Saturday, December 11, 2021

06.02.117 – ஒற்றியூர் (திருவொற்றியூர்) - மின்னொத்த காலவளவு - (வண்ணம்)

06.02.117 – ஒற்றியூர் (திருவொற்றியூர்) - மின்னொத்த காலவளவு - (வண்ணம்)


2009-11-02

6.2.117) மின்னொத்த காலவளவு (ற்றியூர் - திருவொற்றியூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தன்னத்த தானதன .. தனதான )

(இந்த அமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


மின்னொத்த காலவள .. வுளவாழ்வில்

.. நின்னைத்தொ ழாதுமிகு .. நசையாலே

உன்மத்த னாகியிடர் .. உறலாமோ

.. என்னத்த னேவிரைவில் .. அருளாயே

சென்னிக்க ணாகமதி .. அணிவோனே

.. தெண்ணர்க்கி லாயரிய .. மறைநாவா

உன்னிப்ப ராவுசுரர் .. உயவாலம்

.. உண்ணொற்றி யூரிலுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

மின் ஒத்த கால அளவு உள வாழ்வில்

.. நின்னைத் தொழாது மிகு நசையாலே

உன்மத்தன் ஆகி இடர் உறலாமோ?

.. என் அத்தனே, விரைவில் அருளாயே;

சென்னிக்கண் நாகம் மதி அணிவோனே;

.. தெண்ணர்க்கு இலாய்; அரிய மறை-நாவா;

உன்னிப் பராவு சுரர் உய ஆலம்

.. உண், ஒற்றியூரில் உறை பெருமானே.


மின்த்த காலவு உ வாழ்வில் - மின்னலைப் போலத் தோன்றி மறையும் இந்த வாழ்க்கையில்; (மின் - மின்னல்);

நின்னைத் தொழாது மிகு நசையாலே உன்மத்தன் ஆகிடர் உறலாமோ - உன்னை வழிபடாமல், மிகுந்த ஆசையால் மனம் மயங்கி அடியேன் துன்பப்படலாமா? (நசை - ஆசை); (உன்மத்தன் - பித்தன்);

என்த்தனே, விரைவில் அருளாயே - என் தந்தையே, சீக்கிரம் அருள்வாயாக;

சென்னிக்கண் நாம் மதி அணிவோனே - தலைமேல் பாம்பையும் திங்களையும் அணிந்தவனே;

தெண்ணர்க்கு இலாய் - (உன்னை வணங்க மறுக்கும்) மூடர்களுக்கு அருள் இல்லாதவனே; (தெண்ணர் - அறிவிலிகள்); (அப்பர் தேவாரம் - 5.93.1 - "தேசனைப் புகழார் சிலர் தெண்ணர்கள்");

ரிய மறை-நாவா - அரிய வேதங்களைப் பாடியருளியவனே;

உன்னிப் பராவு சுரர் உயலம் உண் - உன்னை எண்ணித் துதித்த தேவர்கள் உய்ய ஆலகால விடத்தை உண்ட; (உன்னுதல் - நினைத்தல்); (பராவுதல் - புகழ்தல்; வணங்குதல்);

ற்றியூரில் உறை பெருமானே - திருவொற்றியூரில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment