04.40 - ஆலங்குடி (இரும்பூளை) - காலின்மிகு வானோர்விழ
2014-01-04
ஆலங்குடி (இரும்பூளை)
(தேவாரத்தில் இத்தலத்தின் பெயர் - இரும்பூளை)
---------------
(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானே");
1)
காலின்மிகு வானோர்விழக் கடல்நஞ்சினை உண்டான்
பாலின்மிக ஆடும்பரன் பணிமாலையன் மறைகள்
நாலின்பொருள் சனகாதியர் நால்வர்க்குரை செய்ய
ஆலின்புடை அமர்ந்தானிடம் ஆலங்குடி அதுவே.
மிகுந்த தேவர்கள் வந்து திருவடியில் விழுந்து வணங்கியபொழுது, அவர்களைக் காப்பதற்காக ஆலகால விடத்தை உண்டவன்; பால்-அபிஷேகம் உடையவன்; பாம்பை மாலையாக அணிந்தவன்; நால்வேதத்தின் பொருளைs சனகாதி முனிவர்களுக்கு விளக்குவதற்காகக் கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருந்த தட்சிணாமூர்த்தி; அப்பெருமான் உறையும் இடம் ஆலங்குடி ஆகும்.
காலில் விழுதல் - பாதத்தில் விழுந்து வணங்குதல்; புகலடைதல்; ஆடுதல் - அபிஷேகம் செய்யப்பெறுதல்; பணி - நாகம்; ஆல் - கல்லால மரம்;
இலக்கணக் குறிப்புகள்:
1) இல், இன் - ஏழாம் வேற்றுமை உருபு; இக்காலத்தில் "இல்" என்ற உருபே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது;
2) புணர்ச்சிவிதி : லகர ஒற்றை அடுத்து மெல்லினம் வரின், லகரம் னகரமாகத் திரியும். (காலில் + மிகு = காலின்மிகு; பாலில் மிக = பாலின்மிக);
2)
குழலார்மொழி உமையாளொரு கூறாமகிழ் குழகன்
நிழலார்மழுப் படையோர்கரம் நிகழும்சிவ பெருமான்
அழலார்சடை அதன்மேல்பிறை அணியும்பரன் இடமாம்
அழகார்வயல் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.
குழல் ஆர் மொழி உமையாள் ஒரு கூறா மகிழ் குழகன் - குழல் போன்ற இனிய மொழி பேசும் உமையை ஒரு பாகமாக விரும்பும் இளைஞன்/அழகன்; (குழல் - புல்லாங்குழலின் இசை; ஆர்தல் - ஒத்தல்; பொருந்துதல்; குழகன் - இளைஞன்; அழகன்); நிழல் ஆர் மழுப்படை - ஒளி திகழும் மழுவாயுதம்; (நிழல் - ஒளி; நிகழ்தல் - விளங்குதல்; தங்குதல்); அழல் ஆர் சடை - தீப்போன்ற செஞ்சடை; பரன் - மேலானவன்; தருதல் - ஒரு துணைவினை; அழகு ஆர் வயல் புடை சூழ்தரும் ஆலங்குடி - அழகிய வயல்கள் நாற்புறமும் சூழ்ந்த ஆலங்குடி;
3)
பிணிதீவினை தீராயெனப் பெருமான்கழல் பேணிப்
பணிவார்களுக் கருளுஞ்சிவன் படருஞ்சடை மீது
துணிமாமதி மணமார்மலர் சூடும்பரன் இடமாம்
அணியார்வயல் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.
பிணிதீவினை - பிணியையும் தீவினையையும்; பிணிக்கின்ற தீவினையை; பேணுதல் - போற்றுதல்; துணி மா மதி - அழகிய நிலாத்துண்டம்; (துணி - துண்டம்); மணம் ஆர் மலர் - வாசனை பொருந்திய பூக்கள்; அணி ஆர் வயல் - அழகிய வயல்கள்;
4)
கொடியாரிடை மடவாளொரு கூறாவிடம் உடையான்
துடியார்த்திடச் சுடுகாட்டிடைச் சுழலும்திரு நட்டன்
இடியார்குரல் ஏறேறிடும் இறைவன்மகிழ் இடமாம்
அடியார்பலர் வழிபாடுசெய் ஆலங்குடி அதுவே.
கொடி ஆர் இடை மடவாள் ஒரு கூறா இடம் உடையான் - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;
துடி ஆர்த்திடச் சுடலைக்கு இடைச் சுழலும் திரு நட்டன் - உடுக்கைகள் ஒலித்திடச் சுடுகாட்டின் நடுவே சுழன்று திருநடம் செய்பவன்;
இடி ஆர் குரல் ஏறு ஏறிடும் இறைவன் மகிழ் இடம் ஆம் - இடி போன்ற குரலை உடைய இடபத்தின்மேல் ஏறுகின்ற கடவுள் விரும்பி உறையும் இடம் ஆகும்;
அடியார் பலர் வழிபாடு செய் ஆலங்குடி அதுவே - பல அடியவர்கள் வந்து வழிபடுகின்ற ஆலங்குடி.
5)
கலையார்மதி காலில்விழக் கண்டின்னருள் செய்தான்
மலையான்மகள் ஒருபங்கினன் வானோர்தொழ வரையைச்
சிலையாவளை வித்துப்புரம் செற்றான்மகிழ் இடமாம்
அலையாய்நிதம் அடியார்திரள் ஆலங்குடி அதுவே.
கலை ஆர் மதி - ஒற்றைக் கலை பொருந்திய சந்திரன்; வரையைச் சிலையா வளைவித்துப் புரம் செற்றான் - மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை அழித்தவன்; (வளைவித்தல் - வளைத்தல்; சம்பந்தர் தேவாரம் - 1.13.2 - "மாறார்புரம் எரியச் சிலை வளைவித்தவன்"); அலையாய் நிதம் அடியார் திரள் ஆலங்குடி - அலைபோல நாள்தோறும் பல அடியவர்கள் திரள்கின்ற ஆலங்குடி;
6)
இன்பால்தயிர் புனலால்கழல் இணையேதொழு தார்மேல்
வன்பாசம தெறிகாலனை மார்பில்லுதை வல்லான்
முன்பாலடி முனிவர்க்கறம் மொழிசெய்தவன் இடமாம்
அன்பாலடி தொழுவார்திரள் ஆலங்குடி அதுவே.
இன் பால், தயிர், புனலால் கழல் இணையே தொழுதார்மேல் - இனிய பால், தயிர், நீர் இவற்றால் ஈசன் திருவடி இணையைப் பூசித்தவரான மார்க்கண்டேயர்மேல்;
வன்-பாசமது எறி காலனை மார்பில் உதை வல்லான் - வலிய பாசத்தை வீசிய காலனை மார்பில் உதைத்த வல்லவன்; (மார்பில்லுதை - மார்பில் உதை - சந்தம் கருதி லகர ஒற்று விரித்தல் விகாரம்);
முன்பு ஆல்-அடி முனிவர்க்கு அறம் மொழிசெய்தவன் இடம் ஆம் - முன்னம் கல்லால-மரத்தின்கீழ் நான்கு முனிவர்களுக்கு அறங்கள் உரைத்த சிவபெருமான் உறையும் இடம் ஆகும்;
அன்பால் அடி தொழுவார் திரள் ஆலங்குடி அதுவே - பக்தியோடு திருவடியைத் தொழும் அன்பர்கள் திரள்கின்ற ஆலங்குடி;
7)
கடையுங்கடல் உமிழ்நஞ்சினைக் கண்டஞ்சிய தேவர்
விடையின்மிசை வருவாயருள் விமலாவெனக் காத்தான்
சடையின்மதி தங்கற்கிடம் தந்தானிடம் மேகம்
அடையும்பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.
பதம் பிரித்து:
கடையும் கடல் உமிழ் நஞ்சினைக் கண்டு அஞ்சிய தேவர்,
"விடையின்மிசை வருவாய்! அருள் விமலா!" எனக் காத்தான்;
சடையில் மதி தங்கற்கு இடம் தந்தான் இடம், மேகம்
அடையும் பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.
தங்கற்கு - தங்குவதற்கு;
8)
பிளிறுங்கரி ஒத்தான்மலை பேர்த்தான்முடி பத்தைத்
தளிரங்கழல் விரலொன்றினைத் தரைவைத்தடர் ஈசர்
ஒளிரும்பிறை சடையின்மிசை உடையார்மகிழ் இடமாம்
அளியின்னிசை பாடும்பொழில் ஆலங்குடி அதுவே.
பிளிறும் கரி ஒத்தான் மலை பேர்த்தான் முடி பத்தைத் - பிளிறுகின்ற மதயானை போன்றவனும் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டவனும் ஆன இராவணனின் பத்துத் தலைகளையும்;
தளிர் அம் கழல் விரல் ஒன்றினைத் தரை வைத்து அடர் ஈசர் - தளிர் போன்ற அழகிய மென்மையான திருவடியின் விரல் ஒன்றைத் தரையில் ஊன்றி நசுக்கிய இறைவர்; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.20 - "போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்");
ஒளிரும் பிறை சடையின்மிசை உடையார் மகிழ் இடம் ஆம் - பிரகாசிக்கும் சந்திரனைச் சடையின்மேல் அணிந்தவர் விரும்பி உறையும் தலம்;
அளி இன்னிசை பாடும் பொழில் ஆலங்குடி - வண்டுகள் இனிய இசையைப் பாடும் சோலைகள் சூழ்ந்த ஆலங்குடி;
9)
நறவந்திகழ் மலர்மேலயன் நாராயணன் இவரால்
இறையுங்கழல் முடிகாண்பதற் கியலாவெரி உருவன்
பிறைவண்டிரை சடைமேல்திகழ் பெருமான்மகிழ் இடமாம்
அறைவண்டினம் அடையும்பொழில் ஆலங்குடி அதுவே.
நறவம் திகழ் மலர்மேல் அயன் நாராயணன் இவரால் - தேன் திகழும் தாமரைப்பூமேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால்;
இறையும் கழல் முடி காண்பதற்கு இயலா எரி உருவன் - சிறிதும் கீழும் மேலும் காண்பதற்கு இயலாத ஜோதி வடிவினன்; (சம்பந்தர் தேவாரம் - 1.14.9 - "மறையும்மவை உடையானென நெடியானென இவர்கள் இறையும் அறிவொண்ணாதவன்");
பிறை, வண்-திரை சடைமேல் திகழ் பெருமான் மகிழ் இடம் ஆம் - சந்திரனும் கங்கையும் சடைமேல் விளங்கும் சிவபெருமான் விரும்பி உறையும் இடம் ஆகும்; ("வண்டிரை = 1. வண் + திரை / 2. வண்டு + இரை" என்று இருவிதமாகவும் பிரிக்கல் ஆம்; திரை - நதி; இரைதல்/இரைத்தல் - ஒலித்தல்; ஆகவே, "பிறையானது வண்டுகள் ஒலிக்கும் சடையின்மேல் விளங்குகின்ற பெருமான்" என்றும் பொருள்கொள்ளல் ஆம். "கொன்றை முதலிய பூக்களை அணிந்த சடை" என்பது வண்டுகள் ஒலிக்கும் என்றதனால் குறிப்பால் பெறப்படும்);
அறை வண்டு-இனம் அடையும் பொழில் ஆலங்குடி அதுவே - ஒலிக்கின்ற வண்டுகள் அடைகின்ற சோலை சூழ்ந்த ஆலங்குடி;
10)
பார்க்கும்விழி இலர்போலிகள் பதரொத்தவர் பாவம்
தீர்க்கும்திரு நீறற்றவர் செப்பும்வழி பேணேல்
ஆர்க்கும்கழல் போற்றில்வரம் அருளும்பரன் இடமாம்
ஆர்க்கும்குயில் அமரும்பொழில் ஆலங்குடி அதுவே.
பார்க்கும் விழி இலர் போலிகள், பதர் ஒத்தவர், பாவம் தீர்க்கும் திருநீறு அற்றவர் செப்பும் வழி பேணேல் - (கண்கள் இருந்தும்) குருடர்கள் போன்றவர்கள்; வஞ்சகர்கள்; பயனற்றவர்கள்; பாவத்தைத் தீர்க்கும் திருநீற்றைப் பூசாதவர்கள்; அவர்கள் சொல்லும் வழியை மதிக்கவேண்டா; (போலிகள் - போன்றவர்கள்; வஞ்சகர்கள்); (பதர் - பயனற்றவர்கள்; உள்ளீடற்ற நெல்);
ஆர்க்கும் கழல் போற்றில் வரம் அருளும் பரன் இடம் ஆம் - (ஒலிக்கின்ற கழல் அணிந்த) திருவடியைப் போற்றும் எவருக்கும் வரம் அருள்கின்ற பரமன் இடம் ஆகும்; (ஆர்க்கும் - எவர்க்கும்; யாருக்கும்);
ஆர்க்கும் குயில் அமரும் பொழில் ஆலங்குடி அதுவே - ஒலிக்கின்ற குயில்கள் விரும்பித் தங்கும் சோலை சூழ்ந்த ஆலங்குடி: (ஆர்த்தல் - ஒலித்தல்); (அமர்தல் - விரும்புதல்);
11)
கந்தங்கமழ் குழலிக்கிறை கைதந்திடும் துணைவன்
சந்தங்கமழ் தமிழ்மாலைகள் சாத்திப்பணி வார்க்குப்
பந்தங்களைப் பாற்றிப்பரி பாலிப்பவன் இடமாம்
அந்தண்பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே.
* முதல் அடி ஆலங்குடியில் இறைவி, இறைவன் திருநாமங்களைச் சுட்டியது. இறைவி - ஏலவார்குழலி; இறைவன் - ஆபத்சகாயர்;
கந்தம் கமழ் குழலிக்கு இறை - வாசக்குழலியான உமைக்குக் கணவன்;
கைதந்திடும் துணைவன் - இடுக்கண் தீர்த்து உதவிசெய்பவன்; (கைதருதல் - வறுமை இடுக்கண் முதலியவற்றில் உதவிபுரிதல்); (துணைவன் - உதவிசெய்பவன்);
சந்தம் கமழ் தமிழ்மாலைகள் சாத்திப் பணிவார்க்குப் - பெருமானுக்குச் சந்தம் மிக்க தமிழ்ப்பாமாலைகளை அணிந்து வணங்கும் பக்தர்களுக்கு; ("சந்தம் கமழ் தமிழ்மாலைகள் சாத்திப் பணிவார்க்கு" - இச்சொற்றொடர் இடைநிலைத்தீவகமாக நின்று, "கைதந்திடும் துணைவன்" என்ற சொற்றொடரோடும், "பந்தங்களைப் பாற்றிப் பரிபாலிப்பவன்" என்ற சொற்றொடரோடும் இயைத்துப் பொருள்கொள்ளுமாறு அமைந்தது);
பந்தங்களைப் பாற்றிப் பரிபாலிப்பவன் இடம் ஆம் - வினைக்கட்டுகளை நீக்கி அருள்புரியும் சிவபெருமான் இடம் ஆகும்; (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (பரிபாலித்தல் - அனுக்கிரகித்தல்);
அந்தண் பொழில் புடைசூழ்தரும் ஆலங்குடி அதுவே - அழகிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஆலங்குடி. (அந்தண் - அம் தண்);
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment