Saturday, December 11, 2021

06.01.101 - சிவன் - பாலம் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2009-10-31

06.01.101 - சிவன் - பாலம் - சிலேடை

-----------------------------------------------

அலைமோதும் நீர்மேல் அமையுமிரு பாலும்

கலந்து மகிழவழி காட்டும் - பலதலம்

காணுமடைந் தாரைக் கடப்பிக்கும் ஓர்பாலம்

கோணுதலார் திங்களணி கோன்.


சொற்பொருள்:

அமைதல் - 1) பொருந்துதல்; 2) தங்குதல்;

பால் - 1) பக்கம் (side); 2) பாதி; 3) பகுதி (part);

வழி - மார்க்கம்; நெறி;

தலம் - 1) ஊர்; 2) க்ஷேத்திரம்;

காணுதல் - 1) தென்படுதல்; கண்ணுக்குப் புலனாதல்; 2) வணங்குதல்; ஆராய்தல்;

அடைதல் - 1) சேர்தல்; 2) சரண்புகுதல்;

கடப்பித்தல் - கடக்கச்செய்தல்; (கடத்தல் - கடந்துபோதல்);

ஓர் - 1. ஒரு; 2) ஒப்பற்ற;

பாலம் - 1) வாராவதி (Bridge); 2) நெற்றி (bhāla);

கோணுதல் - வளைதல்;

ஆர்தல் - பொருந்துதல்;


பாலம்:

அலைமோதும் நீர்மேல் அமையும் - ஆற்றின் மேல் இருக்கும்;

இரு பாலும் கலந்து மகிழ வழி காட்டும் - (ஆற்றின்) இரு பக்கத்தில் உள்ளவர்களும் கூடி மகிழப் பாதையாக இருக்கும்; (இரு பாலும் - ஆகுபெயராக, இருபக்கத்திலும் உள்ளவர்களைச் சுட்டியது);

பல தலம் காணும் - பல ஊர்களில் தென்படும் (இருக்கும்);

அடைந்தாரைக் கடப்பிக்கும் ஓர் பாலம் - வந்தவர்களை (ஆற்றின்) அடுத்த கரையில் சேர்க்கும் ஒரு பாலம்;


சிவன்:

அலைமோதும் நீர் மேல் அமையும் - அலைமோதுகின்ற கங்கை மேலே இருக்கும் - கங்காதரன்;

இரு பாலும் கலந்து மகிழ வழி காட்டும் - அர்த்தநாரீஸ்வரனாகச் சேர்ந்து நின்று (பக்தர்கள்) மகிழ நெறியைக் காட்டுவான்;

பல தலம் காணும் அடைந்தாரைக் கடப்பிக்கும் - பல க்ஷேத்திரங்களைத் தரிசித்து வணங்கித் திருவடியைச் சரண்புகுந்த பக்தர்களைப் பிறவிக்கடலைக் கடக்கச்செய்பவன்;

ஓர் பாலம் கோணுதல் ஆர் திங்கள் அணி கோன் - ஒப்பற்ற உச்சியில் வளைந்த பிறைச்சந்திரனை அணிந்த தலைவன்; (பாலசந்திரன் - சிவன் திருநாமம்; भालचन्द्रः - 1. an epithet of Śiva);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment