Saturday, December 11, 2021

06.02.116 – மயிலாப்பூர் - அன்று புரிவினை - (வண்ணம்)

06.02.116 – மயிலாப்பூர் - அன்று புரிவினை - (வண்ணம்)


2009-11-01

6.2.116) அன்று புரிவினை (மயிலாப்பூர்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தந்த தனதன தந்த தனதன

தந்த தனதன .. தனதான )


(இந்த அமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்.

"தனதன தந்த" என்ற அமைப்பில் உள்ள பாடல் - இருவினை யஞ்ச - திருப்புகழ் - திருவண்ணாமலை)


அன்று புரிவினை இன்று துயர்தர

.. .. அஞ்சி உழல்நிலை .. அதுமாற

.. ங்கை குவிதர அன்பு கொடுநிதம்

.. .. அண்ட உனதடி .. தொழுவேனோ


கொன்றை மலருடன் இண்டை மதிபுனை

.. .. குஞ்சி மிசையர .. வணிவோனே

.. குன்று சிலைகணை கொண்டல் வணனிவை

.. .. கொண்டு திரிபுரம் .. எரிவீரா


ஒன்றி அடிநினை சிந்தை உடையவர்

.. .. உன்றன் உலகுற .. அருள்வோனே

.. உம்பர் கடைகடல் நஞ்சை அமுதென

.. .. உண்ட கறைமிட .. றுடையானே


மன்றில் நடமிடும் எங்கள் இறையவ

.. .. மங்கை மலைமகள் .. ஒருகூறா

.. வந்து திரைபொரு கின்ற மயிலையில்

.. .. வண்கை யொடுதிகழ் .. பெருமானே.


தம் பிரித்து:

அன்று புரி வினை இன்று துயர் தர

.. அஞ்சி உழல் நிலை அது மாற,

ங்கை குவிதர அன்பு கொடு நிதம்,

.. அண்ட, உனது அடி தொழுவேனோ?


கொன்றை மலருடன் இண்டை மதி புனை

.. குஞ்சி மிசைவு அணிவோனே;

குன்று சிலை, கணை கொண்டல் வணன், வை

.. கொண்டு திரிபுரம் எரி வீரா;


ஒன்றி அடி நினை சிந்தை உடையவர்

.. உன்றன் உலகுற அருள்வோனே;

உம்பர் கடை-கடல் நஞ்சை அமுது எ

.. உண்ட கறை-மிடறுடையானே;


மன்றில் நடமிடும் எங்கள் இறையவ;

.. மங்கை மலைமகள் ஒரு கூறா;

வந்து திரை பொருகின்ற மயிலையில்,

.. வண்-கையொடு திகழ் பெருமானே.


அன்று புரி வினை இன்று துயர் தர அஞ்சி உழல் நிலை து மாற - முன்பு செய்த வினை இப்பிறவியில் துன்பம் தருவது கண்டு அஞ்சி உழல்கின்ற இந்த நிலை மாறும்படி; (மாறுதல் - வேறுபடுதல்; இல்லையாதல்);

ங்கை குவிதர அன்பு கொடு நிதம், அண்ட, உனது அடி தொழுவேனோ - கைகள் குவிய அன்பால் தினமும், அண்டனே, உன் திருவடியை வழிபட அருள்வாயாக; (தருதல் - ஒரு துணைவினை); (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு); (அண்டன் - எல்லா உலகங்களுக்கும் தலைவன்);


கொன்றை மலருடன் இண்டை மதி புனை குஞ்சி மிசைவு அணிவோனே - கொன்றைமலர், இண்டைமாலை போலத் திங்கள் இவற்றை அணிந்த திருமுடிமேல் பாம்பை அணிந்தவனே; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (குஞ்சி - தலை);

குன்று சிலை, கணை கொண்டல் வணன், வை கொண்டு திரிபுரம் எரி வீரா - மேருமலை வில், மேகம் போன்ற நிறமுடைய திருமால் கணை, இவற்றால் முப்புரங்களை எரித்த வீரனே; (சிலை - வில்); (கொண்டல்வணன் - கொண்டல்வண்ணன் - மேகநிறமுடையவன் - திருமால்);


ஒன்றி அடி நினை சிந்தை உடையவர் உன்றன் உலகுற அருள்வோனே - உன் திருவடியை ஒன்றி நினைக்கின்ற மனம் உடைய தொண்டர்கள் உன் உலகம் (சிவலோகம்) பெற அருள்பவனே;

உம்பர் கடை-கடல் நஞ்சை அமுது எ உண்ட கறை-மிடறுடையானே - வானோர் கடைந்த கடலில் தோன்றிய ஆலகாலத்தை அமுதம்போல் உண்ட கறை திகழும் கண்டம் உடையவனே;


மன்றில் நடமிடும் எங்கள் இறையவ - அம்பலத்தில் கூத்தாடும் எம் இறைவா;

மங்கை மலைமகள் ஒரு கூறா - மலைமகளை ஒரு கூறாக உடையவனே;

வந்து திரை பொருகின்ற மயிலையில், வண்-கையொடு திகழ் பெருமானே - அலை வந்து மோதுகின்ற மயிலாப்பூரில், வள்ளன்மை மிக்க கையோடு வீற்றிருக்கும் பெருமானே; (திரை - அலை); (பொருதல் - தாக்குதல்); (வண்மை - ஈகை); (வண்கை - வரதஹஸ்தம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment