2010-11-07
V.017 - மலமிலனே - மடக்கு
----------------
(எண்சீர் விருத்தம் - காய் காய் மா தேமா - அரையடி வாய்பாடு;
அரையடிதோறும் 3-ஆம் சீரில் சொற்கள் மடக்குப் பெற்று வருமாறு அமைந்தது)
மலமிலனே பிறப்பொடுமூப்(பு) இறப்பும் இல்லாய்
.. வளர்எரியாய் மண்விண்ணை இறந்து நிற்பாய்
தலைவனிலாய் உனக்கொரு துணையும் இல்லாய்
.. தஞ்சமடை அன்பருக்குத் துணையாய் உள்ளாய்
அலைகடலில் அன்றெழுந்து பரவு நஞ்சம்
.. அதுகண்ட அமரரெலாம் பரவு கண்டா
மலையெடுத்தான் உறுவலியைத் தாளான் ஆக
.. வரைமிசையோர் விரலூன்று தாளான் நீயே.
சொற்பொருள்:
இறத்தல் - 1. சாதல்; 2. கடத்தல்;
துணை - 1. ஒப்பு; 2. உதவி; காப்பு;
பரவுதல் - 1. விரிதல்; 2. துதித்தல்;
தாளான் - 1. தாங்காதவன்; (தாளுதல் - பொறுத்தல்); 2. பாதத்தை உடையவன் (தாள் - பாதம்);
மலம் இலனே; பிறப்பொடு மூப்பு இறப்பும் இல்லாய் - மும்மலங்கள் அற்றவனே; பிறத்தல், முதுமை, இறத்தல் இவை இல்லாதவனே;
வளர்-எரியாய் மண்-விண்ணை இறந்து நிற்பாய் - எல்லையின்றி நீண்ட ஜோதியாகி மண்ணையும் விண்ணையும் கடந்து நின்றவனே;
தலைவன் இலாய், உனக்கு ஒரு துணையும் இல்லாய் - தலைவன் இல்லாதவனே; உனக்குச் சமானம் இல்லாதவனே; ("உனக்கு ஒரு" - என்ற சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைத்து - "உனக்கு ஒரு தலைவன் இலாய்" & "உனக்கு ஒரு துணையும் இல்லாய்" என்று பொருள்கொள்ளலாம்);
தஞ்சம் அடை அன்பருக்குத் துணையாய் உள்ளாய் - சரண்புகுந்த பக்தர்களுக்குத் துணை ஆனவனே;
அலைகடலில் அன்று எழுந்து பரவு நஞ்சம் அது கண்ட அமரரெலாம் பரவு கண்டா - அலைக்கும் பாற்கடலில் முன்பு தோன்றிப் பரவிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சிய தேவர்களெல்லாம் துதிக்கும் நீலகண்டனே / வீரனே; (கண்டன் - 1. கண்டத்தை உடையவன்; 2. வீரன்);
மலை எடுத்தான் உறு-வலியைத் தாளான் ஆக வரைமிசை ஓர் விரல் ஊன்று தாளான் நீயே - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் பெருநோவைப் பொறுக்கமாட்டான் ஆகும்படி மலைமேல் ஒரு விரலை ஊன்றிய திருப்பாதன் நீ; (உறுவலி - பெருந்துன்பம்); (வரை - மலை); (ஏ - ஈற்றசை);
* போற்றி என்பது குறிப்பு;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
அருமை!
ReplyDelete