Monday, September 17, 2018

04.51 - சிவசைலம் - வெண்பிறை விடநாகம்

04.51 - சிவசைலம் - வெண்பிறை விடநாகம்

2014-02-15

4.51 - சிவசைலம்

-------------------------------------------

(கலிவிருத்தம் - விளம் காய் விளம் காய் - வாய்பாடு;

விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி காய்ச்சீரும் வரலாம்)

(சுந்தரர் தேவாரம் - 7.29.3 - "பாடுவார் பசிதீர்ப்பாய்");

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி");


1)

வெண்பிறை விடநாகம் வேணியில் அணிவோனே

கண்புனை நுதலானே கடுவினை தீர்த்தருளாய்

பண்பயில் மொழிமாது பரமகல் யாணியொடும்

தெண்புனற் கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.


* சிவசைலத்தில் இறைவன், இறைவி திருநாமங்கள் - சிவசைலநாதர், பரம-கல்யாணி;

விடநாகம் - விஷமுடைய நாகப்பாம்பு; வேணி - சடை; நுதல் - நெற்றி; கடுவினை - கொடிய வினை; தெண் புனல் - தெளிந்த நீர்; கடனா - சிவசைலத்தில் ஓடும் நதியின் பெயர்; அமர்தல் - விரும்புதல்; உறைதல்;


2)

வரைதனை வளைவித்து மாற்றலர் புரமெய்தாய்

அரைதனில் அரவார்த்தாய் அயன்தலைப் பலிகொள்வாய்

குரைகழல் தொழுவேன்றன் கொடுவினை தீர்த்தருளாய்

திரைமலி கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.


வரைதனை வளைவித்து மாற்றலர் புரம் எய்தாய் - மலையை வில்லாக வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவனே; (வரை - மலை); (மாற்றலர் - பகைவர்); (வளைவித்தல் - வளைத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.2 - "மலையார் சிலையா வளைவித்தவனே");

அரைதனில் அரவு ஆர்த்தாய் - பாம்பை அரைநாணாகக் கட்டியவனே; (ஆர்த்தல் - கட்டுதல்);

குரைகழல் தொழுவேன்-ன் கொடுவினை தீர்த்தருளாய் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியைத் தொழும் என்னுடைய கொடிய வினையைத் தீர்த்தருள்க;

திரை மலி கடனா பாய் சிவசைலம் அமர்ந்தவனே - அலைகள் மிக்க கடனாநதி பாய்கின்ற சிவசைலத்தில் விரும்பி உறைபவனே; (திரை - அலை);


3)

சாம்பலை உடற்பூசித் தாளிணை தனையென்றும்

ஓம்பிடும் ஒருமாணி உயிர்க்குறு துணையானாய்

பாம்பணி மணிமார்பா பழவினை தீர்த்தருளாய்

தேம்புனற் கடனாபாய் சிவசைலம் அமர்ந்தவனே.


சாம்பல் - திருநீறு; ஓம்புதல் - போற்றுதல்; பாம்பு அணி மணி மார்பா - பாம்பை மாலையாக அழகிய பவளமார்பில் அணிந்தவனே; தேம்புனல் - இனிய நீர்;


4)

வாயினில் தமிழ்மாலை மறப்பிலா அடியார்க்குத்

தாயினும் நல்லவனே சங்கரா ஒருகண்ணில்

தீயினை உடையானே தீவினை தீர்த்தருளாய்

சேயிழை ஒருகூறா சிவசைலம் அமர்ந்தவனே.


தமிழ்மாலை - தேவாரம், திருவாசகம், முதலியன; மறப்பிலா - மறப்பு இலா - மறத்தல் இல்லாத; சேயிழை - பெண் - உமாதேவி; ஒரு கூறா - ஒரு கூறனே - ஒரு பங்காக உடையவனே;


5)

வான்மனம் மிகவாடி வணங்கிட விடமுண்டாய்

மான்மறி மழுவேந்தீ மதகரி உரிமூடீ

பான்மதிச் சடையானே பழவினை தீர்த்தருளாய்

தேன்மலி பொழில்சூழ்ந்த சிவசைலம் அமர்ந்தவனே.


வான் - தேவர்கள்; மான்மறி மழுந்தீ - மான்கன்றையும் மழுவையும் ஏந்தியவனே; மதகரி உரிமூடீ - மதயானையின் தோலைப் போர்த்தவனே; பால்மதிச் சடையானே - பால் போன்ற வெண்ணிறப் பிறைச்சந்திரனை சடையில் அணிந்தவனே; (பால்+மதி = பான்மதி); தேன் - வாசனை; வண்டு;


6)

கூனணி மதிநாகம் கூவிளம் புனைவோனே

மானன விழிமாது மருவிய மணவாளா

கானகம் தனிலாடீ கடுவினை தீர்த்தருளாய்

தேனறை பொழில்சூழ்ந்த சிவசைலம் அமர்ந்தவனே.


கூன் அணி மதி, நாகம், கூவிளம் புனைவோனே - வளைந்த அழகிய சந்திரனையும், பாம்பையும், வில்வத்தையும் சூடியவனே; (கூன் - வளைவு); (அணி - அழகு; அணிதல் - பொருந்துதல்); (கூவிளம் - வில்வம்);

மான் அன விழி மாது மருவிய மணவாளா - மான் போன்ற விழியுடைய உமைக்குக் கணவனே; (அன - அன்ன - போன்ற); (மருவுதல் - கலத்தல்; தழுவுதல்);

கானகம்-தனில் ஆடீ - சுடுகாட்டில் ஆடுபவனே; கடுவினை - கொடிய வினைகள்; தேன் அறை பொழில் - வண்டுகள் முரலும் சோலை; (தேன் - வண்டு);


7)

பிறையணி சடையானே பெண்ணொரு புடையானே

கறையணி மிடறானே கண்ணுதல் உடையானே

துறைபல அடைபெம்மான் தொல்வினை தீர்த்தருளாய்

சிறையளி முரல்சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.


புடை - பக்கம்; மிடறானே - கண்டனே; (மிடறு - கண்டம்); கண்ணுதல் - நெற்றிக்கண்; துறை பல அடை பெம்மான் - பல துறைகளால் அடையப்பெறும் பெருமானே; (துறை - வழி); (பெம்மான் - அண்மை விளி; - பெம்மானே; பெருமானே); சிறை அளி முரல் சோலை - சிறகுகளையுடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் பொழில்; (சிறை - இறகு); (அளி - வண்டு);


8)

மழுவலன் உடையாய்நின் மலைபெயர் இலங்கைக்கோன்

அழுதிட அடர்பாதா அணிமலர்க் குழல்மாது

தழுவிய தடமார்பா பழவினை தீர்த்தருளாய்

செழுமலர் மலிசோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.


மழு வலன் உடையாய் - மழுப்படையை வலக்கையில் உடையவனே; (வலன் - வலம் - வலப்பக்கம்);

நின் மலை பெயர் இலங்கைக்கோன் அழுதிட அடர்-பாதா - உன் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அழும்படி (அம்மலையின்மேல் விரலை ஊன்றி) அவனை நசுக்கியவனே; (அடர்த்தல் - நசுக்குதல்);

அணிமலர்க் குழல்-மாது தழுவிய தட-மார்பா - அழகிய மலர்களைக் கூந்தலில் அணிந்த உமாதேவி தழுவிய, அகன்ற மார்பினனே; (தடம் - பெருமை; அகலம்); (இராவணன் கயிலைமலையைப் பெயர்த்தபொழுது உமை அஞ்சி ஈசனைத் தழுவியதைச் சுட்டியது);

பழவினை தீர்த்தருளாய் - என் பழைய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்வாயாக;

செழு மலர் மலி சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே - செழுமையான மலர்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த சிவசைலத்தில் எழுந்தருளிய சிவபெருமானே;


9)

அன்றுல களந்தானும் அணிமலர் மிசையானும்

சென்றடி முடிகாணாத் தீயென உயர்நாதா

உன்றனைப் பணிவேன்றன் உறுவினை ஒழித்தருளாய்

தென்றலில் மணம்வீசும் சிவசைலம் அமர்ந்தவனே.


அன்று உலகு அளந்தானும் அணிமலர் மிசையானும் - முன்பு (மஹாபலியிடம் மூவடி மண் யாசித்து) உலகத்தையே அளந்த திருமாலும், அழகிய தாமரைமலர்மேல் உறையும் பிரமனும்;

சென்று அடி முடி காணாத் தீன உயர்-நாதா - தேடிச் சென்றும் அடிமுடி காணா இயலாத ஜோதி என ஓங்கிய தலைவனே;

உன்றனைப் பணிவேன்-ன் உறுவினை ஒழித்தருளாய் - உன்னைப் பணியும் என்னுடைய மிகுந்த வினைகளைத் தீர்த்தருள்க; (உறுதல் - இருத்தல்; மிகுதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.121.10 - "கைதொழுதெழும் அவர் உறுவினை கெடல் அணுகுதல் குணமே");


10)

மெய்ம்மையை அறியாத மிண்டர்கள் உரைசெய்யும்

பொய்ம்மைகள் பொருளல்ல புரிசடைப் பெருமானே

எம்மிறை என்றுகழல் ஏத்துவார்க் கருள்செல்வன்

செம்மலர் திகழ்சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே.


மெய்ம்மையை அறியாத மிண்டர்கள் உரைசெய்யும் பொய்ம்மைகள் பொருள் அல்ல - (சத்தியத்தை) மெய்ப்பொருளை (/உண்மையை) அறியாத கல்நெஞ்சர்கள் சொல்லும் பொய்கள் பொருளற்றவை; (பொருள் - தத்துவம்; மதிக்கப்படுவது);

"புரி-சடைப் பெருமானே எம்றை" என்று கழல் ஏத்துவார்க்கு அருள் செல்வன் - "முறுக்குண்ட சடையை உடைய பெருமானே எம் இறைவன் (/இறைவா)" என்று போற்றிக் கழல் அணிந்த திருவடியைத் துதிக்கும் பக்தர்களுக்கு வரங்களை அருளும் செல்வன்; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்); ("எம் இறை" என்பதை அண்மைவிளியாக "எம் இறைவா" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (செல்வன் - எல்லாத் திருவும் உடையவன்) ; (அப்பர் தேவாரம் - 6.87.1 - "சிவனவன்காண் சிவபுரத்து எம் செல்வன்தானே"):

செம்மலர் திகழ்-சோலைச் சிவசைலம் அமர்ந்தவனே - சிறந்த மலர்கள் திகழும் சோலை சூழ்ந்த சிவசைலத்தில் எழுந்தருளிய சிவபெருமான்; (- ஈற்றசை);


11)

முன்னடு முடிவானாய் மூளெரி வடிவானாய்

உன்னடி போற்றிடுவார் ஊழ்வினை பாற்றிடுவாய்

சென்னியில் நதியானே சிவசைலப் பதியானே

பன்னகம் அணிவோனே பதமலர் பணிவேனே.


முன் நடு முடிவு ஆனாய் - ஆதியும் நடுவும் அந்தமும் ஆனவனே; (திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.8 - "முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்");

மூள் எரி வடிவு ஆனாய் - மூளும் சோதி வடிவினனே;

உன் அடி போற்றிடுவார் ஊழ்வினை பாற்றிடுவாய் - உன் திருவடிகளைப் புகழும் பக்தர்களுடைய பழவினைகளைத் தீர்ப்பவனே; (ஊழ்வினை - பழவினை); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.76.1 - "வாஞ்சியத் துறையும் ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலியஒட்டாரே");

சென்னியில் நதியானே சிவசைலப் பதியானே - கங்காதரனே, சிவசைலத் தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.

பன்னகம் அணிவோனே பதமலர் பணிவேனே - பாம்பை அணிந்தவனே, உன் பாதமலரை வணங்குவேன். (பன்னகம் - பாம்பு);

குறிப்பு : இப்பாடலில் அடிகள்தோறும் 2-ஆம் 4-ஆம் சீர்களிடையே எதுகை/இயைபுத்தொடை அமைந்துள்ளது.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment