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.


பதம் பிரித்து:

கடையும் கடல் உமிழ் நஞ்சினைக் கண்டு அஞ்சிய தேவர்,

"விடையின்மிசை வருவாய்! அருள் விமலா!" எனக் காத்தான்;

சடையில் மதி தங்கற்கு இடம் தந்தான் இடம், மேகம்

அடையும் பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.


தங்கற்கு - தங்குவதற்கு;


8)

பிளிறுங்கரி ஒத்தான்மலை பேர்த்தான்முடி பத்தைத்

தளிரங்கழல் விரலொன்றினைத் தரைவைத்தடர் ஈசர்

ஒளிரும்பிறை சடையின்மிசை உடையார்மகிழ் இடமாம்

அளியின்னிசை பாடும்பொழில் ஆலங்குடி அதுவே.


பிளிறும் கரி ஒத்தான் மலை பேர்த்தான் முடி பத்தைத் - பிளிறுகின்ற மதயானை போன்றவனும் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டவனும் ஆன இராவணனின் பத்துத் தலைகளையும்;

தளிர் அம் கழல் விரல் ஒன்றினைத் தரை வைத்து அடர் ஈசர் - தளிர் போன்ற அழகிய மென்மையான திருவடியின் விரல் ஒன்றைத் தரையில் ஊன்றி நசுக்கிய இறைவர்; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.20 - "போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்");

ஒளிரும் பிறை சடையின்மிசை உடையார் மகிழ் இடம் ஆம் - பிரகாசிக்கும் சந்திரனைச் சடையின்மேல் அணிந்தவர் விரும்பி உறையும் தலம்;

அளி இன்னிசை பாடும் பொழில் ஆலங்குடி - வண்டுகள் இனிய இசையைப் பாடும் சோலைகள் சூழ்ந்த ஆலங்குடி;




9)

நறவந்திகழ் மலர்மேலயன் நாராயணன் இவரால்

இறையுங்கழல் முடிகாண்பதற் கியலாவெரி உருவன்

பிறைவண்டிரை சடைமேல்திகழ் பெருமான்மகிழ் இடமாம்

அறைவண்டினம் அடையும்பொழில் ஆலங்குடி அதுவே.


நறவம் திகழ் மலர்மேல் அயன் நாராயணன் இவரால் - தேன் திகழும் தாமரைப்பூமேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால்;

இறையும் கழல் முடி காண்பதற்கு இயலா எரி உருவன் - சிறிதும் கீழும் மேலும் காண்பதற்கு இயலாத ஜோதி வடிவினன்; (சம்பந்தர் தேவாரம் - 1.14.9 - "மறையும்மவை உடையானென நெடியானென இவர்கள் இறையும் அறிவொண்ணாதவன்");

பிறை, வண்-திரை சடைமேல் திகழ் பெருமான் மகிழ் இடம் ஆம் - சந்திரனும் கங்கையும் சடைமேல் விளங்கும் சிவபெருமான் விரும்பி உறையும் இடம் ஆகும்; ("வண்டிரை = 1. வண் + திரை / 2. வண்டு + இரை" என்று இருவிதமாகவும் பிரிக்கல் ஆம்; திரை - நதி; இரைதல்/இரைத்தல் - ஒலித்தல்; ஆகவே, "பிறையானது வண்டுகள் ஒலிக்கும் சடையின்மேல் விளங்குகின்ற பெருமான்" என்றும் பொருள்கொள்ளல் ஆம். "கொன்றை முதலிய பூக்களை அணிந்த சடை" என்பது வண்டுகள் ஒலிக்கும் என்றதனால் குறிப்பால் பெறப்படும்);

அறை வண்டு-இனம் அடையும் பொழில் ஆலங்குடி அதுவே - ஒலிக்கின்ற வண்டுகள் அடைகின்ற சோலை சூழ்ந்த ஆலங்குடி;


10)

பார்க்கும்விழி இலர்போலிகள் பதரொத்தவர் பாவம்

தீர்க்கும்திரு நீறற்றவர் செப்பும்வழி பேணேல்

ஆர்க்கும்கழல் போற்றில்வரம் அருளும்பரன் இடமாம்

ஆர்க்கும்குயில் அமரும்பொழில் ஆலங்குடி அதுவே.


பார்க்கும் விழி இலர் போலிகள், பதர் ஒத்தவர், பாவம் தீர்க்கும் திருநீறு அற்றவர் செப்பும் வழி பேணேல் - (கண்கள் இருந்தும்) குருடர்கள் போன்றவர்கள்; வஞ்சகர்கள்; பயனற்றவர்கள்; பாவத்தைத் தீர்க்கும் திருநீற்றைப் பூசாதவர்கள்; அவர்கள் சொல்லும் வழியை மதிக்கவேண்டா; (போலிகள் - போன்றவர்கள்; வஞ்சகர்கள்); (பதர் - பயனற்றவர்கள்; உள்ளீடற்ற நெல்);

ஆர்க்கும் கழல் போற்றில் வரம் அருளும் பரன் இடம் ஆம் - (ஒலிக்கின்ற கழல் அணிந்த) திருவடியைப் போற்றும் எவருக்கும் வரம் அருள்கின்ற பரமன் இடம் ஆகும்; (ஆர்க்கும் - எவர்க்கும்; யாருக்கும்);

ஆர்க்கும் குயில் அமரும் பொழில் ஆலங்குடி அதுவே - ஒலிக்கின்ற குயில்கள் விரும்பித் தங்கும் சோலை சூழ்ந்த ஆலங்குடி: (ஆர்த்தல் - ஒலித்தல்); (அமர்தல் - விரும்புதல்);


11)

கந்தங்கமழ் குழலிக்கிறை கைதந்திடும் துணைவன்

சந்தங்கமழ் தமிழ்மாலைகள் சாத்திப்பணி வார்க்குப்

பந்தங்களைப் பாற்றிப்பரி பாலிப்பவன் இடமாம்

அந்தண்பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.


* முதல் அடி ஆலங்குடியில் இறைவி, இறைவன் திருநாமங்களைச் சுட்டியது. இறைவி - ஏலவார்குழலி; இறைவன் - ஆபத்சகாயர்;

கந்தம் கமழ் குழலிக்கு இறை - வாசக்குழலியான உமைக்குக் கணவன்;

கைதந்திடும் துணைவன் - இடுக்கண் தீர்த்து உதவிசெய்பவன்; (கைதருதல் - வறுமை இடுக்கண் முதலியவற்றில் உதவிபுரிதல்); (துணைவன் - உதவிசெய்பவன்);

சந்தம் கமழ் தமிழ்மாலைகள் சாத்திப் பணிவார்க்குப் - பெருமானுக்குச் சந்தம் மிக்க தமிழ்ப்பாமாலைகளை அணிந்து வணங்கும் பக்தர்களுக்கு; ("சந்தம் கமழ் தமிழ்மாலைகள் சாத்திப் பணிவார்க்கு" - இச்சொற்றொடர் இடைநிலைத்தீவகமாக நின்று, "கைதந்திடும் துணைவன்" என்ற சொற்றொடரோடும், "பந்தங்களைப் பாற்றிப் பரிபாலிப்பவன்" என்ற சொற்றொடரோடும் இயைத்துப் பொருள்கொள்ளுமாறு அமைந்தது);

பந்தங்களைப் பாற்றிப் பரிபாலிப்பவன் இடம் ஆம் - வினைக்கட்டுகளை நீக்கி அருள்புரியும் சிவபெருமான் இடம் ஆகும்; (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (பரிபாலித்தல் - அனுக்கிரகித்தல்);

ந்தண் பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே - அழகிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஆலங்குடி. (அந்தண் - அம் தண்);


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

Sunday, July 1, 2018

03.06.031 - 03.06.035 - ஏழை - இடமிருக்கும் - மடக்கு

03.06 – மடக்கு

2007-10-17

3.6.31 - ஏழை - இடமிருக்கும் - மடக்கு

-------------------------------------------------

ஏழை மனமே! இறைஞ்சி அடிதொழாய்!

ஏழை பணக்காரன் என்னாமல் ஏழை

இடமிருக்கும் எம்பெருமான் வந்தருள்வான் விண்ணில்

இடமிருக்கும் இங்குமுண்(டு) இன்பு!


ஏழை - 1. அறியாமை; 2. வறியவன்; 3. பெண்; பார்வதி;

இறைஞ்சுதல் - வணங்குதல்;

இடம் - 1. இடப்-பக்கம்; 2. ஸ்தானம்;

இன்பு - இன்பம்;


ஏழை மனமே - அறிவில்லாத நெஞ்சே;

இறைஞ்சி அடிதொழாய் - (நீ) வணங்கி (அவன்) திருவடியைத் தொழுவாயாக!

ஏழை பணக்காரன் என்னாமல் - (அப்படி வணங்குபவர்) ஏழையா பணக்காரனா என்ற வேறுபாடின்றி;

ஏழை இடமிருக்கும் எம்பெருமான் வந்தருள்வான் - உமையாளை இடப்பக்கம் மகிழ்கின்ற சிவபெருமான் வந்து அருள்புரிவான்;

விண்ணில் இடம் இருக்கும் - (உனக்குச்) சிவலோகத்தில் ஓர் இடம் இருக்கும்;

இங்கும் உண்டு இன்பு - இவ்வுலகிலும் இன்பம் பெறுவாய்!

---------------------

2007-10-18

3.6.32 - திரியும் - அகத்தேற்று - மடக்கு

-------------------------------------------------

திரியும் வழிஒன்றே சிந்திப்ப தேனோ?

திரியும் மதில்எரித்தார்க்(கு) அற்புத் திரியும்

அகத்தேற்று நாதன் அருளால் அடைவாய்

அகத்தேற்று, முன்வினை அற்று.


திரிதல் - 1. கெடுதல் (perish); 2. அலைதல்; போதல்;

திரி - 3. விளக்கில் உள்ள திரி;

அற்புத்திரி - அன்பு+திரி; (எற்புடம்பு, எற்புமணி, அற்புத்தளை, என்பன ஒத்த பிரயோகம்);

அகத்தேற்று - 1. அகத்து + ஏற்று; 2. அகம்+தேற்று;

அகம் - மனம்;

தேற்று - தெளிவு;

அறுதல் - தீர்தல்; இல்லாமல் போதல்;


திரியும் வழிஒன்றே சிந்திப்பது ஏனோ - அழியும் வழியை மட்டுமே எண்ணுவது ஏன்?

திரியும் மதில் எரித்தார்க்கு அற்புத்-திரியும் அகத்து ஏற்று - விண்ணில் திரியும் முப்புரங்களை எரித்த சிவனுக்கு, மனத்துள் பக்தித்-திரியை ஏற்றுவாய்; (திரியும் - உம் எச்சவும்மை; அசை என்றும் கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - திருமுறை 4.31.1 - "உள்ளத்த திரியொன்(று) ஏற்றி உணருமா(று) உணர வல்லார் கள்ளத்தைக் கழிப்பர்");

நாதன் அருளால் முன்வினை அற்று அகத்-தேற்று அடைவாய் - தலைவனான சிவபெருமான் அருளால், பழவினைகள் தீர்ந்து மனத்தெளிவு பெறுவாய்!


இலக்கணக் குறிப்பு: ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம்:

127. மென்றொடர்க் குற்றியலுகர வீற்று மொழிகளுள்ளே சில, நாற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பணபுத்தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு.


---------------------

2007-10-22

3.6.33 - உள்ளநிலை - எய்த - மடக்கு

-------------------------------------------------

உள்ளநிலை மாறி உவப்பதென்(று) என்றெண்ணும்

உள்ளநிலை மாறும் ஒருவனை உள்ளநிலை

எய்த எரிகணை ஒன்றினால் முப்புரங்கள்

எய்த இறைவனை ஏத்து.


பதம் பிரித்து:

"உள்ள நிலை மாறி உவப்பது என்று?" என்று எண்ணும்

உள்ளநிலை மாறும், ஒருவனை உள்ள; நிலை

எய்த, எரிகணை ஒன்றினால் முப்புரங்கள்

எய்த இறைவனை ஏத்து.


உள்ள - 1. இருக்கின்ற; 2. மனத்தின்; 3. எண்ண;

உள்ளம் - மனம்;

உள்ளுதல் - நினைத்தல்; ஆராய்தல்;

உள்ளநிலை - 1. இருக்கின்ற நிலைமை; 2. மனநிலை; 3. நினைக்க (உள்ள), நிலை;

ஒருவன் - ஒப்பற்றவன்; கடவுள்;

எய்த - 1. அடைய; (எய்துதல் - அடைதல்); 2. (அம்பு) ஏவிய; (எய்தல் - பாணம் பிரயோகித்தல்);


"உள்ள நிலை மாறி உவப்பது என்று" என்று எண்ணும் உள்ளநிலை மாறும், ஒருவனை உள்ள - "இப்பொழுது இருக்கும் (இந்த இழிந்த) நிலைமை மாறி மகிழ்வது எப்பொழுது" என்று சிந்திக்கும் மனநிலை மாறும், ஒப்பற்றவனான சிவபெருமானைத் தியானித்தால்;

நிலை எய்த - நல்ல நிலையை அடைய; (அப்பர் தேவாரம் - திருமுறை 6.31.3 - "நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா");

எரிகணை ஒன்றினால் முப்புரங்கள் எய்த இறைவனை ஏத்து - எரிக்கின்ற ஓர் அம்பால் மூன்று கோட்டைகளை எய்த இறைவனைத் துதிப்பாயாக.

---------------------

2007-10-26

3.6.34 - சிறையுள - மாந்தரும் - மடக்கு

-------------------------------------------------

சிறையுள வண்டொலி செய்கின்ற, பொன்னிச்

சிறையுள ஆனைக்காத் தேவைச் சிறையுள

மாந்தரும் சிந்திக்கில் வல்வினை மாய்ந்தூறும்

மாந்தரும் தேனே மனத்து.


சிறை - 1. இறகு; 2. கரை; 3. சிறைச்சாலை;

உள - உள்ள என்பதன் இடைக்குறை;

தே / தேவு - தெய்வம்;

மாந்தரும் - 1. மாந்தர் + உம்; 2. மாந்து + அரும்;

மாந்துதல் - உண்ணுதல்; குடித்தல்; அனுபவித்தல்;


சிறை உள வண்டு ஒலி செய்கின்ற - இறகுகள் உடைய வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற;

பொன்னிச்-சிறை உள ஆனைக்காத் தேவைச் - காவிரிக்-கரையில் இருக்கும், திருவானைக்கா என்ற தலத்தில் உறையும் தெய்வத்தை;

சிறை உள மாந்தரும் சிந்திக்கில் - சிறையில் இருக்கும் (தீயன செய்த) குற்றவாளிகளே ஆயினும் அவர்கள் எண்ணினால்;

வல்வினை மாய்ந்து ஊறும் மாந்து-அரும் தேனே மனத்து - (அவர்களுடைய) கொடிய வினைகள் அழிந்து, (அவர்கள்) மனத்தில் உண்ணும் அருமையான (இன்பத்) தேனே ஊறும்;

(அப்பர் தேவாரம் - 6.87.1 - "கருதுவார் இதயத்துக் கமலத் தூறும் தேனவன்காண்);

(சம்பந்தர் தேவாரம் - 3.49.5 - "கொல்வாரேனும் குணம்பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே");

---------------------

2007-10-27

3.6.35 - பணம்நாடிச் - சோற்றுத்துறை - மடக்கு

-------------------------------------------------

பணம்நாடிச் சொல்லே பலர்வாயில் மூச்சும்

பணம்நாடிச் சும்பரால் பாழே பணம்நாடிச்

சோற்றுத் துறைப்படிப்பே போதுமா துன்பமறச்

சோற்றுத் துறையானைச் சொல்.


பதம் பிரித்து:

"பணம் நாடு"! இச்-சொல்லே பலர் வாயில்! மூச்சும்

பணம்! நாடு இச்-சும்பரால் பாழே! பணம் நாடிச்

சோற்றுத்-துறைப் படிப்பே போதுமா? துன்பம் அறச்

சோற்றுத்துறையானைச் சொல்.


நாடு - 1. தேடு; 2. தேசம்; 3. விரும்பு;

சும்பன் - மூடன்;

சோறு - 1. அன்னம் / உணவு; 2. முக்தி;

துறை - 1. கல்வியின் ஒரு பகுதி (branch of knowledge); 2. இறைவனை அடையும் வழி; இடம்;

சோற்றுத்துறை - 1. வயிற்றுப்பாட்டிற்கு உதவும் கல்வித்துறை; 2. ஒரு சிவத்தலத்தின் பெயர்;

சோற்றுத்துறையான் - திருச்சோற்றுத்துறை என்ற தலத்தில் உள்ள இறைவன்;

துன்பம் - மனவருத்தம், உடல்வருத்தம்; கெடுதி; வறுமை;

சொல்லுதல் - பேசுதல்; புகழ்தல்;


"பணம் நாடு"! இச்-சொல்லே பலர் வாயில் - "பணத்தைத் தேடு" என்ற இந்தச் சொல்லைத்தான் பலரும் சொல்கின்றார்கள்;

மூச்சும் பணம் - (அவர்களது) மூச்சும் பணமே; (பணமே அவர் மூச்சில் இழையோடுகின்றது).

இச்-சும்பரால் நாடு பாழே - இத்தகைய மூடர்களால், நாடு (அதன் கலாச்சாரம், சுற்றுப்புறம்) சீரழிகின்றது.

பணம் நாடிச் சோற்றுத்-துறைப் படிப்பே போதுமா - பணத்தை விரும்பி, வயிற்றுப்பாட்டிற்கு உதவும் துறைகளை மட்டுமே படித்தால் போதுமா?

துன்பம் அறச் சோற்றுத்துறையானைச் சொல் - எல்லாத் துன்பங்களும் விலகத் திருச்சோற்றுத்துறையில் உறையும் சிவனைத் துதிப்பாயாக! (அப்பர் தேவாரம் - திருமுறை 5.33.2 - முத்தியாக ஒருதவம் செய்திலை; அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை; தொத்து நின்றலர் சோற்றுத்துறையர்க்கே பத்தியாய்ப் பணிசெய் மடநெஞ்சமே);

---------------

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------