Monday, September 17, 2018

04.49 - மணஞ்சேரி - கயிலாயத்தர்

04.49 - மணஞ்சேரி - கயிலாயத்தர்

2014-02-02

4.49 - மணஞ்சேரி (திருமணஞ்சேரி)

-------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "பூவார் மலர்கொண்டு")

(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை")


1)

கயிலா யத்தர் கங்கைச் சடையர் காதல் உடையார்கள்

இயலால் இசையால் ஏத்தி வாழ்த்தும் எண்டோள் முக்கண்ணர்

மயிலார் சாயல் குயிலார் மொழியாள் கூறர் மணஞ்சேரிப்

புயலார் கண்டர் பொற்றாள் போற்றப் போகும் வினைநோயே.


காதல் - அன்பு; பக்தி; இயலால் இசையால் - இயல்தமிழ், இசைத்தமிழ் இவற்றால்; எண்-தோள் முக்கண்ணர் - எட்டுப் புயங்களும் மூன்று கண்களும் உடையவர்; மயில் ஆர் சாயல் குயில் ஆர் மொழியாள் - மயில் போன்ற சாயலும் குயில் போன்ற மொழியையும் உடைய உமை; (* இத்தலத்து இறைவி திருநாமம் - கோகிலாம்பாள்; கோகிலம் - குயில்); புயல் ஆர் கண்டர் பொற்றாள் போற்றப் போகும் வினைநோயே - மேகம் போன்ற நிறம் உடைய கண்டத்தை உடையவரது பொன்னடியை வழிபட்டால் வினைநோய் தீரும்;


2)

உள்ளம் ஒன்றி ஓம்பு மாணி உயிருக் கரணானார்

வெள்ளம் தாங்கும் வேணி மீது வெள்ளை மதிபுனைவார்

வள்ளிக் குறத்தி மணாளன் தாதை வளமார் மணஞ்சேரி

வள்ளல் பாதம் வணங்கி வாழ்த்த மல்கும் மங்கலமே.


உள்ளம் ஒன்றி ஓம்பு மாணி உயிருக்கு அரண் ஆனார் - மனம் ஒன்றி வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் காத்தவர்; (மாணி - இங்கே மார்க்கண்டேயர்); (அரண் - பாதுகாவல்);

வெள்ளம் - நீர்; கங்கை; வெள்ளை மதி - வெண்பிறை; (சம்பந்தர் தேவாரம் - 3.106.2 - "வெள்ளை மதியஞ் சூடி");

வள்ளிக்-குறத்தி மணாளன் தாதை - வள்ளி மணாளனான முருகனுக்குத் தந்தை;

வளம் ஆர் மணஞ்சேரி வள்ளல் பாதம் வணங்கி வாழ்த்த மல்கும் மங்கலமே - வளம் பொருந்திய திருமணஞ்சேரியில் உறைகின்ற வள்ளலான சிவபெருமானது திருவடியை வணங்கித் துதித்தால் நன்மை மிகும்; (மல்குதல் - செழித்தல்; மிகுதல்); (மங்கலம் - நன்மை; சுபம்); (* இத்தலத்து இறைவன் திருநாமம் - அருள்வள்ளல்நாதர்);


3)

பொன்னி றத்தர் புலியின் தோலர் பூத கணநாதர்

சென்னி மீது திங்கள் நாகம் சிரங்கள் திகழ்மாலை

வன்னி கொன்றை மத்தம் அணிந்த மைந்தர் மணஞ்சேரி

மன்னி நின்ற வள்ளல் பாதம் வணங்க வருமின்பே.


பொன் நிறத்தர் - பொன்னார் மேனியர்; சிரங்கள் திகழ்மாலை - தலைமாலை; மண்டையோட்டு மாலை; வன்னி கொன்றை மத்தம் - வன்னியிலை, கொன்றைமலர், ஊமத்தம்பூ; மைந்தர் - இளைஞர்; அழகர்; மன்னுதல் - நிலைத்து இருத்தல்;


4)

பாசம் வீசு கூற்றைச் செற்றுப் பத்தற் கருள்செய்த

நேசர் நீற்றர் நீல கண்டர் நிகரொன் றில்லாதார்

வாசப் பொழிலும் வயலும் சூழந்த வளமார் மணஞ்சேரி

ஈசர் பாதம் ஏத்த எய்தும் இன்ப நிலைதானே.


பாசம் வீசு கூற்றைச் செற்றுப் பத்தற்கு அருள்செய்த நேசர் - சுருக்கை வீசிய காலனை உதைத்துப் பக்தனுக்கு அருளிய அன்பர்; (பாசம் - காலன் கையில் இருக்கும் சுருக்குக்கயிறு); (செறுதல் - அழித்தல்); (பத்தற்கு - பத்தன்+கு - பக்தனுக்கு - மார்க்கண்டேயருக்கு); (நேசர் - அன்பு உடையவர்);

நிகர் ஒன்று இல்லாதார் - எவ்வித ஒப்பும் இல்லாதவர்; (நிகர் - ஒப்பு);


5)

நடமா டிறைவர் நம்பர் உம்பர் நடுக்கம் அதுதீர்த்த

விடமார் மிடற்றர் வேத நாவர் வெண்ணூல் திகழ்மார்பர்

மடமான் விழியாள் மங்கை பங்கர் வளமார் மணஞ்சேரி

இடமா உடையார் எழிலார் பாதம் ஏத்த மகிழ்வாமே.


நடம் ஆடு இறைவர் நம்பர் - திருநடம் செய்யும் இறைவர், விரும்பத்தக்கவர்; (நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று);

உம்பர் நடுக்கம் அது தீர்த்த விடம் ஆர் மிடற்றர் - தேவர்களது அச்சத்தைத் தீர்த்த நீலகண்டர்; (உம்பர் - தேவர்); (நடுக்கமது - நடுக்கம் - அச்சம்; அது - பகுதிப்பொருள்விகுதி);

விடம் ஆர் மிடற்றர் - நஞ்சு பொருந்திய கண்டம் உடையவர்;

வேத நாவர் - வேதங்களைப் பாடியருளியவர்;

வெண்ணூல் திகழ் மார்பர் - மார்பில் வெண்மையான பூணூலை அணிந்தவர்;

மடமான் விழியாள் மங்கை பங்கர் - அழகிய இளமான் போன்ற பார்வையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவர்; (மடம் - அழகு; மென்மை); (சம்பந்தர் தேவாரம் - 1.70.1 - "மான்விழியாள் தேவி பாகமா");

வளம் ஆர் மணஞ்சேரி இடமா உடையார் எழில் ஆர் பாதம் ஏத்த மகிழ்வு ஆமே - வளம் மிக்க திருமணஞ்சேரியை இடமாக உடையவரது அழகிய பாதத்தைப் போற்றினால் இன்பம் வந்தடையும்;


6)

எங்கும் திரிந்த எயில்கள் மூன்றை எரிக்க நகைசெய்தார்

அங்கி ருந்த அன்பர் மூவர்க் கருள்செய் பெருமானார்

மங்கை பங்கர் கங்கை முடியர் வளமார் மணஞ்சேரி

அங்கண் அடிகள் அடியார் வரங்கள் அடைந்து மகிழ்வாரே.


எங்கும் திரிந்த எயில்கள் மூன்றை எரிக்க நகைசெய்தார் - முப்புரங்களைச் சிரித்து எரித்தவர்;

அங்கு இருந்த அன்பர் மூவர்க்கு அருள்செய் பெருமானார் - சிவபூஜையைக் கைவிடாத மூன்று அசுரர்களுக்கு அருள்செய்தவர்; சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார்");

அங்கண் அடிகள் - அழகிய கருணை நோக்குடைய கடவுள்; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.17 - "அங்கண் அரசை");


7)

காரார் கண்டர் ஆரா அமுதர் கண்ணார் நுதலீசர்

நீரார் சடைமேல் நிரம்பா மதியர் நீறு திகழ்மார்பர்

வாரார் கொங்கை மங்கை பங்கர் வளமார் மணஞ்சேரி

ஊரார் பாதம் ஓம்ப வரங்கள் உகந்து தருவாரே.


கார் ஆர் கண்டர் - கரிய கண்டர்; (கார் - கருமை); (ஆர்தல் - பொருந்துதல்);

ஆரா அமுதர் - தெவிட்டாத அமுதம் போன்றவர்;

கண் ஆர் நுதல் ஈசர் - நெற்றிக்கண் உடைய ஈசர்; (நுதல் - நெற்றி);

நீர் ஆர் சடைமேல் நிரம்பா மதியர் - கங்கைச்சடைமேல் பிறையை அணிந்தவர்;

நீறு திகழ் மார்பர் - மார்பில் திருநீற்றைப் பூசியவர்;

வார் ஆர் கொங்கை மங்கை பங்கர் - கச்சு அணிந்த முலையினளான உமையை ஒரு பங்கில் உடையவர்; (வார் - முலைக்கச்சு);

வளம் ஆர் மணஞ்சேரி ஊரார் பாதம் ஓம்ப வரங்கள் உகந்து தருவாரே - வளம் மிக்க திருமணஞ்சேரி என்ற தலத்தில் எழுந்தருளியவரது திருவடியைப் போற்றினால் அவர் வரங்கள் அருள்வார்; (ஓம்புதல் - பேணுதல்; போற்றுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.15.1 - "திருக்காறாயில் ஊரானே என்பவர் ஊனம் இலாதாரே");


8)

பிழையே செய்த பேதை அரக்கன் பெரிதும் அழவூன்றும்

குழையார் காதர் கொக்கின் இறகர் கொன்றைச் சடைநாதர்

மழையார் கண்டர் மலையான் மருகர் வளமார் மணஞ்சேரி

உழையோர் கையர் உபய பாதம் உன்ன உயர்வாமே.


பிழையே செய்த பேதை அரக்கன் பெரிதும் அழ ஊன்றும் குழை ஆர் காதர் - குற்றமே செய்த அறிவற்ற இராவணன் மிக அழும்படி அவனைப் பாதவிரல் ஒன்றை ஊன்றி நசுக்கியவர், காதில் குழையை அணிந்தவர்; (பேதை - அறிவிலி);

கொக்கின் இறகர் - கொக்கிறகு என்ற பூவைச் சூடியவர்; கொக்கு வடிவில் நின்ற அசுரனை அழித்து அவன் இறகினைச் சூடியவர்; (அப்பர் தேவாரம் - 5.80.5 - "கொக்கிறகர் குளிர்மதிச் சென்னியர்");

கொன்றைச்சடை நாதர் - சடையில் கொன்றைமலரை அணிந்த தலைவர்;

மழை ஆர் கண்டர் - மேகம் போன்ற கண்டம் உடையவர்; (ஆர்தல் - ஒத்தல்);

மலையான் மருகர் - இமவானுக்கு மருமகன்; (அப்பர் தேவாரம் - 6.38.1 - "மலையான் மருகனாய் நின்றாய் நீயே");

வளம் ஆர் மணஞ்சேரி உழை ஓர் கையர் - வளம் மிக்க திருமணஞ்சேரி என்ற தலத்தில் எழுந்தருளிய, மானை ஒரு கையில் ஏந்தியவரது;

உபய பாதம் உன்ன உயர்வு ஆமே - இரு-திருவடிகளைத் தியானித்தால் மேன்மை விளையும்; (உபயம் - இரண்டு); (உன்னுதல் - சிந்தித்தல்);


9)

நறையார் மலரான் நாகத் தணையான் நண்ணற் கருஞ்சோதி

பிறையார் முடியர் கறையார் கண்டர் பிரியார் உமையாளை

மறையார் நாவர் மறியார் கரத்தர் வளமார் மணஞ்சேரி

உறைவார் நாமம் உரைப்பார் குறைதீர்த் துவகை அளிப்பாரே.


நறை ஆர் மலரான் - தாமரைப்பூவில் இருக்கும் பிரமன்;

நாகத்து அணையான் - பாம்புப்-படுக்கையில் துயிலும் திருமால்;

நண்ணற்கு அரும்-சோதி - அடைய ஒண்ணாத ஜோதி வடிவினர்;

பிறை ஆர் முடியர் - சந்திரசேகரர்;

கறை ஆர் கண்டர் - நீலகண்டர்;

பிரியார் உமையாளை - உமைபங்கர்;

மறி ஆர் கரத்தர் - மான்கன்றை ஏந்தியவர்;

வளம் ஆர் மணஞ்சேரி உறைவார் நாமம் உரைப்பார் குறைதீர்த்து உவகை அளிப்பாரே - வளம் மிக்க திருமணஞ்சேரி என்ற தலத்தில் எழுந்தருளியவரது திருப்பெயரை ஓதும் அடியவர்களது குறைகளைத் தீர்த்து அவர்களுக்கு இன்பம் தருவார்; (உவகை - மகிழ்ச்சி);


10)

குணங்கள் இல்லார் கூறும் குற்றக் கொள்கை மதியேன்மின்

பணங்கள் ஆரும் பரமர் சூலப் படையர் விடையேறி

மணங்கொள் சோலை வயல்கள் புடைசூழ் வளமார் மணஞ்சேரி

அணங்கொர் பாகர் அடியை அடைந்தால் அல்லல் அடையாவே.


குணங்கள் இல்லார் கூறும் குற்றக் கொள்கை மதியேன்மின் - நற்குணம் இல்லாதவர்கள் சொல்கின்ற குற்றம் பொருந்திய கொள்கைகளை நீங்கள் மதிக்கவேண்டா; (மதியேன்மின் - நீங்கள் மதிக்கவேண்டா);

பணங்கள் ஆரும் பரமர் - நாகங்களை அணிந்த பரமர்; (பணம் - நாகப்பாம்பு);

சூலப் படையர் - சூலபாணி;

விடையேறி - இடபவாகனம் உடையவர்;

மணங்கொள் சோலை வயல்கள் புடை சூழ் வளம் ஆர் மணஞ்சேரி - மணம் கமழும் சோலையும் வயல்களும் சூழ்ந்த வளம் மிக்க திருமணஞ்சேரியில் உறைகின்ற;

அணங்கு ஒர் பாகர் அடியை அடைந்தால் அல்லல் அடையாவே - உமைபங்கரது திருவடியைச் சரண்புகுந்தால் நம்மைத் துன்பம் அடையா; (அணங்கு - பெண்); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);


11)

தொண்டர் தம்மைத் தோன்றாத் துணையாய்த் தொடரும் பெருமானார்

அண்ட ரண்டர் ஆலம் உண்ட அரிய மணிகண்டர்

வண்டு மகிழும் மணமார் சோலை மல்கு மணஞ்சேரி

கண்டு போற்றிக் கைகள் கூப்பக் கைம்மேற் பலனாமே.


தொண்டர்தம்மைத் தோன்றாத் துணையாய்த் தொடரும் பெருமானார் - அடியார்களை என்றும் நீங்காத தோன்றாத்துணைவர்; (அப்பர் தேவாரம் - 4.94.1 - "தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே");

அண்டரண்டர் - தேவதேவர்; (அண்டர் - தேவர்);

ஆலம் உண்ட அரிய மணிகண்டர் - ஆலகாலத்தை உண்டு அரிய கரிய மணிபோல் விடக்கறை திகழும் நீலகண்டர்;

வண்டு மகிழும் மணம் ஆர் சோலை மல்கு மணஞ்சேரி - வண்டுகள் மகிழ்கின்ற மணம் மிக்க சோலை நிறைந்த திருமணஞ்சேரியை;

கண்டு போற்றிக் கைகள் கூப்பக் கைம்மேற் பலன் ஆமே - தரிசித்துக் கைகூப்பி வழிபட்டால் உடனடிப்பலன் கிட்டும்;


வி. சுப்பிரமணியன்

------ --------

No comments:

Post a Comment