Sunday, December 12, 2021

06.01.102 - சிவன் - பேனா (Fountain pen) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2009-11-15

06.01.102 - சிவன் - பேனா (Fountain pen) - சிலேடை

-----------------------------------------------

உண்மை வழிஒழுக ஓரக் கரங்காட்டும்

எண்ணெழுத் தேறு விடைகாட்டும் - வண்ணம்

இருக்குமிங் கெம்மையும் ஏற்குமொரு பேனா

எருக்குமதி சூடும் இறை.


சொற்பொருள்:

உண்மை - 1) உண் + மை - உண்ட மை; / உள் + மை - உள்ள மை; 2) மெய்;

ஒழுகுதல் - 1) கசிதல்; சொட்டுதல்; 2) முறைப்படி நடத்தல்;

அக்கரம் - அக்ஷரம் - அழிவில்லாதது; எழுத்து;

ஓரக்கரம் - 1) ஓரக் கரம் - விரல் நுனி; 2) ஓர் அக்கரம் - ஒப்பற்ற அழிவற்ற வஸ்து;

ஏறுதல் - 1) மிகுதல்; 2) மேலேறுதல் (to mount, climb);

விடை - 1) பதில் (Answer); 2) இடபம்;

வண்ணம் - 1) நிறம்; வகை; 2) தன்மை; குணம்;

மை - 1) மசி (ink); 2) கருநிறம்; கறை; (விடம்);

எம்மையும் - 1) எந்த மையையும்; 2) எங்களையும்;

எருக்கு - எருக்கமலர்;


("ink" நிரப்பி எழுதும்) பேனா (Fountain pen):

உண் மை வழி ஒழுக ஓரக் கரம் காட்டும் - (அது) உண்ட மை வழியில் ஒழுக, (அதன் கறையை) விரல் நுனி காட்டும்; ("உண்மை= உள் + மை = உள்ளே இருக்கும் மை" என்றும் பொருள்கொள்ளல் ஆம்)

எண் எழுத்து ஏறு விடை காட்டும் வண்ணம் இருக்கும் - (பரீட்சை வினாக்களுக்கு) எண்ணும் எழுத்தும் மிகுகின்ற விடையைக் (காகிதத்தில்) காட்டும்படி இருக்கும்;

இங்கு எம்-மையும் ஏற்கும் - எவ்வித மையையும் ஏற்கும்; (பல நிறங்களில் உள்ள மைகள்);

ஒரு பேனா - ("ink" நிரப்பி எழுதும்) பேனா (Fountain pen);


சிவன்:

உண்மை வழி ஒழுக ஓர் அக்கரம் காட்டும் எண் எழுத்து - மெய்ந்நெறியில் ஒழுகினால் ஒப்பற்ற அழிவற்ற பொருள் எண்ணும் எழுத்துமாய் இருப்பதைக் காட்டும்; (ஒப்பற்ற அழிவற்ற பொருளான சிவன், நாம் மெய்ந்நெறியில் ஒழுகுவதற்கு எண்ணும் ஐந்தெழுத்தைக் காட்டும் - என்றும் பொருள்கொள்ளலாம்);

(அப்பர் தேவாரம் - 6.55.7 - "எண்ணும் எழுத்தும்சொல் ஆனாய் போற்றி");

ஏறு விடை காட்டும் - (தான்) ஏறுகின்ற இடபத்தைக் காட்டும்;

வண்ணம் இருக்கும் - குணம் உடைய பொருளாக இருக்கும்; (அப்பர் தேவாரம் - 5.28.4 - "இருளின் வண்ணமும் ஏழிசை வண்ணமும் ....ஆவர் ஐயாறரே");

இங்கு எம்மையும் ஏற்கும் - எங்களையும் (பக்தர்களாக) ஏற்றுக்கொள்ளும்;

எருக்கு மதி சூடும் இறை - எருக்கமலரையும் திங்களையும் சூடும் இறைன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment