04.42 - பொது - சொல்லக் குதிக்கும் என் நெஞ்சு
2014-01-11
பொது - சொல்லக் குதிக்கும் என் நெஞ்சு
----------------------
(வஞ்சிவிருத்தம் - மா மா காய் - வாய்பாடு)
(எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")
1)
கல்லைக் கொண்டு கழல்தொழினும்
எல்லை இன்றி இனிதருள்வான்
கொல்லை ஏற்றுக் கோமான்சீர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.
* முதல் இரண்டு அடிகள் - சாக்கியநாயனார் வரலாற்றைச் சுட்டின;
கொல்லை ஏற்றுக் கோமான் சீர் - இடபவாகனம் இடைய தலைவனது புகழை; (அப்பர் தேவாரம் - 5.33.1 - "கொல்லை யேற்றினர்" - கொல்லை ஏறு - முல்லை நிலத்துக்குரிய இடபம்); (திருவிசைப்பா - 9.19.3 - "கொல்லை விடையேறி" - "கொல் விடை" என்பது ஐகாரம் பெற்று நின்றது);
சொல்லக் குதிக்கும் என் நெஞ்சே - சொல்ல என் மனம் துள்ளும்; (குதித்தல் - துள்ளுதல்; பாய்தல்; கூத்தாடுதல்);
2)
வல்ல ரண்கள் மாயமலை
வில்லை ஏந்து வீரனவன்
நல்ல நாமம் நாவினிக்கச்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.
வல்-அரண்கள் மாய மலை-வில்லை ஏந்து வீரனவன் - வலிய முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக ஏந்திய வீரன்;
3)
பல்லில் ஓட்டிற் பலிகொள்ளச்
செல்லும் செல்வன் சிவபெருமான்
அல்லில் ஆடும் அவன்புகழைச்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.
பல்-இல் ஓட்டில் பலிகொள்ள - பல்லில்லாத மண்டையோட்டில் பிச்சை ஏற்க; பல இல்லங்களில் மண்டையோட்டில் பிச்சை ஏற்க; (பல்லில் - பல் இல் - 1. பல் இல்லாத; 2. பல வீடுகளில்);
அல் - இரவு;
4)
வெல்ல வந்த வினைப்பகையை
ஒல்லை ஓட்டி உய்திதர
வல்ல மங்கை பங்கன்சீர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.
ஒல்லை - சீக்கிரம்; உய்தி - உய்வு;
5)
நெல்லின் கதிரார் நீள்வயல்சூழ்
நல்லம் நகரான் நரையேற்றன்
புல்லும் உமையோர் புடையான்பேர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.
நல்லம் - திருநல்லம் (கோனேரிராஜபுரம்); நரை ஏற்றன் - வெள்ளை இடப ஊர்தியான்; புல்லுதல் - தழுவுதல்; புடை - பக்கம்;
6)
வெல்லம் பைந்து விடுகருப்பு
வில்லன் உடலை விழித்தழித்தான்
நல்லன் சடையில் நதியன்பேர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.
வெல்-அம்பு ஐந்து விடு கருப்பு-வில்லன் - வெல்லும் ஐந்து மலர்க்கணைகளைப் பிரயோகிக்கின்ற, கரும்பை வில்லாக உடைய மன்மதன்; (குறிப்பு : வில்லை உடையவன் என்பது வில்லன், வில்லான், வில்லி, என்றெல்லாம் வரும். உதாரணம்: அப்பர் தேவாரம் - 4.66.8 - "பருப்பத வில்லர் போலும்");
நல்லன் - நல்லவன்;
7)
அல்லும் பகலும் அடிபோற்று
நல்லன் பருக்கா நமற்செற்றான்
எல்லி ஆடும் ஈசன்பேர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.
அல்லும் பகலும் அடிபோற்று நல்-அன்பருக்கா நமற் செற்றான் - இராப்பகலாகத் திருவடியை வழிபட்ட நல்ல பக்தரான மார்கண்டேயருக்காகக் காலனை உதைத்து அழித்தான்; ("நமனைச் செற்றான்" என்பது இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி, "நமற்செற்றான்" என்று ன் ஒற்று ற் ஒற்றாகத் திரிந்து வரும்);
எல்லி - இரவு;
8)
கல்லைப் பெயர்த்தான் கதறியழ
மெல்ல விரலை வெற்பிட்டான்
முல்லை முறுவல் உமைகோன்சீர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.
கல்லைப் பெயர்த்தான் கதறியழ மெல்ல விரலை வெற்பு இட்டான் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் கதறி அழும்படி சிறிதளவே தன் பாதவிரல் ஒன்றை மலைமேல் ஊன்றியவன்; (கல் - மலை); (வெற்பு - மலை); (சம்பந்தர் தேவாரம் - 2.18.8 - "இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத் துலங்கவ் விரல் ஊலூன்றலும் தோன்றலனாய்");
முல்லை முறுவல் உமை-கோன் சீர் - முல்லையரும்பு போலும் பற்களையுடைய உமைக்குத் தலைவனான சிவபெருமானது புகழை; (சுந்தரர் தேவாரம் - 7.20.5 - "முல்லை முறுவலுமை ஒரு பங்குடை முக்கணனே");
9)
கல்லும் கரியான் அயன்காணா
எல்லை இல்லா எரியானான்
வெல்லங் கழலான் மிகுபுகழைச்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.
கல்லும் கரியான் அயன் காணா எல்லை இல்லா எரி ஆனான் - நிலத்தை அகழ்ந்த திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாத எல்லையற்ற ஜோதி ஆனவன்; (கல்லுதல் - தோண்டுதல்); (கரியான் - திருமால்);
வெல்லங்கழலான் - வெல் கழலான், அம் கழலான் - வெல்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியை உடையவன், அழகிய கழல் அணிந்த திருவடியை உடையவன்;
10)
புல்லர் புகலும் பொய்யுரைகள்
அல்லற் புகுத்தும் அறிவோமே
வல்லன் மழுவன் வரதன்பேர்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.
புல்லர் புகலும் பொய்யுரைகள் அல்லற் புகுத்தும் அறிவோமே - கீழோர்கள் சொல்லும் பொய்ம்மை நிறைந்த பேச்சுகள் கேட்பவரைத் துன்பத்தில் ஆழ்த்தும் என்று அறிவோம்;
வல்லன் மழுவன் வரதன் பேர் சொல்லக் குதிக்கும் என் நெஞ்சே - சர்வ வல்லமை உடையவனும், மழுவாளை ஏந்தியவனும், வரம் அளிப்பவனுமான சிவபெருமானது திருநாமத்தையும் புகழையும் சொல்ல என் மனம் துள்ளும்;
11)
மல்லெண் தோளன் மணிகண்டன்
கொல்லும் கூற்றைக் குமைகாலன்
தில்லைக் கூத்தன் திருப்புகழைச்
சொல்லக் குதிக்கும் என்னெஞ்சே.
மல் எண் தோளன் - வலிமை மிக்க எட்டுத் தோள்களை உடையவன்; (மல் - வலிமை);
மணிகண்டன் - நீலகண்டன்;
கொல்லும் கூற்றைக் குமை-காலன் - காலகாலன்; (குமைத்தல் - அழித்தல்);
திருப்புகழ் - இறைவனது புகழ்;
பிற்குறிப்பு : இந்தப் பதிகத்தை எழுதத் தூண்டிய விஷயம்: ஒரு கவியரங்கத்தில் "சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்" என்ற தலைப்பிற்குப் பாடல் எழுதிய சமயத்தில், "சொல்லக் குதிக்கும் என்னெஞ்சு" என்று எழுதியது இப்பதிகம்.
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment