06.03 – மடக்கு
2009-11-21
6.3.44) பாலை - மகிழும் - மடக்கு
--------------
பாலை வழிபோய்ப் படும்மனமே தேன்கலந்த
பாலை நிகர்த்தானைப் பத்தரிசை - பாலை
மகிழும் பரமனை வார்சடைமேல் வாச
மகிழும் புனைவானை வாழ்த்து.
பாலை - 1) பாலைவனம்; வறண்ட பிரதேசம்; 2) பசுவின் பாலை; 3) பாலை என்ற பண்;
மகிழும் - 1) விரும்பும்; 2) மகிழம்பூவும்;
படுதல் - அழிதல்; துன்பம் அடைதல்;
பாலை வழிபோய்ப் படும் மனமே - நல்ல வழியில் போகாமல் வினையின் வெப்பம் மிகும் வழியில் போய்த் துன்புறுகின்ற மனமே;
தேன் கலந்த பாலை நிகர்த்தானை - தேன் கலந்த பால் போல இனிப்பவனை;
பத்தர் இசை பாலை மகிழும் பரமனை - பக்தர்கள் இசைக்கும் பாலை என்ற பண்ணில் அமைந்த பாடல் கேட்டு மகிழ்கின்ற பரம்பொருளை; (சம்பந்தர் தேவாரம் - 1.108.10 - "பாலையாழ்ப் பாட்டுகந்தா னுறைகோயில் பாதாளே");
வார் சடைமேல் வாச மகிழும் புனைவானை வாழ்த்து - நீள்சடைமேல் மணம் கமழும் மகிழம்பூவையும் அணிகின்ற சிவபெருமானைத் துதிப்பாயாக. ('உம்' - எச்சவும்மை. ஈசன் தன் சடைமேல் கங்கை, நாகம், பிறைச்சந்திரன், எனப் பலவற்றையும் சூடியுள்ளான் என்பது இந்த 'உம்'மினால் பெறும் குறிப்பு). (சம்பந்தர் தேவாரம் - 1.77.7 - "எருக்கொடு முருக்கு மகிழ்இள வன்னியும் இவைநலம் பகர ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்");
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment