04.46 - பறியலூர் (பரசலூர்) - வெறியன் தக்கன்செய்
2014-01-20
பறியலூர் (பரசலூர்)
----------------------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(அப்பர் தேவாரம் - 5.81.1 - "சிட்டனைச் சிவனை");
(சம்பந்தர் தேவாரம் - 3.50.1 - "விரும்பும் திங்களும்");
1)
வெறியன் தக்கன்செய் வேள்வி தகர்த்தவர்
பொறிய ராவினைப் பூண்ட சடையினர்
மறியர் கையில் மழுவர் மகிழிடம்
பறிய லூரைப் பரவிப் பணிமினே.
வெறியன் தக்கன்செய் வேள்வி தகர்த்தவர் - ஆணவம் மிக்க தக்கன் செய்த வேள்வியை அழித்தவர்; (வெறி - கோபம்; சினம்; மதம்; அறியாமை);
பொறி அராவினைப் பூண்ட சடையினர் - படப்பொறிகள் திகழும் பாம்பைச் சடையில் அணிந்தவர்; (பொறி - புள்ளி; வரி);
மறியர் கையில் மழுவர் மகிழ் இடம் - கையில் மான்கன்றையும் மழுவையும் ஏந்திய சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் ஆன; (மறி - மான் கன்று); (இலக்கணக் குறிப்பு: "கையில்" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைக்க);
பறியலூரைப் பரவிப் பணிமின் - திருப்பறியலூரைப் போற்றிப் பணியுங்கள்; (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);
2)
குறியி லாது குவலயத் தாடிக்கூற்(று)
எறியும் பாசத் திடர்ப்படா முன்னமே
வெறியி லங்கிடு மென்மலர் தூவிநம்
பறிய லூரரன் பாதம் பணிமினே.
குறி இலாது குவலயத்து ஆடிக் - குறிக்கோள் இல்லாமல் இப்பூமியில் உழன்று; (குறி - குறிக்கோள்); (குவலயம் - பூமி);
கூற்று எறியும் பாசத்து இடர்ப்படா முன்னமே - காலன் வீசும் பாசத்தால் துன்பப்படுவதன் முன்னரே;
வெறி இலங்கிடு மென்மலர் தூவி - வாசனை கமழும் மென்மலர்களைத் தூவி; (வெறி - வாசனை);
நம் பறியலூர் அரன் பாதம் பணிமினே - திருப்பறியலூரில் உறைகின்ற நம் ஹரனது திருவடியை வணங்குங்கள்;
3)
கோடி கோடி குவித்திருந் தென்பயன்
நாடி வந்து நமன்தமர் சூழுங்கால்
ஈடி லாதவன் ஏர்கொள் பறியலூர்
ஆடி பாதம் அடைந்து மகிழ்மினே.
கோடி கோடி குவித்திருந்து என் பயன் - - பெருஞ்செல்வம் சேர்த்துவைத்து என்ன பிரயோஜனம்;
நாடி வந்து நமன் தமர் சூழுங்கால் - தேடிவந்து எமதூதர்கள் சூழ்ந்துகொள்ளும்பொழுது;
ஈடு இலாதவன் - ஒப்பற்றவன்;
ஏர் கொள் பறியலூர் ஆடி பாதம் அடைந்து மகிழ்மினே - அழகிய திருப்பறியலூரில் உறைகின்ற கூத்தன் திருவடியை அடைந்து இன்புறுங்கள்;
4)
விரவ லார்புரம் வெந்தற வில்லினில்
அரவை நாணென ஆர்த்தவன் எங்கணும்
பரவு நஞ்சினை உண்ட பறியலூர்ப்
பரமன் பாதம் பரவிப் பணிமினே.
விரவலார் புரம் வெந்து அற வில்லினில் அரவை நாண் என ஆர்த்தவன் - பகைவர்களது முப்புரங்களும் வெந்து அழியும்படி வில்லில் பாம்பை நாணாகக் கட்டியவன்; (விரவலார் - பகைவர்); (ஆர்த்தல் - கட்டுதல்);
எங்கணும் பரவு நஞ்சினை உண்ட - எங்கும் பரவிய ஆலகால விடத்தை உண்ட; (எங்கணும் - எங்கும்);
பறியலூர்ப் பரமன் பாதம் பரவிப் பணிமினே - திருப்பறியலூர்ப் பரமனது திருவடியைத் துதித்து வணங்குங்கள்; (பரவுதல் - துதித்தல்);
5)
காம்பை வென்றதோட் காரிகை காதலன்
சாம்பல் பூசி சடையினிற் சந்திரன்
பாம்ப ணிந்த பரமன் பறியலூர்
நாம்ப ணிந்து பரவிட நன்மையே.
காம்பை வென்ற தோள் காரிகை - மூங்கில் போன்ற புயத்தை உடைய உமாதேவி; (காம்பு - மூங்கில்); ("முக்கண் + பரமன் = முக்கட்பரமன்" என்று ஆவதுபோல், "தோள் + காரிகை = தோட்காரிகை); (சம்பந்தர் தேவாரம் - 3.102.1 - "காம்பினை வென்றமென் றோளி பாகங் கலந்தான்");
சாம்பல் பூசி - திருநீற்றைப் பூசியவன்;
பறியலூர் நாம் பணிந்து பரவிட நன்மையே - அப்பெருமான் உறையும் திருப்பறியலூரைப் பணிந்து போற்றினால் நன்மை விளையும்;
6)
சக்க ரத்தாற் சலந்தரற் செற்றவன்
முக்கண் மூர்த்தி முடிமிசை ஆற்றனோர்
பக்கம் பாவையை வைத்த பறியலூர்ச்
சொக்கன் பாதம் துதித்திட நன்மையே.
சக்கரத்தால் சலந்தரற் செற்றவன் - சக்கரத்தால் சலந்தராசுரனை அழித்தவன்; (இலக்கணக் குறிப்பு: "சலந்தரற் செற்றவன் - சலந்தரனைச் செற்றவன்" - பொருளின் தெளிவு கருதி, இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணைப் பெயர் ஈற்று னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்).
முடிமிசை ஆற்றன் - கங்காதரன்;
சொக்கன் - அழகன்; சிவன்;
இலக்கணக் குறிப்பு: ஆறுமுக நாவலரின் இலக்கணச்சுருக்கத்திலிருந்து: #101 - உயர்திணைப் பெயரீற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.
7)
ஆனை ஈருரி போர்த்த அழகனை
வானைக் காத்த மணிமிடற் றண்ணலைப்
பானெய் ஆடி மகிழும் பறியலூர்க்
கோனைக் கும்பிடக் கூடிடும் நன்மையே.
ஆனை ஈர்-உரி போர்த்த அழகனை - யானையின் உரித்த ஈரத்தோலைப் போர்த்த அழகனை; (ஈர் - ஈரம்; ஈர்த்தல் - உரித்தல்); ( உரி - தோல்);
வானைக் காத்த மணிமிடற்று அண்ணலை - தேவர்களைக் காத்த நீலகண்டனை; (வான் - தேவர்கள்);
பால் நெய் ஆடி மகிழும் - பால் நெய் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுவதை ஏற்கின்ற; (பால் + நெய் = பானெய்);
பறியலூர்க் கோனைக் கும்பிடக் கூடிடும் நன்மையே - பறியலூர்ப் பெருமானை வணங்கினால் நன்மை வந்தடையும்;
8)
புத்தி யின்றிப் பொருப்பசைத் தான்மிகக்
கத்து மாறொரு கால்விரல் ஊன்றினார்
பத்தி செய்யவாள் நல்கு பறியலூர்ப்
பித்தர் தாளிணை பேணிப் பரவுமே.
புத்தியின்றிப் பொருப்பு அசைத்தான் - அறிவிழந்து கயிலைமலையை அசைத்த இராவணன்; (பொருப்பு - மலை);
மிகக் கத்துமாறு ஒரு கால்விரல் ஊன்றினார் - அவன் பெரிதும் ஓலமிடும்படி திருவடியின் விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவர்;
பத்தி செய்ய வாள் நல்கு - பின் இராவணன் பக்தியோடு பாடிப் பணியவும், அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளைக் கொடுத்த;
பறியலூர்ப் பித்தர் தாளிணை பேணிப் பரவுமே - திருப்பறியலூரில் உறைகின்ற, பேரன்பு உடைய சிவபெருமானாரின் இரு-திருவடிகளை வாழ்த்தி வணங்குங்கள்;
9)
வென்றி வெள்விடை ஊர்தியன் வேடனாய்ச்
சென்று பார்த்தற் கருளினான் பண்டொரு
பன்றி புள்போற்று சோதி பறியலூர்க்
கொன்றை சூடியைக் கும்பிட நன்மையே.
வென்றி வெள்விடை ஊர்தியன் - வெற்றியுடைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்; (வென்றி - வெற்றி);
வேடனாய்ச் சென்று பார்த்தற்கு அருளினான் - காட்டில் ஒரு வேடன் கோலத்தில் சென்று அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அளித்தவன்;
பண்டு ஒரு பன்றி புள் போற்று சோதி - முன்பு ஒரு பன்றியும் அன்னமும் (மாலும் அயனும்) (அடிமுடி தேடிக் காணாது) போற்றிய ஜோதிவடிவினன்;
பறியலூர்க் கொன்றை சூடியைக் கும்பிட நன்மையே - பறியலூரில் உறையும் கொன்றைமலர் சூடிய பெருமானை வணங்கினால் நன்மை வந்தடையும்;
10)
போகும் மார்க்கம் அறியார் புகல்பொய்கள்
சோகம் ஆக்கிடும் தொண்டர்கள் அன்பினால்
பாகம் மங்கையை வைத்தான் பறியலூர்
ஏகன் பேர்சொல்லி இன்புற் றிருப்பரே.
போகும் மார்க்கம் அறியார் புகல் பொய்கள் சோகம் ஆக்கிடும் - செல்லும் நெறியை அறியாதவர்கள் சொல்லும் பொய்கள் துக்கத்தை விளைக்கும்;
அன்பினால் - இடைநிலைத் தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைக்கலாம் - 1. "தொண்டர்கள் அன்பினால் ... பேர் சொல்லி..."; 2) "அன்பினால் மங்கையைப் பாகம் வைத்தான்";
ஏகன் - ஒருவன்; கடவுள்; (திருவாசகம் - சிவபுராணம் - "ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க");
11)
துணிவெண் திங்களைச் சூளா மணியென
அணியும் அஞ்சடை யானை அகலத்தில்
பணியைத் தாரெனப் பூணும் பறியலூர்
மணியை வாழ்த்திட வாழ்வினில் இன்பமே.
துணி வெண் திங்களைச் சூளாமணி என அணியும் அம்-சடையானை - வெண்திங்களின் துண்டத்தைச் சூளாமணி போல் அணிகின்ற அழகிய சடையை உடையவனை; (துணி - துண்டம்);
அகலத்தில் பணியைத் தார் எனப் பூணும் - மார்பில் பூமாலை போல் பாம்பை அணிகின்ற; (அகலம் - மார்பு); (பணி - பாம்பு); (தார் - மாலை);
பறியலூர் மணியை வாழ்த்திட வாழ்வினில் இன்பமே - திருப்பறியலூரில் உறைகின்ற மாணிக்கம் போன்ற பெருமானை வாழ்த்தினால் வாழ்வில் இன்பமே மிகும்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment