Saturday, September 15, 2018

04.45 - சேய்ஞலூர் - (சேங்கனூர்) - மூவர் புரங்கள்

04.45 - சேய்ஞலூர் - (சேங்கனூர்) - மூவர் புரங்கள்

2014-01-15

சேய்ஞலூர் - (சேங்கனூர்)

----------------------------

(கலிவிருத்தம் - மா மா மா விளம் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.25.1 - "மருவார் குழலி மாதோர் பாகமாய்த்");


1)

மூவர் புரங்கள் எரியில் மூழ்கவோர்

ஏவ தெய்த ஈசன் ஏறமர்

தேவன் செய்ய ணிந்த சேய்ஞலூர்ச்

சேவ கன்பேர் சிந்தை செய்ம்மினே.


மூவர் புரங்கள் எரியில் மூழ்க - அசுரர்கள் மூவரின் கோட்டைகள் தீயில் மூழ்கி அழியுமாறு;

ஓர் ஏ அது எய்த ஈசன் - ஓர் அம்பை எய்த பெருமான்; (ஏ – அம்பு);

ஏறு அமர் தேவன் - இடபத்தை ஊர்தியாக விரும்பிய கடவுள்;

செய் அணிந்த சேய்ஞலூர்ச் சேவகன் - வயல் சூழ்ந்த சேய்ஞலூரில் உறைகின்ற வீரன்; (செய் - வயல்); (சேவகன் - வீரன்);

பேர் சிந்தை செய்ம்மினே - அப்பெருமானின் திருநாமத்தை எண்ணுங்கள்; (மின் - முன்னிலைப் பன்மை ஏவல் விகுதி);


2)

பாலன் உயிரைப் பறிக்கப் பாய்ந்தவன்

காலன் மாள உதைத்த காலினான்

சீலன் செய்ய ணிந்த சேய்ஞலூர்ச்

சூலன் நாமம் சொல்லி உய்ம்மினே.


பாலன் - மார்க்கண்டேயர்; பாய்ந்த வன் காலன் - பாய்ந்த வலிய எமன்; (சுந்தரர் தேவாரம் - 7.22.6 - "கடிய வன் காலன்றன்னைக் கறுத்தான்");


3)

அல்லில் ஆடும் அடிகள் ஆரணம்

சொல்லும் தூயன் திங்கள் சூடிய

செல்வன் செய்ய ணிந்த சேய்ஞலூர்

நல்லன் நாமம் நவிற்றி உய்ம்மினே.


அல்லில் ஆடும் அடிகள் - இருளில் கூத்து ஆடும் இறைவன்; ஆரணம் சொல்லும் தூயன் - வேதம் ஓது தூயவன்; (ஆரணம் - வேதம்);


4)

பித்தன் பிறைய ணிந்த பிஞ்ஞகன்

சுத்தன் அரையிற் புலியின் தோலினன்

சித்தன் செய்ய ணிந்த சேய்ஞலூர்

அத்தன் அடியை அடைந்து வாழ்மினே.


பிஞ்ஞகன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - தலைக்கோலம் அணிந்தவன்; சுத்தன் - தூயன்; அரையிற் புலியின் தோலினன் - புலித்தோலை அரையில் ஆடையாகக் கட்டியவன்; அத்தன் - தந்தை;


5)

அட்ட மூர்த்தி ஆலம் ஆர்ந்தவன்

இட்ட மாக எருதொன் றேறினான்

சிட்டன் செய்ய ணிந்த சேய்ஞலூர்

நட்டன் நாமம் நவிற்றி உய்ம்மினே.


அட்ட மூர்த்தி - ஐம்பூதங்கள், சூரிய சந்திரர்கள், ஆன்மா என்ற எட்டு வடிவங்கள் உடையவன்; ஆலம் ஆர்ந்தவன் - நஞ்சை உண்டவன்; சிட்டன் - சிஷ்டன்; நட்டன் - நடம் செய்பவன்;


6)

சென்னி மீது பாம்பு திங்களைப்

பின்னி உலவ வைத்த பிஞ்ஞகன்

தென்னன் செய்ய ணிந்த சேய்ஞலூர்

மன்னன் பாதம் வாழ்த்தி வாழ்மினே.


பிஞ்ஞகன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - தலைக்கோலம் அணிந்தவன்; தென்னன் - அழகியவன்;


7)

தோடன் குழையன் தொண்டர் சொற்றமிழ்ப்

பாடல் மிகவும் விரும்பும் பண்பினன்

சேடன் செய்ய ணிந்த சேய்ஞலூர்

ஆடி பாதம் அடைந்து வாழ்மினே.


தோடன் குழையன் - தோடும் குழையும் அணிந்த அர்த்தநாரீஸ்வரன்; தொண்டர் சொற்றமிழ்ப் பாடல் மிகவும் விரும்பும் பண்பினன் - பக்தர்கள் பாடும் தமிழ்ச்சொல்மாலைகளை மிகவும் விரும்புபவன்; சேடன் - பெரியவன்; கடவுள்; (சேடு - பெருமை; உயரம்); (சேஷம் என்ற வடமொழிச் சொல்லை அடியாகக் கொண்டால், எஞ்சியிருப்பவன் என்று பொருள்படும்); ஆடி - கூத்தன்;


8)

கார ரக்கன் கதறக் கண்கள்நீர்

சோர விரலை ஊன்று தூயவன்

சீரன் செய்ய ணிந்த சேய்ஞலூர்

வீரன் பாதம் விரும்பி உய்ம்மினே


கார் அரக்கன் கதறக், கண்கள் நீர் சோரத் - கரிய நிறத்து அரக்கனான இராவணன் கதறும்படியும் அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழியும்படியும்;

விரலை ஊன்று தூயவன் - தன் திருப்பாதத்து ஒரு விரலை ஊன்றிய தூயன்;

சீரன் - புகழ் உடையவன்;

செய் அணிந்த சேய்ஞலூர் வீரன் பாதம் விரும்பி உய்ம்மினே - வயல் சூழ்ந்த சேய்ஞலூரில் உறைகின்றவனும் வீரனுமான சிவபெருமான் திருவடியை அன்போடு வணங்கி உய்யுங்கள்;


9)

மாயன் பிரமன் நேட மாவழல்

ஆய முக்கண் அண்ணல் அங்கையில்

தீயன் செய்ய ணிந்த சேய்ஞலூர்

நாயன் நாமம் நவிற்றி உய்ம்மினே.


மாயன் பிரமன் நேட மா அழல் ஆய முக்கண் அண்ணல் - விஷ்ணுவும் பிரமனும் தேடும்படி பெரிய ஜோதி-வடிவில் உயர்ந்த முக்கட்பெருமான்; (மாயன் - திருமால்); (நேடுதல் - தேடுதல்);

அங்கையில் தீயன் - கையில் தீயை ஏந்தியவன்;

செய் அணிந்த சேய்ஞலூர் நாயன் - வயல் சூழ்ந்த சேய்ஞலூரில் உறைகின்ற தலைவன்; (நாயன் - தலைவன்; கடவுள்);

நாமம் நவிற்றி உய்ம்மினே - அப்பெருமானாரின் திருப்பெயரைச் சொல்லி உய்யுங்கள்;


10)

மெய்யன் பர்க்கு மெய்யன் மிண்டுரை

பொய்யர் கட்குப் பொய்யன் பூதியன்

செய்யன் செய்ய ணிந்த சேய்ஞலூர்

ஐயன் அடியை அடைந்து வாழ்மினே.


மெய்யன்பர்க்கு மெய்யன் - உண்மைத்தொண்டர்களுக்கு என்றும் அருள் உள்ள மெய்ப்பொருள்;

மிண்டுரை பொய்யர்கட்குப் பொய்யன் - பொய்யர்களுக்கு என்றும் இல்லாதவன். (மிண்டு - இடக்கர்ப் பேச்சு; செருக்கிக் கூறும் மொழி); (அப்பர் தேவாரம் - 4.16.1 - "செய்யர் வெண்ணூலர் ... மெய்யர் மெய்ந்நின்றவர்க்கு அல்லாதவர்க்கு என்றும் பொய்யர்");

பூதியன் - திருநீறு பூசியவன்; செய்யன் - சிவந்த நிறம் உடையவன்; ஐயன் - தலைவன்;


11)

தேய்ந்த மதியைச் சூடி திண்சிலை

ஏந்தி எயில்கள் எரிய எய்தவன்

சேந்தன் போற்றி செய்த சேய்ஞலூர்

வேந்தன் பாதம் விரும்பி வாழ்மினே.


தேய்ந்த மதியைச் சூடி - பிறையை அணிந்தவன்; (சூடி - சூடியவன்);

திண்சிலை ஏந்தி எயில்கள் எரிய எய்தவன் - மேருமலை என்ற வலிய உறுதி மிக்க வில்லை ஏந்தி முப்புரங்கள் எரியுமாறு கணையை எய்தவன்; (திண்மை - வலிமை; உறுதி); (சிலை - வில்; மலை); (எயில்கள் - முப்புரங்கள்); (அப்பர் தேவாரம் - 6.54.8 - "திரிபுரங்கள் தீயெழத் திண்சிலை கைக்கொண்ட போரானைப்);

சேந்தன் போற்றி செய்த சேய்ஞலூர் வேந்தன் - முருகன் வழிபாடு செய்த திருச்சேய்ஞலூரில் உறையும் மன்னன்; (* முருகன் வழிபட்டதால் "சேய் நல் ஊர் - சேய்ஞலூர்" என்று இத்தலம் பெயர் பெற்றது);


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment