Wednesday, June 13, 2018

03.06.016 - 03.06.020 - எட்டி - அடிகளை - மடக்கு

03.06 – மடக்கு

2007-07-17

3.6.16 - எட்டி - அடிகளை - மடக்கு

-------------------------------------------------

எட்டி எனவிருப்பார், என்றும் இகழ்ந்துரைத்(து)

எட்டி இருப்போர்க்(கு); இனியவர் எட்டி

அடிகளைப் பற்றுவார்க்(கு) அல்லலெலாம் முக்கண்

அடிகளைப் போற்ற அறும்.


எட்டி - 1. எட்டிக்காய்; 2. தள்ளி; விலகி; 3. அடைந்து;

அடிகள் - 1. திருவடிகள்; 2. சுவாமி;

ஆர்தல் - பொருந்துதல்; ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்;

எட்டி என இருப்பார், என்றும் இகழ்ந்து உரைத்து எட்டி இருப்போர்க்கு - எப்பொழுதும் தகாத சொற்களைக் கூறித் தள்ளி இருப்பவர்களுக்கு (இறைவர்) எட்டிக்காய் போல இருப்பார்;

இனியவர், எட்டி அடிகளைப் பற்றுவார்க்கு - நெருங்கித் திருவடிகளைப் பற்றிக்கொள்பவர்களுக்கு இனிமை பயப்பவர்;

அல்லல் அம்-முக்கண் அடிகளைப் போற்ற அறும் - அந்த முக்கண் இறைவனை வணங்கினால் துன்பம் தீரும்.

---------------------

2007-07-17

3.6.17 - ஆறு - பொறிகள் - மடக்கு

-------------------------------------------------

ஆறு முடியில் அலைத்தோடும் எம்பெருமான்,

ஆறு முகத்தவன் அன்றுவரும் ஆறு

பொறிகள் உமிழ்கண்ணன், பொன்னடிகள் தம்மைப்,

பொறிகள் வழிக்குவரப் போற்று.


ஆறு - 1. கங்கை; 2. ஆறு என்ற எண்; 3. விதம்;

பொறி - 1. தீப்பொறி; 2. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐவகை இந்திரியம்.

வழிக்குவருதல் - நல்வழிப்படுதல்;


ஆறு முடியில் அலைத்தோடும் எம்பெருமான் - முடியின்மேல் கங்கை அலைத்து ஓடுகின்ற சிவபெருமான்;

ஆறு முகத்தவன் அன்று வரும் ஆறு பொறிகள் உமிழ் கண்ணன் - (தேவர்கள் வேண்டிய) அன்று ஆறுமுகம் உடைய முருகன் வரும்படி (ஆறு) பொறிகளை உமிழ்ந்த நெற்றிக்கண் உடையவன்;

பொன்னடிகள் தம்மைப், பொறிகள் வழிக்குவரப் போற்று - (மனமே! இந்தக் கண், வாய், முதலான ஐந்து) பொறிகளும் நல்வழிப்பட (அப்பெருமானுடைய) பொன் போன்ற திருவடிகளைப் போற்றுவாயாக!

---------------------

2007-07-19

3.6.18 - மாதரை - நாணல்ல - மடக்கு

-------------------------------------------------

மாதரை எண்ணி மயங்கு(ம்) மடநெஞ்சே!

மாதரை மேனி வளர்சடைமேல் மாதரை

நாணல்ல பாம்புடைய நம்பன்தாள் போற்றாத

நாணல்ல நாளோ நவில்!


பதம் பிரித்து:

மாதரை எண்ணி மயங்கும் மட நெஞ்சே!

மாது அரை மேனி, வளர் சடைமேல் மாது, அரை

நாண் நல்ல பாம்பு உடைய நம்பன் தாள் போற்றாத

நாள், நல்ல நாளோ நவில்!


மாதரை எண்ணி மயங்கும் மட நெஞ்சே - பெண்களை எண்ணி மயங்கும் பேதைமனமே;

மாது அரை மேனி - உமை திருமேனியில் பாதி;

வளர் சடை மேல் மாது - வளர்கின்ற சடைமேல் கங்கை;

அரை நாண் நல்லபாம்பு - இடுப்பில் அரைஞாண் நாகப்பாம்பு;

உடைய நம்பன் தாள் போற்றாத நாள், நல்ல நாளோ நவில் - இவற்றையெல்லாம் உடைய சிவன் திருவடியைப் போற்றாத நாள் நல்ல நாளா? சொல்லு! (நம்பன் - சிவன்; விரும்பத் தக்கவன்); (நவில்தல் - சொல்தல்);

இலக்கணக் குறிப்பு:

தனிக்குறிலை அடுத்து வரும்பொழுது, ண்+= ண்ண; இதர இடங்களில் ண்+= ;

தனிக்குறிலை அடுத்து வரும்பொழுது, ள்+= ண்ண; இதர இடங்களில் ள்+= ;

---------------------

2007-07-19

3.6.19 - எம்மனை - ஆனாய் - மடக்கு

-------------------------------------------------

எம்மனை எம்பொருள் என்பார்! எமன்வரும்போ(து)

எம்மனை எப்பொருள் இங்குதவும்? எம்மனை

ஆனாய், அடியவர்க்கா வன்னமனை அன்றுதைத்த

ஆனாய்! அருளென்பார்க் குய்வு!


எம் மனை, எம் பொருள் என்பார்! எமன் வரும்போது

எம்மனை எப்பொருள் இங்கு உதவும்? "எம் அனை

ஆனாய்! அடியவர்க்கா வன்-நமனை அன்று உதைத்த

ஆனாய்! அருள்" என்பார்க்கு உய்வு!


எம்மனை - 1. எம் மனை; 2. எம் அனை;

எம் - எங்கள்;

= எந்த;

மனை - வீடு; மனைவி; குடும்பம்;

அனை - அன்னை; - இடைக்குறை விகாரம்;

ஆன் - இடபம்;

ஆனாய் - 1. ஆயினாய்; 2. இடப வாகனனே;

உய்வு - உய்தி; ஈடேற்றம்;


எம் மனை எம் பொருள் என்பார் - (சிலர்) "எம் குடும்பம், எம் பொருள்" என்று எப்போதும் எண்ணியும் சொல்லியும் இருப்பார்கள்;

எமன் வரும்போ(து) எம் மனை எப் பொருள் இங்(கு) உதவும்? - கூற்றுவன் வரும் சமயத்தில் எந்த மனை (வீடு, மனைவி, குடும்பம், இவற்றுள்), எந்தப் பொருள் இங்கே துணை வரும்?

எம் அனை ஆனாய் - "எம் தாய் ஆனவனே;

அடியவர்க்கா வன்-நமனை அன்று உதைத்த ஆனாய் - மார்க்கண்டேயருக்காக அன்று காலனை உதைத்த இடப வாகனனே!

அருள்!" என்பார்க்கு உய்வு - அருள்வாயாக!" என்று வழிபடும் அன்பர்களுக்கு உய்தி கிட்டும்.

---------------------

2007-07-19

3.6.20 - அஞ்சை - அளிமிகு - மடக்கு

-------------------------------------------------

அஞ்சைக் களத்துறை அப்பனது நாமவெழுத்(து)

அஞ்சை அனுதினம் செப்பிட, அஞ்சை

அளிமிகு வல்வினைநீ றாக்கி அருள்வான்!

அளிமிகு தாயே அவன்!


அஞ்சு - 1. ஐந்து; 2. அச்சம்;

அஞ்சைக்களம் - திருவஞ்சைக்களம்; (சுந்தரரது இறுதிப் பதிகம் பெற்ற தலம்);

அளித்தல் - தருதல்;

அளி - அன்பு;

அளி மிகு தாய் - அன்பு மிகுந்த தாய்;


அஞ்சைக்களத்து உறை அப்பனது - அஞ்சைக்களத்தில் மேவும் தந்தையின்;

நாம-எழுத்து அஞ்சை அனுதினம் செப்பிட - "நமசிவாய" என்ற திருவைந்தெழுத்தைத் தினமும் செபித்திட;

அஞ்சை அளி மிகு வல் வினை நீறு ஆக்கி அருள்வான் - அச்சத்தைத் தருகின்ற மிகுந்த கொடிய வினையைச் சாம்பலாக்கி அருள்புரிவான்!

அளி மிகு தாயே அவன் - அவன் அன்பு மிகுந்த தாயே ஆவான்!

---------------

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Sunday, June 10, 2018

03.06.011 - 03.06.015 - நிலாவுடன் - கண்டங்கரியவன் - மடக்கு

 03.06 – மடக்கு


2007-06-21

3.6.11 - நிலாவுடன் - கண்டங்கரியவன் - மடக்கு

-------------------------------------------------

நிலாவுடன் சென்னிமேல் நீர்தாங் கிறையை

நிலாவுடன் மாளுமுன் நெஞ்சே சொலாய்நுதலிற்

கண்டங் கரியவன் காணாவன் பர்க்கெளிய

கண்டங் கரியவன் காப்பு.


பதம் பிரித்து:

நிலாவுடன் சென்னிமேல் நீர் தாங்கு இறையை,

நிலா உடல் மாளும் முன், நெஞ்சே சொலாய் ! நுதலில்

கண் தங்கு அரிஅவன் காணா, அன்பர்க்(கு) எளிய,

கண்டம் கரியவன் காப்பு.


நிலா - 1. சந்திரன்; 2. நில்லாத;

நுதல் - நெற்றி; தங்குதல் - இருத்தல்;

கண்டங்கரியவன் - 1. கண் தங்கு அரியவன்; 2. கண்டம் கரியவன்;

கண்டம் - கழுத்து;

அரியவன் - 1. சிவபெருமான்; (5.38.8 - "பேசற்கு அரியவன்"); 2. அரி - ஹரி - விஷ்ணு;

காப்பு - பாதுகாவல்;

இலக்கணக் குறிப்புகள்:

புணர்ச்சி விதி: ல்+= ன்ம;

புணர்ச்சி விதி: ண்+= ண்ட;


நெஞ்சே! சென்னிமேல் சந்திரனையும் கங்கையையும் தாங்கும் இறைவனை, இந்த நிலையற்ற உடல் மாளும் முன் துதிப்பாய்! நெற்றியில் கண் திகழ்பவனும், விஷ்ணுவால் அறியப்படாதவனும், அன்பர்களால் எளிதில் அடையப்படுபவனுமான நீலகண்டன் நம் காப்பு.

---------------------

2007-06-21

3.6.12 - கற்சிலை - காட்டில் - மடக்கு

---------------------------------------------------------------

கற்சிலை என்று கருதுவார் சொல்விட்டுக்

கற்சிலை கொண்டுபுரம் காய்ந்தவனைக் கற்கநெஞ்சே

காட்டில் நடமிடும் கண்ணுதல் ஈசனைக்

காட்டில் நமக்கிங்கார் காப்பு?


கல் - 1. கல்; / 2. மலை;

சிலை - 1. சிற்பம்; / 2. வில்;

கற்சிலை - 1. கல்லால் ஆன சிலை; 2. மேரு மலையால் ஆன வில்;

விடுதல் - நீங்குதல்;

புரம் - முப்புரம்;

காய்தல் - எரித்தல் ;

கற்க - திருவடியை வணங்கக் கற்பாய்; ("கற்றவர்" என்று திருமுறைகளில் வரக் காணலாம்);

காட்டில் - 1. சுடுகாட்டில்; / 2. காட்டிலும்; (உறழ்ச்சிப் பொருள் குறிக்கும் இடைச் சொல்);

நமக்கிங்கார் - நமக்கு இங்கு ஆர் - இங்கே யார் நமக்கு;

காப்பு - பாதுகாவல்; காவலாக இருப்பது;


மனமே! கல்லால் ஆன சிற்பம் என்று எண்ணுபவர்களது பேச்சைப் பொருட்படுத்தாது நீங்கி, மேருமலை வில்லால் முப்புரங்களை அழித்தவனை வணங்கக் கற்பாயாக; சுடுகாட்டில் கூத்தாடும் நெற்றிக்கண்ணுடைய பெருமானை அன்றி வேறு யார் இங்கே நமக்குப் பாதுகாவல்?

---------------------

2007-06-29

3.6.13 - உள்ளும் - வலியை - மடக்கு

---------------------------------------------------------------

உள்ளும் புறமும் உறைந்து, தனைஉருகி

உள்ளும் அடியவர் உள்ளத்தில் உள்ள

வலியை ஒழிப்பான், இலங்கையர் மன்னன்

வலியை ஒழித்தபெரு மான்.


உள்ளும் புறமும் உறைந்து - (படைப்பின்) உள்ளேயும் வெளியேயும் இருந்து; (அப்பர் தேவாரம் - திருமுறை 6.4.3 - "அண்டத்துக்(கு) அப்பாலாய் இப்பாலானே"); (உறைதல் - தங்குதல்; வசித்தல்);

தனை உருகி உள்ளும் அடியவர் உள்ளத்தில் உள்ள வலியை ஒழிப்பான் - தன்னை உருகி வழிபடும் பக்தர்களது மனவருத்தத்தைத் தீர்ப்பவன்; (உள்ளுதல் - எண்ணுதல்); (வலி - 1. துன்பம்);

இலங்கையர் மன்னன் வலியை ஒழித்த பெருமான்.- இராவணனை நசுக்கி அவனது வலிமையை ஒழித்த சிவபெருமான்; (வலி - 2. பலம்; அகங்காரம்; செருக்கு);

---------------------

2007-07-05

3.6.14 - வாசனை - வீடும் - மடக்கு

---------------------------------------------------------------

வாசனை உள்ள மலர்கொண்டு மாகயிலை

வாசனை ஏத்து மனமே!முன் வாசனை

வீடும் அவனருளால் வெவ்வினையை வென்றிங்கே

வீடும் அடைவாய் விரைந்து!


வாசனை - 1. நறுமணம்; / 2. முற்பிறப்பு அனுபவத்தால் இம்மையில் உண்டாகும் பற்று;

வாசன் - வசிப்பவன்;

வீடுதல் - விடுதல்; கெடுதல்; ஒழிதல்;

வீடு - முக்தி; வீடுபேறு;


வாசனை உள்ள மலர்கொண்டு மா கயிலை வாசனை ஏத்து - வாசமலர்களால் அழகிய கயிலை மலையில் உறையும் சிவபெருமானைத் துதி;


முன் வாசனை வீடும் அவன் அருளால் - அப்பெருமானது அருளால் பூர்வஜன்ம வாசனைகள் நீங்கும்;

அவன் அருளால் வெவ்வினையை வென்று இங்கே வீடும் அடைவாய் விரைந்து - அவன் அருளால் கொடிய வினையை வென்று ஜீவன்முக்தி நிலையையும் பெறலாம்.

---------------------

2007-07-09

3.6.15 - என்னை - இறையே - மடக்கு

---------------------------------------------------------------

என்னை எனவுன்னை ஏத்தி அறியாத

என்னை எழுதிட வைத்ததுதான் என்னை!

இறையே தொழுதாலும் இன்பங்கள் ஈயும்

இறையே மறவேன் இனி!


என்னை - 1. என் + (இரண்டாம் வேற்றுமை); / 2. என் ஐ; (தலைவன்); / 3. வியப்புக் குறிப்பு (என்ன விந்தை);

இறை - 1. அற்பம்; சிறிதளவு; / 2. இறைவன்;


என் தலைவன் என்று உன்னைத் துதித்து அறியாத என்னையும் உன் புகழைப் பாடவைத்தது என்ன விந்தை! கொஞ்சம் தொழுதாலும் இன்பங்களை வாரி வழங்கும் இறைவனே, உன்னை இனி மறவேன்.

---------------


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Thursday, June 7, 2018

03.06.006 - 03.06.010 - வேலை - எனவிருப்பாய் - மடக்கு

03.06 – மடக்கு

2007-05-16

3.6.6 - வேலை - எனவிருப்பாய் - மடக்கு

-------------------------------------------------

வேலை விடமுண்ட நீலகண்டன் மூவிலை

வேலை யுடையவன் தாள்தொழலே வேலை

யெனவிருப்பா யென்னெஞ்சே மார்க்கண்டர் காவா

யெனவிருப்பா யென்றானை யேத்து.


பதம் பிரித்து:

வேலை விடம் உண்ட நீலகண்டன், மூ இலை

வேலை உடையவன் தாள் தொழலே வேலை

என விருப்பாய், என் நெஞ்சே, மார்க்கண்டர் "காவாய்"

என "இருப்பாய்" என்றானை ஏத்து.


வேலை - 1. கடல்; 2. தொழில்;

மூ இலை வேல் - திரிசூலம்;

விருப்பு - விருப்பம்; அன்பு; (அப்பர் தேவாரம் - 5.34.6 - "இட்டமாய்த் தொழுவார்");

மார்க்கண்டர் - மார்க்கண்டேயர்;

காவாய் - காப்பாயாக;

இருத்தல் - நிலைபெறுதல்; சீவித்தல்;


என் மனமே! கடலில் எழுந்த ஆலகால விடத்தை உண்ட திருநீலகண்டன், திரிசூலம் உடையவன் திருவடியைத் தொழுவதே தொழில் என்று விருப்பத்தோடு, மார்க்கண்டேயர் "காப்பாற்று" என்று வேண்ட, "என்றும் நிலைத்து இருப்பாய்" என்று அருள்புரிந்தவனைத், துதிப்பாயாக!

---------------------

2007-05-22

3.6.7 - பெற்றிமை - பெற்றவனை - மடக்கு

-------------------------------------------------

பெற்றிமை யோர்நஞ்சைத் துற்றிக் கறைமிடற்றிற்

பெற்றிமை யோர்க்கமுதைத் தந்துவந்த பெற்றிமை

பெற்றவனை யென்பணியும் பித்தனை யெவ்வுலகும்

பெற்றவனை யென்றென்றும் பேணு!


பதம் பிரித்து:

பெற்றிமை ஓர்! நஞ்சைத் துற்றிக் கறை மிடற்றில்

பெற்று, இமையோர்க்கு அமுதைத் தந்து உவந்த பெற்றிமை

பெற்றவனை, என்பு அணியும் பித்தனை, எவ்வுலகும்

பெற்றவனை, என்றென்றும் பேணு!


பெற்றிமை - 1. பெருமை; 2. இயல்பு/தன்மை;

ஓர் - எண்ணு;

துற்றி - உண்டு; (துற்றுதல் - உண்ணுதல்);

பெற்றவன் - 1. உடையவன்; 2. ஈன்றவன்;

என்பு - எலும்பு;


(ஈசன்) பெருமையை எண்ணு! ஆலகால விஷத்தை உண்டு, கழுத்தில் கறையை ஏற்றுத், தேவர்களுக்கு அமிர்தத்தை அளித்து மகிழ்ந்த குணம் உடையவனை, எலும்பை ஆபரணமாக அணிகின்ற பேரருளாளனை, எல்லா உலகங்களையும் ஈன்றவனை, எப்பொழுதும் (மனமே) போற்றுவாயாக!

---------------

2007-05-22

3.6.8 - தலையோடு - கொள்பவனை - மடக்கு

-------------------------------------------------

தலையோடு கங்கையைத் தாங்கியையம் கொள்ளத்

தலையோடு செல்லுஞ் சரமாய்த் தலையோடு

கொள்பவனை மான்விழி மங்கையைக் கூறாகக்

கொள்பவனை என்னெஞ்சே கூறு!


பதம் பிரித்து:

தலை ஓடு கங்கையைத் தாங்கி, ஐயம் கொள்ளத்

தலையோடு செல்லும், சரமாய்த் தலையோடு

கொள் பவனை, மான் விழி மங்கையைக் கூறு ஆகக்

கொள்பவனை, என் நெஞ்சே கூறு!


தலை ஓடு கங்கையைத் தாங்கி - தலையில் ஓடுகின்ற கங்கையைத் தாங்கி;

ஐயம் கொள்ளத் தலையோடு செல்லும் - பிச்சை ஏற்பதற்குப் பிரமனது மண்டையோட்டை ஏந்திச் செல்கின்ற;

சரமாய்த் தலையோடு கொள் - மாலையாக மண்டையோடுகளை அணிகின்ற

பவனை - கடவுளை; சிவனை;

மான் விழி மங்கையைக் கூறு ஆகக் கொள்பவனை - மான் போன்ற மருண்ட பார்வையுடைய பார்வதியை உடலில் ஒரு கூறாக உடையவனை;

என் நெஞ்சே கூறு - என் மனமே, போற்றிக் கூறுவாயாக!

---------------

2007-05-23

3.6.9 - நாணாம் - வழுவாது - மடக்கு

-------------------------------------------------

நாணாம் புரமெரிநாள் வில்லுக்கு நாகமரை

நாணாம் பணிகின்ற நாதற்கு நாணாம்

வழுவாது போதொடு வாழ்த்த வருமே

வழுவாது போயின்ப வாழ்வு.


பதம் பிரித்து :

நாண் ஆம் புரம் எரி நாள் வில்லுக்கு நாகம் அரை

நாண்,நாம் பணிகின்ற நாதற்கு; நாள் நாம்

வழுவாது போதொடு வாழ்த்த, வருமே

வழு வாது போய் இன்ப வாழ்வு .


இலக்கணக் குறிப்புகள் :

1. "நாகம்" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைக்க;

2. ளகர ஈற்றுப் புணர்ச்சி விதி: (தனிக்குறிலை அடுத்து வாராத இடங்களில்): ள்+= ண என்று ஆகும்


நாண் ஆம் புரம் எரி நாள் வில்லுக்கு நாகம் - முப்புரங்களை எரித்த அன்று வில்லுக்கு நாண் ஆகியது நாகம்;

நாம் பணிகின்ற நாதற்கு நாகம் அரை நாண் - நாம் வணங்குகின்ற தலைவனுக்கு நாகம் அரைஞாண்;

நாள் நாம் வழுவாது போதொடு வாழ்த்த - (அப்பெருமானைத்) தினமும் நாம் மறவாமல் பூவோடு வாழ்த்தினால்;

வருமே வழு வாது போய் இன்ப வாழ்வு - (அவனுடைய அருளால் நம்) குற்றங்கள், வழக்குகள் எல்லாம் நீங்கி, இன்ப வாழ்வு வரும்.

---------------

2007-06-04

3.6.10 - நஞ்சிவன் - காலை - மடக்கு

-------------------------------------------------

நஞ்சிவன் கண்டத்தில் நல்லணி ஆகுமே

நஞ்சிவன் கண்ணெரிக்கும் வேள்மனமே நஞ்சிவன்

காலை வழிபடுமார்க் கண்டர்பால் காலன்போங்

காலை உதைத்தவன் காண்!


பதம் பிரித்து:

நம் சிவன் கண்டத்தில் நல் அணி ஆகுமே

நஞ்சு! இவன் கண் எரிக்கும் வேள்! மனமே! நஞ்சு, இவன்

காலை வழிபடும் மார்க்கண்டர்பால் காலன் போம்

காலை உதைத்தவன் காண்!


நஞ்சு - 1. விஷம்; / 2. (உள்ளம்) நைந்து; (அப்பர் தேவாரம் - 5.68.7 - "நஞ்ச நெஞ்சர்க் கருளு நள்ளாறரே" - நஞ்ச - நைந்த ; நைஞ்ச என்றாய் நஞ்ச என மருவியது);


நம் சிவன் கண்டத்தில் நல் அணி ஆகுமே நஞ்சு! - நம்பெருமான் மிடற்றில் ஆலகால விஷம் அழகிய ஆபரணம் ஆகும்;

இவன் கண் எரிக்கும் வேள் - இவனது கண் மன்மதனை எரிக்கும்; (வேள் - மன்மதன்);

மனமே! நஞ்சு, இவன் காலை வழிபடும் மார்க்கண்டர்பால் காலன் போம் காலை உதைத்தவன் காண்! - மனமே, உள்ளம் கசிந்து இப்பெருமானது திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரிடம் காலன் சென்றபொழுது காலனை உதைத்தவன்!

---------------


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Monday, June 4, 2018

04.39 - திரைலோக்கி (திருலோக்கி) - பாவம் அகன்றிட

04.39 - திரைலோக்கி (திருலோக்கி) - பாவம் அகன்றிட

2013-12-31

திரைலோக்கி (திருலோக்கி)

------------------

(சந்தக் கலித்துறை - தானன தானன தான தான தனதானன - சந்தம்).

(சம்பந்தர் தேவாரம் - 3.8.1 - "சடையுடை யானும்நெய்");


1)

பாவம கன்றிட வேண்டில் எய்திப் பணிநெஞ்சமே

மூவகை மாசுகள் அற்ற மூர்த்தி முதலீறிலன்

சேவமர் கின்றவன் சென்னி மீது திரையேற்றவன்

சேவகன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.


பாவம் அகன்றிட வேண்டில் எய்திப் பணி நெஞ்சமே - தீவினை தீரவேண்டும் என்றால், நெஞ்சே, நீ சென்றடைந்து தொழுவாயாக;

மூவகை மாசுகள் அற்ற மூர்த்தி - மும்மலங்கள் இல்லாதவனான இறைவன்;

முதல் ஈறு இலன் - முதலும் முடிவும் இல்லாதவன்;

சே அமர்கின்றவன் - இடபத்தை வாகனமாக விரும்பியவன்;

சென்னி மீது திரைற்றவன் - தலைமேல் கங்கையை அணிந்தவன் - கங்காதரன்; (திரை - நதி);

சேவகன் - வீரன்;

மேவு இடம் - அப்பெருமான் விரும்பி உறையும் தலமான; (சம்பந்தர் தேவாரம் - 3.34.4 - "கொன்றைசேர் சடையினார் மேவிடம்");

செய் அணிந்த திரைலோக்கியே - வயல் சூழ்ந்த திரைலோக்கி என்ற தலத்தை; (செய் - வயல்);


2)

ஐயுற வொன்றிலை அல்லல் நீங்கும் அடைநெஞ்சமே

பையர வார்த்தவன் பாரி டங்கள் பலசூழ்ந்திசை

செய்யந டிப்பவன் திங்கள் நாகம் திகழ்சென்னியன்

செய்யவன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.


ஐயுறவு ஒன்று இலை - சிறிதும் சந்தேகம் இல்லை; (ஐயுறவு - சந்தேகம்);

அல்லல் - துன்பம்;

பையரவு ஆர்த்தவன் - படம் உடைய நாகத்தை அரைநாணாகக் கட்டியவன்; (பை - பாம்பின் படம்);

பாரிடங்கள் பல சூழ்ந்து இசை செய்ய நடிப்பவன் - பூதகணங்கள் சூழ்ந்து இசை ஒலிக்க ஆடுபவன்; (பாரிடம் - பூதம்); (நடித்தல் - ஆடுதல்);

செய்யவன் - சிவந்த நிறம் உடையவன்;

அடை நெஞ்சமே ... திரைலோக்கியே - மனமே, திரைலோக்கியை அடைந்து ஈசனை வழிபடுவாயாக;


3)

பாயினில் வீழ்ந்துயிர் போய்வி டாமுன் பணிநெஞ்சமே

தாயினும் நல்லவன் சார்ந்த வர்க்குத் தயைமிக்கவன்

நோயிலன் நீறணி மார்பில் நூலன் நுதலார்கணில்

தீயினன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.


பாயினில் வீழ்ந்து உயிர் போய்விடாமுன் - முதுமையாலும் நோய்களாலும் படுத்தபடுக்கையாகி உயிர் பிரிவதன் முன்னமே;

நுதல் ஆர் கணில் தீயினன் - நெற்றியில் பொருந்திய கண்ணில் தீயை உடையவன்; (கணில் - கண்ணில்; இடைக்குறை விகாரம்);


4)

தொய்வற நித்தலும் இன்பம் ஆரத் தொழுநெஞ்சமே

எவ்வணம் அன்பர்கள் ஏத்தி னாலும் இனிதேற்பவன்

பவ்வவி டத்தினை உண்ட கண்டன் பவளம்புரை

செவ்வணன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.


தொய்வு அற நித்தலும் இன்பம் ஆரத் தொழு நெஞ்சமே - தளர்ச்சி நீங்கி என்றும் இன்பமே மிக வணங்கு நெஞ்சமே;

எவ்வணம் அன்பர்கள் ஏத்தினாலும் இனிது ஏற்பவன் - அடியவர்கள் எந்த விதமாக, எந்த வடிவினை வழிபட்டாலும் ஏற்று இன்னருள் செய்பவன்; (அடியவர்கள் வழிபட்ட விதங்களைப் பெரியபுராணத்தில் நாயன்மார்கள் வரலாறுகளிற் காண்க); (காரைக்கால் அம்மையார் - அற்புதத் திருவந்தாதி - 11.4.33 - "நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே ஆம்"

---- தனக்கென ஓர் வடிவம் இல்லாது, கருதுவார் கருதும் வடிவமாய் நின்று அவர்கட்கு அருளுதலே இவனது இயல்பு );

பவ்வ விடத்தினை உண்ட கண்டன் - கடல்நஞ்சை உண்ட நீலகண்டன்; (பவ்வம் - கடல்);

பவளம் புரை செவ்வணன் - பவளம் போல் செவ்வண்ணம் உடையவன்; (புரைதல் - ஒத்தல்);


5)

பற்பல நோய்தரு பாவம் நீங்கப் பணிநெஞ்சமே

மற்புயம் எட்டுடை மன்னன் நஞ்சை மணியாக்கிய

அற்புதன் அக்கினை ஆர மாக அணிமார்பினன்

சிற்பரன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.


பற்பல நோய் தரு - பலவிதமான வியாதிகளையும் துன்பங்களையும் தருகின்ற; (நோய் - வியாதி; துன்பம்); (அப்பர் தேவாரம் - 5.47.7 - "நோய்வினை வாராமே காக்கும் நாயகன்");

மற்புயம் எட்டுடை - வலிமை மிக்க எட்டுப் புஜங்களை உடைய;

அக்கினை ஆரம் ஆ அணி மார்பினன் - எலும்பை மாலை ஆக மார்பில் அணிந்தவன்; (அக்கு - எலும்பு); (ஆரம் - மாலை);

சிற்பரன் - சித் பரன் - அறிவிற்கு எட்டாதவன்;


6)

துன்றிநம் தொல்வினை சூழு முன்னர்த் தொழுநெஞ்சமே

வென்றிவெள் ளேற்றினன் மேரு வில்லி விரையார்கழல்

ஒன்றிய சிந்தையொ டோம்பு மாணி உயிர்காத்திடச்

சென்றவன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.


துன்றி நம் தொல்வினை சூழும் முன்னர் - நம் பழவினை நெருங்கிச் சூழ்வதன்முன்; (துன்றுதல் - நெருங்குதல்);

வென்றி வெள் ஏற்றினன் - வெற்றியுடைய வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன்;

மேரு வில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்;

விரை ஆர் கழல் - மணம் கமழும் திருவடியை;

ஒன்றிய சிந்தையொடு ஓம்பு மாணி உயிர் காத்திடச் சென்றவன் - மனம் ஒன்றி வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் காத்தவன்; (ஓம்புதல் - போற்றுதல்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);


7)

பொங்குவி னைத்தொடர் போக வேண்டில் புகழ்நெஞ்சமே

மங்கையொர் பங்கினன் வேணி மீது மதிவைத்தவன்

அங்கையில் ஆரழல் ஏந்தி ஆடும் அரன்மேவிடம்

தெங்குயர் சோலைகள் செய்ய ணிந்த திரைலோக்கியே.


பொங்கு வினைத்தொடர் போக வேண்டில் புகழ், நெஞ்சமே, - மனமே! பொங்கி வரும் பழவினையெல்லாம் அழியவேண்டுமென்றால், துதி;

மங்கை ஒர் பங்கினன் - உமைபங்கன்;

வேணி மீது மதி வைத்தவன் - சடைமேல் சந்திரனை அணிந்தவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.4.2 - "சென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே");

அங்கையில் ஆரழல் ஏந்தி ஆடும் அரன் மேவு இடம் - கையில் தீயை ஏந்தி ஆடுகின்ற ஹரன் உறையும் தலமான;

தெங்கு உயர் சோலைகள் செய் அணிந்த திரைலோக்கியே - தென்னைமரங்கள் உயர்கின்ற சோலையும் வயலும் சூழ்ந்த திரைலோக்கியை;


8)

அன்றிய வல்வினை அற்று வாழ அடைநெஞ்சமே

தென்றிசைக் கோன்தனைச் செற்ற தாளன் சினத்தால்மலை

அன்றசைத் தான்முடி அஞ்சொ டஞ்சை அடர்த்தானிடம்

தென்றலில் வாசனை சேர்ந்து லாவும் திரைலோக்கியே.


அன்றுதல் - பகைத்தல்; தென்திசைக்கோன்-தனைச் செற்ற தாளன் - இயமனை அழித்த திருவடியினன்; (தென்றிசை - தென் திசை); (செறுதல் - அழித்தல்);

சினத்தால் மலை அன்று அசைத்தான் முடி அஞ்சொடு அஞ்சை அடர்த்தான் இடம் - (தன் தேர் கீழே இறங்கியது கண்டு) மிகுந்த கோபத்தொடு கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத்தலைகளையும் நசுக்கியவன் உறையும் தலமான; (அடர்த்தல் - நசுக்குதல்);

தென்றலில் வாசனை சேர்ந்து லாவும் திரைலோக்கியே - தென்றலில் மணம் கமழும் திரைலோக்கியை;


9)

நீமகிழ் வெய்திட வேண்டில் நீள நினைநெஞ்சமே

வாமனன் ஆனவன் வேதன் நேட வளர்சோதியன்

காமனை நீறெழக் காய்ந்த கண்ணன் கருதும்மிடம்

தேமலர் ஆர்பொழில் செய்ய ணிந்த திரைலோக்கியே.


நீ மகிழ்வு எய்திட வேண்டில் நீள நினை நெஞ்சமே - நெஞ்சமே, நீ இன்பம் அடையவேண்டும் என்றால், மிகவும் நினை; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்");

வாமனன் ஆனவன் வேதன் நேட வளர்சோதியன் - வாமனாவதாரம் எடுத்தவனான திருமாலும் பிரமனும் தேடும்படி ஓங்கிய ஜோதிப்பிழம்பு; (வேதன் - பிரமன்); (நேட - தேட);

கருதும்மிடம் - விரும்பி உறையும் தலம்; (மகர ஒற்று விரித்தல் விகாரம்);

தேமலர் ஆர் பொழில் - வாசமலர் நிறைந்த சோலை; "தேனீக்கள் பூக்களில் ஒலிக்கும் சோலை" என்றும் பொருள்கொள்ளலாம்; (தேமலர் - தேம் மலர்; தேம் - வாசனை; தேன்; இனிமை; தேனீ); (ஆர்தல் - நிறைதல்; ஆர்த்தல் - ஒலித்தல்);


10)

துன்னிவி னைத்தொடர் சூழு முன்னர்த் தொழுநெஞ்சமே

தென்னவன் நீறணி யாத தெண்ணர் சிறுசொல்கொளார்க்(கு)

இன்னலம் ஈபவன் ஏற தேறி இளவெண்பிறைச்

சென்னியன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.


துன்னி வினைத்தொடர் சூழு முன்னர்த் தொழு நெஞ்சமே - நெஞ்சமே, பழவினைத்தொடர் நெருங்கிச் சூழ்வதன்முன் தொழுவாயாக; (துன்னுதல் - செறிதல்);

தென்னவன் நீறு அணியாத தெண்ணர் - சிவபெருமானின் திருநீற்றினை அணியாத அறிவிலிகளது; ("தென்னவன்; நீறு அணியாத தெண்ணர் சிறுசொல்கொளார்க்கு இன்னலம் ஈபவன்;" என்று பிரித்துத், தென்னவன் என்ற சொல்லைத் தனியாகவும் பொருள்கொள்ளலாம்); (தென்னவன் - தென்னன் - அழகியவன் - சிவபெருமான்; தென்னாடுடையவன் என்றலுமாம்); (அப்பர் தேவாரம் - 5.21.5 - "தென்னவன் எனை ஆளும் சிவனவன்"); (தெண்ணர் - அறிவிலிகள்);

சிறுசொல் கொளார்க்கு இன்னலம் ஈபவன் - புன்மொழிகளை மதியாதவர்களுக்கு இன்னருள் செய்பவன்; (இன்னலம் - இன்+நலம் - இனிய நலம்);

ஏறதேறி - ஏறுஅது ஏறி - இடபவாகனன்;

இள-வெண்-பிறைச் சென்னியன் - வெண்ணிற இளந்திங்களைத் தலையில் அணிந்தவன்;


11)

பந்தவி னைத்தொடர் பாற வேண்டில் பணிநெஞ்சமே

வந்தனை செய்யிமை யோர்கள் வாழ வரைவில்லினால்

அந்தர முப்புரம் அட்ட ஐயன் அமரும்மிடம்

செந்தமிழ் நாவினர் சென்று போற்றும் திரைலோக்கியே.


பந்த வினைத்தொடர் பாற வேண்டில் பணி நெஞ்சமே - பிணித்திருக்கும் பழவினைகள் அழியவேண்டும் என்றால் வணங்கு நெஞ்சமே; (பந்தம் - கட்டு); (பாறுதல் - அழிதல்);

வந்தனை செய் இமையோர்கள் வாழ - திருவடியை வணங்கிய தேவர்கள் வாழ்வதற்காக;

வரை-வில்லினால் அந்தர-முப்புரம் அட்ட ஐயன் அமரும் இடம் - மேருமலையை வில்லாக்கி அதுகொண்டு, வானில் திரிந்த முப்புரங்களை எரித்து அழித்த தலைவன் விரும்பி உறையும் தலமான; (வரை - மலை); (அந்தரம் - ஆகாயம்); (அடுதல் - அழித்தல்); (அப்பர் தேவாரம் - 6.49.1 - "அந்தரத்திள் அசுரர்புரம் மூன்றட்டான் காண்");

செந்தமிழ் நாவினர் சென்று போற்றும் திரைலோக்கியே - தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் அன்பர்கள் சென்று போற்றும் திரைலோக்கியை;


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :

சந்தக் கலித்துறை - தானன தானன தான தான தனதானன - என்ற சந்தம்.

சில பாடல்களில் முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

அடிகளின் ஈற்றில் உள்ள சீர்களைத் தவிர மற்ற சீர்களின் முடிவில் நெடில் பெரும்பாலும் அமையாது. (சம்பந்தர் தேவாரம் - 3.8.1 -

"சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண" /

"சடையுடை யானும்நெய் யாட லானுஞ் சரிகோவண");


விசுப்பிரமணியன்

-------------- --------------