04.53 - புறம்பயம்
(திருப்புறம்பியம்)
- கருப்புவிற்
கரத்தனை
2014-03-02
புறம்பயம்
(திருப்புறம்பியம்)
----------------------
(சந்தக்
கலிவிருத்தம் - தனாதனா
தனாதனா தனாதனா தனாதனா)
(தனாதனான
தானனா தனாதனான தானனா -
என்றும்
நோக்கலாம்)
(கணேச
பஞ்சரத்ன ஸ்தோத்திரம் -
"முதாகராத்த
மோதகம்")
(சம்பந்தர்
தேவாரம் - 2.98.1 - "வரைத்தலைப்
பசும்பொனோடு")
1)
கருப்புவிற்
கரத்தனைக் கனற்கணால் எரித்தவன்
பருப்பதன்
மகட்கிடம் விருப்பினாற்
கொடுத்தவன்
வருத்தமுற்
றவானவர்க் கிரங்கிமுப்
புரஞ்சுடப்
பொருப்புவில்
வளைத்தவன் புறம்பயத் தொருத்தனே.
கருப்புவில்
கரத்தனைக் கனற்கணால்
எரித்தவன் - கரும்பை
வில்லாகக் கையில் ஏந்தும்
மன்மதனைக் கனலை உடைய நெற்றிக்கண்ணால்
எரித்தவன்;
பருப்பதன்
மகட்கு இடம் விருப்பினால்
கொடுத்தவன் - மலையான்
மகளுக்கு இடப்பாகத்தை விரும்பிக்
கொடுத்தவன்;
வருத்தமுற்ற
வானவர்க்கு இரங்கி
முப்புரம் சுடப்
- வருந்திய
தேவர்களுக்கு இரங்கி முப்புரங்களை
எரிக்க;
பொருப்பு-வில்
வளைத்தவன் - மேருமலையை
வில்லாக வளைத்தவன்;
புறம்பயத்து
ஒருத்தனே -
திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும்
ஒப்பற்றவன்; (ஒருத்தன்
- ஒப்பற்றவன்;
ஒருவன்);
(அப்பர்
தேவாரம் - 5.1.7 - "ஒருத்தனார்
உலகங்கட்கு ஒருசுடர்");
2)
இகழ்ச்சியால்
பதந்தொழார்க் கிலாதவன்
தினந்தொறும்
நெகிழ்ச்சியால்
வணங்குவார் அகத்துளே நிலைத்தவன்
மகிழ்ச்சியோ
டிருப்பவன் மனைக்கிடம்
கொடுத்தவன்
புகழ்ச்சியைக்
கடந்தவன் புறம்பயத் தொருத்தனே.
இகழ்ச்சியால்
பதம் தொழார்க்கு
இலாதவன் - திருவடியை
வழிபடாமல் இகழ்வார்களுக்கு
அருள் இல்லாதவன்;
தினந்தொறும்
நெகிழ்ச்சியால் வணங்குவார்
அகத்துளே நிலைத்தவன் -
தினமும்
உருகி வணங்கும் பக்தர்கள்
நெஞ்சை நீங்காதவன்;
மகிழ்ச்சியோடு
இருப்பவன் - என்றும்
இன்பநிலையில் இருப்பவன்;
மனைக்கு
இடம் கொடுத்தவன் -
மனைவிக்கு
(உமைக்கு)
இடப்பக்கத்தைக்
கொடுத்தவன்;
புகழ்ச்சியைக்
கடந்தவன் - எல்லையற்ற
புகழ் உடையவன்;
புறம்பயத்து
ஒருத்தனே -
திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும்
ஒப்பற்றவன்;
3)
பரந்தநஞ்
சினால்மிகப் பயந்தவர்க்
கிரங்கினான்
சிரந்தனால்
தினந்தொழும் குணத்தினார்
விரும்பிடும்
வரந்தரும்
கரப்பிலாக் கரத்தினான்
முராரிவான்
புரந்தரன்
வணங்கிடும் புறம்பயத் தொருத்தனே.
பரந்த
நஞ்சினால் மிகப்
பயந்தவர்க்கு இரங்கினான்
- எங்கும்
பரவிய ஆலகால விஷத்தைக் கண்டு
மிகவும் அஞ்சிய தேவர்களுக்கு
இரங்கியவன்;
சிரந்தனால்
தினம் தொழும் குணத்தினார்
விரும்பிடும் வரம்
தரும் கரப்பு இலாக்
கரத்தினான் -
நாள்தோறும்
தலையால் வணங்கி வழிபடும்
அன்பர்கள் விரும்பிய வரமெல்லாம்
வஞ்சமின்றி அருளும் வரதஹஸ்தன்;
முராரி
வான் புரந்தரன்
வணங்கிடும் புறம்பயத்து
ஒருத்தனே -
திருமால்,
தேவர்கள்,
இந்திரன்
எல்லாரும் வணங்குகின்ற
பெருமான், திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும்
ஒப்பற்றவன்; (முராரி
- முரனென்ற
அசுரனைக் கொன்றவன் -
திருமால்);
(வான்
- தேவர்கள்);
(புரந்தரன்
- இந்திரன்);
4)
பழித்தவன்
சிரத்தினைப் பறித்தவன்
புரங்களை
அழித்தவன்
மலர்ச்சரத் தனங்கனைச் சினந்துகண்
விழித்தவன்
விடைச்சினம் பொறித்தவெல்
கொடிச்சிவன்
பொழிற்குயில்
சுரம்பயில் புறம்பயத் தொருத்தனே.
பழித்தவன்
சிரத்தினைப் பறித்தவன் -
இகழ்ந்த
பிரமன் தலையைக் கிள்ளியவன்;
("பழித்தவன்
- தக்கன்";
என்றுகொண்டும்
பொருள்கொள்ளக் கூடும்);
புரங்களை
அழித்தவன் -
முப்புரங்களை
எரித்தவன்;
மலர்ச்சரத்து
அனங்கனைச் சினந்து கண்
விழித்தவன் - மலர்க்கணையை
எய்த மன்மதனைக் கோபித்து
நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;
(அனங்கன்
- மன்மதன்);
(சம்பந்தர்
தேவாரம் - 2.98.8 - "சுடப்பொடிந்து
உடம்பிழந்து அநங்கனாய மன்மதன்");
விடைச்சினம்
பொறித்த வெல்கொடிச் சிவன்
- இடபச்-சின்னம்
பொறித்த வெற்றிக்கொடியை உடைய
சிவன்; (சினம்
- சின்னம்;
இடைக்குறை
விகாரம்); (திருவாசகம்
- போற்றித்
திருவகவல் - அடி-95:
"சேவார்
வெல்கொடிச் சிவனே போற்றி");
பொழிற்குயில்
சுரம் பயில் - பொழிலில்
இருக்கும் குயில்கள் ஏழுசுரங்களை
ஒலிக்கின்ற (= இசை
பாடுகின்ற);
புறம்பயத்து
ஒருத்தனே -
திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும்
ஒப்பற்றவன்;
5)
இலங்குவெண்
பிறைச்சடைக் குராவராப்
புனைந்தவன்
அலங்கலால்
திருந்துதாள் அலங்கரித்
தவர்க்குயர்
நலன்களைக்
கொடுப்பவன் நகைத்தெயில்
கொளுத்தினான்
புலன்களுக்
கரும்பரன் புறம்பயத் தொருத்தனே.
இலங்கு
வெண்பிறைச்சடைக் குரா அராப்
புனைந்தவன் - திகழும்
வெண்பிறைச்சந்திரன் இருக்கும்
சடையில் குராமலரையும் பாம்பையும்
அணிந்தவன்;
அலங்கலால்
திருந்து-தாள்
அலங்கரித்தவர்க்கு உயர்
நலன்களைக் கொடுப்பவன் -
பூமாலைகளால்
தன் அழகிய திருவடியை அலங்கரித்து
வழிபடும் அடியவர்களுக்கு
உயர்ந்த நன்மையை அளிப்பவன்;
(அலங்கல்
- பூமாலை);
(திருந்துதல்
- செவ்விதாதல்;
மேன்மையாதல்);
(திருநாவுக்கரசர்
தேவாரம் - 5.5.5 - "தேடிச்
சென்று திருந்தடி ஏத்துமின்");
நகைத்து
எயில் கொளுத்தினான் -
சிரித்து
முரங்களை எரித்தவன்;
(நகைத்தல்
- நகுதல்;
சிரித்தல்);
(கொடுப்பவன்
னகைத்தெயில் - னகர
ஒற்று விரித்தல் விகாரம் -
கொடுப்பவன்
நகைத்து எயில்);
புலன்களுக்கு
அரும் பரன் - ஐம்புலன்களால்
அறிதற்கு அரிய பரமன்;
(திருநாவுக்கரசர்
தேவாரம் - 6.97.10 - "அவனருளே
கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன்
இவ்வண்ணத்தன் இவனிறைவன்
என்றெழுதிக் காட்டொணாதே");
புறம்பயத்து
ஒருத்தனே -
திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற
பெருமான்.
6)
இரிந்தவான்
வணங்கியோ எனப்புலம் பிடுந்தினம்
பரிந்தவன்
கறைக்களன் குவிந்தவன்
படைப்பினில்
விரிந்தவன்
மறைப்பொருள் விரித்தவன்
மதிக்கருள்
புரிந்தவன்
பொழில்திகழ் புறம்பயத்
தொருத்தனே.
இரிந்த
வான் வணங்கி "ஓ"
எனப்
புலம்பிடும் தினம் பரிந்தவன்-
அஞ்சிய
தேவர்கள் "ஓலம்"
என்று
கதறித் திருவடியை வழிபட்டபோது
அவர்களுக்கு இரங்கியவன்;
கறைக்களன்
- கறைக்கண்டன்
- நீலகண்டன்;
குவிந்தவன்
படைப்பினில் விரிந்தவன்
- சம்ஹார-காலத்தில்
குவிந்தவன்,
படைப்புக்-காலத்தில்
விரிந்தவன்; (அப்பர்
தேவாரம் - 6.86.6 - "விரிந்தானைக்
குவிந்தானை வேதவித்தை");
மறைப்பொருள்
விரித்தவன் -
கல்லால-மரத்தின்கீழ்
வேதப்பொருளை உபதேசித்த
தட்சிணாமூர்த்தி;
மதிக்கு
அருள் புரிந்தவன் -
சந்திரனுக்கு
அருளியவன்;
பொழில்
திகழ் புறம்பயத்து
ஒருத்தனே - சோலை
சூழ்ந்த திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற
பெருமான்.
7)
அறத்தினன்
முனர்த்தவர்க் கறங்களால்
அமர்ந்துரை
திறத்தினன்
திருச்சடைத் திரைத்தெழும்
பெரும்புனல்
மறைத்தவன்
மழுப்படைக் கரத்தினன் மடந்தையோர்
புறத்தினன்
பொழில்திகழ் புறம்பயத்
தொருத்தனே.
அறத்தினன்
- தர்மத்தின்
வடிவு ஆனவன்;
முனர்த்
தவர்க்கு அறங்கள் ஆல் அமர்ந்து
உரை திறத்தினன் -
முன்னர்ச்
சனகாதியருக்குக் கல்லால-மரத்தின்கீழ்
அறம் உபதேசித்தவன்;
திருச்சடைத்
திரைத்து எழும் பெரும்புனல்
மறைத்தவன் -
திருச்சடையினுள்
அலைத்து எழும் பெரிய கங்கையை
ஒளித்தவன்;
மழுப்படைக்
கரத்தினன் - கையில்
மழுவை ஏந்தியவன்;
மடந்தை
ஓர் புறத்தினன் -
உமையை
ஒரு பக்கத்தில் உடையவன்;
பொழில்
திகழ் புறம்பயத்து
ஒருத்தனே - சோலை
சூழ்ந்த திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற
பெருமான்.
8)
இராவணன்
செருக்கழித் திசைத்துதிக்
கிரங்கினான்
அராநிலா
அணிந்தவன் மனங்கசிந் தடித்தலம்
பராவுவார்
தமக்கரும் பதந்தரும் பரம்பரன்
புராதனன்
பொழில்திகழ் புறம்பயத்
தொருத்தனே.
இராவணன்
செருக்கு அழித்து இசைத்-துதிக்கு
இரங்கினான் - இராவணனின்
ஆணவத்தை அழித்துப்,
பின்
அவன் இசையோடு துதிக்க அதனைக்
கேட்டு இரங்கியவன்;
அரா
நிலா அணிந்தவன் -
பாம்பையும்
சந்திரனையும் சூடியவன்;
மனம்
கசிந்து அடித்தலம்
பராவுவார் தமக்கு அரும்-பதம்
தரும் பரம்பரன் -
உள்ளம்
உருகித் திருவடியைப் போற்றும்
அன்பர்களுக்குச் சிவலோக
வாழ்வைத் தந்தருளும் பரமன்;
(பராவுதல்
- பரவுதல்
- போற்றுதல்);
புராதனன்
- தொன்மையானவன்;
பொழில்
திகழ் புறம்பயத்து ஒருத்தனே
- சோலை
சூழ்ந்த திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற
பெருமான்.
9)
மயங்கயன்
பறந்துமால் அகழ்ந்திளைத்
திறைஞ்சிய
தயங்கெரிப்
பிழம்பினன் தமர்க்கிரங்
கருட்கரன்
கயங்குராப்
புனைந்தவன் கறுத்தநஞ்
சருந்தினான்
புயங்களெட்
டுடைச்சிவன் புறம்பயத்
தொருத்தனே.
மயங்கு
அயன் பறந்து,
மால்
அகழ்ந்து, இளைத்து
இறைஞ்சிய - அறிவுமயங்கி
அயன் (அன்னமாய்ப்)
பறந்தும்,
திருமால்
(பன்றியாய்
நிலத்தை) அகழ்ந்தும்
(அடிமுடி
தேடிக் காணாமல்)
வருந்தி
வழிபட்ட;
தயங்கு
எரிப் பிழம்பினன் -
பிரகாசித்த
ஒளித்தூண் ஆனவன்;
(தயங்குதல்
- ஒளிவிடுதல்);
தமர்க்கு
இரங்கு அருட்கரன் -
அடியவர்களுக்கு
இரங்குகின்ற, அருள்
நிறைந்த திருக்கரம் உடையவன்;
கயம்
குராப் புனைந்தவன் -
கங்கையையும்
குராமலரையும் சடையினன்;
(கயம்
- நீர்நிலை);
கறுத்த
நஞ்சு அருந்தினான் -
கரிய
விடத்தை உண்டவன்;
புயங்கள்
எட்டுடைச் சிவன் -
எண்தோள்கள்
உடையவன்; (புயங்கள்
- புஜங்கள்);
புறம்பயத்து
ஒருத்தனே -
திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற
பெருமான்.
10)
தினந்தினம்
புரட்டையே செபித்திடும்
பிரட்டரின்
இனந்தவிர்ந்
தருத்தியால் இருங்கழல்
வழுத்துவீர்
சினந்துகூற்
றுதைத்தவன் சிறந்ததார்
எனப்பணம்
புனைந்தவன்
பொழில்திகழ் புறம்பயத்
தொருத்தனே.
தினந்தினம்
புரட்டையே செபித்திடும்
பிரட்டரின் இனம்
தவிர்ந்து -
நாள்தோறும்
பொய்யையே ஜெபம் செய்யும்
கீழோரின் கூட்டத்தை நீங்கி;
(புரட்டு
- பொய்);
(பிரட்டர்
- ப்ரஷ்டர்
- நெறியினின்று
வழுவினவர்); (இனம்
- கூட்டம்);
(தவிர்தல்
- நீங்குதல்);
(திருக்குறள்
அதிகாரம் 46 - "சிற்றினம்
சேராமை");
அருத்தியால்
இருங்-கழல்
வழுத்துவீர் - பெருமை
மிக்க திருவடியை அன்பால்
வணங்குங்கள்; (அருத்தி
- அன்பு);
(இருங்கழல்
- பெருமைமிக்க
திருவடி); (இருமை
- பெருமை);
(திருவாசகம்
- போற்றித்
திருவகவல் - அடி
129-130: "என்னையும்
ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி");
சினந்து
கூற்று உதைத்தவன்
- காலணைக்
கோபித்து உதைத்தவன்;
சிறந்த
தார் எனப் பணம் புனைந்தவன்
- சிறந்த
மாலை என்று நாகத்தை அணிந்தவன்;
(தார்
- மலர்மாலை);
(பணம்
- பாம்பின்
படம்; பாம்பு);
பொழில்
திகழ் புறம்பயத்து ஒருத்தனே
- சோலை
சூழ்ந்த திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற
பெருமான்.
11)
துடிக்கரன்
பதந்தொழும் தொழும்பரின்
விருப்பெலாம்
முடிப்பவன்
முழாவெலாம் முழங்கநள் ளிராவினில்
நடிப்பவன்
நகைத்துவான் புரங்களைக்
கணத்தினில்
பொடித்தவன்
பொழில்திகழ் புறம்பயத்
தொருத்தனே.
துடிக்கரன்
- உடுக்கைக்
கையில் ஏந்தியவன்;
(துடி
- உடுக்கு);
பதம்
தொழும் தொழும்பரின்
விருப்பு-எலாம்
முடிப்பவன் -
திருவடியை
வழிபடும் அடியார்களது
விருப்பங்களையெல்லாம்
நிறைவேற்றுபவன்;
(தொழும்பர்
- அடியவர்);
(முடித்தல்
- நிறைவேற்றுதல்);
முழாவெலாம்
முழங்க நள்-இராவினில்
நடிப்பவன் - பல
முழவுகள் முழங்க நள்ளிருளில்
கூத்தாடுபவன்;
நகைத்து
வான்-புரங்களைக்
கணத்தினில் பொடித்தவன்
- சிரித்து
முப்புரங்களை ஒரு நொடியளவில்
சாம்பலாக்கியவன்;
(கணம்
- க்ஷணம்);
பொழில்
திகழ் புறம்பயத்து ஒருத்தனே
- சோலை
சூழ்ந்த திருப்புறம்பயத்தில்
எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற
பெருமான்.
பிற்குறிப்பு:
யாப்புக்
குறிப்பு:
சந்தக்
கலிவிருத்தம் - தனாதனா
தனாதனா தனாதனா தனாதனா.
இச்சந்தத்தைத்
- தனாதனான
தானனா தனாதனான தானனா -
என்றும்
நோக்கலாம்.
"லகு-குரு"
என்ற
அமைப்பு அடிகள்தோறும் 8
முறை
வரும்.
குரு
= நெடில்
/ நெடில்+ஒற்று
/ குறில்+ஒற்று.
லகு
= குறில்
(ஒற்றுத்
தொடராதபோது).
அடி
ஈற்றில் வரும் லகுவும் குருவாகக்
கருதப்படும்.
இச்சந்தத்தை
வடமொழியில் "பஞ்சசாமரம்"
(pañcacāmaram - पञ्चचामरम्)
என்பர்;
உதாரணம்
- கணேச
பஞ்சரத்ன ஸ்தோத்திரம் -
"முதாகராத்த
மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்";
சம்பந்தர்
தேவாரம் - 2.98.1 - "வரைத்தலைப்
பசும்பொனோ டருங்கலன்
களுந்திவந்(து)"
(தேவாரத்தில்
4 விளச்சீர்கள்
வரும் வேறு பதிகங்களும் உள்ளன.
ஆனால்
அவை இச்சந்தத்தினின்று சற்றே
வேறுபடுவன. உதாரணம்:
சம்பந்தர்
தேவாரம் - 3.25.1 - "மருந்துவேண்
டில்இவை மந்திரங் கள்இவை")
வி.
சுப்பிரமணியன்
------------
------------------