04.50 - புத்தூர் (திருப்புத்தூர்) - நெருப்புச்சேர் கண்திகழும்
2014-02-08
4.50 - புத்தூர் (திருப்புத்தூர் - பாண்டிய நாட்டுத் தலம்) (திருப்பத்தூர்)
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுm")
(அப்பர் தேவாரம் - 4.12.1 - "சொன்மாலை பயில்கின்ற");
1)
நெருப்புச்சேர் கண்திகழும் நெற்றியினான் ஏனத்தின்
மருப்புப்பூண் மார்புடையான் மடவார்கள் இடுபலிக்கு
விருப்புற்றோர் விடையேறி வருமீசன் மேயநகர்
திருப்புத்தூர் வணங்குமவர் தீவினைகள் தீருமன்றே.
நெருப்புச் சேர் கண் திகழும் நெற்றியினான் - நெற்றிக்கண்ணில் தீயை உடையவன்;
ஏனத்தின் மருப்புப் பூண் மார்பு உடையான் - மார்பில் பன்றிக்கொம்பைப் பூண்டவன்; (ஏனம் - பன்றி); (மருப்பு - கொம்பு; தந்தம்);
மடவார்கள் இடுபலிக்கு விருப்பு உற்று ஓர் விடையேறி வரும் ஈசன் மேய நகர்- பெண்கள் இடும் பிச்சையைப் பெற விரும்பி ஓர் இடபவாகனத்தின்மேல் வரும் ஈசன் உறையும் தலம் ஆன; (மடவார்கள் - பெண்கள்); (பலி - பிச்சை);
திருப்புத்தூர் வணங்குமவர் தீவினைகள் தீருமன்றே. - திருப்புத்தூரை வணங்குபவர்களது பாவங்கள் எல்லாம் தீரும்;
2)
தவமேசெய் மார்க்கண்டர் தம்முயிரைத் தயையின்றிக்
கவர்வேனென் றடைநமனைக் கழலாலே உதைகாலன்
சிவகாமி மணவாளன் திருப்புத்தூர்த் திருத்தளியான்
தவறாது தொழுவார்தம் பவநோய்க்குத் தனிமருந்தே.
தயை - இரக்கம்; கருணை; கவர்தல் - அகப்படுத்துதல்; நமன் - எமன் - கூற்றுவன்; திருப்புத்தூர் - தலத்தின் பெயர்; திருத்தளி - கோயிலின் பெயர்; (* இத்தலத்து இறைவன், இறைவி திருநாமங்கள் - திருத்தளிநாதர், சிவகாமி); பவநோய் - பவரோகம் - பிறவிப்பிணி; தனி - ஒப்பற்ற; மருந்து - ஔஷதம்; அமுதம்;
3)
நலந்திகழ வலைபின்னி நாள்தோறும் போற்றிசெய்த
சிலந்தியையோர் அரசாக்கும் திருப்புத்தூர்த் திருத்தளியான்
சலந்திகழும் சடையுடையான் சலமில்லாத் தன்மையினான்
வலந்திகழும் கழலுடையான் வந்திப்பார்க் கருந்துணையே.
* சிலந்தியை ஓர் அரசு ஆக்கும் - கோச்செங்கட்சோழ நாயனார் வரலாறு. சலம் - 1. நீர்; 2. வஞ்சனை; வலம் திகழும் கழல் உடையான் - 1. வலப்பக்கம் கழல் அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்; 2. வெற்றியை உடைய வீரக்கழல் அணிந்தவன்; வந்திப்பார்க்கு - தொழுவார்களுக்கு;
4)
கனலாரும் கண்ணுதலால் காமனுடல் காய்ந்தபிரான்
மினலாரும் செஞ்சடைமேல் விரைக்கொன்றை புனையீசன்
புனலாரும் புத்தூரில் திருத்தளியான் புகழ்பாட
அனலாரும் அருவினைகள் அடியோடு கெடும்தானே.
ஆர்தல் - 1. பொருந்துதல்; 2. ஒத்தல்; 3. நிறைதல்; கனல் - நெருப்பு; கண்ணுதல் - கண்+நுதல் - நெற்றிக்கண்; மினல் ஆரும் - மின்னல் ஒக்கும்; விரைக்கொன்றை - மணம் மிக்க கொன்றைமலர்; (அப்பர் தேவாரம் - 6.76.1 - "விரைக்கொன்றைக் கண்ணியன்காண்"); அனல் - உஷ்ணம்;
5)
துடியாரும் கையுடையான் துணையாரும் இல்லாதான்
கொடியாரும் இடையாளோர் கூறாக உடையான்வெண்
பொடியாரும் மேனியினான் புத்தூரில் திருத்தளியான்
கடியாரும் கவிபாடும் அடியாருக் கருந்துணையே.
துடி ஆரும் கை உடையான் - கையில் உடுக்கினை ஏந்தியவன்; (துடி - உடுக்கு); (ஆர்தல் - 1. பொருந்துதல்; 2. ஒத்தல்; 3. நிறைதல்);
துணை ஆரும் இல்லாதான் - ஒப்பு இல்லாதவன்; (துணை - ஒப்பு);
கொடி ஆரும் இடையாள் ஓர் கூறாக உடையான் - கொடி போல் சிற்றிடை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;
வெண்பொடி ஆரும் மேனியினான் - திருநீற்றை மேனிமேல் பூசியவன்;
புத்தூரில் திருத்தளியான் - திருப்புத்தூரில் திருத்தளியில் உறைகின்றவன்;
கடி ஆரும் கவி பாடும் அடியாருக்கு அரும்-துணையே - மணம் மிக்க தமிழ்ப்பாமாலைகளைப் பாடுகின்ற அடியவர்களுக்கு அரிய துணை ஆவான்; (கடி - வாசனை);
6)
உம்பரு(ம்)மான் கரமுடையாய் ஒண்மதியச் சடையானே
எம்பெருமான் என்றேத்தி இணையடியைத் தொழநின்ற
செம்பெருமான் திருப்புத்தூர்த் திருத்தளியான் சேவமரும்
நம்பெருமான் அடியாரை நலிவினைகள் நண்ணாவே.
உம்பரும், "மான் கரம் உடையாய்! ஒண்-மதியச் சடையானே! எம்பெருமான்!" என்று ஏத்தி - தேவர்கள், "மானைக் கையில் ஏந்தியவனே! ஒளிவீசும் சந்திரனைச் சூடிய சடையானே! எம்பெருமானே!" என்று போற்றி; (உம்பரும் - 1. தேவர்; உம் - அசை; 2. தேவரும்; உம் - சிறப்பும்மை);
இணையடியைத் தொழ நின்ற செம்பெருமான் - தன் இரு-திருவடிகளை வழிபாடு செய்யும்படி நின்ற செம்மேனியன்;
திருப்புத்தூர்த் திருத்தளியான் - திருப்புத்தூரில் திருத்தளியில் எழுந்தருளிய சிவபெருமான்;
சே அமரும் நம்பெருமான் அடியாரை நலி-வினைகள் நண்ணாவே - இடபவாகனனான நம் பெருமானை வழிபடும் அடியவர்களை, வருத்தும் வினைகள் நெருங்கமாட்டா; (நலித்தல் - துன்புறுத்துதல்);
7)
அந்தகனைச் சூலத்தால் அழித்தானை முப்புரங்கள்
வெந்துவிழச் சிரித்தானை விடந்திகழும் மிடற்றானைச்
செந்தழல்போல் மேனியனைத் திருப்புத்தூர்த் திருத்தளியில்
பந்துவென நின்றவனைப் பரவவினை பற்றறுமே.
அந்தகன் - அந்தகாசுரன்; பந்து - உறவு; சுற்றம்;
8)
உருமொக்கக் கத்தியுயர் பொருப்பிடந்த அரக்கனழ
மருமிக்க மலர்ப்பாத விரலூன்றும் மாதேவன்
தருமிக்குத் தமிழ்ப்பாடல் தந்தருளும் தனிப்புலவன்
இருமைக்கும் துணைபுத்தூர்த் திருத்தளியான் இணையடியே.
உரும் ஒக்கக் கத்தி, உயர்-பொருப்பு இடந்த அரக்கன் அழ - இடி போலக் கத்திக்கொண்டு, உயர்ந்த கயிலைமலையைப் பெயர்த்த அரக்கனான இராவணன் அழும்படி;
மரு மிக்க மலர்ப்பாத விரல் ஊன்றும் மாதேவன் - மணம் மிகுந்த தாமரைமலர் போன்ற திருப்பாதத்தின் விரலை ஊன்றி நசுக்கிய மகாதேவன்; (மரு - வாசனை);
தருமிக்குத் தமிழ்ப்பாடல் தந்தருளும் தனிப்புலவன் - தருமிக்குப் பாடல் ஒன்று தந்தருளிய ஒப்பற்ற புலவன்; (தனி - ஒப்பற்ற); (அப்பர் தேவாரம் - 6.76.3 - "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்காண்"); (* தருமிக்குப் பாடல் தந்ததைத் திருவிளையாடற்புராணத்தில் காண்க);
இருமைக்கும் துணை புத்தூர்த் திருத்தளியான் இணையடியே - இம்மை மறுமை இரண்டிற்கும் திருப்புத்தூர்த் திருத்தளிநாதன் திருவடியே துணை; (இருமை - இம்மை, மறுமை என்ற இரண்டு);
9)
பன்றியுருக் கொண்டரியும் பறவையுருக் கொண்டயனும்
அன்றுமிக நேடவுயர் அழலானான் நிழல்மழுவன்
தென்றலிலே மணங்கமழும் திருப்புத்தூர்த் திருத்தளியில்
நின்றபரன் அடியிணையே நினையவினை நெருங்காவே.
பன்றி உருக் கொண்டு அரியும், பறவை உருக் கொண்டு அயனும், அன்று மிக நேட உயர் அழல் ஆனான் - பன்றியாகித் திருமாலும் அன்னமாகிப் பிரமனும் தேடும்படி ஓங்கிய ஜோதி ஆனவன்; (நேடுதல் - தேடுதல்);
நிழல் மழுவன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்;
10)
சின்னநெறிச் செல்கின்றார் திருநீறு புனையாதார்
சொன்னமொழி மதியேன்மின் தொழுவார்தம் துயர்தீர்ப்பான்
முன்ன(ம்)மறை நான்கினையும் முனிவர்களுக் குரைத்தபரன்
சென்னிமிசைப் பிறையணிந்த திருப்புத்தூர்ப் பெருமானே.
சின்ன - சிறிய; இழிந்த; திருநீறு புனையாதார் - திருநீற்றை அணியாதவர்கள்; சொன்ன மொழி மதியேன்மின் - அவர்கள் சொன்ன பேச்சைப் பொருட்படுத்தாதீர்கள்; (மதியேன்மின் - நீங்கள் மதிக்கவேண்டா); முன்னம் மறை நான்கினையும் முனிவர்களுக்கு உரைத்த பரன் - தட்சிணாமூர்த்தி; சென்னிமிசைப் பிறை அணிந்த - தலைமேல் சந்திரனை அணிந்த;
11)
கொண்டலெனத் திகழ்கண்டன் கொன்றையொடு கூவிளமும்
இண்டையென மதியுமணி எம்பெருமான் வானோர்கள்
தெண்டனிடும் திருப்புத்தூர்த் திருத்தளியான் சேவடியை
அண்டுமடி யாரைவினை அவலங்கள் அடையாவே.
கொண்டல் எனத் திகழ் கண்டன் - மேகம் போல் திகழும் நீலகண்டன்; (கொண்டல் - மேகம்);
கொன்றையொடு கூவிளமும், இண்டை என மதியும், அணி எம்பெருமான் - திருமுடிமேல் கொன்றைமலர், வில்வம், இண்டைமாலை போல் சந்திரன் இவற்றையெல்லாம் அணியும் எம்பெருமான்; (கூவிளம் - வில்வம்); (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);
வானோர்கள் தெண்டனிடும் திருப்புத்தூர்த் திருத்தளியான் - தேவர்களால் தொழப்படுகின்ற திருப்பூத்தூர்த் திருத்தளிநாதனது; (தெண்டனிடுதல் - தண்டனிடுதல் - விழுந்து வணங்குதல்);
சேவடியை அண்டும் அடியாரை வினை அவலங்கள் அடையாவே - சிவந்த திருவடியைச் சரண்புக்க அடியார்களை வினைகளும் துன்பங்களும் அடையமாட்டா; (அண்டுதல் - சரண் அடைதல்; ஆசிரயித்தல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment